Sunday, 15 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 5

5. துளசிச் செடி

நாச்சியார் சொன்ன கதை பூங்கோதையின் மனதைத்  தைத்துக் கொண்டு இருந்தது. பூங்கோதையின் தோளின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சி வீட்டை விட்டு எங்கும் செல்வதாக இல்லை. தானும் ஒருவேளை அம்மாவாகும் வாய்ப்பு இன்றி போகும் எனில் தனக்குப் பின் தனது சந்ததி எனச் சொல்ல ஏதும் அற்றுப் போயிருக்கும் என நினைக்கும்போது பூங்கோதைக்கு மிகவும் கவலையாக இருந்தது.

''அம்மா என் மேல அமர்ந்த இந்த பட்டாம்பூச்சி ஆணா, பெண்ணா'' பூங்கோதையின் கேள்வி எதனால் எழுந்தது என ஆராயாமல் பட்டாம்பூச்சியினை ஆராய எழுந்தார் நாச்சியார்.

அந்த பட்டாம்பூச்சி வீட்டின் அறையில் இருந்த இரண்டு சன்னல்களில் ஒரு சன்னலில் சென்று அமர்ந்து இருந்தது. பட்டாம்பூச்சியின் அருகில் சென்று அதன் வயிறுப் பகுதியைப் பார்த்தார் நாச்சியார்.

''பொண்ணு'' நாச்சியார் சொன்னபோது பெரும் மகிழ்வோடு சொன்னார்.

''கோதை, ஒரு பட்டாம்பூச்சிக்கு மொத்தம் ஆறு கால்கள் இருக்கும், நாலு கால்கள் போல தோற்றம் இருந்தாலும் ஆறுதான். அதன் வயிறு தட்டையா நேரா இருந்தா அது ஆண், கொஞ்சம் தூக்கலா வளைஞ்சி இருந்தா அது பொண்ணு. இந்த பட்டாம்பூச்சிக்கு கழிவு எல்லாம் வெளியேற்ற தனித்தனி வழிகள் எல்லாம் இல்லை. எல்லாமே நீர் ஆகாரம்தான் அதனால் சிரமம் இல்லை. நீல நிறம், மஞ்சள் நிறம்னு கலந்து கலந்து இருக்கிற இந்த பட்டாம்பூச்சி இங்கேயே இருந்து என்ன சொல்ல நினைக்குதுனு தெரியலை''

''அதுபாட்டுக்கு ஒரு ஓரத்திலே இருக்கட்டும்மா''

''சரி கோதை, கவனமா இரு. நிறைய வருசம் கழிச்சி நான் ஒரு வேலையா நாளைக்கு மதுரை வரைக்கும் போறேன், வர ஒரு வாரம் ஆகும், எது வேணும்னாலும் பாப்பாத்தி கிட்ட கேளு, நானும் போய் அவகிட்ட சொல்லிட்டுப் போறேன், உன்னை வந்து பாத்துக்குவா''

''சரிம்மா''

ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் பரந்தாமனுக்கு வசுதேவன் கட்டித்தந்த வீடு. கிராமத்தில் கட்டப்படும் வீடுகளில் மொட்டைமாடி வைத்துக் கட்டுவது வழக்கம். ஏதேனும் காயப்போடுவதற்கு ஏதுவாக இருக்கும். கோவிலில் இருந்து பதினைந்து நிமிடங்களில் நடந்து செல்லும் தொலைவில் தான் வீடு கட்டப்பட்டு இருந்தது. இந்த மொட்டை மாடியில் நின்று முழுக்கோவிலையும் வெகுவாக இரசிக்கலாம்.

இரண்டு மாடிகள் கொண்ட வீடு. வீட்டுக்குள் நுழைந்ததும் காலணிகள் கழற்றி வைக்க ஒரு அறை. அங்கேயே கால், முகங்களை கழுவிக் கொள்ள தண்ணீர் வசதி கொண்ட சிறு இடம். அதைத்தாண்டி வீட்டுக்குள் நுழைந்ததும் நல்ல விசாலமான வரவேற்பு அறை. பத்து நபர்கள் கூட தாராளமாக படுத்து உறங்கலாம். அந்த அறையில் கீழேதான் அமர வேண்டும், எவ்வித நாற்காலிகளோ, கட்டில்களோ இல்லை. அங்கேதான் பெரும்பாலும் எவரேனும் வந்தாலும் கீழே அமர்ந்து பேசிச் செல்வார்கள்.

அந்த அறை முடியும் இடத்தில் வலப்புறமாக கிழக்கு நோக்கி கட்டப்பட்ட சமையல் அறை. நான்கு நபர்கள் தாராளமாக நின்று சமைக்கலாம். கோவில் அன்னதானம், நெய்வேத்தியம் எல்லாம் இங்கே செய்யப்படுவது இல்லை. பரந்தாமனுக்கும், பூங்கோதைக்கும் மட்டுமான சமையல் அறையாக இருந்தது.

வரவேற்பு அறை, சமையல் அறைக்குப் பின்புறம் உறங்குவதற்கான ஒரு அறை அதை ஒட்டிய ஒரு பூஜை அறை. முதல் மாடியில் இரண்டு அறைகள் மட்டுமே கட்டப்பட்டு இருந்தன. வீட்டினைச் சுற்றி சின்ன சின்ன மரங்கள் மா, கொய்யா ஆலிவ் என நடப்பட்டு இருந்தன. வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கோவிலுக்கு என சமைப்பதற்கான சமையல் அறையும், பொருட்கள் சேர்த்து வைக்கும் ஒரு அறையும் இருந்தது. இவற்றில் எல்லாம் இருந்து சற்று தள்ளி மற்றொரு பக்கத்தில் கழிப்பறை.

வீட்டின் முன்பக்கத்தில் வாசல் தாண்டி ஒரு மாடத்தில் துளசிச் செடிகள் இருந்தது. இந்த துளசிச் செடிகளை பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறாள் பூங்கோதை. ஒரு துளசிச் செடி வைத்த இடத்தில் இன்று பல துளசிச் செடிகள் ஆகி இருந்தது. இந்த பெரும் அண்டவெளியில் தங்களைத் தாங்களே நட்சத்திரங்கள் முதற்கொண்டு பெருக்கிய வண்ணம் இருக்கின்றன.

நாச்சியார் கிளம்பியதும் அவரோடு துளசிச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வெளியில் வந்தாள் பூங்கோதை. பட்டாம்பூச்சியும் அவள் பின்னால் வந்தது. அங்கே இருந்த ஒரு துளசிச் செடி இலையின் மீது அமர்ந்தது. அதனை பூங்கோதை வெகு ஆச்சர்யத்துடன் பார்த்தாள். நாச்சியார் கூட என்னவென ஒரு கணம் அங்கேயே நின்றார்.

தண்ணீர் ஊற்றித் திரும்பியவள் மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போனா எனக்கு குங்குமம் பிரசாதம் கொண்டு வாங்கம்மா என்றாள். நாச்சியார் தலையை மட்டும் ஆட்டியவர் துளசிச் செடியில் அமர்ந்து இருந்த பட்டாம்பூச்சியை பார்த்தவாறு இருந்தார்.

சிறிது நேரத்தில் பட்டாம்பூச்சி அங்கே இருந்து பறந்தது. துளசிச் செடியின் இலையின் பின்புறம் குனிந்து பார்த்தார் நாச்சியார்.

''பெருமாளே'' இரு கைகளைத் தன்  தலைக்கு மேலே தூக்கி வணங்கி நின்றார்.

''என்ன ஆச்சுமா''

''ஒரே ஒரு முட்டையை மட்டும் போட்டுட்டு அந்த பட்டாம்பூச்சி போயிருக்கு'' இலையில் ஒட்டிக்கொண்டு இருந்த முட்டையை பூங்கோதைக்கு காட்டினார் நாச்சியார்.

''எத்தனையோ முட்டைகள் போடும் வழக்கம் பட்டாம்பூச்சிகளுக்கு உண்டு அதுவும் பிரத்யோகமா இலைகள் தேடிப் போகும். இந்த துளசிச் செடியில இருந்து இதுவரைஇத்தனை வருசமா  பட்டாம்பூச்சி எதுவாச்சும் வந்து இருக்குனு நீ கவனிச்சு இருக்கியா கோதை''

''இல்லைம்மா''

''முட்டை போட்டுட்டு போறதோட சரி, அதற்கப்புறம் அந்த முட்டையை பாதுகாக்கனும், பொறிக்கனும் அப்படி எல்லாம் பட்டாம்பூச்சிக்கு வழக்கம் இல்லை. நீ இந்த இலையில் தண்ணியை ஊத்திராதே,  முட்டையை சிதைக்கமா பார்த்துக்கோ, நா அடுத்த வாரம் வந்து பாக்கிறேன்''

''சரிம்மா''

துளசிச் செடியின் இலையை பார்த்தவாறு நின்று கொன்று இருந்தாள் பூங்கோதை.

கிருஷ்ணருக்கு தானே சமம் என தன்னைத் தானே உலகுக்கு உணர்த்திய இந்த துளசிச் செடி ஒரு உயிரைத் தாங்கிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

No comments: