Wednesday 20 October 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 29

கதிரேசன் அடுத்ததினமே ஈஸ்வரியைச் சந்தித்தான். ''என்ன விசயம்?'' என்றாள் ஈஸ்வரி. அவள் எதிர்பார்க்காத வண்ணம் அவளைக் கட்டிப்பிடித்தான் கதிரேசன். ஈஸ்வரி திக்குமுக்காடிப் போனாள். ''என்ன காரியம் செய்ற?'' என அவனை புறந்தள்ளி கோபம் கொண்டாள் ஈஸ்வரி. 

''எனக்காக சிவனை உதறிட்டியா?'' என்றாள். கதிரேசன் அந்தக் கேள்வியை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ''ம்'' என்றான் கதிரேசன். ''உன் கொள்கையைத் தூக்கி எறிஞ்சிட்டியே, என்னைத் தூக்கி எறிய உனக்கு எவ்வளவு நேரமாகும்?'' என்றாள். கதிரேசன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். 

''உன்னோட எப்படி என்னால வாழ்க்கையை நடத்த முடியும்'' என்று சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசன் அவளையே உற்று நோக்கினான். ''நேத்துதான் என்னை தொடரவேணாம்னு சொன்னேன், இன்னைக்கு என்னை வந்து என்னோட அனுமதி இல்லாம கட்டிப்பிடிக்கிற'' என்றாள் மேலும். ''என்ன இது விளையாட்டு'' என்றான் கதிரேசன். ''அந்த சிவன்கிட்டயே கேட்டுக்கோ'' எனச் சொல்லிவிட்டுச் சென்றாள். கதிரேசன் நிலையாய் அங்கேயே நின்றான். மனம் ஈஸ்வரியின் வார்த்தைகளை நம்ப மறுத்தது. 

கதிரேசன் அமைதியாகிப் போனான். ஈஸ்வரியைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தபோது பேசிட நினைந்து செல்கையில் அவள் பேசாதே போனாள். ஒருநாள் அவளது கரங்களைப் பிடித்து நிறுத்தினான். 

'கல்லும் உன் நெஞ்சோ' என்றான் அவன். ''சொல்லும் சொல்லில் மனம் வை'' என்றாள் அவள். ''கல்லும் உன் நெஞ்சோ'' என்றான் மீண்டும். ''அருணகிரிநாதர் போல், பட்டினத்தார் போல் ஆவாயோ'' என்றாள். கதிரேசன் பதறினான். ''ஏன் இப்படி பேசுற'' என்றான். ''நீதானே தமிழ்ப்புலவர் மாதிரி கல்லும் உன் நெஞ்சோனு கேட்ட'' எனச் சிரித்தாள். ''அதில்லை, அருணகிரிநாதர், பட்டினத்தார்னு சொன்னியே'' என்றான். 

''குடும்ப வாழ்க்கையில ஈடுபட்டுட்டு சிவனேனு நீயும் போயிட்டா என்ன நியாயம்'' என்றாள். ''திருப்புகழ் கிடைச்சது, தத்துவம் சொன்னது'' என்றான் கதிரேசன். ''வாழ்க்கை தொலைஞ்சது'' என்றாள். கதிரேசன் அவளை கட்டிப்பிடித்தான் மீண்டும். ''என்னை ஏத்துக்கோ'' என்றான். ''எனக்காக எதுவும் செய்வியா?'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்காக நீ எப்படியும் இருப்பனு சொன்ன'' என்றான் கதிரேசன். ''என்னை வந்து பொண்ணு கேளு'' எனக் கூறிவிட்டுப் போனாள். 

மாதங்கள் கடந்தது. ஈஸ்வரிக்கு கல்லூரிப் படிப்பும் முடிந்தது. கதிரேசனுக்கும் ஈஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு, கல்லூரிப் படிப்பை முடித்திருந்த வைஷ்ணவி தனது அப்பா அம்மாவுடன் கல்யாணத்திற்கு முன் தினமே வந்திருந்தாள். அவளிடம் ''மதுசூதனன் வரலையா'' எனக் கேட்டான் கதிரேசன். ''தெரியாது'' என்றே பதில் சொன்னாள் வைஷ்ணவி. 

