Friday, 4 September 2009

என்னுடைய ஆசிரியர்கள் - 1

மேலத்துலுக்கன்குளம் நடுநிலைப் பள்ளி

அரை வகுப்பு - ஐந்தாம் வகுப்பு வரை.

திருமதி. தவமணி, திருமதி. லீலாவதி மற்றும் திருமதி. தனலட்சுமி. இந்த மூன்று ஆசிரியைகளும் எனக்கு அத்தை முறை. இவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். நன்றாக சொல்லித் தருவார்கள். மற்றபடி குறிப்பிடும்படியாக எதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் இவர்களுடைய மகன்கள் (என்னை விட வயது மூத்தவர்கள்) எனக்கு நல்ல பழக்கம் என்பதால் இவர்கள் வீடு சென்று சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது என பிற்காலங்களில் செய்து இருக்கிறேன். இவர்களை டீச்சர் என அழைப்பதா அத்தை என அழைப்பதா என பல முறை அவர்கள் வீடு சென்றபோது குழம்பியது உண்டு. வணக்கத்திற்குரியவர்கள். மூன்றாம் வகுப்பு வரை இவர்கள் தான்.

நான்காவது வகுப்பில் மல்லாங்கிணர் சீனி வாத்தியார். இவர் பதில் புத்தகம் தந்து வினாக்களுக்கு பதில் எழுத சொன்னதாக எனக்கு ஞாபகம். அடிக்கமாட்டார். சிவப்பாக ஒற்றை இராமம் போட்டு வருவார். சிரித்த முகத்துடனே இருப்பார்.

ஐந்தாவது வகுப்பில் வத்தனாங்குண்டு வாத்தியாருக்கு என் மேல் கொள்ளைப் பிரியம். என்னை எப்பொழுதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். நுனிப்புல்லில் இவரை மனதில் வைத்து ஒரு ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளேன். திறமையாக பாடம் நடத்துவார். அடிக்க மாட்டார். நான் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியது இல்லை, ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் இராஜ்ஜியம்தான். ஆறாவது வகுப்புக்கு இந்த பள்ளிவிட்டு வேறு பள்ளி செல்ல நாங்கள் (4 நண்பர்கள்) முடிவெடுத்த போது பள்ளித் தலைமையாசிரியர் முதற்கொண்டு மிகவும் வருத்தப்பட்டார்கள். இப்படி நல்லா படிக்கிறவங்க எல்லாம் எட்டு வரைக்கும் இங்கு படிக்கலாம்தானே என சொன்னது, தலைமை ஆசிரியர் நடராஜன் அறை எனக்கு இன்னமும் நினைவில் வந்து போகும். ஆறாவது வகுப்பு ஆசிரியர் ஏழாவது வகுப்பு ஆசிரியர் எங்களுக்கு அவ்வப்போது பாடம் நடத்துவது உண்டு. ஏழாவது வகுப்பு ஆசிரியரைக் கண்டால் பயப்படுவோம். என்னை செதுக்கியதில் பெரும் பங்கு பெற்றவர்கள்.

மல்லாங்கிணர் மேல்நிலைப் பள்ளி

ஆறாவது வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை

அறிவியல் ஆசிரியை : எனது குரல் வளம் (பாடல் குரல் வளம் அல்ல) கேட்டு எப்படி கணீருன்னு ஒன்று இரண்டு சொல்றான் என பாராட்டியவர். மிகவும் கண்டிப்பானவர். நன்றாக சொல்லித் தருவார். இவரின் மகள் உமா மகேஸ்வரி எங்கள் வகுப்பில்தான் படித்தார். இவர் மாணவ மாணவியர்களை அடிப்பது உண்டு. நானும் வாங்கி இருப்பேன்.

கணித ஆசிரியை : மென்மையான குரலில் பாடம் எடுப்பார்கள். இவர்கள் நான் எட்டாவது படிக்கும்போது உடல் நல குறைவால் பணியை விட்டுவிட்டார்கள். திறமையான ஆசிரியை.

தமிழ் ஆசிரியை : எனது தமிழுக்கு வித்திட்டவர். இவரிடம் மதிப்பெண்கள் வாங்குவது கடினம் ஆனால் நான் 85க்கு குறையாமல் வாங்கி விடுவேன். என் மேல் அலாதிப் பிரியம் இவருக்கு. அடித்ததே இல்லை, ஆனால் அதிக கோபம் வரும். பாட்டு போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி ஊக்கம் தந்தவர். தமிழ் அருமையாக சொல்லித்தருவார்.

