Sunday 27 June 2010

நுனிப்புல் - 9 (பாகம் 2)


9. மரபியல் மருத்துவம் 


பாரதி மரபியல் மருத்துவத்தில் தீராத ஆர்வம் கொண்டு இருப்பவள். கிருத்திகாவிற்கு மருத்துவம் படித்துவிட்டு ஒரு மருத்துவராக பணி புரிந்தாலே போதும் என்ற ஆர்வம் மட்டுமே இப்போதைக்கு இருந்தது. கிருத்திகாவிற்கு பாரதியிடம் கேட்டு படித்துக் கொள்வதில் அலாதிப் பிரியம் இருந்தது, மேலும் பாரதி வகுப்பில் எடுக்கும் குறிப்புகளை தனது குறிப்புகளாக பயன்படுத்திக் கொள்வாள். கிருத்திகாவின் பொழுது கவிதை எழுதுவதிலும், கதை பேசுவதிலும் பெரும்பாலும் கழியும், அதேவேளையில் அசட்டுத்தனமான தைரியம் கிருத்திகாவிடம் சற்று அதிகமாகவே உண்டு. பாரதிக்காக எதையும் செய்துவிடும் துணிவு கொண்டவள்தான் இந்த கிருத்திகா. பாரதி மரபியல் பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.


‘’கிருத்தி, டி என் ஏ சொல்ற வேலையை ஆர் என் ஏ செஞ்சி முடிக்கும், டி என் ஏ என்ன சொல்லிவிட்டதோ அதை ஆர் என் ஏ சரியா செஞ்சி இருக்கா அப்படினு டி என் ஏ சரிபார்க்கறது இல்லை, எனக்கு என்னமோ ஆர் என் ஏ தனக்குத் தெரிஞ்சதை செய்துட்டு டி என் ஏவை ஏமாத்தறதுனு தோணுது’’ 


‘’என்னய்யா நீ, புதுசா கதை சொல்ற டி என் ஏவுல ஏற்பட மாற்றத்தினாலதான நோய் வருதுன்னும் அதுக்கு காரணமான மரபணு எல்லாம் சரி பண்ணினா மரபியல் மருத்துவம் வெற்றி பெறும்னு சொல்றாங்க, நீ என்னமோ ஏமாத்துற விசயம் பத்தி பேசறய்யா’’ 


‘’நான் சொன்னா அது கதை, ஆனா இந்த ஆர்ட்டிகல்ஸ் எல்லாம் உண்மை, இங்க பாரு கிருத்தி’’ 


மருத்துவ இதழ்களையும், உயிர்கள் தோன்றிட காரணமாக எதுவெல்லாம் இருக்கலாம் என்னும் ஆராய்ச்சி கட்டுரைகளையும் எடுத்து காண்பித்தாள் பாரதி. கிருத்திகா உடன்பாடில்லாதவளாக காணப்பட்டாள்.


‘’இது எல்லாம் தேவையில்லாத வேலைனு சொன்னாலும் நீ கேட்க மாட்றய்யா, உலக உயிர்கள் எப்படித் தோன்றினா என்னய்யா இப்ப இருக்குற நிலைமைக்கு எப்படி மருத்துவமும், வாழ்க்கை முறையும் உதவும்னு பாருய்யா அதை விட்டுட்டு இப்படியா காகிதத்தில தலைகாணி தயார் பண்ணுவாங்கய்யா’’ 


பாரதியின் தனிப்பட்ட ஆர்வத்தினை வழக்கம்போல் கேலி பேசினாள் கிருத்திகா. பாரதி சிரித்துக்கொண்டாள்.


‘’நீ இப்போ இப்படித்தான் பேசுவ, அப்புறம் ஏதாச்சும் நடந்தா என்ன ஏதுனு எங்கிட்ட வந்து கேட்ப’’ 


பாரதி வார்த்தைகளை நிறுத்தினாள்.


‘’என்னய்யா நிறுத்திட்ட, சொல்லுய்யா எல்லா நோய்க்கும் செயலுக்கும் மரபணு காரணமா இருக்குமாய்யா? அப்படின்னா மற்ற காரணிகள் எல்லாம் எதுக்குய்யா? இவ்வள லேசா இருந்தா எதுக்குய்யா இன்னும் பல நோய்கள் தீர்க்கப்படாமலே இருக்குய்யா? விவரமா சொல்லுய்யா’’ 


‘’சிக்கலான விசயம் கிருத்தி, பொதுவா நம்ம உடம்புல புரோட்டின் மட்டும் வேலை பண்றதில்ல, என்ஜைம்ஸ் முக்கிய பங்கு வகிக்குது’’


‘’என்ஜைம்ஸ் கூட புரோட்டின் தானய்யா, நீதான்யா சொன்ன, கார்போஹைட்ரேட்ஸ், லிப்பிட்ஸ், மினரல்ஸ்னு உடம்புல ஒரு பேலன்ஸிங் சிஸ்டமே இருக்குனு சொன்னய்யா’’


பாரதி கிருத்திகாவிடம் முதலில் இருந்து எல்லாவற்றையும் எப்படி விளக்குவது என்பது குறித்து நினைத்துக்கொண்டிருந்தாள். கிருத்திகா குறுக்கிட்டாள். 


‘’மனசை ஒருமுகப்படுத்துய்யா, உளராம ஒருவிசயத்தை சரியா சொல்லுய்யா’’


‘’ம் என்ஜைம்ஸ் புரோட்டின் தான், இந்த என்ஜைம்ஸோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா இதனுடைய வினையூக்கித் தன்மையும் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கிற தன்மையும்தான். தான் வினையை முடிக்க உதவியதும் தன்னளவுல எந்த சேதாரமும் அடையாம மீண்டும் உபயோகமா மாறுறதுதான் இந்த என்ஜைம்ஸ். இந்த வினையூக்கித் தன்மை என்ஜைம்ஸ்களுக்கு மட்டும் சொந்தமில்லை, ஆர் என் ஏ வுக்கும் இந்த வினையூக்கித் தன்மை இருக்குங்கறது தான் கடந்த இருபது வருசமா ஆராயப்படற விசயம். ஆர் என் ஏ தான் முதன் முதல தோன்றி மரபியல் இரகசியங்களை காத்து வந்திருக்கும்னு சிந்திக்கிறாங்க’’


‘’என்னய்யா திரும்ப திரும்ப பழைய கதையவே பேசறய்யா, நமக்கு இது எந்த எக்ஸாமுக்கு வரப் போகுது, எனக்கு இப்போ கேட்கிற மனநிலை இல்லைய்யா, நீ நல்லா படிச்சிட்டு அப்புறமா சுருக்கமா சொல்லுய்யா. ம்.. சுந்தரன் வந்தா எனக்கு போன் போடுய்யா, அவன்கிட்ட நான் இன்னைக்கு பேசிட்டு தான் தூங்கப் போகனும்ய்யா’’


கிருத்திகா பாரதியிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள். பாரதியின் மனம் ஆராய்ச்சி கட்டுரைகள் மேல் விழுந்தது. செல் அமைப்பினை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள். வைரஸ், பாக்டீரியா, தாவரம், விலங்கு செல்களை உற்று நோக்கினாள். இப்படித்தான் உலகம் தொடங்கி இருக்க வேண்டும், தொடர்ந்து இருக்க வேண்டும். வைரஸ், மனம் மின்னலிட்டது. முதல் உயிரற்ற உயிர். ஒடுக்கப்பட்ட உயிர். அடக்கப்பட்ட உயிர். தனித்து இருந்தால் மயான நிலை, ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை. உலகமே இதன் அடிப்படையில்தானே இயக்கம். மேலும் மேலும் யோசித்தாள். மனம் மேலும் உற்சாகம் அடைந்தது. புரத உறை மட்டும் கொண்டு ஆர் என் ஏ வை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வைரஸ்களையும் டி என் ஏ வைரஸ்களையும் நினைத்தாள். ஆர் என் ஏ ஒற்றை கயிறு. ஒன்றிலிருந்துதான் எல்லாம் தொடக்கம். புரத உறை எப்படி வந்தது? ஆர் என் ஏ எப்படி உருவானது? ஆராய்ச்சி கட்டுரைகளை புரட்டலானாள். 


4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் இந்த பூமி எப்படி இருந்து இருக்கும், என்னவெல்லாம் நடந்து இருக்கும் எனும் யூகங்கள் இப்படித்தான் நடந்து இருக்கும் என் ஆதாரங்களை முன் வைத்து சொல்லப்படுகின்ற விசயங்கள் மிகவும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஒவ்வொரு முறையும் கிடைக்கின்ற தகவல்கள் பொருத்து ஒவ்வொரு மாற்றம்குறிக்கப்படும். இப்படி வைக்கப்படுகின்ற சாத்தியங்களுக்கு எதிரான சாத்தியங்கள் வைத்து இது எல்லாம் சாத்தியம் இல்லை என ஆதாரம் முன் வைப்பவர்களும் உண்டு.


இப்படி இரண்டு விதமான விசயங்களை உற்று நோக்கும்போது ஒன்று மட்டும் தெளிவாக புலப்படக்கூடும். தெளிவினை நோக்கித் தேடப்படும் அறிதலின் முயற்சி இது. பல கோடி மக்களில் ஒரு சிலரே அறிதலில் உட்படுகிறார்கள். எல்லாம் அவன் பார்த்துப்பான் என அசட்டுத்தனமான நம்பிக்கையிலும், தைரியத்திலும் வாழ்பவர்களே ஏராளம். அதுபோன்றுதான் வாழவும் முடியும். நமக்குத் தெரிந்த நம்மால் திறம்பட வாழத் தெரிந்த வாழ்க்கைமுறை இதுதான். 


ஆராய்ச்சி கட்டுரைகளில் மூழ்கி இருந்தாள் பாரதி. ஒரு சில ஆராய்ச்சி கட்டுரைகளை படித்தபோது மனம் விரிந்தது. வெறும் மண் துகள்களிலிருந்து தோன்றிய உயிர்கள் இப்படித்தான் உருவாகி இருக்கக்கூடும் என சொல்லப்பட்ட விசயம்தனை மனம் விட்டுப் படித்தாள். அதன் சாரம்சம் இதுதான்.