மதுசூதனனிடம் தொடர்பு கொண்டபோது ''சைவத் திருமணத்திலெல்லாம் கலந்து கொள்ற வழக்கம் எனக்கில்லை'' என கோபமாகப் பேசி இணைப்பைத் துண்டித்தான். கதிரேசன் கலக்கமுற்றான். வைஷ்ணவியிடம் கேட்டபோது ''சிலர் திருந்தறதைப் போல நடிப்பாங்க, ஆனா திருந்தவே மாட்டாங்க, ஏதாவது ஒரு காரணம் வைச்சிட்டே இருப்பாங்க'' என்றாள்.

''அப்படின்னா...'' என்ற கதிரேசனிடம் ''நீ கல்யாண மாப்பிள்ளை, இப்ப அவனைப் பத்தி எதுக்கு, சந்தோசமா இரு, நான் சந்தோசமா இருக்கேன்'' என்றாள். ''வேலை?'' என்றான் கதிரேசன். ''இந்த ஊரில இருக்கிற கம்பெனியில தான் வேலைக்கு விண்ணப்பிச்சிருக்கேன், நாலு நாள் கழிச்சி நேர்முகத் தேர்வு'' என சொன்னாள் வைஷ்ணவி. ''இங்கயா?'' என ஆச்சரியமாகக் கேட்டான். ''ம் கிடைக்குதானுப் பார்ப்போம்'' என்றாள் வைஷ்ணவி. ''ஆச்சர்யமா இருக்கு'' என்றவன் ஈஸ்வரியிடம் வைஷ்ணவியை அழைத்துச் சென்றான். வைஷ்ணவியை முதன்முதலாய் பார்த்த ஈஸ்வரி அன்புடன் அவளை ஆரத் தழுவினாள். வைஷ்ணவி ஈஸ்வரியின் அன்பில் கண்களில் ஈரம் கொண்டாள்.



சிறிது நேரம் ஈஸ்வரியிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வைஷ்ணவி கல்யாண மண்டபத்தில் தங்களுக்கான விடுதி அறையில் தங்கிக்கொள்ள விடைபெற்றுச் சென்றாள். ''ரொம்ப அழகான, அறிவான பொண்ணு உனக்குக் கிடைச்சிருக்கா'' என்றாள் கதிரேசனிடம். ''ஆமா, எனக்கு சந்தோசமே'' என்றான் கதிரேசன். ''உன்னை மாதிரி எனக்கும் ஒரு வாழ்க்கை அமையனும்னு எனக்காக சிவனை வேண்டிக்கோ'' என்றாள் வைஷ்ணவி. ''நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும், இதிலென்ன சந்தேகம்'' என்றான் கதிரேசன். ''ம்ம் நான் ரூமுக்குப் போறேன், நீ வீட்டுக்குப் போ'' எனச் சொல்லிவிட்டு நடந்தாள். ''இரு நானும் வரேன்'' என கதிரேசனும் அவளுடன் சென்றான். 

விடுதி அறையில் வைஷ்ணவியின் தாயும் தந்தையும் இருந்தார்கள். கதிரேசனை தனது தந்தைக்கு அறிமுகப்படுத்தினாள் வைஷ்ணவி. கதிரேசனிடம் நன்றாக பேசியவர் ''எவ்வளவோ தூரம் தள்ளி இங்க வேலைக்கு வரனும்னு விண்ணப்பிச்சிருக்கா, நாலு நாளு இங்கதான் இருக்கனும்'' என்றார் அவர். ''நாளைக்கு மட்டும் இங்க இருங்க, அப்புறம் எங்க வீட்டுல தங்கிக்கிரலாம்'' என்றான் கதிரேசன். ''அதுக்கு சொல்லைப்பா, எங்களை விட்டு இவ்வளவு தூரம் இவ பிரிஞ்சி வரனுமானுதான், நாலு வருசம் படிக்கிறேனு தனியா போனா'' என்றார் மேலும். ''கவலைப்படாதீங்க சார், நாங்க எல்லாம் இங்க இருக்கோம்ல, வைஷ்ணவியப் பார்த்துக்கிறோம்'' என்றான் கதிரேசன். அவ்வார்த்தைகளைக் கேட்டு சந்தோசம் கொண்டார்கள். 

