Wednesday 16 September 2009

மெருகு

சாகுபடி என தலைப்பு இடப்பட்டு
தமிழ் வார்த்தைகளால்
எண்ணங்கள் அலங்கரிக்கப்பட்டு
மேசையின் மீது
கவிதை ஒன்று
மிதந்து கொண்டு இருந்தது

விழிகள் கொண்டு
படித்துப் பார்க்கையில்
அற்புதம் எனப் பாராட்டி
அக்கவிதைக்கு ஒரு கவிதை
எழுதிவிட நெற்றி விரிந்தது

மீண்டும் வாசித்ததில்
வார்த்தை அலங்காரம்
பாமரனுக்குப் புரியுமோ
எண்ணியவாறே
கருவினைச் சிதைக்காது
வார்த்தைகள் மாற்றி
அக்கவிதையை வளர்த்தபின்
பல உள்ளங்களை
சாகுபடி செய்யும் என
இதயம் சிலிர்த்தது

உண்மை சமுதாயத்தின்
உணர்வு தாக்கம்தனை
ஒவ்வொரு ஜீவனிலும்
புகுத்திவிடும் என
அந்த படைப்பினை
கர்வம் கொண்டு பார்த்த பொழுது

''அம்மா
ஏதாவது போடுங்கம்மா''
வீட்டு வாசலில் இருந்து வந்த
சப்தம் கேட்டு
சில வரிகள் தன்னை
சாகுபடி கவிதையில் சேர்த்துவிடலாம்
என எண்ணியே
வாசலில் நின்றவருக்கு
நன்றி சொல்லி
எனக்கு மட்டும் இருந்த உணவை
அவருக்கு கொடுத்துவிட்டு
திரும்புகையில்
என் வெற்றுப்பானைகள்
மெருகேறி இருந்தன.

3 comments:

vasu balaji said...

:) எனக்கு மட்டும் இருந்த உணவை
அவருக்கு கொடுத்துவிட்டு
திரும்புகையில்
என் வெற்றுப்பானைகள்
மெருகேறி இருந்தன.

அழகான வரிகள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.

புலவன் புலிகேசி said...

வெற்றுப் பானை... மனதை வருடும் வரிகள்... உங்கள் கவிதையில் பிச்சை காரனுக்கும் இடமளித்தது மகிழ்ச்சியளிக்கிறது....