Friday 25 September 2009

எட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்

உயர்பவரெல்லாம் இறக்கத்திலிருந்தே தொடக்கம்
இறக்கமடைந்தாலும் மேன்மையது தவறுவதில்லை
அடக்கமது கொண்டு வாழ்வினை சிறப்பித்தே
எதற்கும் எப்பொழுதும் விழித்திருக்கும் மக்கள்

இறக்கத்திலிருந்து எழும்போது அடக்கமும் விழித்தலும்
மேன்மையிலிருந்து விழும்போது அடக்கமும் விழித்தலும்
உயர்நிலையில் வைத்தே உரிமை கொண்டாடும்
இருள் துடைத்து வெளிச்சமாக்கும் மக்கள்

பூக்கள் சூடிய தோல்கள் சுருங்குவதில்லை
இறை கிடைக்காத எறும்புகள் நடுங்குவதில்லை
கிடைக்காத காற்றுக்கு சிலநுண்ணுயிர்கள் ஏங்குவதில்லை
அனைத்துக்கும் உறுதியாய் இறுதியாகும் மக்கள்

குளிரது எரிக்கும் வெப்பமது விறைக்கும்
கொண்ட கடமையில் பொறுமை கண்டு
வெற்றிதனை வகுத்து காட்டிச் சிறக்கும்
மரணமில்லா தொடரும் முடிவுகள் மக்கள்

அழிவினைத் தடுக்க அன்பினால் பாலம்கட்டி
கொடுமையினைத் தவிர்த்திட கொள்கை மாறாது
அமைதியின் அர்த்தம்தனை விளங்கியே விளக்கி
வேதனை அறியாது வாழ்ந்திடும் மக்கள்

சீற்றம் கொள்ளும் இயற்கை கொல்லும்
நல்வழி தவரும் செயற்கையும் கொல்லும்
கொல்லும் வழியதை கரைகொண்டு அடைத்திட
உயிரதில் உறங்கி வேண்டிக்கிடக்கும் மக்கள்

புரியாத வழி புரிதலுக்கு மொழி
அறியாத புதிரும் அறிதலின் அறிவும்
கொடுப்பது இங்கே எடுப்பது இல்லை
கொடுத்து மகிழ்ந்தே குபேரனாகும் மக்கள்

ஒற்றைச் சூரியன் ஒன்றாக இல்லை
ஒன்றே பூமி ஒற்றுமையாய் இல்லை
என்றோ தொடங்கிய இறக்கமது அரக்கமது
நன்றே அடக்கியே ஒருமனம்காணும் மக்கள்

இசையில் உயிர் போடும் அசையுடன்
வசைச் சொற்கள் ஏற்பில்லா மொழியுடன்
திசையெங்கும் ஒன்றென போற்றும் ஒளியுடன்
இசைந்து வாழ்வாரே இனிதான மக்கள்.

6 comments:

க.பாலாசி said...

//குளிரது எரிக்கும் வெப்பமது விறைக்கும்
கொண்ட கடமையில் பொறுமை கண்டு
வெற்றிதனை வகுத்து காட்டிச் சிறக்கும்
மரணமில்லா தொடரும் முடிவுகள் மக்கள்//

அழகான வார்த்தைகளின் கோர்வை...அருமையான கவிதை அன்பரே....

புலவன் புலிகேசி said...

அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்...........

Radhakrishnan said...

மிக்க நன்றி கவிஞர்களே.

ஈரோடு கதிர் said...

நன்று

//இறை கிடைக்காத எறும்புகள் நடுங்குவதில்லை //
இறை (அ) இரை???

நான் இரை என அர்த்தம் கொண்டு ரசித்தேன், இந்த வரியை

ப்ரியமுடன் வசந்த் said...

//இசையில் உயிர் போடும் அசையுடன்
வசைச் சொற்கள் ஏற்பில்லா மொழியுடன்
திசையெங்கும் ஒன்றென போற்றும் ஒளியுடன்//

எதுகையும் மோனையும் ரசித்தேன்...

Radhakrishnan said...

மிக்க நன்றி கதிர் ஐயா. இங்கே இரை என எழுத வேண்டி, இறை என எழுதியது எழுத்துப் பிழையெனினும் மனிதர்களைத் தவிர எந்த உயிரினங்களும் இறைக்காக நடுங்குவதில்லை என்பது உண்மையாதலால் கவிதையினை அப்படியே விட்டுவிட்டேன்.

மிக்க நன்றி வசந்த் அவர்களே. ஆம், நல்லதொரு சந்தம் அமைந்திருக்கிறது.