Tuesday 26 October 2010

நுனிப்புல் பாகம் 2 (20)

திருமால் திரும்பினார் 

விஷ்ணுப்பிரியன் கலக்கத்துடன் திருமாலையும் வாசனையும் மாற்றி மாற்றிப் பார்த்தார். சிரிப்பொலி சட்டென நின்றது. விஷ்ணுப்பிரியன் அங்கிருந்து கோவில் உள்ளே செல்லாமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். திருமால் விஷ்ணுப்பிரியனை அழைத்தார். ஆனால் விஷ்ணுப்பிரியன் காதில் வாங்கிக் கொள்ளாது நடந்தார். வாசன் விஷ்ணுப்பிரியனை பின் தொடர்ந்து சென்று அவரது கையைப் பிடித்து அழைத்து வந்தான். விஷ்ணுப்பிரியனின் கையைப் பிடித்தபோது அவரது நடுக்கத்தை இவன் உணர்ந்தான். கோவிலுக்குள் செல்லாமல் கோவிலின் பக்கவாட்டிற்கு திருமால் அவர்களை அழைத்துச் சென்றார். 

திருமால் விஷ்ணுப்பிரியனின் சுருக்கமாக பெருமாள் தாத்தா சொன்ன விசயங்களைச் சொன்னார். அதைக் கேட்ட விஷ்ணுப்பிரியன் மிகவும் மனம் கலங்கினார். அந்த வேளைப் பார்த்து பார்த்தசாரதியும் அங்கே வந்து சேர்ந்தார். விஷ்ணுப்பிரியன் தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றவே தனது மனைவியை முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், பார்த்தசாரதியின் வேண்டுகோளுக்கிணங்க தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் அவசரப்பட்டு செல்களை அழித்துவிட்டதாகவும் இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என யோசிக்கையில் தான் மிகவும் வேதனையும் கலக்கமும் அடைவதாக கூறினார். 

திருமால் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றவே தான் வந்ததாகவும், அப்படி ஒருவேளை விஷ்ணுப்பிரியன் தவறியிருந்தால் அதை ஞாபகப்படுத்திச் செல்லவும், நேரடியாக பார்த்துச் செல்லவும் வந்ததாக கூறினார். இதைக்கேட்ட விஷ்ணுப்பிரியன் சற்று மனம் நிம்மதி அடைந்தவராக தென்பட்டார். பார்த்தசாரதி எல்லாம் அவன் கருணை என வேண்டிக்கொண்டார். வாசன் மட்டும் மிகுந்த யோசனையில் இருந்தான். 

இதை இப்படித் திட்டமிட்டு செய்ய வேண்டிய காரியமும், எவர்க்கும் தெரியாமல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது குறித்துக் கூறினார். பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை ஆரத் தழுவினார். ஆனால் விஷ்ணுப்பிரியன் இந்த விசயத்தை கடைசிவரை பாதுகாப்பது என்றே தான் இருப்பதாகவும், சுபா மருத்துவ குறிப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள் என அறிந்ததும், அவளிடம் மறைக்கமுடியாமல் தான் தவித்ததும் குறித்து சில நாட்கள் பல மாதங்கள் போல் நகர்கிறது என்று சொன்னார். திருமால் விஷ்ணுப்பிரியனிடம் தனது முகவரியை தந்தார். வாசன் இவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டவன், மெளனமாகவே நின்று கொண்டிருந்தான். 

திருமால் மற்றும் அனைவரும் ஆலய தரிசனம் செய்துவிட்டு பார்த்தசாரதி வீட்டிற்குச் சென்றார்கள். பார்த்தசாரதி வீட்டில் உணவருந்தினார்கள். திருமால் உடனடியாக தான் கிளம்ப வேண்டும் என அன்று இரவே கிளம்பினார். மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். திருமால் தன்னை திருவில்லிபுத்தூரில் கொண்டு விடுமாறு விஷ்ணுப்பிரியனை கேட்டுக்கொண்டார். வாசன் உடன் சென்றான். 

வாசனிடம் செடி விசயம் வெற்றிகரமாக முடிந்ததும் தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார் திருமால். வாசன், பேசுவதை இன்று தங்கியே பேசிச் செல்லலாம் என சொன்னான். ஆனால் திருமால் வாசன் கட்டாயம் சென்னை வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாசன் தனது ஆஸ்ரம விசயம் குறித்துச் சொன்னான். திருமால் சிரித்தார். இது அவருக்கு மனதில் கடைசியில் தோன்றிய ஆசையாக இருக்கக்கூடும் என்றார் திருமால். 

