Thursday 24 June 2010

கம்பராமாயணம் - 1

பாயிரம் 


கடவுள் வணக்கம்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

சிற்குணத்தர் தெரிவு அரு நல நிலை
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றனுள்
முற் குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்று ஆரோ

ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார்

அவையடக்கம்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து ராமன் கதைஅரோ

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையி னோர்புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உரை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பாஅரோ

முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பண்ணப் பெறுபவோ?

அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?

நூல் வரலாறு

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர்ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ

களம் கண்ட காவியம்

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் ஆறு மாக் கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே.

5 comments:

Vidhoosh said...

good work v.r. Pl. continue.
--vidhoosh

Vidhoosh said...

if possible also pl write a small note / description of the verses below each verse, for easy understanding and ref.

Chitra said...

அற்புதம்!

Radhakrishnan said...

மிக்க நன்றி விதூஷ். எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். :( அதனால் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவது சற்று கடினமான செயல்.

மிக்க நன்றி சித்ரா.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை சகோதரா...