கதிரேசனுடன் படித்த சில நண்பர்கள் மட்டுமே கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள். பலர் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்கள். செல்லாயி கதிரேசனிடம் ''எங்கப்பா இவ்வள நேரம் போயிருந்த, தலைக்கு மேல வேலை இருக்கு'' என்றார். ''மாமா வரலையா?'' என்றான் கதிரேசன். ''அவன் வரமாட்டான், என்னைக்கு உனக்குப் பொண்ணு தரமாட்டேனு சொன்னானோ, அவன் எப்படி வரப்போறான்'' என்றார். ''நம்ம ஊருல இருந்து காலையில வரும்போது அவங்களோடவாவது வரச் சொல்லும்மா'' என்றான் கதிரேசன். ''உன் தாத்தாகிட்ட போய் கேளு அவன் என்ன சொன்னானு, அண்ணனாம் அண்ணன்'' என்றவர் ''நீ எல்லாம் சரியா இருக்கானு பாரு, நிக்காதே'' என செல்லாயி பரபரப்புடன் திரிந்தார். 

''என்ன தாத்தா, மாமா வரலையா?'' என கட்டிலில் படுத்திருந்தவரிடம் போய்க் கேட்டான். ''வரலைனு சொல்லிட்டான்'' என்றவரிடம் ''என்னவோ சொன்னாராமே'' எனக் கேட்டான் கதிரேசன். ''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா'' என்றவரிடம் மீண்டும் மீண்டும் கேட்கவே ''சன்யாசம் போனவனுக்கு கல்யாணத்தைப் பண்ணி வைச்சா நிலைக்குமானு சொல்லி உன் அத்தையையும் போக வேணாம்னு தடுத்திட்டான், அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்துட்டோம்'' என்றார் அவர். கதிரேசனின் மனம் கோபம் கொண்டது. ''அந்த பிள்ளை கூடவா வரலை'' என்றான் கதிரேசன். ''தெரியலைப்பா, அது வரனும்னுதான் நிக்குது'' என்றார். 

கதிரேசனுக்குத் தூக்கமே வரவில்லை. சன்யாசம் போனேனா? என யோசனையிலே தூங்கிப்போனான். அதிகாலையில் புளியம்பட்டியில் இருந்து கல்யாணத்திற்கு பலர் வந்து சேர்ந்தார்கள். லிங்கராஜூவின் மகளும், அவளது அம்மாவும் கல்யாண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள். செல்லாயி வீட்டினை விசாரித்து வீட்டினை அடைந்தார்கள். அவர்களைக் கண்ட செல்லாயிக்கு மனம் மிகவும் சந்தோசமானது. ''வறட்டு கெளரவம் பிடிச்ச மனுசனை எப்படி திருத்துறது'' என சலித்துக் கொண்டார். அவர்களைக் கண்ட கதிரேசன் மிகவும் மகிழ்ந்தான். லிங்கராஜூவைப் பத்தி எதுவுமே கேட்கவில்லை. 

கல்யாண மண்டபம் நிறைந்து இருந்தது. பட்டு சட்டை பட்டு வேட்டியில் கதிரேசனைப் பார்த்த வைஷ்ணவி ''என் கண்ணே பட்டுடும் போலிருக்கு'' என சொன்னாள். ''சாப்பிட்டியா?'' என்றான் கதிரேசன். ''ம் பிரமாதமான சாப்பாடு, என்ன ராத்திரிதான் தூங்க முடியலை, பையனுக ஒரே சத்தம், விளையாட்டுனு அலங்கோலப் படுத்திட்டாங்க, இதுபோல நேரம் தானே ரொம்ப சந்தோசமா இருக்கும்'' என்றவள் ''நெத்தி முழுசுமா திருநீறு பூசியிருக்க'' என ஆச்சரியமாகக் கேட்டாள். ''உடம்பு பூராதான் பூசியிருக்கேன்'' என்றான் கதிரேசன். ''சிவனை விடலையா?'' என்றாள். ''விடமுடியாத உறவு அது'' எனச் சிரித்துச் சொன்னவன் ''வா மேடையில எங்கப் பக்கத்துலயே இரு'' என்றான் கதிரேசன். ''அதெல்லாம் வேண்டாம், நான் கீழேயே இருக்கேன் அப்பதான் உங்க ரெண்டு பேருடைய வெட்கப்படற முகத்தைப் பார்த்துட்டே இருக்க முடியும்'' எனச் சொல்லிவிட்டு தனது தாய் தந்தையருடன் சென்று முதல் வரிசையில் அமர்ந்து கொண்டாள். 

