Sunday 29 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 13

13 மன்னுபுகழ் பட்டாம்பூச்சி

பெருமாள்பட்டிக்குள் சென்றாள் பாமா. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஊர். கோழிகள் சேவல்கள் தரையைக் கொத்திக் கொண்டு இருந்தன. நாய்கள் ஒவ்வொரு வீதியிலும் நிழல் பார்த்து படுத்து இருந்தன. எவரேனும் அதன் வழி கடந்தால் தலையைத் தூக்கிப் பார்ப்பதோடு சரி. ஆடுகள், மாடுகள் சில வீடுகளோடு ஒட்டி கட்டப்பட்டு இருந்த தொழுவங்களில் படுத்தவாறு அசைபோட்டு கொண்டு இருந்தன. உழவுக்கு என மாடுகள்தான் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. வீதிகளில் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கல்லினால் மூடப்பட்டு சுகாதாரம் மிக்க இடமாகவே வீதிகள் காட்சி அளித்தன.

கிணற்றில் நீர் இறைத்துச் சென்றவர்களின் உரையாடல் வெள்ளேந்தி மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தது. தேநீர்க்கடையோ, உணவுக்கடையோ இல்லாமல்தான் அங்கே இருந்தது. ஊருக்கென்று ஒரு மந்தை, அந்த மந்தையை ஒட்டிய ஒரு பலசரக்கு கடை. விவசாயத்தில் விளைந்து வரும் எந்த ஒரு பொருளையும் இங்கே வந்து தந்துவிட்டால் போதும், விருதுநகருக்கோ, கல்லுப்பட்டிக்கோ மொத்த வியாபாரத்திற்கு கடையின் சொந்தக்காரர் மாறன் விற்று பணம் தந்து விடுவார். தனக்கென ஒரு சதவிகிதம் பணத்தை இலாபத்தில் எடுத்துக் கொள்வது அவரது வழக்கம்.

வியாபாரம் என்றாலே நேர்மையற்ற தொழில் என்பதைவிட இந்த உலகில் பிறந்த உயிரினங்கள் தாம் உயிர் பிழைக்க வேண்டி என்னவெல்லாம் செய்யுமோ அதுபோல வியாபாரம் செழித்தோங்க பல்வேறு வழிகளை கடைபிடிப்பது உண்டு, ஆனால் மாறன் அப்படி எல்லாம் செய்வது இல்லை. ஊருக்குள் இருப்பவர்களுக்கு தேவையானப் பொருள்களை தனது கடையில் வாங்கி வைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.

மந்தையை வந்து அடைந்தாள் பாமா. அப்போதுதான் தான் எதுவுமே வாங்கி வராமல் வந்து இருப்பது அவளுக்கு உரைத்தது. குண்டத்தூரில் ஏதாவது வாங்கி இருந்து இருக்கலாம் அப்போதும் அதை மறந்து இருந்தாள். மாறனிடம் சென்று சேவு, சீரணி என வாங்கினாள்.

''ஊருக்குப் புதுசா இருக்கம்மா, யாரைப் பார்க்கனும்''

தானே வீடு விபரம் கேட்கும் முன்னர் மாறன் கேட்டது பாமாவுக்கு எளிதாகப் போனது.

''நாச்சியார் அம்மா''

''இப்படியே நேராப் போய் வடக்கத் திரும்பினா அந்த வீதியோட கடைசி வீடு, பெரிய வீடு, இரண்டு திண்ணைக வைச்சது இருக்கும், வீட்டுலதான் இருப்பாக''

நன்றி சொல்லிவிட்டு நடந்தாள். மந்தைக்கு அந்தப்பகுதியில் எப்படி வீதிகள் இருந்தனவோ அதேபோலவே இந்தப்பகுதியிலும் மிகவும் அகலமான வீதிகள். நாச்சியார் வீட்டை அடைந்தாள் பாமா. வீட்டின் கதவுகள் திறந்தே இருந்தன. எந்த ஒரு ஊரில் வீட்டின் கதவுகள் திறந்து போடப்பட்ட போதும் திருடுப் போகாதோ அந்த ஒரு ஊரில் உள்ள மனிதர்கள் நேர்மையும், சத்தியமும் நிறைந்தவர்களாவே இருப்பார்கள்.

பாமாவைக் கண்டதும் வியப்பு அடைந்தார் நாச்சியார்.

''என்னைப் பார்க்க வந்ததா அம்மா சொன்னாங்க, அதான் உங்களைப் பாத்துட்டுப் போகனும்னு மனசுக்குப் பட்டுச்சு, கிளம்பி வந்துட்டேன், உங்க ஊர்ல வாங்கின பலகாரம்'' எனச் சொல்லியவாறு நாச்சியார் கைகளில் தந்தார். பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார் நாச்சியார்.

''பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வரியாம்மா, உட்காரும்மா''

தான் பெருமாள் கோவில் சென்று வந்தது இவருக்கு அதற்குள் எவர் தகவல் தந்து இருப்பார்கள் என யோசித்தாள் பாமா.

