Friday 18 June 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 6


கல்லூரியில் நாட்கள் இனிதே சென்றது. கட்சி ஆரம்பிப்பது குறித்து தீவிர சிந்தனையாகவே இருந்தான் ரகுராமன். கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பதுதான் முதல் சிந்தனையாக இருந்தது. திராவிடர் எனும் அடையாளம் தேவையா எனும் எண்ணம் எழுந்தது. முதலில் இந்த திராவிடர் எனும் அடையாளத்தை அழித்தால்தான் ஆரியர் எனும் அடையாளமும் அழியும். பின்னர் தமிழர் எனும் அடையாளம் தேவையா என சிந்தித்தான். தமிழர் எனும் அடையாளத்தையும் ஒழித்து விடவேண்டும் எனும் எண்ணமும் அவன் மனதில் ஓடியது, இப்பொழுது இது ஒரு பிரச்சினையாகவே பேசப்படும், தமிழ் உணர்வு அற்றவன் என்றே பேச்சு எழும், ஆனால் காலப்போக்கில் இந்த விசயம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் மனதில் சிந்தித்து வைத்தான்.


அதற்கடுத்ததாக சாதியைப் பற்றி சிந்தித்தான். நான் கட்சி ஆரம்பித்தால் இன்னார் சாதி என கண்டிப்பாக‌ தெரிந்துவிடும். உடனே அந்த சாதிக்காரன் என பேசுவார்கள். இவன் நம்ம சாதிக்காரன் என நாலு பேர் உடன் வருவார்கள். நமது சாதி அடையாளத்தை எப்படி அழித்துக் கொள்வது. உண்மையிலேயே உதவி வேண்டுவோர்க்கு நாம் உதவி புரிய அவன் சாதிக்காரனுக்கு மட்டும் செய்றான் எனும் பேச்சு வருமே, அதை எப்படி தடுத்து ஒதுக்குவது. சாதிக்காரன் என எவரேனும் அணுகினால் அவர்களை அருகிலேயே ஒட்டவிடக்கூடாது என நினைத்தான். ஆனால் காலமெல்லாம் மனதில் ஊறிப்போன இந்த சாதிய எண்ணத்தை எப்படி தனிமனிதரின் எண்ணத்திலிருந்து நீக்குவது என மனதில் நினைத்தபோது சந்தானலட்சுமி என்ன சாதி என்பதே தனக்குத் தெரியாமல் இருப்பது கண்டு இந்த சாதி ஒழிப்பு ஒரு சத்திய சோதனைதான் என மனம் எண்ணமிட்டது. 


சாதியை முன்னிலைப்படுத்தக்கூடாது என்பதில் அதிக கவனம் வேண்டும் என நினைத்துக்கொண்டான். இதுவும் கால மாற்றங்களினால் சாத்தியமே. முதலில் பெயர் வைக்கும்போது இந்த சாதிப்பெயர் எதுவும் சேர்த்துக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் நமது எண்ணத்துக்குப் போராட முன்வர வேண்டும். முதலில் எனது கிராமத்தில் இருக்கும் சாதியப் பிரிவினைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். அனைத்து மக்களும் ஒன்று என்ற எண்ணத்தோடு தனித்தனி சாதியினராய் கூட்டமாக இல்லாமல் அனைவரும் கலந்திருக்க வேண்டும் எனத் திட்டமிட்டான். ஊரில் என்ன சொல்வார்கள் என நினைக்கும்போதே எப்போதும் தண்ணி அடித்துவிட்டு ரகளை பண்ணும் கோபிநாத் மனதில் தோன்றினார். எப்படியும் தொடங்கித்தான் ஆகவேண்டும், அதற்காக எதிர்ப்பு கண்டு அஞ்சுவதில்லை என முடிவெடுத்தான். 


கூட்டம் போட்டு பேசும்போது தலையாட்டிக் கேட்கும் மனிதர்கள் தனக்குத் தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தான். ஒவ்வொரு மனிதரின் உணர்வுகளுடன் உரசுவது என்பதுதான் தான் செய்யப்போகும் செயல் என்பதில் கவனமாக இருந்தான். ஒவ்வொரு ஊருக்கும் தன்னைப்போல எண்ணம் உடையவர்கள் எப்படி கண்டுபிடிப்பது என்பதை எல்லாம் சிந்தித்துத் தெளிந்தான். கட்சியின் பெயரை மனதில் எழுதினான். 'மக்கள் ஒற்றுமை இயக்கம்'. எவரும் ம ஒ இ என சுருக்கக்கூடாது எனத் தெளிவு கொண்டான். 