பாட்டு ஆசிரியை : எட்டாவது வகுப்பில் பாடச் சொல்லும்போது 'சலங்கையிட்டால் மாது' எனும் பாடலை பாடி கரகோசம் பெற்றேன். இப்பொழுது எனது ஆய்வகத்தில் நானாக பாடிக்கொண்டு இருந்தால் 'terrible voice' என எனது ஆய்வக நண்பர்கள் சொல்லும்போது சிரிப்பாக இருக்கும். கோபம் அதிகமாக வரும் இவருக்கு.

தொழிற்கல்வி ஆசிரியை : பாடம் எதுவும் எடுத்ததில்லை. பள்ளியில் உள்ள தாவரங்கள் பராமரிப்போம், நன்றாக அடி விழும். யாரும் ஓடியாடி வேலை செய்யமாட்டார்கள்.

ஆங்கில ஆசிரியர்: 'close the door' என ஒருமுறை ஆய்வாளர்கள் வந்த பொழுது என்னை அழைத்துச் சொல்ல திருதிருவென முழித்தேன். அப்பொழுது ஒரு மாணவி எழுந்து சென்று கதவை அடைத்துவிட்டு கைத்தட்டல் பெற்றார். நல்லாவே ஆங்கிலம் கற்று இருக்கிறேன்.
நன்றாக திட்டுவார். அடியும் விழும்.

அறிவியல் ஆசிரியர் : மிகவும் சிரிப்பாக பாடம் நடத்துவார். இவர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சேர்ந்ததெல்லாம் சிவலிங்கம், வாய்ச்சதெல்லாம் வைத்தியலிங்கம் என்பார். ஏலே என ஒரு அடி தருவார் சரியாக பதில் சொல்லாவிட்டால்.

வரலாறு ஆசிரியர் : மாடு மேய்க்கறவனெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்துருக்கான் என எங்களை மிரளச் செய்தவர். ஆங்கில பாடமும் ஒன்பதாவதில் இவர் தான். அடி இடியெனெ விழும். முதுகை பதம் பார்ப்பார்.

கணித ஆசிரியர் : முதலில் சீனிவாசன் ஆசிரியர் பத்தாவதில் பாதியில் இவர் சென்ற பின்னர் மொட்டையாண்டி ஆசிரியர் வந்தார். சீனிவாசன் ஆசிரியரை இழந்த கவலையில் இருக்க தனது அதிரடியால் எங்கள் மனம் கவர்ந்தவர் இவர். சீனிவாசன் ஆசிரியர் எனது பெயரை rathakrishnan என்பதை radhakrishnan என மாற்றியவர், பள்ளியில் முதல் மாணவனாக வருவேன் என ஆருடம் சொன்னவர். 8ம் வகுப்பில் இருந்து நான் தான் பள்ளியில் முதல் மாணவன். காரணம் ஏழாவதில் பள்ளியை விட்டுச் சென்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி. இந்த ஆசிரியர் என்னை ஒருமுறை inland letter வாங்கி வா என சொன்னதும் முதலில் inland letter வாங்கி பின்னர் பாதியிலே மனது மாறியவனாக திரும்பவும் சென்று வேறு கடிதம் வாங்கி தந்து திட்டு வாங்கி ஒழுங்கான கடிதம் கடைசியில் வாங்கி தந்தேன்.

மொட்டையாண்டி ஆசிரியர் கணிதத்தில் 100/100 வாங்க வேண்டும் என என்னிடம் தலையில் ஓங்கி அடித்து சொல்லியும் என்னால் 98 தான் வாங்க முடிந்தது. இரண்டு மார்க்குல போய்ருச்சே என என்னிடம் மதிப்பெண்கள் வாங்கிய தினம் அன்று வருத்தப்பட்டார். நான் பள்ளியின் முதல் மாணவனாக வந்தும் எனது மொத்த மதிப்பெண்கள் இவ்வளவு கேவலமாக இருக்கிறதே இதனை இந்த பள்ளியில் எழுதி வைத்து விடுவார்களே என வருத்தத்தில் இருந்தேன் நான் எடுத்த மதிப்பெண்கள் 359. பள்ளியில் பெயர் எழுதப்பட்டதை பெருமையாக படம் பிடித்து வைத்து இருக்கிறேன்.

எட்டாவது படிக்கும்போது நான் வேறு ஒரு அறிவியல் ஆசிரியருக்கு பயந்து செயல்முறை பாட வகுப்புக்கு செல்லாமல் இருந்தேன். எனக்கு படம் வரைய வராது. அவர் காலில் அடிப்பார். ஆதலால் நெஞ்சு வலிக்கிறது என ஒரு தோட்டத்தில் அமர்ந்து கண்ணீருடன் வரைவேன் அப்புறம் வீடு சென்று விடுவேன். இப்படி சில தினங்கள் நடந்ததும் என்ன இவனை காணோம் என திருமதி. சுப்புலட்சுமி அறிவியல் ஆசிரியை கண்டுபிடித்து பன்னிரண்டாவது சொல்லித்தரும் தமிழ் ஆசிரியரிடம் சொல்லி காலையில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் கடவுள் வாழ்த்து பாடும் முன்னர் எனது கன்னத்தை பிடித்து திருகி இப்படியெல்லாம் பண்ணுவியா என என்னை திட்டியதும் , 'நல்லா படிக்கிறவன் ஆனா என்னான்னு தெரியல' என அந்த ஆசிரியை சொன்னதும் என்னால் மறக்க முடியாத நினைவுகள். என்னை புடம் போட்டவர்கள் அந்த இரண்டு ஆசிரியர்களும்.

ஒரு முறை எனது அக்காவின் திருமணத்திற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது மாத தேர்வினை பொருட்படுத்தாமல் மூன்று நாட்கள் சென்ற போது இயற்பியல் ஆசிரியர் (எனது அண்ணனின் நண்பர்) பளார் என அறைந்து படிப்பு முக்கியம்னு தெரியாம எதுக்குடா நீ படிக்க வர என சொன்னது இன்னும் மறக்க முடியாது. பன்னிரண்டாவது வரை இருந்ததால் சிறப்பு பிரிவு ஆசிரியர்கள் அவ்வப்பொழுது வந்து எங்களுக்கு பாடம் எடுப்பது வழக்கம். வேதியியல் ஆசிரியர் இன்னமும் மனதில் நிற்கிறார். சிரித்த முகத்துடன் சொல்லித்தந்த விதம் மறக்க முடியாதது.

பத்தாம் வகுப்பு முடித்து செல்லும்போது அந்தப் பள்ளியில் கணிதப் பிரிவு இல்லாததால் கணிதப் பிரிவு வேண்டி அருப்புக்கோட்டை எஸ் பி கே செல்ல முடிவு எடுத்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்லும்போது 'நீ கஷ்டப்பட போற பாரு' என என்னை வாழ்த்தி அனுப்பிய பன்னிரண்டாவது வகுப்புக்கு சொல்லித்தரும் ஒரு தொழிற்கல்வி ஆசிரியர் அதிகமாகவே என்னை பயமுறுத்திவிட்டார்.

(தொடரும்)

Post a Comment

4 comments:

Shakthiprabha said...
This comment has been removed by the author.
Shakthiprabha said...

//மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்லும்போது 'நீ கஷ்டப்பட போற பாரு' என என்னை வாழ்த்தி அனுப்பிய பன்னிரண்டாவது வகுப்புக்கு சொல்லித்தரும் ஒரு தொழிற்கல்வி ஆசிரியர் அதிகமாகவே என்னை பயமுறுத்திவிட்டார்.//

//எட்டாவது படிக்கும்போது நான் வேறு ஒரு அறிவியல் ஆசிரியருக்கு பயந்து செயல்முறை பாட வகுப்புக்கு செல்லாமல் இருந்தேன். எனக்கு படம் வரைய வராது. அவர் காலில் அடிப்பார். ஆதலால் நெஞ்சு வலிக்கிறது என ஒரு தோட்டத்தில் அமர்ந்து கண்ணீருடன் வரைவேன் //

:( என்னவோ போங்க...என்ன சொல்லுறதுன்னு தெரியலை. இவர்களும் மாணவர்கள் தான்...

பிரியமுடன்...வசந்த் said...

நல்ல நினைவுகள் நல்ல எழுத்து நடையில்

வெ.இராதாகிருஷ்ணன் said...

1. ஆசிரியர்களின் கடமை என வரும்போது அவர்கள் மாணவர்களாக இருந்தோம் என்பது நினைவில் வருவது இல்லை. மிக்க நன்றி ஷக்தி அவர்களே.

2. மிக்க நன்றி வசந்த் அவர்களே.