Tuesday 19 October 2010

நுனிப்புல் பாகம் 2 (19)

19. இரகசியங்கள் அவசியமில்லை

தெய்வீகம்பாள் மாதவியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். மாதவி தான் செய்ய விருப்பப்படும் ஆராய்ச்சி குறித்த குறிப்புகளை தெய்வீகம்பாளிடம் தந்தாள். அனைத்தையும் படித்தப் பார்த்தபின்னர் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஓரிரு வாரங்களில் சொல்வதாக தெய்வீகம்பாள் சொன்னார். 

தெய்வீகம்பாள் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். நரம்பியல் துறையில் மிகவும் ஈடுபாடு உடையவர். இவருக்கு 52 வயதாகிறது. கல்லூரியில் பாடம் சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமே தன்னை முடக்கிக்கொண்டார். ஆராய்ச்சி என இதுவரை எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. மாதவி தன்னை தொடர்பு கொண்டு தான் ஆராய்ச்சி செய்ய விருப்பம் என சொன்னவுடன் ஆர்வத்துடன் மாதவிக்கு உதவுவதாக கூறினார். 

''
உங்களுக்குப் பிடிச்சிருந்தா நாம இங்கே செய்யலாம்ல மேடம்''

''
இல்லை மாதவி, நாம செய்ய முடியாது, வேற ஒரு முக்கியமான ஒருத்தரை நான் உனக்கு அறிமுகப்படுத்துறேன், அவரோட சேர்ந்து நீ செய்யலாம், எனக்கு இதுல தனிப்பட்ட ஆர்வம்னு எதுவும் இல்லைனு உன்கிட்ட முன்னமே சொல்லி இருக்கேன்''

''
நீங்களும் உடனிருந்தா நல்லா இருக்கும்னு தோணுது, எதுக்கும் நீங்க படிச்சிட்டுப் பிறகு சொல்லுங்க மேடம்''

''
தாராளமா செய்யலாம், உனக்கு என்ன உதவினாலும் நான் செய்ய தயாரா இருக்கேன்''

''
தேங்க்ஸ் மேடம்''

மாதவி நம்பிக்கையுடன் அறையைவிட்டு வெளியே வந்தாள். மீண்டும் வகுப்பறைக்குச் சென்று அமர்ந்ததும் தேவகி கேட்டாள்.

''
போன விசயம் என்ன ஆச்சு மான்?''

''
படிச்சிட்டு சொல்றேனு சொல்லியிருக்காங்க தேவி''

''
இன்னும் இரண்டு வருசம் வெயிட் பண்ணலாம்னு சொன்ன கேட்க மாட்ற''

''
இப்பவே ஆரம்பிச்சாதான் நாம படிச்சி முடிக்கிறப்போ சரியா இருக்கும்''

''
உன்னோட ஐடியாவை வேற யாராச்சும் எடுத்துட்டா என்ன பண்ணுவ''

''
நல்லபடியா நடக்கனும்னு வேண்டிப்பேன்''

''
உனக்கு வரப்போற பேரு வேற யாருக்காவது போயிருமே மான்''

''
தேவி, உலகம் நல்லா இருந்தாலே அதுவே எனக்குப் போதும், பேரு எல்லாம் வாங்கி என்ன செய்யப் போறேன், மாதவினு ஒரு பேரு இலக்கியத்துல மிகவும் பிரபலம் தெரியுமா''

''
கிண்டலா மான்?, நீ தப்பு பண்ற''

''
இருக்கட்டும் தேவி, அப்படி நீ சொல்றமாதிரி யாராவது கையில கிடைச்சி ஆராய்ச்சி செஞ்சா உலகத்துக்குத்தானே நல்லது''

''
உலகம் நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் உன் காரியத்தைப் பாராட்டப் போறதில்லை மான், உன்னை ஏமாளினுதான் சொல்லும்''

''
தேவி, அப்படிப் பார்த்தா எல்லாருமே ஏமாளிங்க தான்''

