Tuesday, 24 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 10

10 மும்முலையாள்

''அத்தை, நீங்க ஏன் பாமாவை நம்ம ஊருக்கு வரச் சொன்னீங்க''

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக யசோதை நாச்சியாரிடம் கேட்டாள்.

''நல்ல பொண்ணா மனசுக்குப் பட்டுச்சு யசோ''

''நான் கூட வண்ணத்துப்பூச்சி பத்தி எதுவும் இருக்குமோனு நினைச்சேன் அத்தை''

''அதெல்லாம் இல்லை, ஆனா இந்த உலகத்தில நமக்கு எது எது எல்லாம் வளர்க்கனும்னு ஆசை இருக்குப் பார்த்தியா''

''நான் எதுவும் வளர்க்கிறது இல்ல, நீங்களும் எதுவுமே வளர்த்தது இல்லையே அத்தை''

''உன்னை வளர்த்தேனே அது போதாதா அது போல நிறைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி வளர்த்து இருக்கேனே யசோ. நாளைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போவோமோ''

''என்னங்க அத்தை, அதிசயமா, பெருமாள் கோவில் தவிர்த்து எங்கேயும் நீங்க போனது இல்லையே, இப்ப மட்டும் என்னவாம்''

''அன்னைக்கு அழகர் கோவிச்சிட்டுப் போன மாதிரி எனக்கென்ன மீனாட்சி மேல கோவமா என்ன, எனக்குப் பிரியம் பெருமாள் மட்டும்தான் மத்த கோவில்களுக்குப்  போகமாட்டேனு எல்லாம் இல்ல, போக வேண்டிய சூழல் எதுவும் அமைஞ்சது இல்ல. பேதம் பார்த்தல் பிழைனு இருக்கு யசோ ஆனா ஒன்றின் மீது மட்டுமே அன்பு செலுத்துதல் பிழை இல்லை ''

''மீனாட்சி கோவிலுக்குப் போகனும்னு என்ன சூழல் இப்போ அத்தை''

''கோதை, குங்குமம் பிரசாதம் வாங்கிட்டு வரச் சொன்னா, வாங்காம போனா அவ மனசு பாடுபடும் இல்லையா அதுவும் பிள்ளைத்தாச்சியா இருக்கா, நாளன்னைக்கு ஊருக்குக் கிளம்பனும். அங்க வேற துளசிச் செடியில முட்டை எப்படி இருக்கோ, எப்படியும் நான் போகப் போறப்ப கம்பளிப்பூச்சி மாதிரி உருமாறி இருக்கும்''

''வண்ணத்துப்பூச்சி நினைப்பாவே இருக்கீங்க, கோதை கிட்ட பேச வேண்டியதுதானே அத்தை, ஒரு போன் வைச்சிக்கோங்கனு சொன்னா உலக அதிசயமா வேணாம்னு சொல்றீங்க என்ன பண்றது. நீங்க சொன்னது போல நாளைக்கு கோவிலுக்குப் போகலாம் ஆனா சாயந்திரம்தான் போகனும், நீங்க பள்ளிக்கூட விசயமா யாரையோ பாக்கனும்னு சொன்னீங்க,  பாத்துட்டு வந்துருங்க''

''ஆழ்வார் திருநகரிக்குத்தான் போகனும். சடகோபனு ஒருத்தரைப் பார்க்கச் சொல்லி இங்க இருந்து ஒருத்தர் கடிதம் கொடுத்து இருக்கார். அவர் மூலமா ஏதாவது ஆகுதானு பாக்கனும்''

''இந்த வயசுக்கு அப்புறம் எதுக்குங்க அத்தை அலைச்சல், அதுவும் தூத்துக்குடி பக்கம் போகனும் வேண்டாத வேலையாக எனக்குப்படுது''

''நல்ல விசயங்களுக்கு வயசு தடை இல்லை யசோ''

யசோதை வேறு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து கொண்டாள். சடகோபன் எனும் பெயர், ஆழ்வார் திருநகரி எனும் ஊர் நாச்சியார் மனதில் அளவிலா மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. நாச்சியாருக்கு நம்மாழ்வார் என்றால் ஒருவித ஈர்ப்பு உண்டு. நம்மாழ்வார் குறித்து அவர் படித்த விசயங்கள் அவருக்குள் எப்போதும் ஒரு கேள்வியை எழுப்பியபடியே இருக்கும்.

அடுத்த தினம் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார் நாச்சியார். யசோதை வேலைக்குப் போய்விட்டு மாலை சற்று வேகமாகவே வந்து விட்டாள். யசோதை நாச்சியாருடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனாள்.

''அந்தக் காலத்தில் பெண்களின் ஆட்சி இருந்ததாக எழுதி இருக்காங்க, வீட்டில கூட மீனாட்சி ஆட்சியானு கேட்கறது அதுக்குத்தான அத்தை''

''பெண்கள்தான் உலகம்னு இருந்துச்சி, அப்புறம் ஆண்கள் உலகம்னு மாத்திக்கிட்டாங்க மறுபடியும் பெண்கள் உலகம்னு ஆகிரும்''

''அப்போ உங்க பெருமாள்''

''பெருமாள் எப்பவும் பெருமாள்தான் யசோ''

மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனார்கள். மக்கள் எப்போதுமே கோவிலில் கூட்டமாகத் தென்படுகிறார்கள். தெய்வம் பல மனிதர்களின் தேவையின் ஒன்றாகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்து வந்து இருக்கிறது. தெய்வத்தின் மீதான நம்பிக்கை என்பது ஏமாற்றத்தின்போது கூட தொலைந்து விடாமல் இருப்பது என்பது ஆச்சரியங்களில் ஒன்றுதான்.

நாச்சியார் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வந்தபோது மூன்று மார்பகங்கள் கொண்ட ஒரு சிலையின் முன்னர் நின்றார். யசோதை நாச்சியார் நின்றதைப் பார்த்து வியப்பு கொண்டாள்.

''அத்தை, இந்தக் கதை உங்களுக்குத் தெரியுமா?''

''குழந்தை இல்லாம மன்னன் பையன் வேணும்னு யாகம் செஞ்சப்ப மூன்று வயசு பெண் குழந்தையா யாகத்தில் இருந்து தோன்றி  மூன்று மார்பாகங்களோடவே வளர்ந்து பெரும் ஆட்சி செஞ்சி கடைசியில் சிவனை மணக்கப் போறப்ப சிவனைப் பார்த்ததும் மூன்றாவது மார்பகம் மறைஞ்சி போனதுதான''

''ம்ம் ஆழ்வார்கள் பெருமாள் கதை தவிர்த்து இது எல்லாம் படிச்சி இருக்கீங்க அத்தை, ஆனா எனக்குச் சொன்னது எல்லாம் இராமானுசரும் ஆண்டாளும் மத்த ஆழ்வாரும் மட்டும்தான், இதுல இருந்து ஒன்னு புரிஞ்சிக்கிறலாம். நம்ம உடம்புல உடல் உறுப்புகள் தேவை இன்றி வளரவும் செய்யும், உடல் உறுப்புகள் குறையவும் செய்யும். நிறைய மாற்றங்கள் கொண்ட மனிதர்கள் பிறக்கத்தான் செய்றாங்க ஆனா குறைந்த அளவில்தான் அந்தமாதிரி மாற்றங்கள் இருக்கு இப்போ கூட இப்படி மூன்று மார்பகங்கள் கொண்டவங்க அங்க அங்க இருக்காங்கனு ஒரு ஆய்வு சொல்லுது ஆனா மீனாட்சியை மும்முலையாள் அப்படினு கூப்பிட்ட  மாதிரி இப்போ கூப்பிட முடியாது அதுவும் இதை பாலினங்களில் உள்ள குறைபாடுனு சொல்றாங்க''

''முக்கண்ணன்னு சொல்றாங்க, இப்போ அப்படி யாரும் இருக்கிறது இல்லை யசோ''

''இதெல்லாம் உண்மையானு தெரியலைங்க அத்தை, ஆனா படிக்க, கேட்க ஆர்வமாத்தான் இருக்கு''

கோதைக்கு என குங்குமம் பிரசாதம் வாங்கிக் கொண்டார் நாச்சியார். யசோதையின், வேலனின்  உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட ஆர்வம் நாச்சியாருக்கு சற்றுப் புதிராக இருந்தது.

மனிதர்கள் என்றால் இப்படித்தான் என வரையறை வைத்துக் கொண்டார்கள். அதை மீறிய எந்தவொரு உருவமும் குறை உள்ளதாகவே இந்த உலகில் கருதப்படுகிறது. எவ்வித குறைகள் இன்றி பிறப்பது வரம் எனில் மனதில் குறைகள் இல்லாமல், இவ்வுலகின் மீது நிறைய நல்ல நம்பிக்கைகள் கொண்டு இருப்பது மாபெரும் வரம்.

(தொடரும்)
No comments: