Saturday, 2 October 2010

ஏமாற்றிய எந்திரன் - திரை விமர்சனம்

அவதார் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து அந்த படம்தனை பார்க்க சென்றபோது அரங்கு நிறைந்து விட்டது என டிக்கட் கிடைக்காமல் அடுத்த காட்சிக்கு பதிவு செய்துவிட்டு திரும்பினோம். வீட்டில் இருந்து நடந்து செல்லும் தொலைவுதான் திரையரங்கம்.

அதே திரையரங்கில் எந்திரன். முன் பதிவு செய்துவிட்டோம். ஆனால் சில காரணங்களால் படம் ஆரம்பிக்கும் நேரத்திற்கே சென்றோம். மக்கள் நிறைந்து இருக்கும் திரையரங்க வளாகத்தில் டிக்கட் வாங்கும் வரிசையில் வெகு சிலரே இருந்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது. எவரையும் காணவில்லையே என நினைத்து மேலே சென்றோம். அங்கேயும் ஆச்சர்யப்படும் வகையில் எவரும் இல்லை.

பொதுவாக இந்த திரையரங்கில் படம் ஆரம்பிக்கும் நேரத்திற்கு படம் ஆரம்பிக்காது. விளம்பரங்கள் என பத்து பதினைந்து நிமிடங்கள் மேல் ஆகிவிடும். சரி என திரையரங்கில் நுழைந்தால் அரங்கு நிரம்பி இருந்தது. முன் வரிசை மட்டுமே காலியாக இருந்தது.

திரைக்கு மிக அருகில் படம் பார்ப்பது என்பது 'தரை டிக்கட்' விட மோசமாக இருக்கும். அதுவும் சவுண்ட் சிஸ்டம் வேறு பாடாய்படுத்தும். ஆங்கில படங்களுக்கு இடைவேளை விடாதவர்கள் தமிழ் படத்துக்கு இடைவேளை சரியாக விடுவார்கள். இங்கே இருக்கை எண் எல்லாம் கிடையாது. முதல் செல்பவர்களுக்கே முதல் உரிமை. இருக்கையில் அமர்வதில் முதல் ஏமாற்றம்.

நாங்கள் சென்று அமர்ந்த பின்னும் விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. காலியாய் இருந்த இருக்கைகளும் நிறைந்துவிட்டது. படம் ஆரம்பித்தது. மிகவும் வித்தியாசமாக இருந்தது. முதல் பாதி வரை மிகவும் கலகலப்பாகவும், ரசிக்கும்படியாகவும் காட்சி அமைப்புகள் இருந்தது.

தமிழ் படம் மட்டுமல்ல, எந்த ஒரு படத்திலும் லாஜிக் பார்ப்பது மிகவும் தவறு. ஒரு படைப்பாளியின் கற்பனையானது எந்த அளவுக்கு மனிதர்களை நம்பும் அளவுக்கு செய்கிறது என்பது அந்த படைப்பாளியின் கற்பனைக்கு கிடைக்கும் வெற்றி. அப்படிப்பட்ட வெற்றி தரும் கற்பனையை நமது கண்ணுக்கு முன்னால் கொண்டு நிறுத்துகிறார்கள்.

அவதார் எனும் படத்தின் கதை கூட சாதாரணமானதுதான். எடுக்கப்பட்ட விதம் பிரமிக்க வைத்தாலும் நான் அந்த திரையரங்கில் படம் பார்த்தபோது ஒருவர் குறட்டைவிட்டு தூங்கும் அளவுக்கு வைத்த படம் அது. மேலும் படம் முடிந்துவிட்டதா என ஒரு கட்டத்தில் எழ வேண்டிய நேரம் என நினைக்கும்போது படம் மீண்டும் தொடர்கிறது. ஆனால் முதல் பாதி எந்திரனில் எந்தவித சங்கடங்களும் இல்லை. ரோபோவை நாம் கிரகிக்கும் நிலைக்கு பாமரர்களையும் அழைத்து செல்லும் இந்த எந்திரன் தமிழ் படத்துக்கு மிகவும் வித்தியாசமான ஒன்று.

கால்பந்தாட்ட போட்டியில் முதல் பாதி, இரண்டாம் பாதி இருக்கும். முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் இருக்காது. அல்லது இரண்டாம் பாதியில் இருக்கும் வேகம் முதல் பாதியில் இருக்காது. இரண்டு பாதியிலும் விறுவிறுப்பாக விளையாடுவது மிகவும் சாதாரணமாகவே இருக்கும். அதைப்போலவே இரண்டாம் பாதியின் தொடக்கம் ஒரு மந்தமாகவே இருந்தது.

