Wednesday 6 October 2010

கடலை உணர்ச்சிகள்

தோழிகள் ஒரு சாபக்கேடு 

அன்று நடந்த சண்டைதனை நினைத்து பார்க்கும்போது எனக்கு மனதில் இன்னும் கோபம் கொப்பளித்து கொண்டு இருக்கத்தான் செய்கிறது. எனது மாமாவை இத்தனை கோபம் உடையவராக இதுவரை நான் பார்த்தது இல்லை. அன்று மட்டும் எனது அம்மா இல்லாமல் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என என்னால் யூகிக்க இயலவில்லை. உறவு முறிந்து போய்விடக் கூடாது என்பதில் எனது அம்மா மிகவும் கவனமாக இருந்தார். எனது மாமா அத்தனை சத்தம் போட்டும் விடுங்க அண்ணே என தடுத்தும், எதுவும் பேசாதீங்க என என் அப்பாவிடம் சொன்னவிதம், என்னிடம் சொன்ன விதம் எனக்கு கோபம் வரவைத்தாலும் என் அம்மாவின் நிலைமையை புரிந்து கொண்டு பேசாமல் இருந்தேன்.

எனது திருமணத்துக்கு அவர் கொடுத்த உதவி பணத்தை ஆறே மாதத்தில் எண்ணி வைத்துவிடு என அந்த சண்டையின் ஊடே எனது அப்பாவிடம் அவர் சொன்னவிதம் எனக்கு மேலும் கோபம் தந்து இருந்தது. எனது அப்பா கோபத்துடன் 'கடலை சாகுபடி செஞ்சி கொடுத்துருறேன்' என பல்லை கடித்துக் கொண்டு பதில் சொல்லிவிட்டார். மழை ஒழுங்காக பெய்ய வேண்டும் என எனக்குள் நினைத்து கொண்டேன். சண்டை போட்ட நாளிலிருந்து  எனது மாமா குடும்பம் என்னுடன் பேசுவதில்லை. சில வாரங்கள் பின்னர் எனது மனைவிக்கு வளைகாப்பு எல்லாம் சிறப்பாக நடந்தது, எனது மாமா குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தினர். அவர்களுடன் அம்மா மட்டும் பேசினார். அன்று அப்படியே எனது மனைவியை அவளது அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்தேன்.

எனது அப்பா தோட்டமெல்லாம் கடலை போட்டு இருந்தார். மழை பெய்யவில்லை. கிணற்றிலும் தண்ணீர் இல்லை. எப்படி கடலை சாகுபடி செய்வது. என் அப்பா நொந்து போனார். மாதம் இரண்டு கடந்து இருந்தது. வரும் விளைச்சலில் நிச்சயம் கடன் பணத்தை திருப்ப முடியாது என அப்பா தெரிந்து கொண்டார். என்னிடம் ஏதாவது பண்ண முடியுமா என்றார். யோசிக்கிறேன் என சொல்லிவிட்டு வேலைக்கு போய்விட்டேன். அன்று இரவு என் மனைவியை சென்று பார்த்தேன். விபரம் சொன்னேன்.  என்னிடம் 'இந்தாங்க இந்த நகையை அடகு வைச்சோ, வித்தோ கடன் பணத்தை கொடுத்துருங்க' என்றார். 'உங்க வீட்டுல என்ன நினைப்பாங்க, அதுவும் இந்த நேரத்திலே, அதெல்லாம் வேண்டாம்' என மறுத்துவிட்டேன். நாளும் கடந்து கொண்டிருந்தது. குழந்தை பெற இன்னும் சில வாரங்கள்தான் இருந்தது.

பணத்தை பத்தி கவலைபடாதீங்க, நாம தந்துரலாம் என அப்பாவிடம் தைரியம் சொன்னேன். சில தினங்களில் என்னுடன் முன்னர் வேலை பார்த்த பெண் அவளது கல்யாண பத்திரிக்கையுடன் என்னை பார்க்க வந்தாள். அப்பொழுது நான் நடந்த விசயத்தை அவளிடம் சொன்னேன். கவலைபடாதீங்க என அவள் போய்விட்டாள். மறுதினம் மாலை என்னை அலுவலகத்தில் சந்தித்தாள். இந்தாங்க பணம் என தந்தாள். வேண்டாம் என்றேன். நீங்கள் எனக்கு கடன்பட்டவராக இருக்க உங்கள் சுயம் தடுக்கிறதாக்கும் என்றாள். அப்படியெல்லாம் இல்லை, உன்னை நான் அவமதித்து இருக்கிறேன், நீயெல்லாம் ஒரு தோழியா என நினைத்து இருக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கஷ்டம் என்றதும் உதவ வந்து இருக்கிறாய் அதுதான் யோசிக்கிறேன் என்றேன்.

இப்பொழுதும் சொல்கிறேன், நான் உங்களை உண்மையாகவே நேசிக்கிறேன். எனது எண்ணத்தில் எந்த குளறுபடியோ, உங்கள் மனைவியின் வாழ்க்கையையோ, உங்கள் வாழ்க்கையையோ கெடுக்க வேண்டும் எனும் நோக்கமோ என்னிடம் கொஞ்சமும் இல்லை. உங்களை திருமணம் பண்ணிக்கொண்டு வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன், என்னை வேண்டாம் என ஒதுக்கி விட்டீர்கள், இந்த பணத்தையாவது வாங்கி கொள்ளுங்கள் என்றாள். இத்தனை பணம் எப்படி வந்தது என கேட்டேன். பங்கு வர்த்தகத்தில் லாபம் பார்த்தது என்றாள். வேலையை விட்டுவிட்டு பங்கு வர்த்தகம் பண்ண போயிருந்திருக்கிறாள் என நினைத்துக் கொண்டேன்.

பணத்துடன் அவளது கைப்பேசி எண்ணையும் தந்தாள். நேரம் இருக்கும்போது என்னோட பேசுங்க என சொன்னாள். எனக்கு மனம் வலித்தது. அன்று எனது மனைவியிடம் நடந்த விசயம் சொன்னேன். எதுக்கு அவகிட்ட பணம் வாங்கினீங்க, சீக்கிரம் அவளோட பணத்தை திருப்பி தர பாருங்க என்றார் என் மனைவி. சரி என்றேன். அடுத்த நாளே பணத்தை என் மாமாவிடம் தர சென்றோம். கோவத்தில அப்படி பேசிட்டேன், இந்த வருஷம் தான் கடலை விளைச்சல் இல்லையே, எங்க கடன் வாங்கினீங்க என்றார். இந்தா பணம் சரியா இருக்கானு பாரு என என் அப்பா அவரிடம் தந்தார். அதான் சொல்றேன்ல, என்னை மன்னிச்சிருங்க என என் அப்பாவை கட்டிபிடித்தார். எனக்கு இந்த மாமாவை மட்டுமே தெரியும். இதற்கெல்லாம் என் அம்மா ஒரு காரணம் என எனக்கு புரிய வெகு நேரம் ஆகவில்லை.

பணத்தை அவளிடமே திருப்பி தந்தேன். அதற்கு பின்னர் தினமும் அவளுடன் பேசுவதை வழக்கமாக்கி கொண்டேன். ஒருமுறை அவளுடன் அலுவலகத்தில் இருந்து பேசும்போது உனக்கு பொண்டாட்டி இருக்கிற நினைப்பு இருக்கட்டும், போன்ல எவகிட்ட இப்படி கடலை வறுக்கிற என்றான் என்னுடன் வேலை பார்த்த ஒருவன். எங்கள் தோட்டத்தில் கடலை மிகவும் குறைவாகவே வந்தது நினைவுக்கு வந்து போனது. அவளின் திருமண நாள் வந்தது. எனது மனைவியின் பிரசவ தினமும் வந்தது.


என்னை கல்யாணத்துக்கு போக சொன்னார் எனது மனைவி. அப்படி வலி வந்தா தகவல் சொல்ல சொல்றேன் என்றார். கல்யாண மண்டபம் சென்றேன். எனது மாமா மகள் , என்னுடன் வேலை பார்த்தவர்கள் என பலர் இருந்தார்கள். மாமா மகள் என்னிடம் வழிய வந்து 'சாரி மாமா' என்றாள். பரவாயில்லை எங்க மேலதான் தப்பு என்றேன். அவளது முகத்தில் வருத்தம் தெரிந்தது.

என்னுடன் முன்னர் வேலை பார்த்த பெண், என்னை கண்டதும் என்னிடம் வந்தாள். தான் மணமுடிக்க போகும் வாலிபனிடம் என்னை அழைத்து சென்றாள். இதோ இவர்தான் நான் மணமுடிக்க நினைத்து இருந்தேன் என அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினாள். நான் என்ன சொல்வது என புரியாமல் விழித்தபோது கைபேசி ஒலித்தது. எடுத்தேன். மனைவிக்கு பிரசவ வலி. எனக்கு மனதில் பயங்கரமான வலி.

(தொடரும்)

8 comments:

தனி காட்டு ராஜா said...

//இப்பொழுதும் சொல்கிறேன், நான் உங்களை உண்மையாகவே நேசிக்கிறேன். எனது எண்ணத்தில் எந்த குளறுபடியோ, உங்கள் மனைவியின் வாழ்க்கையையோ, உங்கள் வாழ்க்கையையோ கெடுக்க வேண்டும் எனும் நோக்கமோ என்னிடம் கொஞ்சமும் இல்லை. உங்களை திருமணம் பண்ணிக்கொண்டு வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்,//

தேடி வந்த தெய்வானையை மிஸ் பண்ணிடீங்களே தல .........
எப்படி நான் கரெக்டா போன பதிவிலேயே இதை பத்தி சொன்னேன் பார்த்தீங்களா.. ஹ ..ஹ ...ஹா ???

Radhakrishnan said...

ஹா ஹா ஹா! இப்படித்தான் ஜோசியம் வளர்ந்தது. ;)

Chitra said...

நல்ல புரிதல் உள்ள உணர்வு பூர்வமான சம்பவம். . :-)

Radhakrishnan said...

நன்றி சித்ரா.

Gayathri said...

ithenna punaiva illa unmaya? aanaa rombha nalla irukku

Radhakrishnan said...

இது கற்பனைதான் காயத்ரி. ஆனாலும் இந்த சமூகத்தில் எங்காவது நடந்து கொண்டிருக்கும் ஒரு விசயம் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஹேமா said...

தொடரும் கதையா டாக்டர்.எத்தனைவிதமான மனித முகங்களைக் கொண்டு வருகிறீர்கள் !

Radhakrishnan said...

ஆம் ஹேமா. பல முகங்கள் இருந்தாலும் அனைவரும் மனிதர்கள்.