Thursday 7 October 2010

நுனிப்புல் (பாகம் 2) 17

17. சாரங்கனின் நிராசை

சாரங்கனை வீட்டுக்குள் அழைத்து அமரச் சொன்னான் வாசன். சாரங்கன் கோபமாகவே பேசினார்.

''
உட்கார வரலை, அருளப்பன்கிட்ட கொடுத்த பொறுப்புகளை எனக்கு மாத்திக் கொடுத்துட்டுப் போ''

''
எல்லா பொறுப்புகளையும் அவருக்குக் கொடுத்தாச்சு, நீங்கதான் இந்த ஊரில் இல்லையே''

''
மாத்திக்கொடு இந்த ஊரிலேதான் இருக்கப் போறேன், கல்யாணம் முடியட்டும்னு இருந்தேன், நீங்களா தருவீங்கனு பார்த்தேன், தரலை அதான் நேரடியா கேட்கறேன்''

''
இப்ப வந்து கேட்டா எப்படிய்யா? அருளப்பன்கிட்டதான் எல்லா கொடுக்கனும்னு முன்னமே ஊர்ல பேசி இருக்கோம், அதேமாதிரி கொடுக்கவும் செஞ்சாச்சு, இனிமே எல்லாம் சரி பண்றது கஷ்டம், அவருக்கு துணையா இருங்க''

''
அன்னைக்கே உன் கணக்கு முடிச்சிருக்கனும்''

''
சொன்னதை திரும்ப சொல்லுங்க, என்ன கணக்கு முடிச்சிருக்கனும்''

''
இப்போ முடியுமா? முடியாதா?''

''
முடியாது''

''
நீ திருவில்லிபுத்தூருக்குப் போய்ட்டு எப்படி திரும்பி வரனு நா பார்க்கிறேன்''

''
என்ன மிரட்டுறீங்க''

''
உன்னை மிரட்ட வேண்டிய தேவை எனக்கில்லை, ஊர் முக்கிய பொறுப்பை எனக்கு கொடுனுதான் கேட்கிறேன்''

''
சரி வாங்க பெரியவர்கிட்ட போகலாம்''

''
அவன்கிட்ட என்ன பேச்சு வேண்டி இருக்கு, நீதான தலைவரு நீ சொல்றதுதானே சட்டம்''

''
அப்படின்னா நீங்க ஊரைவிட்டு காலி பண்ணுங்க''

''
என்னடா சொன்ன''

அந்த நேரம் பார்த்து முத்துராசு அங்கு வந்தார். சாரங்கனைப் பார்த்து முத்துராசு சொன்னார்.

''
இன்னும் இந்த ஊர்லதான் இருக்கியா''

சாரங்கன் முத்துராசுவைப் பார்த்ததும் கோபத்தினை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியாமல் திணறினார். முத்துராசு வாசனிடம் சொன்னார்.

''
இந்தா வாசு நீ சாப்பிடறதுக்கு பொட்டலம் எல்லாம் கட்டிக்கொண்டு வந்துருக்கேன், சமையல் செய்ய வேண்டி இருந்தா உபயோகிச்சுக்க, கொஞ்சமாத்தான் வச்சிருக்கேன்''

''
இது எதுக்குண்ணே''

''
தேவைப்படும் வாசு''

சாரங்கனை நோக்கி முத்துராசு சொன்னார்.

''
வாய்யா போவோம், உன்கிட்ட ரொம்ப பேச வேண்டி இருக்குய்யா''

''
இல்லை வரலை''

''
அருளப்பன்கிட்ட இருக்கறப் பொறுப்பை அடிச்சிப் பறிக்கத்தான் இங்க சொந்தம் கொண்டாடி சொகுசு பார்க்கற திட்டமோ''

''
உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு''

''
பேசாம போ, பேச்சு மூச்சில்லாம பண்ணிருவேன்''

சாரங்கன் முத்துராசு கண்டு பயந்தார். பதில் எதுவும் பேசமுடியாமல் நின்றார். முத்துராசுவே தொடர்ந்தார். வாசன் பார்த்துக்கொண்டே நின்றான்.

''
அன்னைக்கி ஆள் அனுப்பி நீ வாசுவை கொல்லப் பார்த்தது எனக்குத் தெரியாதுனு நினைக்கிறயா? அவங்க யாரு என்னனு எல்லாம் விசாரிச்சிட்டேன், உன் பேரைத்தான் சொல்றானுக, அது எல்லாம் தெரிஞ்சிருந்தும் பேசாம இருக்கிறதுக்கு காரணம் ஊர்க் கட்டுப்பாடு தான். நீ நல்லவன் போல பெருமாள் கோவிலுக்கு போய் கும்பிட்டதும், அந்த பெரியவர்கிட்ட காலுல விழுந்தது காலை வாரத்தான்னு எனக்கு நல்லாவே தெரியும், நீ இந்த மண்ணில பிறந்து இந்த தண்ணிய குடிச்சி இப்படி கேடு கெட்டு போவேனு யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டாங்க, நீ வாசு எழுதற கவிதை எல்லாம் வாசிப்பியாமே, என்னத்த வாசிச்ச அப்படி? இன்னைக்கு இராத்திரி பஸ்ஸுக்கு நீ ஊரைவிட்டு காலி பண்ணலைன்னா நான் உன்னை காலி பண்ணிருவேன்''

''
அண்ணே விடுங்கண்ணே''