இரண்டாம் பாதியில் அதீத கற்பனையின் விளைவினால் செயற்கைதனத்தை அதிகமாகவே உணர முடிகிறது. கொசு காட்சிதனை  நகைச்சுவையாக காட்ட முற்பட்டாலும் சகிக்க இயலவில்லை. ஒரு ரோபோதனை எதிரியாக பாவிக்க கொஞ்சமும் மனம் இடம் தரவில்லை. இன்னும் சிறப்பாக கொண்டு சென்று இருக்கலாம். அதேவேளையில் இரண்டாம் பாகத்தில் காட்டப்படும் பிரமாண்டம் தமிழ் சினிமாவுக்கு 'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தமாதிரி' என்பது போல இருந்தது. ஆனால் இங்கே தொலைகாட்சியில் சிறுவர் நிகழ்ச்சியில் காட்டப்படும் நிகழ்ச்சிகள்தனை பெரிது படுத்தி காட்டுவது போல தான் தெரிந்தது.  'கிராபிக்ஸ்' என வரும்போது சில விசயங்கள் மனதோடு அமர மறுத்துவிடுகிறது.

இன்னும் இன்னும் சிந்தித்து கதையின் வேகத்தை அதிகரித்து இருந்து இருக்கலாம். காதல் வந்துவிட்டால் நட்டு கழன்று விடுவதாக கடைசியில் காட்டி இருப்பது மிகவும் யதார்த்தம். இது படத்துக்கும் பொருந்தும் தான். அறிவியல் விசயத்தை அழகாக சொல்லாமல் பிரமாண்டம் மூலம் சொதப்பி விட்டீர்கள். எத்தனை பிரமாண்டமாக படம் எடுக்கிறார்கள் என்பதல்ல, எப்படி ஒரு விசயத்தை சொல்கிறார்கள் என்பதில் இருக்கிறது படத்தின் வெற்றி.

எந்திரன் ஏன் கலைக்கப்பட்டான் என்றான்  படம் பார்த்த என் மகன். அறிவியல் அழிவுக்கு மட்டும் என உலகம் பார்க்கும் பார்வையின் வரிசையில் இந்த எந்திரனும் சேர்ந்து ஏமாற்றி விட்டுப் போனது துரதிர்ஷ்டமே.

ரஜினியின் கண்கள் திரையில் கலங்கியது. எனது கண்கள் உண்மையிலே கலங்கியது. வாழ்த்துகள் சங்கர். அருமையாக நடித்து இருக்கிறீர்கள் ரஜினி. பாராட்டுகள்.

அருகில் அமர்ந்து இருந்ததால் சண்டை காட்சிகளில் இதயத்தையே வெடித்துவிட வைக்கும் போன்ற இசை. இருப்பினும் இசை மிகவும் பிடித்து இருந்தது. பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தது அருமை. இசை அமைப்பாளர்களுக்கு, கவிஞர்களுக்கு பாராட்டுகள். மொத்தத்தில் ஒரு பிரமாண்டமான தமிழ் படத்திற்கு எந்திரன் பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா. இந்த வரிகள் ஒரு காட்சியில் காட்டப்படும். சினிமாவில் மட்டுமல்ல ஒவ்வொரு விசயத்திலும் தமிழன் உலக அரங்கில் பேசப்படும் நாள் தான் உண்மையான பிரமாண்டம். அந்த நிலையை அடைய நமது தொழிலும் நாம் பிரமாதமாய் உழைப்போம்.

நன்றி.

6 comments:

என்னது நானு யாரா? said...

தமிழ் சினிமா இன்னமும் பல படிகள் ஏறிப் போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அந்த படிகளைக் கடக்கும் நாள் விரைவில் வருமென்றே நம்புகின்றேன்.

ரிஷபன் said...

எத்தனை பிரமாண்டமாக படம் எடுக்கிறார்கள் என்பதல்ல, எப்படி ஒரு விசயத்தை சொல்கிறார்கள் என்பதில் இருக்கிறது படத்தின் வெற்றி.

உண்மையான பேச்சு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

உண்மை...

Radhakrishnan said...

நன்றி நண்பர்களே.

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

Radhakrishnan said...

நன்றி தங்கள் கருத்துக்கு.