Tuesday 8 June 2010

இது பணம் பறிக்கும் முயற்சி அல்ல

உலக தமிழ் வாசகர்களே,

எனது கனவு உலகில் உள்ள மிகவும் சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்மாலான உதவியை செய்வது என்பதாகும். இந்த சின்னஞ்சிறு உதவியை செய்வதற்கென பல தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த தொண்டு நிறுவனங்கள் இதற்கென பணியாட்களை நியமித்து செயல்படுவதால் கொடுக்கப்படும் பணத்தில் பராமரிப்பு வேலைகளுக்கு என செலவாகிவிடுவது வாடிக்கையாகும்.

மேலும் ஆப்ரிக்கா போன்ற மிகவும் பின் தங்கிய நாடுகளுக்கென இந்த தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. நமது நாட்டில் மட்டுமல்லாது பல நாடுகளில் வறுமையின் காரணமாக பல சிறுவர் சிறுமியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் தங்களின் எதிர்காலத்தை எப்படி அமைத்து கொள்ள போகிறார்கள் என நினைக்கும்போது வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

நமது வளத்தை நாம் பாதுகாத்து கொள்வது அவசியமாகும். நமது தேவைகள் எப்போதும் குறையப்போவதில்லை. அந்த தேவைகளுக்கும் இடையில் நம்மால் முடிந்த உதவிகள் நலிந்தோருக்கு செய்வது நமது வாழ்நாளில் நாம் செய்யும் ஒரு முக்கிய பணியாகவே கருதுகிறேன்.

பணம் மட்டுமே எல்லா விசயங்களுக்கும் முடிவாகி விடாது. ஆனால் இந்த பணம் மூலம் பல காரியங்களை நிச்சயம் நல்ல முறையில் சாதிக்க இயலும். இதற்கான திட்டபணிகள் எல்லாம் விரிவாக நடைபெறும். பணம் இல்லாமல் பேசுவது ஆகாயத்தை பார்த்து கோட்டை கட்டுவதாகும். எனவே முதலில் உரிய பணம் சேர்ப்பதுதான் எனது முதல் திட்ட நடவடிக்கை.

பெரிய கடல்தனை சுத்தம் செய்யும் முயற்சியல்ல இது. சின்ன சின்ன ஓடைகளை, சின்ன சின்ன ஆறுகளை சுத்தம் செய்யும் பணி இது. இந்த சிறிய முயற்சி நிச்சயம் கடல்தனை சுத்தப்படுத்தும் அளவுக்கு விரிவடையும். எனது நோக்கம் உதவ வேண்டும் எனும் எண்ணம் உடைய மனிதர்களின் கரங்களின் மூலம் இந்த நல்லதொரு செயலை செய்வதாகும்.

என்னை எப்படி நம்புவது என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். இதெல்லாம் தேவையா எனும் எண்ணம் கூட எழலாம். எனக்குள் எழுந்த எண்ணங்கள்தான் அவை. தீவிரமாக யோசித்தே இந்த முடிவு எடுத்து இருக்கிறேன். எனது முயற்சி உடனடியாக  பெரும் வெற்றியடையாமல் போகலாம். பல கோடிக்கணக்கான பணம் வைத்து இருக்கிறார்களே இன்னும் உலகம் இப்படி ஏன் இருக்கிறது என எண்ணும்போது எனது வாழ்க்கைமுறையும் என்னை கேலி செய்வதாகத்தான் இருக்கிறது.  கோவில்கள், சாமியார்கள் என பணத்தை கொட்டும் மனிதர்களை ஒருபோதும் குறை சொல்லப்போவதில்லை. அவரவர் தேவை அவரவருக்கு.

உலக  குழந்தைகளின் நலனுக்காக உதவிட எண்ணம் இருப்பவர்கள் உங்கள் உதவியை தாராளமாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்று கூறிக்கொண்டு பணம் சம்பாதிக்க முயல்பவர்கள் இருக்கக் கூடும். அதற்கு ஒரு வழி ஏற்படுத்தி நான் தருவதாக நினைத்தால் அதற்காக வருந்துகிறேன். நல்ல செயலையும் கொச்சைப்படுத்தும் கூட்டம் இவ்வுலகில் உண்டு. சுயலாபத்துக்காக எதையும் செய்யும் கூட்டம் உண்டு. அரசுக்கு இல்லாத அக்கறை தனி மனிதனுக்கு எதற்கு என்கிற எண்ணமும் எழலாம். கூட்டங்கள் என தனி தனி பிரிவாக சேர்த்துக் கொண்டு வாழும் மனிதரிடையே தனியாய் ஒரு விதை போட்டு இருக்கிறேன். இதற்கு பின்னால் உதவும் கூட்டம் மட்டுமே எனக்கு தேவை , விளம்பரம் தேடும் கூட்டம் அல்ல என்பதை உறுதி செய்கிறேன்.

ஒவ்வொரு மாதம் முதல் தேதி கணக்கு விபரங்கள் இங்கே காட்டப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த திட்டத்துக்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

6 comments:

Baby ஆனந்தன் said...

நண்பரே - தங்களது எண்ணத்திற்கும், முயற்சிக்கும் முதலில் எனது வாழ்த்துக்கள். நானும் எனது நண்பர்களும் சேர்ந்து படிப்பதற்கு வசதியில்லாத குழந்தைகளுக்கு உதவுவதற்காக 'இளம்பிறை' என்னும் பெயரில் 'டிரஸ்ட்' ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். எங்களது டிரஸ்டை 'NGO' வாக பதிவு செய்யும் முயற்சிகள் வெகுவேகமாக நடந்து வருகிறது. எங்களது தற்போதைய செயல்பாடுகள், வருங்கால திட்டங்கள் அனைத்தையும் www.bulletz-ilampirai.blogspot.com என்னும் தளத்திற்கு போய் தெரிந்து கொள்ளலாம். நீங்களும் எங்களுடன் இணைந்து உதவுவதை நாங்கள் வரவேற்கிறோம்...

Chitra said...

அருமையான யோசனை. பலரும் பயன் பெற வேண்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்!

பனித்துளி சங்கர் said...

என்னால் இயன்றவரை நானும் உதவுகிறேன் . நல்ல முயற்சி பகிர்வுக்கு நன்றி

Radhakrishnan said...

மிக்க நன்றி ஆனந்தன். மிகவும் அருமையான முயற்சி, வாழ்த்துகள். மிக்க நன்றி சித்ரா. மிக்க நன்றி சங்கர்.

பிரேமா மகள் said...

நல்ல முயற்சி..

Radhakrishnan said...

மிக்க நன்றி லாவண்யா.