திருவில்லிபுத்தூரிலிருந்து ஒன்பது மணியளவில் சென்னைக்குக் கிளம்பினார் திருமால். அவர் செல்வதையேப் பார்த்துக்கொண்டிருந்தான் வாசன். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தான் திருமால் குறித்து பயந்து போனதாக சொன்னார். வாசன் திரும்பியவன் பூங்கோதைக்கு திருமணம் நடைபெறாமல் போய் இருந்தால் என்ன பண்ணி இருப்பீர்கள் எனக் கேட்டான். இந்த விசயத்தில் விஷ்ணுப்பிரியன் நடந்து கொண்ட முறை சற்றும் முறையில்லை என்று சொன்னான். விஷ்ணுப்பிரியன் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் வாசன் அவரை அத்தனை எளிதாக விடுவதாக இல்லை. இந்த சூழலால் ஏதாவது பூங்கோதைக்கு பிரச்சினை வரும் எனில் தன்னால் அதை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள இயலாது எனச் சொன்னான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தைரியம் சொன்னார். 

அன்றைய இரவு பொழுது வேகமாக கழிந்தது. காலை எழுந்ததும் பெரியவரும் வாசனும் திருவில்லிபுத்தூர் மலைக்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார்கள். பூங்கோதை கல்லூரிக்குச் செல்ல தயாரானாள். கேசவன் பார்த்தசாரதியுடன் கட்டிட வேலை ஒன்றுக்கு கிளம்பினான். மூன்று மாதங்கள் செல்ல வேண்டுமே என வேண்டிக்கொண்டான் கேசவன். 

வாசனிடம் பூங்கோதை திருமால் குறித்துக் கேட்டாள். வாசன் உண்மை சொல்வதா? வேண்டாமா? என தவித்தான். பொய் சொல்ல விருப்பம் இல்லாதவனாய் மாலை வந்து அனைத்தும் விபரமாக சொல்வதாக சொன்னான். பூங்கோதை சந்தோசமாகச் சென்றாள். 

மலையடிவாரத்தை அடைந்ததும் வாசன் நோட்டினைத் திறந்தான். பெரியவர் சிரித்தார். என்னவெனப் பார்த்தான் வாசன். சிரமப்படாம எல்லாம் சாதிக்கனும்னு நினைக்கிறியா தம்பி என்றார். வாசன் புரியவில்லை என்றான். ஒரு விதை அத்தனை சாதாரணமா மண்ணில உருவாகிறது இல்லை. இந்த விதையின் மூல ஆதாரம் என்னனு உனக்குத் தெரியுமா? இந்த பிரபஞ்சத்துக்குச் சொந்தக்காரன்தான் விதைக்கு மூல ஆதாரம்னு நான் சொன்னா நீ சிரிப்பே. ஆனால் மூல ஆதாரம் என்னனு சொல்ல முடியுமா? என பெரியவர் வாசனிடம் கேட்டார். வாசன் நோட்டினை மூடினான். சூரியனே ஆதாரம் என்றான். பூமியைத் தவிர வேறு கிரகங்கள் தெரியுமா தம்பி? என்றார். வாசன் பெரியவரை உற்று நோக்கினான். சற்றே தடுமாறினான். புதன் என பெயரிடப்பட்ட கிரகங்களிலிருந்து புளூட்டோ எனப் பெயரிடப்பட்ட கிரகம் வரைக்கும் தெரியும் என்றான். புத்தகத்தில் படிச்சியா தம்பி என்றார் பெரியவர். வாசன் விதையின் மூல ஆதாரம் தனக்குத் தெரியாது என்றான். பெரியவர் கலகலவெனச் சிரித்தார். சூரியன் சட்டென மறைந்து மின்னல் வெட்டியது. மழை மிக வேகமாக கொட்டியது. ஒதுங்க இடம் இன்றி இருவரும் முழுவதும் நனைந்துவிட்டனர். வாசன் எழுதிய நோட்டுப்புத்தகம் முழுதும் மழையில் நனைந்து இருந்தது. பெரியவரை அர்த்தம் புரியாமல் பார்த்தான் வாசன். அன்றைய தேடல் அப்பொழுதே முடிவுக்கு வந்தது. 

(
தொடரும்)

2 comments:

எஸ்.கே said...

சிறப்பாக உள்ளது தொடரட்டும்!

Radhakrishnan said...

மிக்க நன்றி எஸ்.கே