புரோகிதர் வந்திருந்தார். மேடையில் ஆட்கள் நிறைந்து காணப்பட்டார்கள். மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார் புரோகிதர். சற்று நேரத்திற்கெல்லாம் ஈஸ்வரி வந்து அமர்ந்தாள். சேலை மாற்றிவரச் சொல்லி அனுப்பினார்கள். பின்னர் இருவரும் மேடையில் அமர்ந்தார்கள். முகூர்த்த நேரம் நெருங்கியது. ஈஸ்வரியை தனது மனைவியாக்கிக் கொண்டான் கதிரேசன், கதிரேசனை தனது கணவனாக்கிக் கொண்டாள் ஈஸ்வரி. ஈஸ்வரியின் முகத்திலும், கதிரேசனின் முகத்தில் அளவில்லா ஆனந்தம் யாகம் வளர்த்த தீயினால் வியர்வையாக வழிந்து கொண்டிருந்தது. செல்லாயி பேரானந்தம் கொண்டார், தனது துணை உடனிருந்திருக்கக் கூடாதோ என நினைத்தார்.

ஒவ்வொருவரும் பரிசு பொருட்களை வழங்கிச் சென்றார்கள். சிவசங்கரன் வேண்டாம் என மறுக்க இயலாது இருந்தார். வைஷ்ணவி மேடைக்கு வந்தபோது ஈஸ்வரியின் அருகில் நிற்கச் சென்றவளை ஈஸ்வரி வைஷ்ணவியை கதிரேசனின் பக்கத்திலேயே நிற்கச் சொன்னாள். புகைப்படங்களும், அசைபடங்களும் எடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. மேடையிலேயே இருந்த கதிரேசனின் அத்தை கதிரேசனுக்கு சங்கிலி ஒன்றை அணிவித்தார். ஈஸ்வரியின் கன்னங்களைத் தடவியவர் ஈஸ்வரிக்கும் ஒரு சங்கிலியை அணிவித்தார். உறவு ஒன்று விலகிப் போகிறதே என்கிற வருத்தமெல்லாம் அங்கே இல்லை. எல்லாருமே உறவுகள் தான் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. 

கல்யாணம் மிகவும் சிறப்பு எனவும், கல்யாணச் சாப்பாடு பிரமாதம் என அனைவரும் பாராட்டிச் சென்றார்கள். மணமக்கள் புளியம்பட்டிக்கு சென்றார்கள், வைஷ்ணவியும் உடன் சென்றாள். பின்னர் இரவு கதிரேசனின் சங்கரன்கோவிலில் உள்ள புதிய வீட்டிற்கு மணமக்கள் திரும்பினார்கள். வைஷ்ணவி தனது பெற்றொருடன் சிவசங்கரன் வீட்டில் தங்கினாள்.

கதிரேசனின் வீட்டில் சாந்தி முகூர்த்தத்திற்காக அவனது அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 
''நீங்க எப்பவும் பாடற பாட்டு பாடலையே?'' என்றாள் ஈஸ்வரி. ''என்ன புதுசா மரியாதை?'' என்றான் கதிரேசன். ''நீங்க சிவனோட அடியார்'' என்றாள் ஈஸ்வரி. ''நீயும் தான் சிவனோட அடியார்'' என்றான் கதிரேசன். ''பாடுங்க'' என்றாள் ஈஸ்வரி. ''மரியாதையா இன்னும்'' என்றான் கதிரேசன். கதிரேசனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தவள் ''பாடு'' என்றாள். 

'உமையாளை ஒருபாகமாய் உன்னில் கொண்டோனே ஈசனே
இமையகலாதினி எண்ணக்கமலத்துடன் இணைந்து விட்டாள்
கலங்கும் வாழ்க்கையை ஒருபோதும் ஏற்படுத்திட வல்லேன்
துலங்கும் அன்றோ சொல்சிவனே'

பாடலைக் கேட்டவள் 'பாடலுக்கு என்ன பரிசு தெரியுமா?'' என்றுக் கேட்டுக்கொண்டே கதிரேசனின் இதழ்களில் அன்பைப் பதித்தாள். அன்பு எப்பொழுதுமே தித்தித்துக் கொண்டே தானிருக்கும். 



(தொடரும்) 

5 comments:

எஸ்.கே said...

சிறப்பு! தொடரட்டும்!

Chitra said...

அன்பு எப்பொழுதுமே தித்தித்துக் கொண்டே தானிருக்கும்.

..... அழகு.... நன்றாக எழுதி கொண்டு வருவதற்கு பாராட்டுக்கள்!

Radhakrishnan said...

மிக்க நன்றி எஸ்.கே

மிக்க நன்றி சித்ரா

Gayathri said...

nallaa irukku

Radhakrishnan said...

மிக்க நன்றி காயத்ரி.