Tuesday 22 September 2009

இறைவனும் இறை உணர்வும் - 3

3.
உண்மையாய் வாழ்வது துன்பம் என்றிருந்தேன்
உண்மையாய் வாழ இயலாது தவித்திருந்தேன்
பொய்மையை மனதில் நிறைத்து இருந்தேன்
கயமை குணத்துடனே வாழ்வை கழித்து இருந்தேன்
ஐயனே உன்னை அறிந்த பின்னும்
பொய்யனாய் வாழ்வது முறையோ?

என பாடிய ஒருவரை எதேச்சையாகச் சந்தித்த மற்றொரு நபர், பாடியவரிடம் சென்று நன்றாக இருந்தது பாடல், சிலர்தான் தங்கள் செயல்களை பரிசீலனை செய்து முறையாக வாழப் பழகிக் கொள்வார்கள் என வாழ்த்திவிட்டுச் சென்றார்.

சில வருடங்கள் பின்னர் அந்த பாடலை பாடியவரைச் சந்திக்கும் வாய்ப்பு எதிர்பாரா விதமாக மீண்டும் அந்த நபருக்கு கிட்டியது. பாடலும் ஒலித்தது. அதே வரிகள். ஐயனே உன்னை அறிந்த பின்னும் பொய்யனாய் வாழ்வது முறையோ? என்றே முடித்ததைக் கேட்டதும் அந்த நபரிடம் சென்று ‘’சில வருடங்கள் முன்னர் இதே வரிகளைத்தான் பாடீனீர்கள், நீங்கள் பொய்யான வாழ்க்கையில் இருந்து மீள முயற்சிப்பதில்லையா’’ என்று கேட்டார்.

‘’முடியவில்லை, பொய்யாகவே வாழ்ந்து பழகிவிட்டது. அந்த பொய்யில் இருந்து உண்மையாய் வாழ்வது என்பது இயலாததாக இருக்கிறது’’ என்றார் பாடியவர். ‘’இறைவனைத்தானே ஐயன் எனக் குறிப்பிட்டீர்கள், இறைவனை அறிந்த பின்னும் பொய்யாக வாழ்வது முறையா என்றுதானே அர்த்தம் சொல்கிறது பாடல்’’ என்றார் அந்த நபர்.

‘’ஆமாம், எனது இயலாமையைத் தான் ஐயனிடம் சொல்லி புலம்புகிறேன்’’ என்றார் பாடியவர். ‘’இறைவனிடம் இப்படி புலம்புவதன் மூலம் எப்படி நீங்கள் உண்மையாக வாழ முடியும், உண்மையாக வாழ முயற்சி செய்ய வேண்டுமல்லவா’’ என்றார் அந்த நபர்.

‘’முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை. என்னை ஆட்டிப்படைக்கும் ஐயனிடம் அதனால்தான் மன்றாடிக் கேட்கிறேன். ஐயனை அறியாதபோது செய்த தவறெல்லாம் ஐயனை அறிந்த பின்னும் தொடர்வது ஐயனின் விளையாட்டுதானேயன்றி வேறென்ன?’’ என்றார் பாடியவர்.

‘’ஐயனின் விளையாட்டு அல்ல அது, இது உங்கள் விளையாட்டு. மன தைரியத்துடன் உண்மையாகவே வாழ்வது என பொய்மையையும், கயமையையும் ஒழித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். உண்மையாய் வாழ்வது இன்பம் எனப் பாட வரும்’’ என்றார் நபர்.

‘’அந்த ஐயனே உங்களை அனுப்பி இருக்கிறார். என்ன தவம் செய்தேன் நான்’’ என்றார் பாடியவர்.

‘’எந்த ஒரு ஐயனும் என்னை அனுப்பவில்லை, நீங்கள் ஒரு தவமும் செய்யவில்லை. எதேச்சையாக உங்களை நான் பார்க்க நேரிட்டது. எனக்கென்ன வருத்தமெனில் நீங்கள் அந்த ஐயனை அறியவே இல்லை. அந்த ஐயனை அறிந்து அந்த ஐயன் வழி நடந்திருந்தால் நீங்கள் பொய்யான வாழ்வினை வாழ மாட்டீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கலானார் அந்த நபர்.

இறைவனை நம்புவர்கள் மட்டுமே உண்மையாக இருப்பார்கள் என எவர் எங்கு எழுதிக் கொடுத்த நியதி?. இறைவனை நம்பாதவர்கள் உண்மையாக இருக்கமாட்டார்கள் என எழுதித் தரப்பட்டா இருக்கிறது? சில வேதங்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே நான் மிகவும் உண்மையானவன், ஆனால் இறைவனை நான் நம்புவதில்லை, நான் இறைவனை நம்பாத காரணத்தினால் உண்மையில்லாதவன் என என்னைச் சொல்ல இயலுமா என குரல்கள் எழுப்பப்படுகின்றன.

இறைவன் ஒரு உண்மை. அந்த உண்மையை நம்பாதபோது நீ எப்படி உண்மையாக இருக்க இயலும் என்றே எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. அப்படியெனில் உண்மையின் சொரூபமாக மட்டுமேத் திகழ்பவரா இறைவன்?

(தொடரும்)

5 comments:

க.பாலாசி said...

//அந்த ஐயனை அறிந்து அந்த ஐயன் வழி நடந்திருந்தால் நீங்கள் பொய்யான வாழ்வினை வாழ மாட்டீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கலானார் அந்த நபர்.//

இந்த இடுகையின் பொருத்தமான வரிகள்....

//அப்படியெனில் உண்மையின் சொரூபமாக மட்டுமேத் திகழ்பவரா இறைவன்? //

இதற்கான பதில் சொல்லும் பொறுப்பு உங்களிடமே இருக்கட்டும்....விரைவில் சொல்லுங்கள்...

vasu balaji said...

நல்ல அலசல்

கலகலப்ரியா said...

நல்ல முயற்சி.. தொடரட்டும்..

நிகழ்காலத்தில்... said...

\\‘’ஐயனின் விளையாட்டு அல்ல அது, இது உங்கள் விளையாட்டு. மன தைரியத்துடன் உண்மையாகவே வாழ்வது என பொய்மையையும், கயமையையும் ஒழித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். உண்மையாய் வாழ்வது இன்பம் எனப் பாட வரும்’’ என்றார் நபர்.\\


சத்தியமான வார்த்தைகள்..

தொடரட்டும் நண்பரே

வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

கருத்திட்ட தங்களுக்கு மிக்க நன்றி.