தனது எண்ணத்தை சந்தானலட்சுமியிடம் சொன்னதும் அவளது மனம் படபடவென அடித்துக்கொண்டது. காலம் காலமா இருந்துட்டு வரதை மாத்துரது சாத்தியமில்லையே என மனம் நினைத்தது. முதலில் தன்னை, தனது வீட்டை மாத்துவது என்பது எத்தனை கடினமான காரியம் என எண்ணினாள். அதை வெளிப்படையாகவே சொன்னாள்.


''நான் சொன்னா நீ எதுவும் கோவிச்சிக்கமாட்டீயே' எனத் தொடங்கினாள். 'ஆனானப்பட்ட காந்தியையே குறை சொல்லும் கூட்டம், ஆனானப்பட்ட அம்பேத்காரையே குறை சொல்லும் கூட்டம், நீ நினைக்கறது எல்லாம் நடக்க சாத்தியம் சத்தியமா இல்லை, பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டமா, ரெண்டு மூணுனு பெத்துப் போட்டமா, அதை வளர்த்தமா, அதுக பிள்ளைகள கொஞ்சினமானு போகாம எதுக்கு இந்த பொறுப்பில்லா சனத்துக்காக‌ உன் வாழ்க்கைய வீணடிக்கிற' என நிறுத்தினாள்.


''நீ இப்படி பொறுப்பில்லாம பேசுவனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, இந்த சாதி எல்லாம் பின்னால வந்தது, இந்த தமிழ் அடையாளம் எல்லாம் பின்னால வந்தது ஒரு மொழி பேசினா அது அவங்களுக்கு அடையாளமா, ஒரு நாடுனு இருந்தா அது அவகளுக்கு அடையாளமா, நிர்வாகம் பண்றத்துக்கு பிரிச்சி வைக்கலாம், ஆனா பிரிச்சி வைச்சதனாலேயே பிரிவினை பேசக்கூடாது'' என அவளது கையைப் பிடித்தான் ரகுராமன்.


''பொறுப்பு வேற, வாழ்க்கை நிலமை வேற, ஆகாயத்துல கோட்டை கட்டுறது கனவுக்கு சரி, ஆனா அஸ்திவாரம் இல்லாம பலூன்ல வேணும்னா கோட்டை மாதிரி செஞ்சி தொங்கவிடலாம், இப்பவும் சொல்றேன் இதெல்லாம் சாத்தியமே இல்லை, அதுக்கு மீறி நீ நடந்தா உன்னோட நானும் வரேன், இனி மறு கருத்து பேசலை, எப்படி செய்யலாம்னு யோசனை மட்டும் சொல்றேன்' என ரகுராமனின் கைகளை தனது கன்னங்களில் ஒற்றிக்கொண்டாள். 


கல்லூரியில் இவனது எண்ணத்தை கேள்விபட்ட வேறு எவரும் இவனுடன் சேர்ந்து கொள்ள தயாராக இல்லை. புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி அதுக்கு அடையாளம் தேடி, நீ சொல்றதை நடமுறைப்படுத்தி வரதுக்குள்ள நாங்க கிழடாயிருவோம், அதக்கப்பறம் எப்படி பணம் சேர்க்கறது, என்றார்கள்.


பணத்தை மட்டுமே குறிக்கோளாய் வாழும் உலகில் எதுவெல்லாம் சாத்தியப்படும் என எண்ணும்போது இந்த பணத்தாலும் சில விசயங்கள் சாத்தியப்படுவதில்லை என்பதை எப்படி மறுக்க முடியும்? 


(தொடரும்)

2 comments:

Chitra said...

பணத்தை மட்டுமே குறிக்கோளாய் வாழும் உலகில் எதுவெல்லாம் சாத்தியப்படும் என எண்ணும்போது இந்த பணத்தாலும் சில விசயங்கள் சாத்தியப்படுவதில்லை என்பதை எப்படி மறுக்க முடியும்?

... so true!

Radhakrishnan said...

நன்றி சித்ரா