Sunday 6 September 2009

என்னுடைய ஆசிரியர்கள் - 2

எப்படி எங்களை எல்லாம் மறந்தாய் என விளையாட்டு ஆசிரியரும், ஓவிய ஆசிரியரும் கேட்பது நினைவில் வந்தது. எனக்கும் விளையாட்டுக்கும் சற்று தொலைவு. எனக்கு வலது கை, சிறு வயதில் உடைந்து போய் திரும்பவும் ஒட்ட வைக்கப்பட்டதால் வேகமாக எறிவதோ எடை அதிகமுள்ள பொருட்களை தூக்குவதோ சற்று சிரமம். அதுபோல் ஒரு முறை மரத்தின் கிளையினை பிடித்து pull ups செய்ய வேண்டிய நிர்பந்தம். விளையாட்டு ஆசிரியர் நான் பல முறை முயன்று 0 எடுத்ததை சிரித்தவாறே உனக்கு 1 போட்டு வைக்கிறேன் என செல்லமாக பிரம்பால் ஒரு அடி போட்டார். என்னை விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க செய்ய வேண்டும் என பலமுறை முயன்று தோற்றுப் போனார் இருந்தாலும் உடற்பயிற்சி தேர்வு எழுதுவதில் அதிக மதிப்பெண்கள் பெற்று விடுவேன். அன்பாக இருப்பார், நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்.

ஓவிய ஆசிரியர்; சுப்பு ஆசிரியர். இவரை மனதில் வைத்தே நுனிப்புல்லில் ஓவிய ஆசிரியர் பார்த்தால் ஒரு மதிப்பெண் கூட குறைக்க மாட்டார் என்பது போல் எழுதி இருக்கிறேன். இவரிடம் நான் அதிக மதிப்பெண்கள் வாங்கியது 6/10. அநாயசயமாக படம் வரைவார். இவரின் ஓவியங்கள் உண்மையிலே பேசும். அந்த கருநிறப் பலகையில் வண்ணம் கொண்டு பூசிவிட்டார் என்றால் போதும் அத்தனை சிறப்பாக இருக்கும், ஏனோ எனக்கு தான் இன்னமும் வரைவதில் ஈடுபாடு இல்லை.

தலைமை ஆசிரியர் சீனிவாசன் குறிப்பிட்டு இருக்கிறேன் இவர் பாடம் எடுத்ததில்லை. பிரம்பால் அடி வாங்கி இருக்கிறேன். இவர் எட்டாவது படித்தபோது விலகியவுடன் புது தலைமை ஆசிரியர் வந்தார். அவ்வளவு அமைதி. பாடம் எல்லாம் எங்களுக்கு எடுத்தார். எம்டன் வருது என அந்த கால நினைவுகளையெல்லாம் பகிர்ந்து கொள்வார். அதிர்ந்து பேச மாட்டார். இவரது காலகட்டத்தில் பள்ளி மிகவும் சிறப்பு பெற்றது எனலாம். ஆசிரியர்களை நான் மறந்து போயிருந்தால் அவர்கள் என்னை மன்னிக்கவும். இங்கு குறிப்பிட்ட ஆசிரியர்களின் பெயர்கள் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் பெயர்கள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னை ஒரு மாணவனாக உருவாக்கியதில் இவர்களது பங்கு பெரும் மகத்தானது. என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன்.

அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப்பள்ளி

ஜெரால்டு ; எனக்கு இவர் பாடம் சொல்லித்தந்தது இல்லை. எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கு இவர் ஒரு காரணம். எனது மதிப்பெண்கள் பார்த்துவிட்டு எனக்கு கணித பிரிவு தரமுடியாது என மறுத்துவிட்டார். எனது அண்ணன் இந்த பள்ளியில் ஆறாவது இருந்தில் படித்து வந்தார் எனினும் எனக்கு கணித பிரிவு முடியவே முடியாது என மறுக்க நான் மல்லாங்கிணருக்கு திரும்பலாமா என யோசித்த வேளையில் எனது தந்தை இங்கேயே சேர்ந்து அறிவியல் பிரிவு படி என சொல்லியதும் அறிவியல் பிரிவு எடுத்துப் படித்தேன். முதல் மாதத் தேர்வில் முதல் மாணவனாக வந்ததும், ஜெரால்டு விடுதியின் காப்பாளாராகவும் இருந்தார், எனது மதிப்பெண்கள் பார்த்துவிட்டு கணித பிரிவு தராததுக்காக ஜெரால்டு வருத்தம் தெரிவித்தார். இவர் வேதியியல் பாடத்தில் வித்தகர் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றும் இவரை பார்க்கிறேன் அதே புன்னகை. ஆனால் மிகவும் கண்டிப்பானவர். இவரைக் கண்டு நடுங்குவார்கள்.

இரத்தினசபாபதி தமிழ் ஆசிரியர்: இவரைப் பற்றியும் நுனிப்புல்லில் குறிப்பிட்டு இருக்கிறேன் நூறு நாள் கற்ற கல்வி ஆறுநாள் விடப்போம் என சொல்லி தந்தவர். தமிழ் ஆசிரியர். இவரது சொல்லித்தரும் விதம் அனைவரையும் கவரும். தமிழ் நேசிக்க எனக்கு மேலும் வழிகாட்டியவர்.

எனக்கு இயற்பியல் கற்றுத் தந்த ஆசிரியர் பால சுப்ரமணியம். சிரித்த முகத்துடன் இவர் சொல்லித் தரும் பாங்கு அருமையாக இருக்கும். இவரது திறமையை பள்ளி வெகுவாக பாராட்டும். ஆனால் எனக்கு கிடைத்த வேதியியல் ஆசிரியர் வயதானவர் தலைமை ஆசிரியராக இருந்தார் அனைத்தும் அவரது விரல் நுனியில் இருக்கும் எனினும் எங்களையே படிக்கச் சொல்வார். ஆங்கில ஆசிரியர் எப்பொழுதும் வெத்திலை போட்டுக் கொண்டு ஆங்கிலம் சொல்லித் தருவார். நான் எனது படித்த காலங்களில் எப்பொழுதுமே தேர்வில் தோற்றது இல்லை, மாதத் தேர்வில் கூட.ஆனால் ஆங்கிலத்தில் எப்பொழுதுமே 60 சதவிகிதம் தான்.

விலங்கியல் சொல்லித்தந்த ஆசிரியர் என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவருக்கு ஒருமுறை உடல்நலம் சரியில்லை என்றதும் அவரது மதத்தின் முறைப்படி மருத்துவரை நாடாது நலமாகி வந்தார், இது என்னை பயங்கரமாக சிந்திக்க வைத்தது! இவர் மருத்துவரிடமே சென்றது இல்லையாம்!

தாவரவியல் சொல்லித்தந்த ஆசிரியை (இது மாணவர்கள் மட்டும் உள்ள பள்ளி) எளிதாக சொல்லித்தருவார்கள், மிகவும் எளிதாகப்புரியும். எனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய பாடம் இந்த தாவரவியல். இதில் நான் எடுத்தது 121/200. இத்தனைக்கும் தாவரவியல் இறுதி தேர்வில் நான்கு நாட்கள் விடுமுறை வேறு. எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் குறைந்தேன் என எனக்கு தெரியாது! அந்த பள்ளியில் அறிவியல் பிரிவில் முதல் மாணவனாக வந்தேன் 938 மதிப்பெண்கள். எனக்கு அடுத்து வந்த மாணவன் 937. அவனும் தாவரவியலில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள். இப்பொழுது அந்த தொழிற்கல்வி ஆசிரியரின் சாபம் பலித்தது! நுழைவுத்தேர்வில் நான் எடுத்தது 37/50. பி எஸ் ஸி எல்லாம் படிக்க முடியாது, படித்தால் மருத்துவத் துறை சம்பந்தபட்டதுதான் படிப்பேன் என எந்த ஒரு கல்லூரிக்கும் நான் விண்ணப்பிக்கவில்லை, ஒரே ஒரு கல்லூரி தவிர அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆயுர்வைசியா கல்லூரி. வேதியியல் படிக்க இடம் கிடைத்தது. நான் மறுத்துவிட்டேன்.

எனக்கு பக்கபலமாக இருந்த எனது தந்தையை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எனக்கு தந்த ஊக்கமும் அன்பும் வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அவர் மாந்தோப்பு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். எனக்கு வீட்டில் எப்பொழுதும் படிக்க சொல்லித் தந்தது இல்லை. நானாக படித்துவிடுவேன். எனது விசயத்தில் குறுக்கிட்டதும் இல்லை. முழு சுதந்திரம் உடையவனாகவே வாழ்ந்து வந்தேன். எனக்காக அவர் இந்த அருப்புக்கோட்டை பள்ளிக்கு முதன்முதலில் விடுதியில் தங்கி படிக்கச்சென்றபோது பெட்டியை தூக்கி வந்த நிகழ்வு இப்பொழுதும் எனக்கு அழுகையை கொண்டு வரும். என்ன தவம் செய்தேன்! ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் என்னுடன் இருந்து எனக்கு செய்த உதவி ஒரு தந்தையின் கடமை என நான் சொல்வேனானால் என்னைப் போல் ஒரு முட்டாள் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.

8 comments:

Deepa said...

உங்கள் ஆசிரியர்களின் நினைவுகளை அழகாகப் பகிர்ந்ததோடு உங்கள் அன்பு மிக்க தந்தையையும் ஆசானாகப் பாவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
நல்ல பதிவு.

அன்புடன் அருணா said...

நல்ல நல்ல மலரும் நினவுகள்!

கிருஷ்ண மூர்த்தி S said...

முதலில் அம்மாவையும். கடைசியாகக் கடவுளையும் விட்டு விட்டு, இடையில் இரண்டை மட்டுமே நினைவு வைத்துக் கொண்டு பகிர்ந்து கொண்டதற்கு, மிகுந்த கண்டனங்கள்:-((

Radhakrishnan said...

1. மிக்க நன்றி தீபா அவர்களே.

2. மிக்க நன்றி அருணா அவர்களே.

3. மிக்க நன்றி ஐயா. அதெப்படி அவர்களை மறப்பேன், அவர்களை நினைவுகூறாமல் நான் என்னுடைய ஆசிரியர்கள் பகுதியை நிறைவு செய்து இருக்க வாய்ப்பே இல்லை. நான்காம் பகுதியில் அன்னையை நினைவு கூர்வேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

அது சும்மா, ஒரு நகைச்சுவைக்காக எழுதினது. "சிதறல்கள்" தீபா மறுமொழியை படித்தபோது எழுந்த மெல்லிய பகடி அது! நீங்கள் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை, பெயர் குறிப்பிட்டு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நானோ, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், ஒரு முக்கியமான செய்தியைப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தவர்களை, எண்ணக் கூட மறந்து விட்டது, நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறேன்.

தத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார் என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு! ஆசிரியன்! வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது!

அவ்வளவுதான்!

Radhakrishnan said...

:) மிகவும் மகிழ்ந்தேன் ஐயா. நீங்கள் குறிப்பிட்ட விசயத்தையும் இந்த தொடரில் எழுதி இருக்கிறேன் ஐயா. விரைவில் பார்வைக்கு வைக்கிறேன். மிக்க நன்றி ஐயா.

ப்ரியமுடன் வசந்த் said...

மிகவும் நன்றாக ஆசிரியர்களை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்

Radhakrishnan said...

மிக்க நன்றி வசந்த் அவர்களே.