''
சும்மா இரு வாசு, பெரிய ஆளு தோரணைதான் இருக்கு அந்த குரு பயலும் இவரும் சேர்ந்து ஊரை துண்டாட நினைக்கிறானுக, நீங்க போனப்பறம் அதான் பண்ணப் போறானுக அதனால குருவை இப்போதான் மிரட்டிட்டு வந்தேன், அவன் நடுங்கி மச்சி வீட்டுக்குள்ள ஒ்ளிஞ்சிக்கிட்டான்''

''
என்னண்ணே இது பாவம்ணே அவரை விடுங்க''

''
சொல்லிட்டே இருக்கேன், என்ன இங்க நினைக்கிற இந்த வாசு முன்னால ஒரு கொலை விழ வேண்டாம்னு நினைக்கிறேன் போ''

சாரங்கன் மெல்ல நடக்கத் தொடங்கினார். முத்துராசு அங்கிருந்த கட்டையை எடுத்தார். சாரங்கனின் நடையில் வேகம் இருந்தது. முத்துராசு வாசனிடம் சற்று உரக்கமாகவே சொன்னார்.

''
வாசு நீ ஆகுற வேலைய கவனி, நான் அவியற வேலைக்கு ரெடி பண்றேன், ஆசை ஒரு மனுசனை திருந்த விடாது வாசு, பின்விளைவு பத்தி யோசிக்காது, ஆசைப்படறது அசிங்கம்னு தெரிஞ்சும் கூட. இதுக்கு ஒரு திட்டம் இருக்கு''

''
அண்ணே விடுங்க அண்ணே அவர்தான் போறாருல, ஊரில பிரச்சினை பண்ணிற வேண்டாம்''

முத்துராசு சிரித்தார். 

''
கவலைப்படாதே வாசு, எல்லாம் அந்த பெரிசு கொடுத்த இடம், இப்படியெல்லாம் இவரை நடக்கச் சொல்லுது, சரி எதுவும் எடுத்து வைக்கனுமா''

''
இல்லைண்ணே எல்லாம் எடுத்து வைச்சிட்டேன்''

முத்துராசுவும் வாசனும் பெரியவர் வீட்டுக்குச் சென்றார்கள். சாரங்கன் மந்தையில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார். வாசன் சாரங்கனிடம் சென்றான்.

''
என்ன ஐயா இது''

''
இனிமே இந்த ஊருக்கு வரலை போதுமா, நீ போ''

முத்துராசு வேகமாக சென்று சொன்னார்.

''
வந்தா உயிரு இருக்காது''

சாரங்கன் வடிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டார். பேருந்து வந்தது. சாரங்கன் அவசர அவசரமாக ஏறி அமர்ந்தார். வாசன் பெரியவரிடம் நடந்த விபரத்தைச் சொன்னான் பெரியவர் பரிதாபப்பட்டார். முத்துராசுவை அழைத்துக் கண்டித்தார். முத்துராசு பெரியவரிடம் சில விசயங்களைச் சொன்னார். பெரியவரும் வாசனும் முத்துராசுவை ஆச்சரியமாகப் பார்த்தனர். வில்லங்க முத்துராசு விவேக முத்துராசுவாகவே தெரிந்தார். முத்துராசு தோட்டம் சென்றார். பொன்னுராஜுவிடம் முத்துராசு சோகமாக சொன்னார். 

''
இனிமே வாசு இல்லாம எனக்கு கை ஒடிஞ்சமாதிரி இருக்கும்''

''
நல்லபடியா முடிச்சிட்டு வரட்டும்''

அதிகாலை விடிந்தது. பெரியவரும் வாசனும் திருவில்லிபுத்தூர் செல்வதற்காக அதிகாலை பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள். அங்கிருந்த மரங்களும் செடிகளும் கொடிகளும் தனக்குத் தானே கேட்டுக்கொண்டன. எங்களுக்கெல்லாம் இல்லாத பெருமை நெகாதம் செடிக்கு எப்படி வந்தது? இப்படித்தான் எல்லா மனிதர்களும் தங்களுக்குள்ளே கேட்டுக்கொண்டார்களாம், ஒவ்வொரு முறை இறைத்தூதர்களும் அவதாரங்களும் வந்தபோது! வாசன் பேருந்தின் கதவோரத்தின் கம்பியில் தலையை இடித்துக்கொண்டான். ஆ என வலியுடன் தடவினான். வலி நீக்குமா நெகாதம் செடி?

தொடரும்

4 comments:

Chitra said...

இடுகையும் புது template ம் அருமையாக இருக்குதுங்க....IMHO, இடுகை, ஒரே பக்கமாக ஒதுங்கி நீளம் போல காட்டுகிறதே.

Radhakrishnan said...

இப்பொழுது சரியாகிவிட்டது. :) நன்றி சித்ரா.

ஹேமா said...

டாக்டர்...நாவல் என்கிறீர்கள்.புத்தகமாக்குகிறீகளா? அச்சில் கொண்டு வந்தீர்களானால் நல்லது.தொடர்ந்தும் வாசிக்கிறேன்.

பதிவு அடிதடியாக ஒரே நாளில் இரண்டு வந்திருக்கிறதே.சந்தோஷம்.

Radhakrishnan said...

நன்றி ஹேமா. ஆம் இந்த புத்தகமும் அச்சில் வர உள்ளது.

இந்த கதை எழுதி முடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன.

நான் முன்னர் எழுதிய பதிவுகளை அப்படியே இங்கே இணைத்தால் ஒரே நாளில் பல பதிவுகளை இணைத்துவிடலாம்.