இந்த பிரபஞ்சம் தோன்றி கிட்டத்தட்ட 13 பில்லியன் ஆண்டுகள் ஆனபோதிலும், இந்த பூமியானது தோன்றி 4.5 பில்லியன் வருடங்கள் ஆகிறது. முதலாவது கடல் 4.4 பில்லியன் வருடங்கள் உருவாகி இருக்கக்கூடும். கார்பன் ஐசோடோப் முறைப்படி ஆய்ந்தறிந்த பொழுது 3.8 பில்லியன் வருடங்களில் கரியமில வாயு பாறைகளில் படிமமாக இருந்து இருப்பதாய் அறிய முடிகிறது. கிட்டத்தட்ட 3.5 பில்லியன் வருடங்களில் நுண்ணுயிர்கள் உருவாகி இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஆனால் 1.5 பில்லியன் வருடங்களில் மட்டும்தான் ஒரு செல் அமைப்பு கொண்ட நியூக்ளியஸ் உறை கொண்ட உயிரினங்கள் தோன்றி இருக்கிறது. 


அதே வேளையில் 2.7 பில்லியன் வருடங்களில் நியூக்ளியஸ் உறை கொண்ட உயிரினங்கள் இருந்ததாகவும் அறிய முடிகிறது, இருப்பினும் இதை உறுதி செய்ய இயலவில்லை. ஆக இந்த இடைப்பட்ட 2.5 பில்லியன் வருடங்களில் என்ன நடந்தது என சொல்லும்படியாக உறுதியான எந்த ஆதாரமும் சிக்கவில்லை. 


எப்படி உயிரினம் தோன்றியது? கரு எப்படி உருவானது? பாக்டீரியா எனும் நுண்ணுயிரில் யூபாக்டீரியா, ஆர்கேபாக்டீரியா இருக்க காரணம் யாது? இந்த பாக்டீரியாவுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு யாது? ஒவ்வொரு விசயமாகத் தேடினாள் பாரதி. பாக்டீரியாவுக்கும் நமக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விதிகளைக் கண்டு மெய் சிலிர்த்தாள். அவளது கண்களில் பட்ட உயிர் தோன்ற காரணம் இரும்பு சல்பைடு எனும் படிமமே என பார்த்ததும் பாரதி புரியாமல் விழித்தாள். ஒடுக்கப்பட்ட வினையே காரணம் என படித்ததும் கிருத்திகா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஆய்வு கட்டுரைகளில் நேரம் செலவிடுவதைவிட மருத்துவத் துறைக்கு உதவும் விசயத்தை படிக்கலாமோ எனத் தோன்றியது. 


மனம் ஏற்கவில்லை. ஆராய்ச்சி கட்டுரையின் மேல் மீண்டும் கண் வைத்தாள். ஆர் என் ஏ மட்டும் உள்ள செல் அமைப்பு கொண்ட உயிரிலிருந்து டி என் ஏ கொண்ட செல் அமைப்பு உருவாகி இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக தென்படுகிறது. ஒற்றுமை படுத்தக்கூடிய விசயங்கள், வேற்றுமைப்படுத்தக் கூடிய விசயங்கள் என பல இருக்கின்றன. படித்துவிட்டு ஒவ்வொரு விசயத்தையும் மிகவும் நூதனமாக அணுக வேண்டும், மரபியல் மருத்துவம்தான் மேல்படிப்பிற்கு என தீர்மானித்தாள். மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது. 


பாரதி மாடியிலிருந்து கீழிறங்கி வந்தாள். அந்த நேரம் பார்த்து சுந்தரன் வந்தான். சரோஜா சுந்தரனிடம் கேட்டார்.


‘’எங்கப்பா போய்ட்டு வர, சொல்லிட்டு போயிருக்கலாம்ல’’


‘’திருவேற்காட்டிற்கு போய்ட்டு வந்தேன்மா, இனிமே சொல்லிட்டுப் போறேன்மா’’ 


சுந்தரன் கோவில் பிரசாதத்தை சரோஜாவிடம் எடுத்துக் கொடுத்தான். மனமகிழ்ச்சியுடன் சரோஜா வாங்கிக் கொண்டார். பின்னர் பாரதியிடமும் நீட்டினான். பாரதி புன்னகைத்துக் கொண்டே எடுத்துக்கொண்டாள். சுந்தரனும் புன்னகைத்தான். சரோஜாவின் மனம் இலேசானது. சுந்தரன் தனது வீட்டை நோக்கி நடந்தான். பாரதி கிருத்திகாவிற்கு சுந்தரன் வந்துவிட்ட தகவலை தெரிவித்தாள். கிருத்திகா உற்சாகமானாள். 


(தொடரும்)

2 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான அறிவியல் விசயங்களை தாங்கிவரும் ஒரு கதை. நல்லாருக்கு.

Radhakrishnan said...

நன்றி ஸ்டார்ஜன்