Tuesday 26 October 2010

தேடிக்கொண்ட விசயங்கள் - 3

3. உலக உயிரினங்கள் ஒரு பார்வை

'உலகில் தோன்றும் உயிரினங்கள், இயற்கையின் சூழலுக்கேற்ப, செயற்கைத்தனமான வாழ்வியலுக்கேற்ப, தம்மில் மாற்றம் கொள்வதோடு, தம்மை மாற்றியமைத்துக் கொண்டு வாழும் பழக்கத்தை எடுத்துக்கொள்வது மட்டுமில்லாது, அந்த வெற்றிகரமான காரணிகளை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் தம்மை உலகில் நிலைநிறுத்திக் கொள்கின்றன'

உயிரினங்கள் எப்படி தோன்றியது? உயிரினங்கள் எவரால் படைக்கப்பட்டது? 'படைப்பு கொள்கை' 'சுயம்பு கொள்கை' என இரண்டு வகைகள் இருக்கின்றன என வைத்து கொண்டாலும், படைக்கப்பட்டதோ, தோன்றியதோ அது எப்போது எனும் வினாவிற்கான விடைகள் தெளிவாக இல்லை என்பதுதான் உண்மை.

உலகம் தோன்றியது எப்போது? வேதம் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அறிவியல் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அல்லது நானாக ஒரு புதுக் கணக்கு எழுதுவதா? என யோசித்துக் கொண்டிருக்குபோது எல்லாமே ஒருவிதத்தில் பொய் கணக்கு என்றுதான் தோன்றுகிறது.

உலகில் தற்போதுள்ள ஜீவராசி வகைகள் பதினேழு லட்சங்கள் என அறிவியல் அறிஞர்கள் அறிவித்து இருக்கிறார்கள். அதில்

முதுகெலும்புள்ள விலங்கினங்கள் வகை  62,305,
முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகை 1, 305, 250.
தாவர இன வகைகள் 321,212
 காளான் வகை, பாசி வகை என 51,563.

பூச்சிகள் மட்டும் ஒரு லட்சம் முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகையில் அடக்கமாம். பாலூட்டி வகைகள் வெறும் 5490 மட்டுமே.

இந்த கணக்கெடுப்பில் ஆடுகள், ஒட்டகங்கள், பாக்டீரியாக்கள் போன்றவை கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என அந்த அறிவிப்பில் உள்ளது. தற்போது பூமியில் இல்லாது போன மறைந்த ஜீவராசி வகைகள் 300, ௦௦௦ என அறியப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எல்லா ஜீவராசி வகைகள் சேர்த்தால் 3,000,000 லிருந்து 10,000,000 அல்லது 50,000,000 இருக்கலாம் என கருதப்படுகிறது.

மறைந்து போன ஜீவராசிகள் எத்தனை என்பதை அறுதியிட்டு கூற இயலாத நிலையும், திடீர் திடீரென புது வகையான ஜீவராசிகள் உருவாவதும் என இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

நமது சூரியக் குடும்பம் தோன்றிய வருடங்களில் முதல் ஒன்றரை பில்லியன் வருடங்கள் மட்டுமே பூமியில் உயிரினங்கள் இல்லை எனவும் அதற்கு பின்னர் பாக்டீரியா தோன்றிவிட்டது என வெளியிடப்படும் அறிவியல் கணக்கெடுப்புகள் ஆச்சர்யம் அளிக்கின்றன. மூன்றரை பில்லியன் வருடங்களாக பாக்டீரியாக்கள் நமது பூமியில் நிலை கொண்டுவிட்டது. நமது மனித இனத்துடன் ஒட்டிய இனம் தோன்றி தற்போது ஏழு மில்லியன் வருடங்கள் (7,000,000) என்பது கணிப்பு.

இதில் எத்தனைவிதமான மாற்றங்கள்? பூமியில் ஏற்பட்ட வேறுபாடுகள்தான் எத்தனை? இருப்பினும் ஜீவராசிகள் பூமியில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள போராடி கொண்டே இருக்கின்றன. ஒரு ஜீவராசி வகை அழிந்தாலும், வேறொரு வகையில் ஜீவராசி தோன்றுவதும், நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பதும் 'படைப்பு கொள்கையை' காற்றில் பஞ்சாக பறந்துவிட செய்கிறது.

