Sunday 6 September 2009

என்னுடைய ஆசிரியர்கள் - 3

உத்தங்குடி கே எம் மருந்தாக்கியல் கல்லூரி (தமிழ்நாடு எம் ஜி ஆர் பல்கலைகழகம்)

டாக்டர் ரவீந்திரன் : இவர்தான் நான் மருந்தாக்கியல் படிக்க வழி வகுத்தவர். எனது இளைய அக்காவின் திருமணம் மே மாதம் நடந்தது. அப்பொழுது எனது நிலையை அறிந்த எனது பாவா, அவருக்குத் தெரிந்த டாக்டர் ரவீந்திரன் என்பவர் கே எம் மருந்தாக்கியல் கல்லூரியில் முன்பு anatomy physiology யில் வேலை பார்த்தார், எனவே அவரிடம் கேட்கலாம் என சென்று எனது மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் காட்டி அந்த கல்லூரியில் ஒரு இடம் வாங்கித் தந்தார். இதில் என்னவென்றால் மொத்தமே தமிழகத்தில் ஐந்து இளநிலை மருந்தாக்கியல் கல்லூரிகள் மட்டுமே அப்பொழுது இருந்தது. diploma மருந்தாக்கியல் படிப்பு மதுரை மருத்துவ கல்லூரியில் கிடைத்தும் மறுத்துவிட்டு இந்த கல்லூரியில் சேர்ந்தேன். இதே படிப்பை ஊட்டியில் பணம் கட்டி படிக்க வாய்ப்பு வந்தும் வேண்டாமென மறுத்துவிட்டு இந்த கல்லூரியில் மிகவும் குறைவாக பணம் கட்ட வேண்டிய நிர்பந்தம் வந்தபோது இப்படியெல்லாம் படிக்கத்தான் வேண்டுமா? என என்னுள் எழுந்த கேள்விக்கு தேவை இல்லை என்ற பதில் வந்து இருக்குமானால் பின்வருவனவற்றை எழுத வாய்ப்பின்றி போயிருந்திருக்கும்.

கல்லூரியின் முதல் வருடத்தில் சைமன் என்ற மருத்துவர் அனாடமி சொல்லித் தருவார். இவரிடம் நான் கற்றுக்கொண்டது, முன் அறிவிப்பு இல்லாமலே ஆச்சரியப்படுத்தும் வகையில் திடீரென தேர்வு வைப்பார். அமைதியாக பேசுவார். மிக அழகாக இருக்கும் சொல்லாடல். இதுவரை தமிழில் படித்துவிட்டு ஆங்கில உலகத்தில் எனக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. ஒரு முறை ஆய்வுக்கூடத்தில் cover slip என வரும் அதற்கு பதிலாக cover sleep என நோட்டில் எழுதி திருத்த கொடுத்துவிட்டேன். இதனை பார்த்து எனக்கு இவர் ஒரு அடி கொடுத்தார். அந்த நோட்டு இன்னும் எனது வீட்டில் இருக்கிறது, சிரிப்பாக இருக்கும்!

மற்றுமொரு மருத்துவர் சுற்றுப்புற சுகாதரம் பற்றி பேசி நாமே நமக்கு எவ்வளவு கெடுதல்களை செய்கிறோம் என அருமையாக பாடம் எடுப்பார். இவரது வகுப்பு மிகவும் நன்றாக இருக்கும். எனது கல்லூரியில் எனது படிப்பு வருடத்தில் இரண்டே மாணவிகள் தான், மீதம் 48 பேர் மாணவர்கள்.

இராமமூர்த்தி; இவர் inorganic chemistry எடுப்பார். நான் புத்தகம் வாங்கியதே இல்லை. இவர் வகுப்பில் சொல்வதை நோட்டில் எழுதி அதை அப்படியே மனனம் செய்து தேர்வு எழுதுவோம். இவர் தேர்வு அமைக்கும் முறை வித்தியாசமாக இருக்கும். MCQ வினாத்தாள்களின் பதில்கள் a or b or c or d என்பதில் முப்பது கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்கும் எனவே முதல் தேர்வில் இதை கண்டுபிடித்த நாங்கள் அப்படியே பதில் எழுதப் பழகிக் கொண்டோம். ஒருவன் ஒருமுறை 0 வாங்கினான் பி பதிலாக அ போட்டதுதான் காரணம். இவரது வகுப்பு கலை கட்டும். இவர்தான் மூன்றாம் வருடத்தில் business management சொல்லித் தந்தார்.

