Tuesday 29 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 19



பாடங்களில் அதிக கவனம் செலுத்திப் படிக்கலானான் கதிரேசன். அவ்வபோது தமிழ் பாடல்களையும் மனனம் செய்யத் தொடங்கினான். சிவனைத் தொழுவதை தவறாமல் செய்து வந்தான்.மதுசூதனன் கதிரேசனை சில தினங்கள் பின்னர் பார்த்தான். 

''உன்னைப் பத்தி நானும் வைஷ்ணவியும் நிறைய பேசுவோம், நீ வைணவத்துக்கு மாறிரு'' என்றான் மதுசூதனன். ''சமண சமயம் பத்திப் படிச்சியா?'' என்றான் கதிரேசன். ''என்கிட்ட கேட்காதே, அதான் வைஷ்ணவி அவகிட்ட கேளுனு சொன்னாலாமே'' என்றான் மதுசூதனன். ''நீ படிச்சிச் சொல்லு'' என்றான் கதிரேசன். ''நீ வைணவத்துக்கு மாறுவியா மாட்டியா?'' என்றான் மதுசூதனன் மீண்டும். ''உடலெல்லாம் நாமம் பூசிக்கிட்டா நான் வைணவம் ஆயிருவேனா?'' என்றான் கதிரேசன். ''அதுமட்டுமில்லை, நீ பெருமாளை மட்டுமே தொழனும், சிவன் கோவிலுக்குப் பக்கமே நீ போகக்கூடாது, இன்னும் ரொம்ப இருக்கு'' என்றான் மதுசூதனன். ''வைஷ்ணவி சிவனை கும்பிடுறாளே, அவ வைணவம் இல்லையா?'' என்றான் கதிரேசன். ''அவகிட்ட சொல்லி வைச்சிருக்கேன், இனிமே சிவன் கோவிலுக்குள்ள வரமாட்டா'' என்றான் மதுசூதனன். 

கதிரேசன் சிறிது நேரம் யோசித்தான். ''உனக்குத் தெரியுமா உன் ஊர் காட்பாடிக்கு பக்கத்தில ஒரு சமணர் கோவில் இருக்கு, நீ பார்த்திருக்கியா, நீ ஊருக்குப் போகறப்ப என்னை உன்னோட கூட்டிட்டுப் போறியா'' என்றான் கதிரேசன். ''நீ வைணவமா மாறு, என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்'' என சிரித்தான் மதுசூதனன். ''வைஷ்ணவியும் உன் ஊரு பக்கம்தானே, நீ கூட்டிட்டுப் போகாட்டா என்ன'' என்றான் கதிரேசன். 

''நீ தொண்டரடிப் பொடியாழ்வார் பத்தி எனக்குச் சொல்றியா'' என்றான் மேலும். ''ஆழ்வார் பத்தியெல்லாம் உனக்கு எதுக்கு, நீ லைப்ரரில போய்ப் படிச்சிக்கோ, நீ வைணவமா மாறு'' என மீண்டும் சிரித்தான் மதுசூதனன். 

''சிவன் என் சிந்தையுள் நின்றான், உருவ மாற்றம் கொள்ளும் உயிரினங்கள் போல, பருவ மாற்றம் கொள்ளும் காலநிலை போல, எண்ண மாற்றம் கொள்ள அவசியமில்லை, எல்லாம் சிவமயம்'' என்றே சொன்னான் கதிரேசன். ''மாற்றங்கள் இல்லைன்னா முன்னேற்றங்கள் இல்லை'' என சொல்லிய மதுசூதனன் ''நீ மாறுவ'' என்றான். 

மதுசூதனனிடம் கதிரேசன் அதற்குப் பின்னர்  அதிகமாக பேசிக் கொள்ளவில்லை, மதுசூதனன் மிகவும் மெளனமாகவே ஆகிப் போனான். வைஷ்ணவியும் சிவன் கோவிலுக்கு வரவே இல்லை. கல்லூரியில் பார்த்த நாளில் கூட மெளனமாகவே சிரித்துவிட்டுப் போனாள். கதிரேசன் தனது படிப்புண்டு, தனது சிவனுண்டு என்றே வாழத் தொடங்கினான். 

கல்லூரியில் அமைதியாகவே காலம் கழியத் தொடங்கியதுசில மாதங்களாக முகம், கை, உடல் என திருநீறு பூசி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான்.

கல்லூரியில் கதிரேசனை சாமியார் என்றே அழைக்கத் தொடங்கினார்கள். சிலர் மிகவும் மோசமாக கேலியும் செய்யத் தொடங்கினார்கள். தனது நடத்தை கேலிக்கூத்தாவதைக் கண்டு மனம் கலங்கினான் கதிரேசன். கல்லூரிக்குச் செல்லும்போது உடலெல்லாம் திருநீறு பூசிய கோலம் பலரை சிரிக்க வைத்தது. உண்மையான பக்தனாக இருந்தபோதிலும் அந்த உண்மை பக்தியை சக நண்பர்கள் விமர்சித்த விதம் கண்டு மனம் மேலும் கலங்கியது

இந்த கேலியும் கிண்டலும் வரம்பு மீறிய செயலாகிப்போனது. ஒருநாள் என்றைக்குமில்லாது கதிரேசன் வகுப்பறைக்குள் நுழையும்போது ''அருள்புரியுங்கள் எமது குருவே'' என சக மாணவர்கள் சிலர் அவனது காலில் விழுந்தார்கள். அதிர்ச்சி அடைந்தான் கதிரேசன். ''கதிரேசன் போற்றி போற்றி'' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அடுத்த கணம் ''எங்கே மடம் ஆரம்பிக்கப் போறீங்க குருவே, எங்களை உங்க சிஷ்யர்களாச் சேர்த்துக்கோங்க'' என்றார்கள். பாட்டும் தாளமும் செய்து கொண்டே இருந்தார்கள். பாராட்டுக்கும், பரிகாசத்திற்கும் வேறுபாடு அறிந்தே  அமர்ந்திருந்தான் கதிரேசன்

ஆனால் உச்சகட்டமாக மதிய வேளையில் அந்த மாணவர்கள், தொழில்நுட்ப மாணவ மாணவியர்கள் நிற்குமிடத்தில் வைத்து கதிரேசனின் காலில் விழுந்து ''சீக்கிரம் மடம் ஆரம்பிங்க குருவே'' என்று சொன்னார்கள். தன்மீது இருந்த திருநீறு எல்லாம் அழிக்கத் தொடங்கினான் கதிரேசன். அங்கே நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவி மனம் வருந்தினாள். நகைச்சுவைக்காக செய்த விசயம் பிரச்சினையாகக் கூடும் என அவர்கள் கதிரேசனிடம் இதை பெரிது படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள்

 நல்ல சூழலினை நல்லவிதமாக பயன்படுத்தத் தெரியாமல் வாழப் பழகிவிட்டோம், கேலிப்பொருளாகிப் போனது தனது தவறுதான் என நினைத்தான் கதிரேசன். வீட்டுக்கு வந்த பின்னர் தனது அறையில் அமர்ந்து பல தினங்கள் பின்னர் ஒரு பாடல் பாடினான்

''உள்ளிருக்கும் வெளியிருக்கும் உன்னை வெளிப்படுத்திட நானும்
முள்ளிருக்கும் இடமறியாது போர்த்திக் கொண்டேன்
வேசம் இட்டதாய் வேதனை தந்தே குறுகிப்போனார்
மோச உலகமாக்கியதேனோ சொல்சிவனே''

பாடி முடித்த வேளையில் கதிரேசனின் அறைக் கதவைத் தட்டினாள் வைஷ்ணவி

(தொடரும்)


2 comments:

Chitra said...

நல்ல சூழலினை நல்லவிதமாக பயன்படுத்தத் தெரியாமல் வாழப் பழகிவிட்டோம், கேலிப்பொருளாகிப் போனது தனது தவறுதான் என நினைத்தான் கதிரேசன்.

..... அருமை.

Radhakrishnan said...

நன்றி சித்ரா.