அதே வேளையில் ஒரு செல் உயிரினம் பூமியில் மட்டும் தோன்ற வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல் உயிரினங்கள் தோன்றியதன் மர்மம் யாது? அறிவியல் இதனை இயற்கை தேர்வு விதி என்கிறது. பூமியில் மட்டுமே உயிரினம் தோன்ற இந்த சூழல் எனில் பிற கிரகங்களில் அந்த சூழல்தனை பயன்படுத்தி இயற்கை எதற்கு உயிரினத்தை உருவாக்கி கொள்ளவில்லை எனும் கேள்விக்கான பதில் இயற்கை தேர்வு விதியில் ஒரு விதிவிலக்காகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு சந்ததியை உருவாக்கிட பாலூட்டி வகைகள் எடுத்து கொள்ளும் கால கட்டங்கள்  அதிகம். அதிலும் குறிப்பாக யானைகள் 660 நாட்களும், மனிதர்கள் சுமார் 270 நாட்களும் எடுத்துக் கொள்கின்றன. பூனைகளும் நாய்களும் முறையே 62 நாட்கள், 65 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பன்றிகள் 115 நாட்கள், ஆடுகள் 145 நாட்கள், பசுக்கள் 283 நாட்கள், குதிரைகள் 336 நாட்கள், சிங்கங்கள் 108 நாட்கள், முயல்கள் 33 நாட்கள் என பல வேறுபாடுகள் இருப்பதை காணலாம்.

இப்படிப்பட்ட பல வித்தியாசங்கள் உள்ளடக்கிய உயிரினங்களில் உள்ள ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருப்பதுதான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பொது மூலம் ஒன்று உண்டு என்பது அறிவியலின் தீர்மானம். உதாரணத்திற்கு சிம்பன்சி எனப்படும் குரங்கின வகையும், மனித வகையும் ஒரு பொது உயிரினத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்றுதான் தற்போது கருதப்படுகிறது. குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை என்பது அறிவியலின் தீர்க்கமான ஒரு முடிவு.

இத்தகைய எண்ணங்கள் தோன்றிட உதவிய  மரபணுக்கள் பற்றி அடுத்த தேடலை தொடர்வோம், அதோடு இன்னும் உயிரினங்களில் அதிக பார்வையை செலுத்துவோம்.

(தொடரும்)


.

4 comments:

Thekkikattan|தெகா said...

எல்லாமே ஒருவிதத்தில் பொய் கணக்கு என்றுதான் தோன்றுகிறது.//

அது என்ன வெ. இரா, இப்படிச் சொல்லிப்புட்டீக? இது அறிவியல் கட்டுரைக்கான தொடர்ச்சியா இல்ல உங்க சொந்த கணிப்பின் படி பார்க்கப் போகிறதா... அறிவியல் கட்டுரைன்னா உயிரின பரிணாம தோற்றத்தின் படி பல சான்றுகள், டைம் ஃப்ரேம் (based on the geological scale) இருக்கிறதுதானே? அதென்ன இப்படி சுருக்கி பொய்க் கணக்கின்னு சொல்லிப்புட்டீங்க.

அதுவரைக்கும்தான் படிச்சேன்... :)

தமிழ் உதயம் said...

ஒரு நல்ல கட்டுரை.

Radhakrishnan said...

No analysis is better than the sample itself. நான் ஆராய்ச்சியில் நுழைந்தபோது வாசித்த வாசகம். மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அதன் மூலமாகவே அறிவியல் சொல்கிறது என்பதற்காக அப்படியே ஏற்று கொள்வதில்லை, வேதம் சொன்னதற்காக அப்படியே அதை ஒதுக்குவதும் இல்லை. மிக்க நன்றி தெகா.

மிக்க நன்றி ஐயா.

Chitra said...

அருமையான பதிவுங்க.. பாராட்டுக்கள்!