physical chemistry இவருடைய வகுப்பு மிகவும் அமைதியாக இருக்கும். சிறப்பாக இருக்கும். organic chemistry நந்தகுமார் இரண்டாம் வருடமும் இவரே. இவர் மிகச் சிறந்த ஆசிரியர். எளிதாகப் புரியும். இரண்டாம் வருட இறுதி தேர்வில் செய்முறை பயிற்சியில் எனது titration reading தவறாக வந்தது என lab technician மாற்றச் சொல்லி நான் மாற்றியதை வெகு துல்லியமாக கண்டுபிடித்து 32 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கி என்னை கரையேற்றியவர். இவர் மட்டும் அன்று மிகவும் கடுமையாக நடந்து இருந்தால் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து இருப்பேன்.

statistics ஒரு ஆசிரியை. ஒரு வகுப்பு மட்டுமே வாரத்திற்கு. நன்றாக திட்டுவார்கள். எனது நண்பன் ஒருவன் இந்த ஆசிரியை வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பான் ஆதலால் ஒரு முறை அவனை வகுப்பறையை விட்டே வெளியேப் போகச் சொல்லிவிட்டார்கள், எனக்கோ பயமாக இருந்தது. அவன் அருகில்தான் நான் அமர்ந்து இருப்பேன். இறுதிவரை எதுவும் அவ்வாறு நடக்கவில்லை.

விஜயா ஆசிரியை : இவர்கள்தான் இரண்டாம் வருடத்திலும் நான்காம் வருடத்திலும் preparative மற்றும் industrial pharmacy எடுத்தார்கள். சாக்பீஸ் எல்லாம் எறிவார்கள். கோபம் கோபமாக வரும் இவர்களுக்கு. இறுதியாண்டில் விபத்துக்கு உள்ளானார்கள், சிறிதுகாலம் பின்னர் சரியாகியது. இவரிடம்தான் நான் எனது மூன்று மாத புரொஜக்ட் செய்தேன் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார். கோபம் வந்தாலும் குரல் சாந்தமாக இருக்கும்.

biochemistry and biotechnology ஆசிரியர் இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர், தாராளமாக மதிப்பெண்கள் வழங்குவார். இவரது வகுப்பு கலகலப்பாக இருக்கும். இரண்டாம் வருடம் நான்காம் வருடம் இவர்தான்.

நர்மதா ஆசிரியை : இவர்களுக்கு அதிகமாக கோபம் வரும். வகுப்பில் சத்தம் கேட்டால் அவ்வளவுதான். மூன்றாம் வருடத்திலும் இவர் பாடம் எடுத்தார். எனக்கு meal maker எனும் சோயாவை அறிமுகப்படுத்தியவர். ஒரு மனிதனாக வாழ வேண்டும் என சொன்னவர். நெற்றியில் B.Pharmacy என ஒட்டிக் கொண்டு திரிவதற்கா இங்கு படிக்கிறீர்கள் என சொன்னவர்., என்னுள் ஒரு மாற்றம் நிகழ்த்தியவர் எனலாம்.

pharmacognosy இது தாவரங்களை பற்றிய மருந்தாக்கியல் படிப்பு. இந்த ஆசிரியரைக் கண்டால் அனைவரும் பயப்படுவோம். தேர்வுக்கு நுழைவுத்தாள் இவரிடம் இருந்துதான் பெற வேண்டும். எனவே மிகவும் பய பக்தியுடன் இவரது வகுப்பில் இருப்போம். கண்டிப்பானவர்

pharmaceutical technology இதை எடுத்தவர் படிப்பு மற்றும் அல்லாது பல்வேறு youth club களில் இணைய வைத்து வாழ்க்கைப்பாடம் சொல்லித் தந்தவர். என்னுள் இருந்த சமூக சிந்தனைக்கு வித்திட்டவர் எனலாம்.

pharmacology ஆசிரியர் இவர் சத்தம் போட்டு பாடம் எடுப்பார். எனது நண்பர்கள் இவர் தங்கி இருந்த வீட்டினில் அருகில் தங்கி இருந்தனர் அப்பொழுது இவர் சத்தம் போட்டு மனனம் செய்வது கேட்குமாம். இவரது குறிப்புகளை வைத்தே படிப்பதுண்டு. சுருக்கமாக தருவார். மூன்றாம் வருட ஆசிரியர்.

medicinal chemistry ஹபீப் , அனைத்து மாணவர்களின் கவனம் ஈர்த்தவர். வெகு திறமையான ஆசிரியர். synthesis எல்லாம் ஒரு பார்வை கூட புத்தகம் பார்க்காமல் எழுதுவார். அதிசயமாக இருக்கும் எனக்கு. இவருக்கும் கோபம் வரும்.

analyitcal chemistry பிரகாஷ் இவரை பார்மஹோப்பியா என அழைப்பது உண்டு. அனைத்து விவரங்களும் அறிந்து வைத்து இருப்பார். மென்மையான குரல். பல விசயங்கள் கற்றுக் கொண்டது உண்டு. சிரித்துக் கொண்டே இருப்பார். என்னை வெகுவாக இவர் பாராட்டுவது உண்டு. viva வில் 25/25 மதிப்பெண்கள் எனக்கு கிடைத்துவிடும்.

principal இவர் சிரித்த முகத்துடன் இருப்பார். இரண்டாம் வருடத்தில் பெரிய பிரச்சினை வந்துவிட்டது. வெளியில் தங்கியிருந்த எனது நண்பர்கள் இறுதியாண்டு கேள்வித்தாளை இரகசியமாக பெற்றுவிட்டனர். விடுதியில் இருந்த நானும் எனது நண்பனும் அதை வாங்கிட மறுக்க, விடுதியில் இருந்த வேறு சில நண்பர்கள் அவர்களது நலனை கருத்தில் கொள்ளுமாறு கூறி எங்களை சம்மதிக்க வைத்தனர், அவர்களுக்கு பதில் தயாரித்து தந்தோம். இது மாபெரும் தவறு என தெரிந்தும் செய்ய வேண்டிய நிர்பந்தம். ஆனால் இரண்டே இரண்டு நண்பர்கள் மட்டும் எங்களுக்காக ஆறு மாதம் படிப்பை இழக்க வேண்டியதாகிவிட்டது அவர்கள் தான் இந்த கேள்வித்தாள்கள் பெற்று வந்தார்கள் என்பதற்காக. அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். இவர் பாடம் நடத்த வருவார் சிரிப்பாக இருக்கும்.

விடுதி காப்பாளார் இவர் உடற்பயிற்சி ஆசிரியர் கூட. dignity என வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார். ஒருமுறை எனது நண்பர்கள் முதல்வருடத்தில் ஆவி அழைத்து யார் முதல் மதிப்பெண்கள் எடுப்பார் என கேட்க அந்த ஆவி டம்ளர் நகற்றி என் பெயரை காட்டியதாம். நான் இரவு 10 மணிக்கு தூங்கிவிடுவது வழக்கம். இது அறிந்த அவர் அதில் ஈடுபட்ட நண்பர்கள் அனைவரையும் அன்றிரவே வெளியேறச் சொல்லிவிட்டார். எனக்கு காலையில் தான் தெரியும். பெற்றோர்கள் வந்த பின்னர் அனுமதித்தார், எனது நண்பர்கள் இரண்டாம் வருடத்தில் விடுதியை புறக்கணிக்க காரணமானவர். நான் இறுதியாண்டில் வெளியேறினேன். சுதந்திரம் இல்லாத படிப்பு ஒரு படிப்பு அல்ல என உணர வைத்த விடுதி அது.

இப்படி என்னை மருந்தாக்கியல் வல்லுநராக்க மாபெரும் உதவிகள் புரிந்த இந்த ஆசிரியர்களின் பணி மிகவும் மகத்தானது. வணங்கி மகிழ்கிறேன். நான்காம் வருடத்தில் GATE என்னும் அகில இந்திய தேர்வு வந்தது. இந்த நேரத்தில்தான் இலண்டனில் இருந்து மாப்பிள்ளை பார்க்க வந்தனர்.

2 comments:

கலகலப்ரியா said...

கற்றலுக்கு மரியாத கொடுத்து எழுதி இருக்கீங்க.. நல்லா இருக்கு.. இத படிக்கிறப்போ.. நம்ம ஆசிரியர்கள் எல்லாம் வந்து ஹாய் சொல்லிட்டு போறாங்க.. :)

Radhakrishnan said...

மிகவும் மகிழ்ச்சி கலகலப்ரியா அவர்களே. மிக்க நன்றி.