''
மான், என் அண்ணனை நீ ஏமாளியாக்கிறாதே''

''
யேய் தேவி, என்ன திடீருனு, கவலைப்படாதே என் மாமாவை நான் எதுக்காகவும் ஏமாளியாக்கமாட்டேன்''

தேவகி மாதவியை நோக்கி புன்னகை புரிந்தாள். மாதவியும் புன்னகை புரிந்தாள். வகுப்பறை மிகவும் சுவாராஸ்யமாகவே சென்றது. மாதவியின் ஆராய்ச்சியை பற்றி கிண்டலும் கேலியும் ஆச்சரியமும் நிறைந்தே அன்றைய தினம் நகர்ந்து கொண்டிருந்தது. மாதவி இதற்கெல்லாம் சற்றும் கவலைப்பட்டவளாகவோ சந்தோசப்பட்டவளாகவோ தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. 

மாலை, விடுதி வந்ததும் வெகுவேகமாக பெருமாள் தாத்தா எழுதிய கடிதம்தனை ஒரு ஓரத்தில் அமர்ந்து படிக்கத் தொடங்கினாள் மாதவி. அந்த விடுதி அறையில் மாதவியுடன் தங்கி இருக்கும் தேவகி மற்றும் தோழி பிரேமாவும் சற்று தாமதமாகவே வந்தார்கள். மாதவி ஆர்வத்துடன் ஏதோ படித்துக்கொண்டிருப்பதை பார்த்தவர்கள் மாதவியை தொந்தரவு செய்ய வேண்டாம் என விளையாட வெளியே சென்றார்கள். மாதவி இதையெல்லாம் கவனித்தவள் போல் தெரியவில்லை. பெருமாள் தாத்தா கடிதம் பரப்பரப்பாக இருக்கும் என்றே மாதவியின் முகம் காட்டியது. அனைத்து பக்கங்களையும் படித்து முடித்தவள் கடிதம்தனை பத்திரப்படுத்தினாள். 

அறையை மூடிவிட்டு விளையாடச் சென்றாள். ஆனால் மனம் விளையாட்டில் லயிக்கவில்லை. மரத்தின் கீழ் அமர்ந்தவள் மிகவும் யோசிக்க ஆரம்பித்தாள். திருமாலிடம் வாழ்க்கை வரலாற்றை சொல்ல வேண்டிய நிர்பந்தம் பெருமாள் தாத்தாவுக்கு ஏன் வந்தது? அதுவும் மரணம் அடையப்போவது தெரிந்து கொண்டது போல எழுதியிருப்பது குறித்து நினைத்துப் பார்த்தாள். பார்க்காத பெருமாள் தாத்தாவின் முகம் மனதில் வந்து போனது. 

பெருமாள் தாத்தா எழுதிய கடிதத்தின் நகல் இரகசியம் தொலைத்து இருந்தது. மாதவியை நோக்கி பிரேமா வந்தாள். மாதவியை விளையாட வருமாறு அழைத்தாள். ஆனால் மாதவி இன்று முடியாது என சொல்லவே, இப்போழுதே ஆராய்ச்சி பற்றிய அக்கறையா என சொல்லிவிட்டு பிரேமா சென்றாள். 

பிரேமா நாராயணபுரத்தைச் சேர்ந்தவள். அவளது குடும்பம் மிகவும் எளிமையானது. இந்த கல்லூரியில் சேரும்போது முதன் முதலில் அவளது எண்ணத்தை ஈர்த்தவளாக மாதவி தென்பட்டாள். அந்த நிமிடம் மாதவியிடம் நட்பு கொண்டவள்தான் இதுவரை நட்பிற்கு அர்த்தமாகவே இருந்து வருகிறாள். குளத்தூர் எல்லாம் பிரேமா சென்றதில்லை. கல்லூரி விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் மாதவியுடன் செல்ல வேண்டும் என சொல்வாள், ஆனால் தனது வீட்டின் நிலைமையை நினைத்துக்கொண்டு நேராக அவளது ஊருக்குச் சென்று விடுவாள். குளத்தூரிலிருந்து சாத்திரம்பட்டி செல்லும் வழியில் தான் நாராயணபுரம் இருக்கிறது. 

மாதவி பெருமாள் தாத்தா எழுதிய ஒரு முக்கியமான விசயத்தை மனதில் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தாள். மீண்டும் விடுதி அறைக்கு எடுத்துச் சென்று அந்த பக்கத்தைப் பார்த்தாள். 

அதில் கீழ்வருமாறு எழுதி இருந்தது.

'
மறுபிறப்பு என்பதில் எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. தர்மம் சத்தியம் நேர்மை என வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் வாழ்பவர்களே முக்தியடையவர் எனவும் மறுபிறப்பு இல்லை என்பதும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. மீண்டும் பிறக்க வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே எனக்கு உண்டு. அதற்காக தீய வழிமுறையை பின்பற்றி மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. எனது உயிரை என்னிடம் இருந்து என்னால் நீக்கிட முடியும் ஆனால் எனது உயிரை மீண்டும் பிறக்க வைத்திட என்னால் இயலுமா என நான் நினைத்துக் கொண்டிருந்தபோது நான் வணங்கும் நாராயணன் என்னை ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்லுமாறு சொல்வதாகவே ஒருநாள் உணர்ந்தேன். 

அப்பொழுது நான் இருந்த ஊர் எனது முப்பாட்டன்கள் இருந்த சாத்திரம்பட்டியே, அது உங்களுடைய ஊரும் கூட. நான் உணர்ந்ததன் விளைவாக சாத்திரம்பட்டியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றேன். அங்கே ஆண்டாள் ஆலயத்தில் எனது வாழ்க்கையின் சாரதியாக பார்த்தசாரதி என்பவனைக் கண்டேன். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனுக்கு ஒரு விபரீத ஆசை இருப்பதாக சொன்னான். இத்தனை வயதாகியும் திடமாக இருக்கும் என்னை மீண்டும் உருவாக்க வேண்டும் என சொன்னவன் பார்த்தசாரதி. அவனது நண்பனான ஆண்டாளை நேசிக்கும் டாக்டர் விஷ்ணுப்பிரியனை எனக்குக் காட்டினான்.

 டாக்டர் விஷ்ணுப்பிரியன் என்னிடம் ஒரு வாக்குறுதியும் தந்தான். என்னை மட்டும் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் என்னுடன் மற்றொரு குழந்தையும் உருவாகும்படி பார்த்துக்கொள்வதாக சொன்னான். நான் இறந்தபின்னரே என்னை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என அவனிடம் சொன்னேன். எனவே நான் இறந்த செய்தி நீங்கள் அறிந்த பின்னர் டாக்டர் விஷ்ணுப்பிரியனை சென்று சந்தித்து என்னிடம் வாக்குறுதி கொடுத்தபடி நடந்து கொண்டானா என உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லையெனில் எனது செல்களை அவனிடம் இருந்து பெற்றுக்கொண்டு என்னை உருவாக்க உரிய முயற்சியைச் செய்ய வேண்டும். இது உங்களுக்கு மட்டுமே நான் சொல்வது. வேறு எவரிடமும் நானாக சொல்லப்போவது இல்லை. நீங்கள் விருப்பப்பட்டவர்களிடம் நான் இறந்த பிறகு சொல்லலாம்' 

மாதவி கண்களை மூடி அமர்ந்தாள். தேவகியும் பிரேமாவும் களைப்புடன் உள்ளே வந்தார்கள். மாதவியை இருவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். 

(
தொடரும்)

5 comments:

எஸ்.கே said...

நன்றாக இருக்கிறது! தொடரட்டும்!

Chitra said...

அருமை... அருமை... அருமை...

Radhakrishnan said...

மிக்க நன்றி எஸ்.கே

மிக்க நன்றி சித்ரா.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை...தொடரட்டும்!

Radhakrishnan said...

மிக்க நன்றி பிரஷா