''நான் உன்னைப் பார்க்க வந்ததே நீ படிப்பை முடிச்சிட்டு எங்க ஊருல வந்து விவசாயம் சம்பந்தமா வேலை செய்யச் சொல்லி கேட்கனும்னுதான்'' நாச்சியார் சொன்ன மறுகணம் பாமா எவ்வித மறுப்பு சொல்லாமல் சரி என சம்மதம் சொன்னாள்.

''இந்த ஊர் பெருமாள் எனக்கு ரொம்பப் பிடிச்சி இருக்கு''

''எல்லா ஊர்லயும் ஒரே பெருமாள்தானே பாமா''

''இல்ல இந்தக் கோவில் அமைப்பு எல்லாம் மனசுக்கு இதமா இருக்கு''

''கோவிலுக்கு வரவங்க இதைச் சொல்லாமப் போனது இல்ல''

புன்னகை புரிந்தாள் பாமா. தண்ணீர் கொண்டு வந்து தந்தார் நாச்சியார்.

''நான் கேட்டதும் மறுப்பு சொல்லாம சம்மதம் சொன்னதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, கொஞ்ச நேரம் இருந்தா சமையல் முடிச்சிருவேன், அண்ணாவும், அண்ணியும் விருதுநகர் வரை ஒரு கல்யாணத்துக்குப் போய் இருக்காங்க, வர எப்படியும் சாயந்திரம் ஆகிரும்''

''பசி எல்லாம் இல்லைம்மா''

''ஒரு வாய் சாப்பிடனும், அங்க வந்து நில்லு பாமா, இல்லைன்னா கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு''

சமையல் அறைக்குள் சென்று மீதம் இருந்த வேலைகளை பார்க்கச் சென்றார் நாச்சியார். பாமா வீட்டினை கண்களால் அளந்தார். வீடு தேக்கு மரங்களால் தாங்கப்பட்டு கொண்டு இருந்தது. சுவரில் பெருமாள் தாயார் படம் தவிர வேறு எந்த ஒரு படங்களும் தென்படவில்லை.

சமையல் முடித்து இருவரும் சாப்பிட்டுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்கள். செல்லும் வழியில் வீடுகளில் இருந்த சிலர் இது யாரு என பாமாவை கேட்க எல்லோரிடமும் என் மக என பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டார் நாச்சியார். அதில் ஒரு வயதான மூதாட்டி கல்யாணம் பண்ணாம பிள்ளை பெத்தாளாம் பொன் நிறமா என கேலி பண்ணிச் சிரித்தவர் அன்னைக்கே என் பையன கட்டி இருந்தா இன்னைக்கு இப்படியான பிள்ளைக நாலஞ்சு பெத்து போட்டு இருப்ப என்றார்.

''அம்மா'' நாச்சியார் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பாமா.

''எனக்கு அந்த பெருமாளே போதும் அத்தை'' நாச்சியார் புன்முறுவலோடு சொன்ன பதில் பாமாவுக்கு அதிசயமாக இருந்தது. பூங்கோதையின் வீட்டை அடைந்தார்கள். பூங்கோதை இவர்களைப் பார்த்து எழுந்து வந்தாள்.

''பாமா, நம்ம ஊர்ல விவசாயம் சம்பந்தமா வேலைப் பார்க்க இன்னும் மூனு வாரத்தில வரப்போறா''

நிறைய பட்டாம்பூச்சிகள் பாமாவைச் சுற்றி வட்டம் அடித்தன. அதில் ஒரு பட்டாம்பூச்சி அவளது இடது தோளில் அமர்ந்தது.

''அம்மா, என் தோள் மேல உட்கார்ந்தது போல இவங்க தோள் மேல உட்காருதும்மா'' என பெருமகிழ்வோடு சொன்னாள் பூங்கோதை.

துளசி இலைகளில் பல ஓட்டைகளோடு காணப்பட்டதை கண்டாள் பாமா.

ஒரு தாவரம் தன்னில் உள்ள எல்லாப் பாகங்களையும் பிற உயிரினங்களின் உணவாக மாற்றிக் கொள்கிறது. துளசிச் செடிகளின் அருகில் சென்ற பாமா தன் அழகிய கண்கள் மிளிர கம்பளிப் பூச்சி போன்று ஊர்வதைக் கண்டு பெரு மகிழ்வு கொண்டாள். அப்படியே பூங்கோதையின் கர்ப்பம் தரித்த வயிறு கண்டாள்.

''மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே'' என பாமா பாட சிலுசிலுவென தென்றல் வீசியது. நாச்சியார் பாமாவின் குரல் கேட்டு அகம் மகிழ்ந்தார். குழந்தை தன் வயிறுதனை முட்டுவதை முதன் முதலாக உணர்ந்தாள் பூங்கோதை.

(தொடரும்)


No comments: