Sunday 18 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 18

காயத்திரியின் சோகமான முகம் கண்டு அம்மா பதட்டம் கொண்டார்கள். 

''என்ன காயத்ரி, ஒருமாதிரி இருக்க, அக்காவை நினைச்சி கவலைப்படறியா?''

''இல்லம்மா''

''அப்புறம் எதுக்கு உன் முகம் ஒருமாதிரி இருக்கு''

நான் இடைமறித்தேன். 

''அந்த சுபத்ரா, காயத்ரி அக்கா வாழ்க்கை என் கையில அப்படின்னு மிரட்டிட்டு போனா''

''என்ன சொல்ற நீ''

''ஆமா''

''அவளை இப்பவே ரெண்டுல ஒன்னு பாத்துட்டு வரேன்''

அப்பா அம்மாவை தடுத்தார். 

''என்ன காயத்ரி நீ, உடனே அவங்களை அடிக்க போக துடிக்கிற, பாவம் சின்ன பொண்ணு, அவளே வருத்தமா இருக்கா''

நான் மட்டுமே என் காயத்ரியை காயூ என அழைக்கிறேன். அப்பா, அம்மாவை காயத்ரி என்றே அழைக்கிறார். 

''பிறகு என்னாங்க, என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு''

வீட்டிற்கு வந்தபின்னும் அம்மா முனுமுனுத்து கொண்டே இருந்தார். காயத்ரி எதோ புத்தகம் வாசித்து கொண்டிருந்தாள், அல்லது நடித்து கொண்டிருந்தாள். மிகவும் குறைவாகவே இரவு சாப்பிட்டாள். எனக்கு மிகவும் கவலையாக போய்விட்டது. நாளை விடுமுறை என்பதால் அவளை எங்காவது அழைத்து செல்ல வேண்டும் என திட்டமிட்டேன். 

காலையில் எழுந்து அனைவரும் தயாரானோம். வாசற்கதவு தட்டப்பட்டு திறக்கப்படுகையில் சுபத்ரா நின்று கொண்டிருந்தாள். அம்மாவுக்கு கோபம் ஜிவ்வென தலைக்கேறியது. 

''அடுத்த அடி எடுத்து வைச்ச காலை வெட்டிருவேன்''

அம்மாவின் அந்த ஆவேசம் சுபத்ராவை மட்டுமல்ல எங்களையும் நிலைகுலைய வைத்தது. 

''அத்தை...''

''யாரு அத்தை, யாருடீ அத்தை. அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடறவங்க எல்லாம் என்னை அத்தைனு கூப்பிட என்ன அதிகாரம் இருக்கு, ஒழுங்கா திரும்பி போ, இல்லை உதைபட்டே சாவ''

அம்மாவின் கோபம் கண்டு பல நாட்கள் ஆகிப் போனது. காயத்ரி கூட பயத்துடன் இருந்தாள். அப்பாதான் அம்மாவை சமாதானம் பண்ணினார். 

''உள்ளே வாம்மா சுபா''

''என்னங்க, இது மாதிரி அசிங்கங்களை இப்பவே துடைச்சிரனும், வளரவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது''

சுபத்ரா அங்கே மறுகணம் நிற்கவில்லை. வேகமாக சென்றுவிட்டாள்.

''என்ன காயத்ரி நீ, வீட்டுக்கு வந்த பொண்ணை இப்படி கேவலபடுத்தி அனுப்பிட்ட''

அம்மா காயத்ரியை தனது பக்கத்தில் இழுத்து வைத்து கொண்டு 

''இதோ இந்த புள்ளையோட முகத்தை பாருங்க, இவங்க அம்மா செத்ததுல இருந்து என்னைக்கு இந்த புள்ளையால சிரிச்சி சந்தோசமா இருக்க முடிஞ்சது, இதுல இப்போ இந்த சனியன் வேற வந்து ஏழரைய கூட்ட நினைச்சா எப்படிங்க பாத்துட்டு சும்மா இருக்கிறது''

அம்மாவின் காயத்ரி மீதான பாசம் எனக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. அப்பாவும் சரி என பேசாமல் இருந்தார். நானும் காயத்ரியும் வெளியில் செல்கிறோம் என சொல்லிவிட்டு கிளம்பினோம். 

''காயூ எங்க போகலாம்?''

''கோவிலுக்கு''

''கோவிலுக்கு வேணாம், ஏதாவது பார்க்குக்கு போகலாம்''

''கோவிலுக்கு போய்ட்டு பார்க்குக்கு போகலாம்''

சரியென கோவிலுக்கே சென்றோம். அங்கே கோவிலில் காயத்ரியின் அக்காவும், ரங்கநாதனும் நின்று கொண்டிருந்தார்கள். 

''காயூ, நீயும் உங்க அக்காவும் பேசி வைச்சீங்களா?''

''இல்லை''

அவர்கள் இருவரையும் சந்தித்து சுபத்ரா விசயமும் சொன்னோம். ரங்கநாதன் மிகவும் கோபப்பட்டார். சுபத்ராவை தனது வீட்டுக்குள் விடாதவாறு பார்த்து கொள்வதாக சொன்னார். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு கிளம்பினோம். 

அங்கே இருந்து ஒரு மணி நேரத்தில் பார்க் அடைந்தோம். அங்கே எனக்கு பிடித்த ஆசிரியர் அவரது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார். வாங்க என வரவேற்றார். நாங்கள் இருவரும் அவரது கண்ணில் படாமல் தப்பிக்க நினைத்தோம் ஆனால் அவர் எங்களை கண்டதும் அழைத்துவிட்டார்.

''என்ன அதிசயமா இந்த பக்கம்''

''சும்மா வந்தோம் சார்''

அவரது குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். மனைவி, பத்து வயது நிரம்பிய பையன், பதினான்கு வயது நிரம்பிய பெண். அவர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது. துறுதுறுவென பையனும், பெண்ணும் ஓடியாடி திரிந்தார்கள். 

''எங்களுக்கு இதுதான் பொழுதுபோக்கு இடம், மாசத்தில இரண்டுவாட்டி வந்துருவோம்''

''இப்பதான் சார், நாங்க முதல் முதலா வரோம்''

அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரம் அற்புதமான நேரம் என்றே சொல்லலாம். காயத்ரி மிகவும் லேசாக உணர்ந்தாள். ஆசிரியரின் மனைவி மிகவும் நகைச்சுவையாக பேசினார். அவர்களது திருமணம் காதல் திருமணம் என்றும், எப்படியெல்லாம் நாடகம் ஆடி திருமணம் செய்தார்கள் என்பதை விவரித்தபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 

''சார், நம்ம காலேஜ்ல உங்களைதான் ரொம்ப பிடிக்கும்''

''பக்கத்தில காயத்ரி இருக்கா, அதைக்கூட கவனிக்காம இப்படி சொல்றியேப்பா''

''காயத்ரியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார்''

''என்னங்க உங்க சூடன்ட் உங்களை மாதிரியே அறுக்கிறார்''

''ஒரே வெட்டா வெட்டத்தான் செய்வார்'' 

காயத்ரியின் பதில் எனக்கு சௌகரியமாக இருந்தது. 

அரைமணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். 

''காயூ''

''என்ன முருகேசா''

''இந்த உலகம் இரண்டே இரண்டு வகை மனிதர்களால் ஆனது''

''சொல்லு''

''ஒன்று சந்தோசம் உடைய மனிதர்கள், மற்றொன்று துக்கம் உடைய மனிதர்கள்''

''மொத்தமா பிரிச்சி வைக்க முடியாதுல''

''ஆமா, இங்கிட்டும், அங்கிட்டும் ஆடிக்கிட்டே இருப்பாங்க''

''என்னை மாதிரி''

''இல்ல, என்னை மாதிரி''

''முருகேசா, இப்படி வெளில வந்து இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு''

''ம்ம்''

''வாரம் வாரம் இப்படி வந்துருவோம், ஷாப்பிங், லைப்ரரி எல்லாம் வேணாம்''

''ம்ம்''

''அம்மா என் மேல பிரியமா இருக்காங்கள''

''அம்மா எப்பவும் அன்புக்கு கட்டுபட்டவங்க''

''சுபத்ராவை போய் பார்ப்போமா''

நான் காயத்ரியின் முகத்தை மட்டுமே பார்த்தேன். 

(தொடரும்)






Saturday 17 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 2

அங்கே சில இடங்களில் விசாரித்துவிட்டு ஒருவரின் வீட்டை அடைந்தோம். வாசற்கதவை தட்டினோம். அவரது வீட்டின் வெளியில் ஒரு திண்ணை இருந்தது. உயரமான நல்ல நிறத்துடன் ஒருவர் கதவை திறந்து நின்று கொண்டிருந்தார். நெற்றியில் நாமம் இட்டு இருந்தார்.

''வணக்கம்''

''யார் நீங்க?''

''கர்நாடக இசை கத்துக்க வந்து இருக்கோம்''

''என்ன சாதி?''

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வீட்டின் வெளியிலே நின்று கொண்டிருந்தோம். உள்ளே கூட அழைக்காமல் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறாரே என எனக்குள் வருத்தமாக இருந்தது. சங்கீதம் தெரிந்தவர் இங்கீதம் கூட தெரியாமல் இருக்கிறாரே என மனதில் புலம்பினேன். நான் பதில் சொல்லும் முன்னர் கருத்தபாண்டி பதில் சொல்லிவிட்டான்.

''நான் பறையர், இவன் தேவர்''

''கீழ் சாதிக்காரங்களுக்கு எல்லாம் நான் சங்கீதம் கத்து தரது இல்லை. இது பாரம்பரிய மிக்க இசை, பிராமணர்கள் மட்டுமே கத்துக்க வேண்டிய இசை. நீங்க போகலாம்''

''புரந்தரதாசர் அப்படி நினைக்கலையே''

''புரந்தரதாசர் பத்தி என்ன தெரியும் உனக்கு''

''தியாகராஜ பாகவதர் கூட இப்படி சொல்லலையே''

''அவங்க ரண்டு பேரு பேரை சொன்னா உங்களை உள்ள விட்டுருவேனா''

பட்டென கதவை சாத்தினார் அவர். கருத்தபாண்டி என்னை முறைத்து பார்த்தான்.

''கதவை உடைக்கட்டுமா''

''வேணாம் விட்டுரு''

''யாரு புரந்தரதாசர், யாரு தியாகராஜ பாகவதர்''

''கர்நாடக இசை மாமேதைகள், புரந்தரதாசர் கர்நாடக இசை தந்தை''

''ஓ...''

கருத்தபாண்டிக்கு இவர்களைத் தெரியாமல் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஏமாற்றத்துடன் அவரது வீட்டில் இருந்து கிளம்பினோம். இவர் மிகவும் சிறந்த கர்நாடக இசை ஆசிரியர் என சொன்னதால் மீண்டும் ஒருமுறை கதவை தட்டுவோம் என திரும்பினோம். இந்த முறை கதவை தட்டியதும், திறந்தார்.

''நாங்கள் வெளியில் இந்த திண்ணையில் இருந்து கற்று கொள்கிறோம்''

''நான் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லை''

அடுத்த நிமிடமே கருத்தபாண்டி அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் எறிந்தான். அலறலுடன் அவர் தலையை பிடித்தவாறு கீழே விழுந்தார். அவரது தலையில் ரத்தம் கொட்டியது. வீட்டில் எவரும் இல்லை என புரிந்தது. நான் எனது சட்டையை கிழித்து அவரது தலையில் கட்டினேன். வீட்டு கதவை சாத்திவிட்டு மயக்கத்தில் இருந்தவரை மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவில் தூக்கி கொண்டு சென்றோம். அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். கருத்தபாண்டியை திட்டி தீர்த்தேன். அவனோ இது போன்ற ஆட்களுக்கு இதுவே தண்டனை என்பது போல் பேசாமல் நின்று கொண்டிருந்தான். கண் விழித்து பார்த்தவரை சென்று பார்த்தோம்.

''எங்களை மன்னிச்சிருங்க ஐயா''

எங்கள் இருவரையே பார்த்து கொண்டிருந்தார். போ போ என கையை அசைத்தார்.

''கர்நாடக இசை...''

''நா ன் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்ல''

இனிமேல் அங்கே நின்று பிரயோசனம் இல்லை என கிளம்பினோம்.

''கொன்னு போட்டு இருக்கனும்''

''விடுறா''

''என்ன மனுசங்க''

''மண்ணில் வந்த உடம்பு, மண்ணில் போகும் உடம்பு, ஒருவர் எந்த சாதி என்றால் என்ன, ஒருவர் எந்த நிலையில் இருந்தால் என்ன, இசை எல்லாருக்கும் பொதுவானது''

''நான் பாட்டுக்கு பேசாம தப்பட்டையை தட்டிகிட்டே இருந்து இருப்பேன், நீ என்னவாச்சும் பண்ணு''

கருத்தபாண்டி என்னை தனியாக விட்டுவிட்டு கிளம்பி போனான். எத்தனை எத்தனையோ மனிதர்கள் கண்டேன். அவர்கள் எல்லாம் என்னை என்ன சாதி என்றே கேட்க வில்லை. உணவகத்தில் உணவு அருந்தினேன். அவர்கள் என்ன சாதி என நானும் கேட்கவில்லை. சாப்பிட்டு கொண்டு இருந்தபோது கர்நாடக இசை கற்று தருபவர் பற்றி எனக்கு எதிரில் அமர்ந்து இருந்தவரை கேட்டேன். தெரியாது என்றார். மேலும் சிலரிடம் விசாரித்து ஒரு முகவரி வாங்கி கொண்டு சென்றேன்.

வீட்டு வாசலை தட்டினேன். உயரமான ஒருவர் வாசற்கதவை திறந்தார். 

''நான் தேவர் சாதி, கர்நாடக இசை கத்துக்கிரனும்''

''புரந்தரதாசர் காலத்தில் இருந்தே இந்த சாதி கொடுமையை எதிர்த்து போராடி இருக்காங்க, இன்னுமா சாதி பத்தி பேசற, உள்ளே வா''

எனக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. வீட்டிற்குள் இருந்த திண்ணை ஒன்றில் அமர சொன்னார். வீட்டினுள் சென்று பழங்கள் கொண்டு வந்தார். அவரது துணைவியாரும், அவரது மகளும் உடன் வந்தார்கள். அவர்களுக்கு வணக்கம் சொன்னேன்.

''கர்நாடக இசை கத்துக்க வந்துருக்கான்''

புன்னகை புரிந்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

''இதுக்கு முன்னால எங்கேயாவது சங்கீதம் கத்து இருக்கியா''

''இல்லை''

''எத்தனை ராகம், எத்தனை தாளம் எல்லாம் தெரியுமா?''

''கொஞ்சம்''

''கர்நாடக சங்கீதம் பாடுறது, அது இதை வைச்சி தட்டுறது இல்லை''

''புல்லாங்குழல், மிருதங்கம், வீணை எல்லாம் உபயோகம் பண்ணுவாங்களே''

''ஆமா, ஆனா நீ பாட கத்துக்கிற போறியா, இல்லை இசைக்கருவிகளை இசைக்கப் போறியா''

''பாட கத்துக்கிறேன், அதோட இசைக்கருவிகளும்''

''என் பேரு ஆதிராஜன், உன் பேரு''

''ஆதி''

''இதோ பழங்கள் எடுத்து சாப்பிடு''

''இதே ஊருல ஒருத்தர் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லைன்னு சொன்னார்''

''யாரு, சீர்மலைவேதிகரா''

''பேரு கேட்கலை''

''உயரமா நாமம் போட்டுண்டு... அவா அப்படித்தான், சிலரை திருத்த முடியாது''

''இப்படி இருந்தா எப்படி கர்நாடக இசை வளரும்''

''இனிமே யாரு கர்நாடக இசைக்கு மாறப் போறா, கொஞ்ச பேரு என்கிட்டே படிக்க வராங்க. ஆனா என் பொண்ணு சினிமாவுல பாடப் போறா''

''அப்படின்னா இந்த இசை''

''தெரியலை, ஒடுக்கப்பட்ட மக்களுக்குன்னு எத்தனையோ புரட்சி வந்தது உண்டு,  ஒடுக்கப்பட்ட இசைக்கு இசை புரட்சி எதுவும் வரலை, வெஸ்டர்ன் இசை எல்லாம் வந்துருச்சு, எதோ அங்க அங்க இசை கச்சேரி நடத்துறா, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுல இருக்காங்க. நானே என் பொண்ண கர்நாடக இசையில இருக்க வைக்க முடியல''

''எனக்கு கத்து தாங்க, நான் நிறைய பேருக்கு கத்து தாரேன்''

''ம்ம்''

கற்று கொள்ள ஆரம்பித்தேன். கடினமாகவே இருந்தது. ஸ்ருதி, லயம் எல்லாம் சரி செய்ய வேண்டும் என சொன்னார். பணம் வேண்டாம் என மறுத்து விட்டார். மாலை நேரத்தில் நம்பிக்கையுடன் ஊர் வந்தேன். கருத்தபாண்டியை தேடி சென்றேன். அவன் முழுவதுமாக மறுத்துவிட்டான். அம்மாவும் அப்பாவும் எனக்காக காத்து இருந்தார்கள். அப்பாதான் சொன்னார்.

''ஆதி, ஒரு முக்கியமான சேதிடா. நம்ம ஊரு முதலாளி விவசாய நிலத்தை எல்லாம் பட்டா போட்டுட்டு வரார், நிறைய வீடு கட்ட போறாங்களாம்''

''அப்போ விவசாயம்...''

''எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்''

இருளாகிப் போனதைக் கண்டு மனம் விம்மியது.

(முற்றும்)

Friday 16 August 2013

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - எகிப்தியர்கள்

பாபிலோனியர்கள் குறித்து பார்க்கும் முன்னர் எகிப்தியர்கள் பற்றி கண்டு கொள்வோம். தற்போதைய எகிப்தில் நடக்கும் கலவரங்களுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து கொள்வோம். தற்போது எகிப்தில் என்னதான் நடக்கிறது என்பதற்கு மிகவும் சுருக்கமாக 'அரசு கொண்டு வரும் மத கட்டுபாடுகள் மீதான அதிருப்தி' என்றே பார்க்கப்படுகிறது. இதே எகிப்தில் தான் சில வருடங்களுக்கு முன்னர் முப்பது வருடங்கள் அரசாண்ட ஒருவரை விரட்டி அடித்தனர் மக்கள். நம்பிக்கையோடு ஒருவரை தேர்ந்தெடுக்க அவர் தலைவலியாக மாறுவதால் ஏற்படும் ராணுவ உதவியுடனான சீற்றங்கள். 

எகிப்து பிரமிடுகளுக்கு என பிரசித்தி பெற்றது. எகிப்து நைல் நதியால் நன்மை பெற்றது. எகிப்து வரலாற்றை இவ்வாறு பிரிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறாயிரம் வருடங்கள் முன்னர் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் இருந்த நகட கால கட்டம். மேல் எகிப்து இது நைல் நதிக்கு இருபக்கத்தில் அமைந்த பகுதி , கீழ் எகிப்து இது தற்போதைய கைரோ போன்ற இடங்கள், என்றே பிரித்து இருந்து இருக்கிறார்கள். இவ்வாறு பிரிந்து கிடந்த இரண்டு பகுதிகளை ஒரே அரசாக பிரித்த சிறப்பு மேனேஷ் எனும் அரசரையே குறிக்கும். பரோ என்றே அரசரை குறிப்பிடுகிறார்கள். இந்த காலகட்டம் ஆயிரத்து அறநூறு வருடங்கள் நிலைத்தது, இதனை தினைட் கால கட்டம் என்கிறார்கள். அப்போதைய தலைநகரம் மெம்பிஸ். என்னதான் ஒன்றாக இணைத்தாலும் எப்போது பிரிந்து செல்லலாம் என்றே முனைப்புடன் இரண்டு பகுதிகளும் இருந்து இருக்கின்றன. 

பழங்கால அரசு. இந்த தினைட் காலகட்டத்திலேயே இந்த ஒரே அரசுதனை முப்பத்தி எட்டு பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தான், கலை, கலாச்சாரம், மதம் எல்லாம் தோன்றி இருந்து இருக்கிறது. இந்த அரசர் சூரியனின் பிள்ளைகளாக போற்றப்பட்டும் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பெரிய பிரமிடுகள், கல்லறைகள் எல்லாம் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் செலவழிக்கப்பட்டு சக்கரா எனும் இடத்தில் ஜோசெர் எனும் பிரமிடு நான்காயிரம் வருடங்கள் முன்னர் உருவாக்கப்பட்டது. அதற்கு பின்னர் ஐம்பது ஆண்டுகள் செலவழிக்கப்பட்டு ச்நேப்று எனும் பிரமிடு உருவாக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளில் உருவான சாப்ஸ் பிரமிடு. உலக அதிசயங்களில் ஒன்றானபிரமிடு இது. இது கிசா எனப்படும் இடத்தில் வேறு இரண்டு பிரமிடுகளுடன் சேர்த்து கட்டப்பட்டது. இந்த பிரமிடுகள் அடிமைகளால் கட்டப்பட்டது அல்ல. மிகவும் கைதேர்ந்த கட்டிட நிபுணர்களால் கட்டப்பட்டதுதான் என்றே வரலாறு குறிக்கிறது. 

இந்த அரசர்கள் கடவுளை பெரிதும் போற்றி இருக்கிறார்கள். கடவுளை உயர்ந்த நிலையில் வைத்து மகிழ்ந்து இருக்கிறார்கள். இவர்களுடைய கடவுளுக்கு எல்லாம் தலைகள் விலங்கு தலைகளாகவே இருக்கும். இங்கே ஒரு ஒற்றுமையை குறித்தாக வேண்டும். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் சில அவதாரங்கள் விலங்கு தலையை உடையதாகவே இருந்து இருக்கும். அப்படியே பரிணாமத்தை தொட்டு பார்த்தால் நமது மூதாதையர்கள் விலங்குகளாகவே இருந்து இருப்பதும், அதில் இருந்து பிரிந்த பிரிவுதான் நாம் மனித விலங்கு என்றும் சொல்லப்படுகிறது. 

கடவுளின் கலாச்சாரம் தொடங்கப்பட்ட எகிப்தில் நிறைய மத நிறுவனங்கள் வெவ்வேறு கடவுளை உருவாக்கி கொண்டன. ஒவ்வொரு கடவுளுக்கு என ஒரு கதை சொல்லப்பட்டது. அதில் மிக முக்கியமான கதை ஐசிஸ் ஒச்ரிஸ் பற்றியதாகும். ஒச்ரிஸ் உலகத்தையே கட்டுபாட்டில் வைத்து இருந்தபோது, அவரது பொறாமை கொண்ட சகோதரர் செட், ஒஸ்ரிசை துண்டு துண்டாக வெட்டி உலகில் எல்லா இடங்களிலும் சிதறிவிட்டானாம். இதை அறிந்த ஒச்ரிஸ் மனைவி ஐசிஸ் , ஒஸ்ரிசின் பிறப்பு உறுப்பு தவிர எல்லா பகுதியையும் எடுத்து ஒன்று சேர்த்தாளாம். அப்படி உருவாக்கப்பட்ட ஒச்ரிஸ் பாதாள உலகை காத்து வருகிறானாம். 

ஐசிஸ் மற்றும் ஒச்ரிஸ் மகன் ஹோரஸ் தனது மாமா செட் தனை எதிர்த்து போராடி இருக்கிறார். செட் மேல் எகிப்து கடவுளாகவும், ஹோரஸ் கீழ் எகிப்து கடவுளாகவும் இருந்து இருக்கிறார்கள். மேல் எகிப்து வளமானதும், கீழ் எகிப்து பாலைவனமாகவும் இருந்து இருக்கிறது. அனுபிஸ், தோத், கணும் போன்ற கடவுளர்கள் இருந்து இருக்கிறார்கள். அனுபிஸ் ஒச்ரிஸ் பாகங்களை தனது தாயுடன் சேர்ந்து ஒன்று சேர்க்க உதவியவர். தோத் நமது சித்திரகுப்தன் போல. பாவ புண்ணியங்களை எழுதுபவர். கணும் நமது பிரம்மா போல. மக்கள், உயிரனங்கள் என அனைத்தையும் தோற்றுவிப்பவர். இவர் உயிரை உருவாக்குவதுடன் ஆத்மாவையும் அதனுடன் சேர்த்து வைப்பவர். நமது நாட்டில் இருப்பது போலவே ஆத்மாவுக்கு அழிவில்லை என்றே நம்புகிறார்கள். 

இப்படி இருந்த காலகட்டத்தில் தெற்கில் இருந்து தீபேஷ் வடக்கில் இருந்து ஹெரக்லாபோளிஸ் போன்றவர்கள் எகிப்தின் இந்த பழைய அரசினை சிதறடித்தார்கள். இவர்களுக்கென தனிக்கடவுள் எல்லாம் இருந்து இருக்கிறது. இந்த காலகட்டம் மத்திய அரசு. நேண்டுஹோடேப் எனப்படும் தீபேஷ் அரசர் சிதறடிக்கப்பட்ட அரசாங்கத்தை ஒன்றிணைக்க பாடுபட்டார். அவர் செய்த முயற்சி வெற்றி பெற்று அமுன் எனப்பாடும் கடவுளை தலைமையாக கொண்டார்கள். இதற்கு காரணம் அமேநேம்ஹெட் எனப்படும் அரசர். இவரது காலத்தில் எகிப்தில் வியாபாரம் பெருகியது. நிறைய கோவில்கள், பிரமிடுகள் எழுப்பப்பட்டன. மத்திய கிழக்கு பகுதியில் எகிப்து கோலோச்சி விளங்கியது. ராணுவம், விவசாயம், அணைகள் கட்டுதல் என ஒரு வலிமைமிக்க வளமைமிக்க பேரரசாக எகிப்து விளங்கியது. ஆனால் இது அதிக நாள் நிலைக்கவில்லை. 

கிழக்கு பகுதியில் இருந்து ஹைகொஸ் எனப்படும் மக்கள் இந்த பேரரசுக்குள் நுழைந்து அவரின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தார்கள், இருப்பினும் அவர்கள் எகிப்து கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். எகிப்தில் இருந்த வம்சாவளிகள் பெரும் எதிர்ப்பை காட்டின. அஹ்மொசே எனப்படும் அரசர் இந்த ஹைஹோச்களை விரட்டி அடித்தார். இவர் பதினெட்டாவது பரம்பரையாகும். அப்போது புதிய அரசாங்கம் உருவானது. துத்மொசிஸ் எனப்படும் அரசர் சூடான், சிரியா போன்ற பகுதிகளை எல்லாம் கைபற்றினார். ஆப்ரிக்கா நாடுகளில் இருந்த வளத்தை தங்களுடன் இணைத்து கொண்டார். இவரின் மரணத்திற்கு பின்னர் துத்மொசிஸ் மகள் ஹெட்ஷ்புட் அரசு பொறுப்பிற்கு வந்தார். தன்னை மாபெரும் அரசர், தான் ஒரு ஆண் என அறிவித்தார். இவரது அரசாட்சியில் எகிப்து கோலோச்சி விளங்கியது. பெண் என்ற ஒரு காரணத்தினால் இவரது காலகட்டத்தை பூசி மேழுகிவிட்டார்கள். 

அமேன்தொப் மூவாயிரம் வருடங்கள் முன்னர் அரச பதவிக்கு வந்தார். இவரது சிலை இன்னமும் இருக்கிறது. இவரது கால கட்டத்தில் கட்டிட கலை மாபெரும் சிறப்பு பெற்றது. இவரது காலகட்டத்தில் ஒரே கடவுள் எனும் தத்துவம் கொண்டு வந்ததோடு பொற்காலம் என போற்றப்படும் அளவிற்கு போர் என இதுவும் இல்லாமல் விளங்கியது. 

மனித குல வரலாற்றிலேயே மிகவும் பழமையான, அனைவருக்கும் தெரிந்த ஒரு எகிப்திய கலாச்சாரம் மூவாயிரம் வருடங்கள் மேலாக சிறப்பு பெற்று விளங்கியது. அப்படிப்பட்ட எகிப்தியர்கள் இன்றைய நிலை வருத்தத்திற்கு உரியது. எகிப்தியர்கள் பற்றி மேலும் தொடர்வோம்.

(தொடரும்)

Thursday 15 August 2013

தலைவலி தந்த தலைவா

தமிழகத்தில் மட்டும் இந்த 'தலைவா' எனும் தமிழ் திரைப்படம் வெளியாகவில்லையாம். அதற்கான காரணங்கள் இவையிவையென 'பொழுதுபோக்கு' ஊடகங்கள் வரிசைபடுத்திக் கொண்டே இருக்கின்றன. 

முதல் காரணம் தலைவா திரைப்படம் வெளியிடப்பட்டால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்போம் என ஒரு 'சித்தரிக்கப்பட்ட' மிரட்டல் செய்தி. அதைத் தொடர்ந்து தியேட்டர்களுக்கு எங்களால் பாதுகாப்பு தர முடியாது என கைவிரித்துவிட்ட 'பம்மல்' தமிழக காவல்துறை. அதைகண்டு பயந்து நடுங்குவதை போல 'பாவலா' செய்த திரையரங்கு உரிமையாளர்கள். 

இரண்டாவது காரணம் தலைவா படத்தின் கதாநாயகன் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விடுத்த 'நான் அண்ணா, என் பையன் எம் ஜி ஆர்' எனும் அறிக்கை. 

மூன்றாவது காரணம் 'அதிமுக வெற்றி பெற அணில் போல உதவினோம்' எனும் கதாநாயகனின் 'மறக்கப்பட்டு பின்னர் தூசி தட்டப்பட்ட' தன்னடக்கமான அறிக்கை. 

ஆனால் பாவம் தயாரிப்பாளர். திரைப்படத்தின் மூலம் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைத்தவர் எம் ஜி ஆர். அதன் காரணமாகவே திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் அடைபவர்கள் தமிழக முதல்வர், இந்திய பிரதமர் எனும் கனவு காண்கிறார்கள். தன்னை ஒரு தலைவனாக சித்தரித்துக் கொண்டு கனவு காண்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? 

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தான் தலைவனாக வேண்டும் எனும் ஒரு சிறு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் பலர் நாட்டிற்கு நல்லது செய்ய தலைவன் எனும் பதவி ஒரு அவசியமான ஒன்று என்றாகிறது. குடும்பத் தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர், ஒன்றிய தலைவர், மாவட்ட தலைவர் இப்படி தலைவர் எனும் தலைவா கோசம் எங்கும் ஒலித்து கொண்டுதானிருக்கிறது. 

இப்படி இத்தனை தலைவர் என இருந்தாலும் அரசியல் தலைவர் எனும் 'தகுதியற்ற' சிறப்பு தலைவர் பதவி ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி அதற்கு உண்டு. காங்கிரஸ், பாஜக திமுக, அதிமுக என கட்சிகளின் தலைவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

இப்படி தலைவர் ஆசை விஜய்க்கு இருப்பது என்னவோ உண்மைதான். மக்களுக்கு உதவ வேண்டும் எனும் தனது கனவு சாத்தியப்பட நினைக்கிறார். திரைப்படத்தில் இருந்து எண்ணற்றோர் அரசியல் உலகுக்கு வந்து வெற்றி பெற முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாகவே கமல் அரசியல் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கி கொண்டார், ரஜினி அரசியல் மனசுக்கு ஆகாது என அறிக்கையுடன் நிறுத்திக் கொள்கிறார். ஆனால் விஜயகாந்த், விஜய டி ஆர் போன்றோர் எல்லாம் ஒரு கட்சியை நடத்தி அந்த கட்சிக்காக அங்கீகாரம் தேடி தேடி தங்களை தொலைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சி நடத்த ஏகோபித்த மக்கள் ஆதரவு மட்டும் அல்லாது பணம் வேண்டும், ஆள் பலம் வேண்டும், மிக மிக முக்கியமாக அடிமைகள் வேண்டும். இப்படி விசுவாசிகள் எனும் கொத்தடிமைகள் இல்லாத பட்சத்தில் ஒரு கட்சியானது சர்வ வல்லமை பொருந்தியதாக ஆகாது. இதையெல்லாம் தயார் செய்ய மனோதிடம் வேண்டும். எம்ஜி ஆர் செய்து காட்டினார், ஜெயலலிதா அதை பின்பற்றுகிறார். ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவின் நிலை ஒரு கேள்விக்குறிதான். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன. 

தமிழகத்தில் ஓரளவுக்கு எல்லாமே தன்னிறைவு அடைந்ததாக இருக்கிறது. மின்சாரம் இல்லை என்றாலும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி கொள்ளும் மனப்பக்குவம் உண்டு. சகித்து கொள்ளும் மனோபாவம் அதிக அளவில் தமிழக மக்களிடம் உண்டு. இல்லையெனில் ஒரே மாதிரியான திரைப்படங்களை மீண்டும் மீண்டும் கண்டு ரசிப்பது எப்படி? மீண்டும் மீண்டும் அதே அரசியல் கட்சிகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுப்பது எப்படி? எனவே இங்கே தமிழகத்தில் ஒரு போராளி அவசியமில்லாமல் போகிறது. 

விஜய் நடித்த தலைவா எனும் திரைப்படத்தில் முதலும் கடைசியுமாய் 'Time to Lead' என்பது ஒரு அச்சுறுத்தலான விசயமாக தமிழக அரசுக்கு இருந்து இருக்குமா என்பது சந்தேகமே! ஆனால் படைப்பாளிகளை ஒடுக்க வேண்டிய அவசியம் என்ன! அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை கேவலப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்து இருக்கின்றன. அவை எல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த படத்திற்கு அப்படி என்ன ஒரு தடை. ஆந்திரா, கேரளா, வேறு நாடுகள் என இந்த திரைப்படம் திரையிடப்பட்டு இருக்கிறதே. பாவம் இரண்டு விஜய்கள். தமிழக மக்கள் ஒரு 'முற்பாதி பொழுபோக்கு' படத்தை முழுவதுமாக புறக்கணிக்க செய்துவிட்டார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

தலைவா எனும் திரைப்படத்தின் கதை ஒரு அரசியல் களத்தை சார்ந்தது. அது 'உடன் இருந்து குழி பறிப்போர்' வகையை சார்ந்தது. 'துரோகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கதை வடிவம் இது' மும்பையில் தொடங்கி மும்பையில் முடிகிறது. முதல் பாதி காதல் கலந்த நகைச்சுவை, இரண்டாம் பகுதி பழிவாங்கல் படலம். துப்பாக்கிகள் பெருகி போன இந்த புவியில் இன்னும் கத்திகளுக்கு கொண்டாட்டம் தான். 

கதாநாயகிகள் பொய் சொல்லும் பேர்வழிகள் என்பதை எப்போதுதான் தமிழ் சினிமா மாற்றி கொள்ளுமோ? சகிக்க முடியவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள்போன்றே ஆஸ்திரேலியாவில் கூட இருக்கத்தான் செய்கிறதாம். கடல் கடந்து வணிகம் திரட்ட சென்றவர்கள் 'கும்பலாக' காதலுக்கு அலைவது கேலி கூத்து. 

அடேங்கப்பா, ஆஸ்திரேலியாவில் ஒரு அரைகுறை ஒரு ஹோட்டல் நடத்தி அதன் மூலம் கதாநாயகன் மனம் மயக்கி, அவரது தந்தையை வசப்படுத்துவது எப்படிப்பட்ட 'கிரியேட்டிவ் மூவ்'! மங்காத்தா எனும் திரைப்படத்தில் அஜீத் தனது காதலி மற்றும் தந்தையை ஏமாற்றுவார். இந்த கதையில் வேசம் போட்டு விஜய் ஏமாற்றபடுவார். எல்லாம் சரிதான். விசயங்களை சொல்லும் விதம் தான் படைப்பாளிகளிடம் வேறுபடுகிறது. 

அண்ணா! அன்னா ஹசாரே! படத்தின் தொடக்கத்தில் பல தலைவர்கள் பெயர் வருகிறது, அதில் போராளிகள் எல்லாம் வருகிறார்கள்.  அவர்களது பெயர்களை படிக்கும்போதே உடலில் 'ஜிவ்வென' உணர்ச்சி மேலிடுகிறது. எப்படிப்பட்ட தலைவர்கள், எப்படிப்பட்ட போராளிகள் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த உயர்ந்த உள்ளங்கள் அவை, ஆனால் இப்போதைய தலைவர்கள் மக்களை ஒடுக்கவே தலை எடுக்கிறார்கள். 

விஜய், உங்களுக்குள் மக்களை வழி நடத்த வேண்டும் ஒரு எண்ணம் இருப்பின் அதற்குரிய உரிய முயற்சிகள் எடுத்தாக வேண்டும். படத்தில் காட்டியது போன்று நிஜ வாழ்வில் கூட சித்தப்பர்கள் எட்டப்பர்களாக இருப்பார்கள். எப்படி இருப்பினும் தலைவா எனும் பட்டம் பெரிய தலைவலிதான். 

அந்த தலைவலியை தாங்கி கொள்ளும் சக்தி இருப்பின் 'Time to Lead...'




Wednesday 14 August 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 6

இலகிமா, அணிமா, மகிமா, கரிமா, பிராப்தி, பிரகஷ்யம், இசித்வம், வசித்வம் என்பதாக இந்த எட்டு சித்திகள் எண்ணங்கள் பற்றிய ஒன்றுதான். 

இசித்வம் எனும் சித்தியானது இறந்தவர்களை பிறக்க வைக்க கூடிய தன்மையது என்றே சொல்லப்படுகிறது. இந்த சித்தியின் மூலம் மொத்த உலகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கூடிய வல்லமை கிட்டும் என்றே சொல்லப்படுகிறது. இது கூட ஒருவகையில் சாத்தியம் என்றே கருதலாம். ஒரு தலைவனுக்கு கட்டுப்படும் தொண்டர்கள் இருப்பதை போல எல்லோரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டவர்கள் மூலம் இது சாத்தியம். ஆனால் இந்த உலகம் அப்படி ஒரு வசீகர தன்மை உடைய மனிதரையோ, சித்தரையோ இதுவரை கண்டதில்லை என்பதுதான் உண்மை. அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்கு ஒவ்வொருவரும் ஒரு தெய்வம் என கொண்டாட வேண்டிய சூழல் இருக்கிறது என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி. தெய்வத்தன்மை உடைய சித்தி இது எனப்படுகிறது. 

வசித்வம் என்பது ஆளுமை, அதாவது பிற உயிரினங்கள், பிற கோள்கள் என இந்த பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தக் கூடிய ஆளுமை. அறிவியலும் இதைத்தான் செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. செயற்கை தனமாக செய்து விடுவது. விலங்கினங்கள், மனிதர்கள் என கட்டுபாட்டில் கொண்டு வந்து தனக்கு கட்டுப்பட கூடியவர்களாக மாற்றிவிடுவது. 

இத்தனை சித்திகள் எல்லாம் ஒரே ஒரு விசயத்தில் அடங்கி போக கூடியவை தான். எண்ணங்கள். சித்தர்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி இருப்பவர்களாகவே இருந்து வந்து இருக்கிறார்கள். மாந்திரீகர்கள் எனப்படும் மந்திரவாதிகள் செய்யும் கண்கட்டு வித்தை போன்றது அல்ல இந்த சித்திகள். இந்த மந்திரவாதிகள் கூட தங்களது எண்ணங்களால் மட்டுமே அனைத்தையும் கட்டுபாட்டில் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். இதில் எத்தனை உண்மை என்பது எனக்கு புரியாத ஒன்று தான். 

தண்ணீரில் நடக்ககூடிய மனிதன். இதற்கு எத்தனயோ காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் இவர் தண்ணீர் மீது நடந்தார் என்றே காட்டப்படுகிறது. ஆனாலும் இந்த சித்தர்கள் செய்த பல விசயங்கள் எப்படி விவாதத்திற்கு உரியதோ அதைப்போலவே இவரது செயல்களும் விவாதத்திற்கு உரியது என்றே ஒருவர் சொல்கிறார். அதாவது அனைவரும் மெய்மறந்து பார்த்து கொண்டிருப்பார்கள், அந்த வேளையில் வேறொரு விசயம் நடக்கும் என்றே சொல்லப்படுகிறது. 


இதனை நிரூபிக்கும் வகையில் ஒருவர் சொன்ன விசயம் இது. அதாவது எப்படி எல்லாம் மக்கள் ஏமாற்ற படுகிறார்கள் என்றே சொல்லப்படுகிறது. இவரது மந்திர ஜாலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதை கண்டு களித்து, இந்த திறமையை பாராட்டி செல்வது சரிதான், ஆனால் ஏமாற வேண்டிய நிர்பந்தம் எதுவும் இல்லை. ஐயோ ஏமாற்றுகிறார்கள் என கத்த வேண்டிய அவசியமும் இல்லை. அது மந்திரம், தந்திரம், மாயாஜாலம். அவ்வளவுதான். 


நம்மில் பலர் மந்திரவாதிகள் என தெரிந்து கூட, அவர்கள் செய்யும் மந்திரங்கள் தம்மை பாதிக்கும் என்கிற ஒரு மன பதட்ட நிலைக்கு சாமானியர்களை கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் உடலை பாதிக்கும் பொருள்களை இந்த மந்திரவாதிகள் சாப்பிட சொல்லி தந்துவிடுகிறார்கள். செய்வினை என்றெல்லாம் சொல்லி கிராமங்கள் அல்லோகலப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. 

நம்மிடம் இருக்கிறது சித்தி. அது நமது எண்ணங்களால் ஆனது சித்தி. இறைவன் மீது மனதை ஒருமுகப்படுத்தி நல்ல விசயங்களே நடக்கும், நல்ல விசயங்களை மட்டுமே செய்வோம் என்கிற உறுதிப்பாடு அவசியம். அனைவருக்கும் இறைவன் மீது பற்று வராது என்பதற்காக செய்யும் தொழிலே தெய்வம் என சொல்லி வைத்தார்கள். 

நமது செயலில், சிந்தனையில் எண்ணங்களை மேம்படுத்தி இவ்வுலகம் செழிப்புற வாழ்வோம். நன்றி வணக்கம். 

(முற்றும்)




Tuesday 13 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 17

''அத்தை  ரொம்ப நல்லா சமைச்சி இருந்தாங்க''

எனது கவனம் எல்லாம் காயத்ரியின் அக்காவின் செயல்பாட்டில் இருந்தது.

''முருகேசா, நான் சொல்றது காதுல வாங்கலையா''

''அம்மா எப்பவும் நல்லா சமைப்பாங்க''

எந்த ஒரு ஜீவனும் இல்லாமல் பேசி வைத்தேன். அதற்குள் அம்மா, பால் காய்ச்சி கொண்டு வந்தார்கள்.

நாங்கள் மூவரும் மாடிக்கு வந்தோம். சுபத்ராவிடம் சொல்வதா வேண்டாமா எனும் யோசனையுடன் காயத்ரி அக்கா விசயத்தை காயத்ரியின் அனுமதி இல்லாமல் சொல்லி முடித்தேன்.

''இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்சன்''

''சுபா, என்ன சொல்ற நீ''

''அவங்களுக்கு பிடிச்ச லைஃப் தேடிக்கிட்டாங்க, இதுல என்ன இருக்கு''

''ஒரு முறை இருக்கு சுபா''

''என்ன முறை''

''வாழ்க்கை முறை, நெறிமுறை''


''ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்து கொண்டு, தனது சந்ததிகளை பெருக்குவதில் மிகவும் குறியாக இருக்கும், அப்படிப்பட்ட உயிரினமே இந்த பூமியில் வாழ தகுந்த அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும். அதுமாதிரிதான், மனுசங்களும். தனக்கு ஏதாவது சாதகம் நடைபெறக் கூடியதா இருந்தா அதுபக்கம் தனது நிலையை வைத்து கொள்வார்கள். இப்படி வாழ்ந்து கொண்டிருந்தவங்க ஒரு சமூகமா அமைஞ்சப்போ, இந்த மாதிரி தனக்கு மட்டுமே சாதகமா நடந்து கொண்டிருந்ததை ஒரு சிலரால் சகிச்சிக்க முடியலை. அதனால கொண்டு வரப்பட்டதுதான் நெறிமுறைகள், மரியாதை, கலாச்சாரம் எல்லாமே. ஆனா பரிணாம விதிப்படி இது எல்லாம் சரியானதுதான்''

சுபத்ராவின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது, ஆனால் அதுதான் நிதர்சனமோ என எண்ண வைத்தது.

''சுபா, நீ சொல்றது சரிதான், ஆனா...''

''என்ன ஆனா...  இப்போ நீ காயூவை காதலிக்கிறே, நாளைக்கே நீ காயூவை விட்டுட்டு வேற பொண்ணோட வாழ மாட்டேன்னு எப்படி உன்னால உறுதியா சொல்ல முடியும். ஆனா அப்படி நடக்காது, நடக்க கூடாதுன்னு நீங்க இரண்டு பேருமே முடிவோட இப்போ இருப்பீங்க, அப்படிப்பட்ட நினைவுகளுக்கு இடையூறு வந்தா என்ன பண்ணுவீங்க, நீங்க இரண்டு பேரும் முயற்சி பண்ணுவீங்க, எந்த விசயம் டாமினேட் பண்ணுதோ அதுவே கடைசியில ஜெயிக்கும், உதாரணத்திற்கு என்னை உனக்கு ஒரு போட்டியானவளா காயூ இப்போ நினைச்சிட்டு கலங்கிட்டு இருப்பா''

இப்படி சுபத்ரா சொல்வாள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எனக்கு மனதில் எவரோ கடப்பாரை கொண்டு பெயர்ப்பது போன்று இருந்தது. காயத்ரியின் முகம் கூட சற்று மாறிப் போனது. திடீரென சுபத்ரா ஆங்கிலத்திற்கு மாறினாள்.

''This world is full of uncertainties, anything can happen to anyone at anytime. However the probability of that happening is very limited on that given occasion and on that given situation''

''ரொம்ப தத்துவம் எல்லாம் பேசற சுபா. நீ எத்தனை நாளைக்கு இந்த ஊருல இருக்க போற, நீ போன காரியம் என்ன ஆச்சு''

''முருகேசா,  என்ன பேச்சை மாத்துற. இதைத்தான் இப்போ சொன்னேன், உனக்கு ரொம்ப அசௌகரியமா இருக்குல. எது எப்ப வேணும்னாலும் நடக்கும், நடக்க வேண்டிய சந்தர்ப்பம் அமையனும், அமைச்சிகிரனும். இப்போ you feel me as a threatening to your relationship''

காயத்ரிக்கு கோபம் வந்து இருக்க வேண்டும்.

''சுபா, என்ன பேசுறீங்க நீங்க, உங்களுக்கு முருகேசுவை பிடிச்சி இருந்தா நேரடியா பேசுங்க, அதைவிட்டுட்டு சுத்தி வளைச்சி பேசறீங்க. நானே என்னோட அக்கா பண்ணினது பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கேன், நேரம் காலம் புரியாம பேசறீங்க''

''காயூ, ஆமா நான் முருகேசனை காதலிச்சேன், இன்னமும் காதலிக்கிறேன், அவன் மனசை மாத்துறேனா இல்லையா பாரு, இந்த ஊருலதான் இன்னும் ஒரு மாசம் இருப்பேன், தேவைப்பட்டா ஒரு வருசம் கூட இருப்பேன். என்ன நடக்குதுன்னு பாரு, வரேன் பை''

சுபத்ராவின் பேச்சு எனக்கு கனவில் நடந்தது போன்றே இருந்தது. அவ்வாறு பேசியவள்  வேகமாக கிளம்பினாள்.

''சுபா ஒரு நிமிசம் உட்கார், நீ என்ன பேசினனு தெரிஞ்சிதான் பேசினியா. படிக்கிற காலத்தில ஒரு நல்ல பிரண்டா பழகிட்டு இப்படி பேசற, அதுவும் காயூ முன்னால''

''ஏன், காயூ இல்லாதப்ப பேசி இருந்தா இனிச்சி இருக்குமா, ஆசை ஆசையா உனக்கு சோறு கொண்டு வருவேனே, உனக்கு ஒன்னுனா நான் ஓடி வருவேனே. என்னோட காதல் உனக்கு புரியலையா! I will take you away from her, this is for sure. Bye''

சுபத்ரா காயத்ரியின் அக்கா போனது போலவே வேகமாக கீழிறங்கி சென்றாள். நாங்களும் கீழிறங்கினோம். என் அம்மாவிடம் சென்று வருகிறேன் அத்தை என சொல்லிவிட்டு கிளம்பினாள். சிறிது நேரம் கழித்து என் அப்பா வந்தார். என் அப்பாவிடம், அம்மாவிடம் சுபத்ரா பற்றிய விசயத்தை சொல்லி வைத்தேன். அம்மாவிற்கு மிகவும் கோபமாக இருந்தது. அப்பா யோசனையோடு இருந்தார்.

''என்னப்பா பண்ணலாம்''

''என்கிட்டே கேட்டா எப்படி, நீங்க ரெண்டு பேரும் உறுதியா இருந்தா அவ என்ன பண்ண முடியும்''

''முருகேசு, நீ கவலைப்படாத, அவளோட காலை நான் ஓடிச்சி விடுறேன், அடுத்தவாட்டி வரட்டும், நல்ல பொண்ணுன்னு நினைச்சா இப்படியா பேசிட்டு போறா''

''அம்மா, கால் எல்லாம் ஒடிக்க வேண்டாம். அப்பா, காயத்ரியோட அக்கா வீட்டை விட்டு கிளம்பி போய்ட்டாங்க, ரங்கநாதன் வந்து கூப்பிட்டு போய்ட்டார், உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க''

''என்ன சொல்ற''

''ஆமா, இனிமே வரமாட்டாங்க, அப்படியே கல்யாணம் பண்ணி வாழ போறாங்க''

''என்னம்மா காயத்ரி இது எல்லாம்''

காயத்ரி அழத் தொடங்கினாள். அவளுக்கு எத்தனை வலிக்கும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

''நீ ஏன்மா அழற, அதுதான் சரின்னா நல்லா இருந்துட்டு போகட்டும், கல்யாண தேதி இடம் தெரிஞ்சா போயிட்டு வருவோம். நீ கவலைப்படாதம்மா''

அப்பா ஆறுதல் வார்த்தை சொன்னார். அம்மா காயத்ரியின் அருகில் வந்து அமர்ந்தார்கள்.

''இங்க பாரு காயத்ரி, நீ எதை நினைச்சியும் மனசை குழப்பிக்காத, உன்னை பத்திரமா பாத்துக்க வேண்டியது எங்களோட பொறுப்பு. இந்த வயசுல உனக்கு இத்தனை சோதனையா? கவலைபடாத  நாளைக்கு ரங்கநாதன் வீட்டுக்கு போவோம், உன் அக்காகிட்ட பேசுவோம். சந்தோசமா இருக்கட்டும், எப்ப இருந்தாலும் அந்த வீட்டுக்கு போகப் போற பொண்ணுதான''

காயத்ரி சற்று சமாதானம் அடைந்தது போன்றே தெரிந்தது. நானும் காயத்ரியிடம் உறுதி கொடுத்தேன். நான் காதலித்த ஒரே பெண் காயத்ரி மட்டுமே என்பதை சத்தியம் செய்தேன். இருப்பினும் சற்று பயம் அவளுக்குள் இருக்கத்தான் செய்தது. அதிகாலையில் காயத்ரியின் முகம் தனை பார்த்தபோது இரவெல்லாம் அழுது இருக்க கூடும் என்றே காட்டியது.

காலையில் நாங்கள் நால்வரும் ரங்கநாதன் வீட்டிற்கு போனோம். ரங்கநாதனின் அம்மாவிடம் பேசினோம். அவர்கள் காயத்ரியின் அக்கா அவர்களுடன் இருப்பதையே விரும்பினார்கள். காயத்ரியின் அக்கா தான் அவ்வாறு கிளம்பி வந்தமைக்கு வருத்தம் தெரிவித்தாள். திருமணத்திற்கு கட்டாயம் அழைக்கிறோம் என சொன்னார்கள். காயத்ரி, அவளின் அக்காவிடம் தனியாக சென்று பேசிக் கொண்டிருந்தாள். அப்போது சுபத்ரா அங்கே வந்தாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அத்தை என்றே ரங்கநாதனின் அம்மாவை அழைத்தாள். பேசினாள். தனியாக பேசிவிட்டு காயத்ரியும் அவளது அக்காவும் திரும்பி வந்தார்கள். காயத்ரிக்கு அங்கே சுபத்ராவை கண்டதும் அச்சத்துடன் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டு இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். வீட்டு வாசலை கடந்து கொண்டிருந்த போது, சுபத்ரா காயத்ரியிடம் வந்து சொன்னாள். எனக்கு மெல்லிதாக கேட்டது.

''உன்னோட அக்கா வாழ்க்கை என் கையில, ரொம்ப வசதியா போச்சு''

சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள். நாங்கள் நடக்க ஆரம்பித்தோம், காயத்ரியின் உள்ளம் நடுங்கியதை என் உள்ளம் நடுக்கத்துடன் கண்டது.

(தொடரும்)

Thursday 8 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 1

எனக்கு இப்போது பதினெட்டு வயது. கருகருவென கருத்த முடி போன்றே எனது கருத்த தேகம். கொழுப்பு இல்லாத தசை என சொல்லும்படியான உடல்வாகு. பளபளக்கும் கண்கள், கூரிய காதுகள். விவசாயம்தான் எனது தொழில். பெரிய நகரம் என்று சொல்லாவிட்டாலும், நகரத்து தொனியுடன் உள்ள ஊர்தான் என்னுடையது. தனித்தனியாக இருந்த கிராமங்கள் எல்லாம் இந்த இருபது வருடத்தில் ஒன்றாகிப் போனது. சிறுவயதில் இருந்தே இசை பற்றிய ஆர்வம் அதிகம் இருந்தது. எனது இசை குறித்த ஆர்வம் கண்டு இசை குறித்த புத்தகம் ஒன்றை எனக்கு ஆறு வயது இருக்கும்போது எங்கள் ஊர் டில்லி தாத்தா தந்தார். நான் ஐந்து வயதில் அவ்வளவு நன்றாக தமிழ் வாசிப்பேன் என்று அம்மா பெருமையாக சொல்வார். அவர் உயிரோடு, ஊரோடு இருந்து இருந்தால் எனக்கு இசையை கற்று தந்து இருந்திருப்பார். அந்த வாய்ப்பு கிட்டாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.

இப்போதெல்லாம் கூட என்னிடம்  நீ இந்த படத்தோட பாட்டு கேட்டியா, அந்த படத்தோட பாட்டு கேட்டியா என நண்பர்களின் அன்புத் தொல்லை என்னை இலகுவாக விடுவதில்லை. நான் சினிமா பாடல்கள் எல்லாம் கேட்பது இல்லை என்று சொன்னால் என்னை கேலி செய்வார்கள் என்று கருதியே நான் மனம் நிறைந்து அவர்களிடம் ஆமாம் கேட்டேன் என பொய் சொல்லி விடுவதுண்டு. பத்து வயதில் இருந்து இதுவே பழக்கம் ஆகிப் போனது. இசை என்பது இரைச்சல் சத்தம் போலவே கேட்டது எனக்கு. பாடல் பாடுபவர் காட்டு கத்தல் கத்துகிறார் என்றே எண்ணம் இருந்தது. எனக்கு எட்டு வயது இருக்கும்போது உன்னை லூசுன்னு ஊருல பேசிக்கிறாங்க என ஒரு அண்ணன் சொன்னபோது எனக்கு அன்று முதன் முதலில் கண்ணீர் வந்தது. ஒரு தாளம், ஸ்ருதி, ராகம் இல்லாம் என்ன பாடல், என்ன இசை என்றே நான் நினைத்துக் கொண்டேன், இன்னமும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சிறு வயதில் இருந்து நான் பார்த்தது என்னவெனில் எவரேனும் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதையும் மீறி, பேருந்தில் பயணம் செய்தாலோ அல்லது சாலையில் நடந்து செல்லும்போதோ, தேநீர் கடையில் தேநீர் பருகும்போதோ சினிமா பாடல்கள் வந்து எனது காதில் எனது அனுமதி இல்லாமல் நுழைந்து விடுகின்றன.  என்னமா மியூசிக் போட்டுருக்கான் பயபுள்ள என இசை மாமேதைகள் போன்றே ஒவ்வொரு நண்பரும் பேசிக்கொள்ள எனக்குள் 'குபுக்' என சிரித்து கொள்வதுண்டு. இசையை பற்றி என்ன கற்று கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்?

எனது பால்ய பருவத்தில் இருந்தே எனது வீட்டில் கூட என் அம்மா பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து வரும் பாட்டு கேட்காமல் சமைப்பதே இல்லை. எனக்கு கூட ஆராரோ பாடியே வெறும் தரையில் தூங்க வைத்ததாக பாட்டி முதற்கொண்டு கதை சொல்வார்கள். எனக்கு அந்த ஆராரோ எல்லாம் காதில் விழுந்ததாக நினைவில் இல்லை. அதைவிட  வயல் வரப்புகளுக்கு போனால் அங்கே வக்கணையாக பேசிக்கொண்டு ஏலேலோ ஐலசா என அலுப்பு தீர பாடிக் கொண்டதை கண்டது உண்டு, அதை நாட்டுப்புற பாடல் என்றே சொல்லி வைத்து இருந்தார்கள். ஆனால் அவை எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடித்தமானதாக இல்லை. நினைத்த நினைப்புக்கு இழுத்துக் கொண்டு பாடுவது என்ன பாடலா?

நிலா நிலா ஓடிவா, கை வீசம்மா கை வீசு தாண்டி பாபா பிளாக் சீப் என்றெல்லாம் பள்ளியில் படித்தபோது எரிச்சலாகவே இருந்தது. நீ எல்லாம் என்ன ஜென்மமோ என்றே அம்மா பலமுறை திட்டியதுண்டு. ஒரு நல்ல பாட்டு கேட்கமாட்டேன்கிற என்றே அலுத்து கொள்வார்கள். பாரதியார் பாட்டு  கூடவா உனக்கு பிடிக்கவில்லை என்றே அம்மா ஒருநாள் என்னை அடியடி என அடித்து விட்டார்கள். ஒருமுறை பூனை சட்டி உருட்டுவதில் இசை இருக்கிறது என அம்மா சொன்னபோது எங்கே என்ன தாளம் என சொல்லும்மா பார்க்கலாம் என்றே அம்மாவிடம் சண்டை போட்டது உண்டு. ஆனால் வீட்டில் இருந்த வறுமை காரணமாக பாடல் சொல்லித் தரும் பாட்டு ஆசிரியர் எவரும் சுற்று வட்டாரத்தில் இல்லை என்றே என் அம்மாவும் அப்பாவும் என்னை பாடல் கற்றுக் கொள்ள அனுமதி மறுத்து விட்டார்கள்.

ஊரில் நடக்கும் கல்யாணத்துக்கு என மேளம், நாதஸ்வரம் என வருபவர்களிடம் என்ன தாளத்தில் மேளம் இசைக்க இருக்கிறீர்கள், என்ன ராகத்தில் பாட இருக்கிறீர்கள் என கேட்டபோது இது பரம்பரை ஞானம், இதில் தாள கதி, ராகம் எல்லாம்  என்ன தேவை இருக்கிறது என்றே முறைத்து பார்ப்பார்கள். நாதஸ்வரம் வாசிக்க வருபவர்கள் வாசிப்பதை கேட்டு எனக்கு இருப்பு கொள்ளாது. 

பறை இசை என்றே எனது நண்பன் கருத்தபாண்டி ஒருமுறை அடிக்கும்போது என்ன தாளம் சொல்லு என்றே நான் கேட்க எனது கையில் குச்சிகள் கொடுத்து அடி தாளம் வரும் என்றான். அவனது அப்பாதான் யாரேனும் எங்கள் ஊரில் இறந்துவிட்டால் அவரது குழுவோடு வந்து பறை இசை அடிப்பார். என்ன நடை, என்ன தாளம் என்றே அவரிடம் ஒருமுறை கேட்டேன். என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு தெரியலைப்பா, பரம்பரையா அடிச்சிட்டு வரோம் என்றே சொல்லி விட்டார். அவரைப் போலவே கருத்தபாண்டியும். இப்படி நான் தாளம், ராகம் என்றெல்லாம் கேட்பதை கண்டு அம்மாவிடம் வந்து உன் வீட்டு பையனுக்கு புத்தி பேதலிச்சு போச்சோ என்றே சிலர் திட்டிவிட்டு போவார்கள். அம்மாவும் ஏன்டா இப்படி இருக்க என்றே கோபம் கொள்ளாத நாள் இல்லை.

அஞ்சாம் வகுப்பு வரை தான் என்னால் படிக்க முடிந்தது. அதற்கடுத்து படிக்க எனக்கு வாய்ப்பே அமையவில்லை என்பதை விட வறுமை என்னை வறுத்து எடுத்து விட்டது. காடு வேலைகள், வீட்டு வேலைகள் என எடுபிடியாகிப் போனேன். ஒரு நூலகம் செல்ல வேண்டும் என்றால் வேறொரு ஊருக்கு நான் ஒன்றரை மணி நேரம் நடந்து போனால் தான் உண்டு. எவரேனும் சைக்கிளில் சென்றால் தொத்திக் கொள்வேன். இந்த இருபது வருடங்களில்  நான் நூலகம் சென்ற தினங்கள் மிக மிக குறைவுதான். இசை பற்றிய புத்தகங்கள் தேடினால் ஒன்றுமே கிடைக்காது. அதன் காரணமாகவே எனக்கு ஆர்வம் குறைந்து போனது. மேலும் நிறைய வேலை இருக்கும், வேலை முடித்ததும் அலுப்பு வந்து ஒட்டிக் கொள்ளும்.

எப்போது பள்ளி செல்வதை நிறுத்தினேனோ அப்போதே எவரிடமும் தாளம், ராகம் பற்றி எல்லாம் கேட்பது இல்லை. ஒருமுறை காலண்டரில் இருந்த சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையை பார்த்து கண்கள் கலங்கி நின்றேன். 'எவர் ஒருவர் வீணையை கற்றுக் கொண்டு அதை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறார்களோ  அவர்களுக்கு மோட்சம் கிட்டும்' என்றே படித்து இருக்கிறேன். வீணை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன், மோட்சத்திற்காக அல்ல!

எனக்கு பதினைந்து வயது இருக்கும். ஒருமுறை நூலகத்தில் நாச்சியார் திருமொழி என ஒன்று படித்தேன். அதில் கனாக் கண்டேன் என நாச்சியார் எழுதியதை படித்தேன்.

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

நானும் அப்போது கனவில் மிதந்தேன். மத்தளம் எந்த தாளத்தில் கொட்டி இருப்பார்கள். எந்த நடையை பயன்படுத்தி இருப்பார்கள். சங்கு என்ன ஜதியில் ஒலி த்து இருக்கும், இதையெல்லாம் எதற்கு நாச்சியார் விவரிக்காமல் போனார் என்றே ஆதங்கப்பட்டேன். மந்திரங்கள் என்ன ராகத்தில் அமைந்து இருக்க கூடும், அதை எப்படி ஓதி இருப்பார்கள் என்றே அன்று யோசித்தேன்.

ஒருமுறை 'சுத்த கர்நாடகமா இருக்கானே உன் பையன்' என அம்மாவிடம் ராஜு மாமா சொன்னது எனக்கு வலித்தது. இத்தனை வருடங்கள் உழைத்ததில் அக்காக்களின் திருமண செலவுக்கே பணம் செலவழிந்தது. அம்மா, அப்பாவை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் எனும் கனவு அவர்களுக்கு வயதாக வயதாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போனது.

இன்று எப்படியும் எனது இசை பற்றிய கனவை அம்மாவிடம் பேச வேண்டும் என்றே முடிவு செய்தேன்.

''இப்போதான் வரியா இருடா காபி போட்டு வரேன்''

''அம்மா 'காபி' அப்படிங்கிறது ஒரு ராகம் தெரியுமாமா?''

அம்மா என்னை ஒரு முறை முறைத்துவிட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் பாலில்லாத காபி போட்டு வந்தார்கள்.

''அம்மா என் பேரு எதுக்கு ஆதி அப்படின்னு வச்சீங்க. ஆதி ஒரு தாள வகைம்மா''.

சட்டென சிந்தாமல் சிதறாமல் காபியை வைத்துவிட்டு என்னை முறைத்தார்கள்.

''என்ன தவம் செய்தனை யசோதா 
என்ன தவம் செய்தனை 
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மாவென்றழைக்க''

நான் முதன் முதலில் அம்மாவிடம் வரிகள் வாசித்தேன். முறைத்து பார்த்த அம்மா அப்படியே என் அருகில் அமர்ந்தார்கள்.

''நான் இசை கத்துக்கிறனும்மா''

அம்மாவிடம் கெஞ்சலாய் கேட்டேன்.

''யார் சொல்லித் தருவாடா''

''பரப்பிரம்மம்''

''யாருடா  அவரு?''

அம்மாவின் அந்த கேள்வி என்னுள் என்ன பதில் சொல்லிவிட உன்னால் முடியும் என்றே கேட்பது போலிருந்தது. பையில் இருந்த தாளினை எடுத்தேன். வாசித்தேன்.

''போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 
கங்காதர சங்கர கருணாகர 
மாமவ பவ சாஹர தாரக 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

நிர்குண பரம்ப்ரம்ஹ் ஸ்வரூப 
கமா கம பூத பிரபஞ்ச ரஹித 
நிஜ குஹ நிஹித நிதாந்த 
ஆனந்த அதிசய அக்ஷய லிங்கா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

திமித திமித திமி திமி கிட தக தோம் 
தோம் தோம் தரிகிட தரிகிட கிட தோம் 
மதங்க முனிவர வந்தித ஈசா 
சர்வ திகம்பர வேஷ்டித வேஷா 
நித்ய நிரஞ்சன ந்ருத்ய நடேசா 
ஈசா, சபேசா, சர்வேசா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ' 

வாசித்து முடித்ததும் அம்மாவின் முகத்தை பார்த்தேன். நான் வாசித்தது பாடியது போன்றே அம்மாவிற்கு இருந்து இருக்க வேண்டும்.

''நல்லா பாடுறடா, வரி ஒண்ணுமே விளங்கலியே. யாராவது பாட்டு சொல்லி கொடுக்கிறவங்க இருந்தா போ சேர்ந்துக்கோடா''

''நிசமாத்தான் சொல்றியாம்மா''

''ஆமாடா, உனக்கு பாட்டு எதுவுமே பிடிக்காதேடா, இப்போ எப்படிடா''

மீண்டும் ஒரு தாளை எடுத்தேன். வாசித்தேன்.

''உனையல்லால் வேறே கதி இல்லை அம்மா 
உலகெலாம் ஈன்ற அன்னை 
உன்னையல்லால் வேறே கதி இல்லை அம்மா''

''டேய் ஆதி, ரொம்ப நல்லாருக்குடா''

சந்தோசம் என்னில் பொங்கியது. அம்மா தந்த காபியை அருந்திவிட்டு கிளம்பினேன்.

'போ, சம்போ சிவசம்போ ஸ்வயம்போ''

இந்தியாவில் ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை என்ற பாரம்பரியமிக்க இசை உண்டு. இந்த கர்நாடக இசையை ஒரு சாரர் மட்டுமே கற்று கொள்ளும் அளவுக்கு தனிப்படுத்த பட்டது. பறை இசை அடிக்கும் கருத்தபாண்டியை கூப்பிட்டேன்.

''என் கூட வரியா''

''எங்கே''

''இசை கத்துகிருவோம்''

தப்பட்டையை எடுத்தான். அடித்தான்.

''இதைவிட என்ன கத்துக்கிரனும்''

''நிறைய இருக்கு, வா என் கூட''

''இரு சொல்லிட்டு வரேன்''

நானும் கருத்தபாண்டியும் ஒரு நகரம் நோக்கி விரைந்தோம். நான் வைத்து இருந்த ஐந்து பாடல் தாள்களில் ஒன்று மட்டும் காற்றில் பறந்து கொண்டிருந்தது. என்ன பாடல் உடைய தாளாக இருக்கும் என்றே பார்த்தேன். பறந்து கொண்டிருந்த தாளில் எழுதிய வரிகள் 

''உன்னைத் தேடி - இசையே 
 உன்னைத் தேடி தேடி 
உன்னை காணாமல் இளைத்தேன்'' 

இறைவனை மாற்றி இசை என்றே குறித்து வைத்தேன். 

(தொடரும்)

Wednesday 7 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 16

நான் ஒருவேளை காயத்ரியை சந்திக்காது போயிருந்தால் எவரை காதலித்து இருப்பேன், அல்லது எனக்குள் காதல் என்பதே வந்து இருக்காதோ என்றே எண்ணத் தோன்றியது.

காதல் எப்படி வரும்? காதல் எதற்கு வரும்? காதல் ஒரு கர்ம வினை என்றே மனதில் திட்டமிடும் அளவுக்கு தள்ளப்பட்டு இருந்தேன். மாலை சந்திக்கிறேன் என்று சொன்ன சுபத்ராவையும் காணவில்லை.  கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம், காயத்ரியிடம் எதுவும் அதிகம் பேசாமல் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிக்கு போனேன்.

கர்ம வினை என்பது உண்டு எனில் அதற்கான முற்பிறவியும், அடுத்து வரப்போகிற பிறவியும் இருந்துதான் தீர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இந்த கர்ம வினை எல்லாம் வெறும் கட்டுக்கதை என்ற எண்ணம் தோணியது.

மாடியில் அமர்ந்தோம், வானத்தை பார்த்தோம், நட்சத்திரங்கள் எண்ணினோம் என்றெல்லாம் மனம் ஓடவில்லை. காதல் கர்மவினையாக இருக்கக் கூடுமோ? அப்படியெனில் நான் சென்ற பிறவியில் காயத்ரியை காதலித்தேனா? இப்படி என்னுள் எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருந்தபோது காயத்ரி மாடிக்கு வந்தாள்.

''என்ன காலேஜுல இருந்து வந்த பிறகு எதுவும் பேசலையே முருகேசு''

''அதெல்லாம் ஒண்ணுமில்லை காயூ, காதல் கர்ம வினையா?''

''ஆமாம் காதல் கர்ம வினைதான்''

''என்ன காயூ சொல்ற''

''புராணங்கள் எல்லாம் படிக்கிறது இல்லையா?''

''கதை சொல்றியா?''

''பீஷ்மர் பத்தி தெரியுமா?''

''இப்போ என்ன அதுக்கு''

''காதல் ஒரு கர்ம வினை''

''காயூ, போரடிக்காதே''

''இந்த பீஷ்மர் தனது முற்பிறவியில் தனது காதல் மனைவிக்காக ஒரு பசுவை வசிஷ்டர் முனிவரிடம் இருந்து திருடினதால தனது அடுத்த பிறவியில் யார் மீதும் காதல் கொள்ளாத தன்மை உடையவரா இருப்பார் அப்படின்னு வசிஷ்டர் சாபம் விட்டுட்டார், இதுதான் அந்த பிறவியில் செய்த திருட்டு பாவத்திற்கு இவருக்கு அடுத்த பிறவியில் கிடைச்ச தண்டனை''

''ஒரு பசுவை திருடினதுக்கா இந்த சாபம்''

''ஆமா''

''ஆமா, காயூ, அப்படின்னா அந்த பசுவை திருடுறதுக்கு முற்பிறவியில் ஏதாவது செஞ்சி இருப்பாரோ''

நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள் காயத்ரி. நானும் எனது கேள்வியை மெச்சிக் கொண்டேன்.

''என்ன காயூ பதிலை காணோம், உன்னை நான் போன பிறவியில் காதலித்து இருப்பேனோ?''

''இறைவனுடைய அவதாரங்கள் எல்லாம் அப்படித்தான் சொல்றது, காதல் ஒரு கர்மவினைதான்''

''காயூ, என்னை நீ பார்க்காம இருந்து இருந்தா யாரை காதலிச்சி இருப்ப?''

''தெரியலை''

''காதலிச்சி இருந்திருப்பியா இல்லையா?''

''தெரியலை''

''சரி, என்கிட்டே அந்த கேள்வியை கேளு''

''நீ என்ன பண்ணி இருந்து இருப்ப''

''யாரையும் காதலிச்சி இருந்து இருக்க மாட்டேன் காயூ''

''முருகேசு...''

''காதல் கர்மவினையாகவே இருக்கட்டும், நீ மட்டுமே எனது காதலியா எல்லா பிறவியிலும் இருப்ப, அது நிச்சயம்''

''முருகேசு...''

காயத்ரியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதை கண்டு என் மனம் வாடியது.

''என் அப்பா கூட இப்படித்தான் என் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாருன்னு அம்மா சொல்லி சந்தோசப்படுவாங்க, ஆனா என்ன நடந்தது பாத்தியா. அது கர்மவினைதானு மனசை தேத்திக்கிறேன்''

காயத்ரியின் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். ஆனால் அவளது மனதில் ஏற்பட்ட காயத்தை துடைக்க முடியாது கலங்கினேன்.

''காயூ, கர்மவினை அப்படியெல்லாம் இனிமே பேச வேண்டாம், நமக்குள்ள ஒரு உறுதிப்பாடு இருந்தா எதுவும் நம்மை அசைக்க முடியாது, தைரியமா இரு''

''ம்ம்... சுபத்ராவை பாத்தீங்களா''

''இல்லை, வரேன்னு சொல்லிட்டு போனா ஆனா வரலை''

''உங்க வீடு அவளுக்கு தெரியுமா''

''ம்ம், தெரியும் ஆனா அடிக்கடி எல்லாம் வரமாட்டா''

பேசிக்கொண்டிருந்தபோது அம்மா என்னை கீழிருந்து அழைத்தது கேட்டது. நாங்கள் இருவரும் இறங்கி வந்து பார்க்கையில் சுபத்ரா வீட்டினுள் அமர்ந்து இருந்தாள்.

''சாரி லேட்டாயிருச்சி, பாக்கிறேன்னு சொன்னேன்ல, அதான் வந்துட்டேன்''

''காலையில வந்து இருக்கலாமே, அதுவும் எதுக்கு இந்த இருட்டு நேரத்தில, சரி சாப்பிட்டியா சுபா''

''இன்னும் இல்லை''

அம்மா உடனடியாக சுபத்ராவை வா வந்து சாப்பிடு என அழைத்து சென்றார். சுபத்ராவும் சாப்பிட்டு வந்து பேசுகிறேன் என எழுந்து சென்றாள். காயத்ரியின் அக்காவும் அப்போதுதான் வந்தார். வந்தவர், நேராக அம்மாவிடம் சென்று சிறிது நேரம் பேசியதை கண்டேன். பின்னர் எங்களிடம் வந்தார்.

''காயத்ரி, நானும்   அவரும் ஒரு வீடு பாத்து இருக்கோம், அவங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்க, அடுத்த வாரம் அங்க குடி இருக்க போறோம், இனிமே இப்படி நான் இங்க இருக்கிறது அவருக்கு பிடிக்கல''

அவசரம் அவசரமாக பேசிய காயத்ரியின் அக்காவின் வார்த்தைகள் என்னுள் ஊசியாக குத்தி தொலைத்தன. எனது பெற்றோர்கள் இவருக்காக எத்தனை சிரமம் பட்டு இருப்பார்கள். சில மாதங்கள் எனினும் இதுதானா முறை என்றே எண்ணத் தோன்றியது.

''அக்கா...''

இப்போதெல்லாம் காயத்ரியின் வார்த்தைகளில் அதிர்ச்சியே நிறைய தெரிந்து கொண்டிருந்தது. காயத்ரியின் அக்கா விறுவிறுவென மாடிக்குப் போனார். ஒரு பெட்டியுடன் கீழே வந்தார்.

''நான் கிளம்பறேன் காயத்ரி, மத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வந்து எடுத்துட்டு போறேன்''

''என்னக்கா...''

பதில் ஏதும் சொல்லாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

''அப்பா வரட்டும்''

''அப்பாகிட்ட நீ சொல்லிரு''

காயத்ரியின் அக்கா வீட்டு வாசலை தாண்டி சென்றபோது எனக்கு காதல் கர்மவினை என்றே கனத்தது. ரங்கநாதன் என்னை அறியாதவர் போல் காயத்ரியின் அக்காவை அழைத்துக் கொண்டு போனார். அது இன்னமும் அதிகமாக வலித்தது. காயத்ரி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

''சாப்பாடு சூப்பர்''

சுபத்ராவின் வார்த்தைகள் எனக்கு கேட்கவே இல்லை.

(தொடரும்)

Friday 26 July 2013

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 7

சாபம் விடுவது என்பது முனிவர்களின் ஒரு தலையாய கடனாக இருந்து வந்து இருக்கிறது. அதாவது சாபம் விட்டால் அது பலித்து விடும் எனும் ஒரு அதீத நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தததுடன் மட்டுமில்லாமல் அந்த சாபத்தை கூட மாற்றி அமைக்கும் வல்லமை உடையவர்களாகவே அவர்கள் சொல்லப்பட்டார்கள். ஒருவரது வாக்கு அத்தனை சக்தி வாய்ந்ததா? என்பதெல்லாம் பற்றி ஆராய்ச்சி அவசியம் இல்லை எனினும், ஒருவரது சொல் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்பது அனைவரும் ஓரளவு தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். 'வசவு பாடுதல்' எல்லாம் எதிர்வினைகளை அதிக அளவில் ஏற்படுத்தவல்லவை. கிராமங்களில் 'மண் வாரி தூற்றுதல்' 'காசு வெட்டி போடுதல்' 'செய்வினை செய்தல்' போன்ற காரியங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இப்படி நடக்கும், நடந்துவிடும் என்கிற நம்பிக்கையில் செய்யப்படுபவை. இப்படி செய்தால் அப்படி நடக்கும் எனும் ஒரு உணர்வு! எப்படி இந்த மனிதர்கள் முனிவர்கள், சித்தர்கள் பெரும் வல்லமை கொண்டவர்களாக மாறினார்கள்? அல்லது மாற்றம் கொண்டது போல் போற்றப்பட்டார்கள்?

இதுவரை எவரும் 'கல்லாக நீ கடவது' என சபித்து எவரும் கல்லாய் ஆனது கண்டில்லை. இந்த மனிதர்கள் எப்படி உருவானார்கள்? அல்லது எப்படி படைக்கப்பட்டார்கள்?

தற்போதைய மனிதர்கள் தோன்றிய வரலாறு கிட்டத்தட்ட 50000 ஆயிரம் வருடங்களில் இருந்து 100000 ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டுதான் என்று வரலாறு குறிக்கிறது. அதுவும் மனித வழித்தோன்றல்கள் 5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் மற்றொரு உயிரினத்தில் இருந்து வேறுபட்டு வந்துள்ளது என்றே கணக்கு சொல்லப்படுகிறது. இந்த பூமியானது கடந்த 3 பில்லியன் கோடி வருடங்கள் முதற்கொண்டு உயிரினங்கள் வாழ துணை புரிவதாகவும், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் முதற்கொண்டு 5 பில்லியன் ஆண்டுகள் வரை இந்த பூமி உயிரினங்கள் வாழ வழி செய்யும் என்றே குறித்து வைக்கிறார்கள். இப்போது எழுதபட்ட விசயத்தில் எதையும் துல்லியமாக வரையறுத்து சொல்ல இயலாத நிலை இருப்பதை அறியலாம்.

இந்த பூமியில் நடைபெறும் நிகழ்வுகள் அடிப்படையில் உயிரினங்கள் சில மில்லியன்கள் வரை இருப்பதாகவும், அவை மாற்றம் அடைந்து வேறொரு உயிரின வடிவில் தோன்றுவதாகவும் படிமங்களின் ஆராய்ச்சி சொல்கிறது. வருடம்தோறும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அழிவதாகவும், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றுவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவை பெரிய அளவில் உள்ள உயிரினங்கள் என சொல்ல இயலாது. சின்னசின்ன உயிரின மாற்றம் சாத்தியமே.

மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்? மனித இனம் அழியுமா? அப்படி அழியும் பட்சத்தில் வேறு எந்த உயிரினம் தோன்றும்?

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் போல எழுதி வைத்து இருக்கிறார்கள். அடுத்த பதிவில் அதைப் பார்க்கலாம்.

(தொடரும்)

Wednesday 17 July 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 15

என்னைப் பற்றியும் சுபத்ராவைப் பற்றியும் காயத்ரி என்ன நினைத்திருப்பாள் என்றே என் மனம் நினைக்கையில்

"ஹலோ ஐ ஆம் சுபத்ரா" என காயத்ரியின் கைகள் பிடித்து குலுக்கினாள்.

"ஹாய் ஐ ஆம் காயத்ரி"

''சுபா, நீ எப்படி இந்த ஊருக்கு, எப்போ வந்த'' என நான் குறுக்கிட்டேன். சுபா என்றே அவளை அழைத்து பழகிப் போனது.

''நேத்துதான் வந்தேன், பரிணாம ஆராய்ச்சிக்காக வந்து இருக்கேன்''

''என்ன கோர்ஸ் எடுத்துப் படிக்கிற''

''டெவெல்த்தோட ஸ்டாப், பரிணாமத்தில இண்டரெஸ்ட் அதான் அது எடுத்து தனியாப் படிக்கிறேன், சரி பிறகு வந்து பார்க்கிறேன், விவரமா பேசலாம், இப்போ ஒருத்தரை சந்திக்கப் போறேன், ஸீ யூ காயூ'' என அவள் கிளம்பி சென்றாள்

காயூ... நான் அழைப்பது போலவே அவளும் அழைத்து சென்றது எனக்கு பெருமையாக இருந்தது.

''காயூ, நீ சுபாவைப் பத்தி என்ன நினைக்கிற''

''உங்களுக்கு மிகவும் பொருத்தமானவ''

சில வேளைகளில் என்ன பேசுகிறோம் என்றே நமக்கு தெரியாமல் போய்விடுவது துரதிர்ஷ்டம் என நினைத்துக் கொண்டேன். காயத்ரி அவ்வாறு கூறியதும் நான் சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு பேசினேன்.

''ஆமா, என்னோட அலைவரிசை அவளுக்கு இருக்கு''

''அவளை ஏன் காதலிக்கலை''

''அது அந்த பருவம் வரலை''

''இப்போ காதலிக்கலாமே''

''உன்னை காதலிச்ச பிறகு வேறு யாரை நான் காதலிக்கனும்''

நான் சொன்ன இந்த வார்த்தைகளில் காயத்ரி வாயடைத்துப் போனாள். பொதுவாகவே ஆண் - பெண் இடையே ஈர்ப்பு என்பது சகஜமான ஒன்றுதான். ஒரு ஆண் பல பெண்களை காதலிப்பதும், ஒரு பெண் பல ஆண்களை காதலிப்பதும் என்பதெல்லாம் சரியே என்றே வெளித் தோற்றத்தில் தென்படும். ஆனால் அவை ஒருவகையான பாலின ஈர்ப்பு என்பது புரிந்தபாடில்லை. காதல் என்பதன் முழு அர்த்தம் கவனிக்கப்படவில்லை என்றே தோணியது.

''காயூ, நீ மனசை போட்டு உலப்பிக்காதே, சினிமாவுல வரமாதிரி முக்கோண காதல் எல்லாம் எனக்குள்ள வராது. ஒரு காதல் கதைன்னு வந்தாலே அதுல ஒரு முக்கோண காதல், அந்த பெண் இவனைக் காதலித்தாள், அவன் வேறு ஒருவளை காதலித்தான் அப்படின்னு சொல்றதுக்கு இது நிழல் இல்ல, நிஜம். என்னை நம்பு''

கல்லூரியின் வாசல் அடைந்து இருந்தோம். காயத்ரி எனது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு என் அப்பாவோட வாழ்க்கை என்னை ரொம்பவே பாதிச்சிருச்சி முருகேசா என கண்களில் கண்ணீர் மல்க  சொன்னாள்.

''காயூ, மனசு அப்படிங்கிறது நமக்கு கட்டுப்பட்ட ஒண்ணா இருக்கனும், மனசுக்கு நாம கட்டுபட்டவங்களா மாறக் கூடாது''

சொன்ன மாத்திரத்தில் எனக்கு புரியவில்லை.  மனதுக்கு கட்டுப்பட்டு இருப்பது, மனதை கட்டுப்படுத்துவது, இதில் என்ன வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றியது என புரியாமலே இருந்தது.

''சரி முருகேசா''

புரிந்தது போல சரி என சொல்கிறாளே என நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கல்லூரியில் இருக்கும் பொழுதில் பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க காதல் சற்றே வழிவிட்டு நிற்கும். எனக்குப் பிடிக்காத ஆசிரியரே பாடம் எடுத்தார். அவர் எடுத்த முதல் பாடம் மனம் பற்றியதுதான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

''Human mind is not an object, it is not located any particular part of the body''

வழக்கம்போல எனது அருகில் இருந்தவன் எழுந்து ''mind your language'' என்றான். மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அந்த ஆசிரியர் மிகவும் கோபத்துடன் ''why should I?, get out of the class'' என்றார்.

''சாரி சார், நீங்க சொன்னது எனக்குப் புரியலை, கொஞ்சம் தமிழுல சொல்றீங்களா''

''அப்படி கேட்க வேண்டியதுதானே, டிசிப்ளின் இல்லாத பசங்க எல்லாம் எதுக்குப் படிக்க வரனும், பன்னி மேய்க்க போகலாமே''

''பன்னி மேய்க்க கூட டிசிப்ளின் வேணும் சார், அதுவும் படிக்க சொல்லித் தரதுக்கு ரொம்ப டிசிப்ளின் வேணும் சார்''

''பாடம் நடத்துங்க சார், நீங்க இரண்டு பேரும் வெளில சண்டையை வைச்சிகோங்க'' என்றாள் வளர்மதி. மொத்த வகுப்பும் ஆமா சார் என்றது.

''This is what I call is human mind. It is not located any particular part of the body, it is everywhere. அதாவது மனம் எங்கும் வியாபித்து  இருக்கிறது. வளர்மதி சொன்னதும் நீங்க எல்லாரும் ஆமாம் சொன்னீங்க இல்லையா அதுதான் மனம். அது சுற்றுப்புற சூழல் மூலம் மாசும் அடையும், சுத்தமும் அடையும். Human mind is influenced by external stimulations; based on that, internal vibrations start to occur. It is very difficult to control internal vibrations once you have constant external stimulations or once external stimulations occurred very deeply, this start coming back again and again to create internal stimulations how clever you are!''

''யோவ் நீ என்னதான் சொல்ல வர''

இப்படி அருகில் இருந்தவன் சொல்வான் என்றே எவரும் எதிர்பார்க்கவில்லை. அவர் நடத்திய பாடம் எனக்கு பிடித்து இருந்தது. முதலில் பிடிக்காத ஆசிரியர் எனக்கு பிடித்தவராக தெரிந்தார். மொத்த வகுப்பும் நீ உட்கார் என அவனை நோக்கி சத்தம் போட்டது.

''என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு, நான் எது சொன்னாலும் உனக்கு நக்கலா இருக்கு, உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ வகுப்பு விட்டு வெளியே போ, புரியலைனா என்னனு மரியாதையா கேளு இப்படி அநாகரிமாக நடந்துகிறது நல்லதில்லை''

ஆசிரியர் பேசியது எனக்கு சரியாகவே பட்டது. சாரி கேட்டு உட்காருடா என அவனை இழுத்தேன்.

''I tried to see how you react to me Sir, when I said mind your language, you shouted at me and asked me to get out of the class and talked about discipline. That was an external stimulation which angered you. You talked about discipline. I said 'Teacher should have more discipline than others'. After you taught for a while, I have criticised your way of teaching that I did not understand, you reacted very differently now and you have shown some degree of dignity. How could an external stimulation have such an impact immediately, you should have some internal vibrations all the time on all matters, is that right?''

அவன் பேசி முடித்து அமர்ந்தபோது மொத்த வகுப்பும் கைதட்டி ஆரவாரம் செய்தது. ஆசிரியர் கைத்தட்டல்கள் சத்தம் ஓயும் வரை காத்து இருந்தார். 

''Does child have internal vibrations on all matters which is not exposed to or do you have internal vibrations which you are not exposed to or you haven't paid any attention to it?'' 

ஆசிரியரின் அந்த கேள்வி என்னை நிஜமாகவே உலுக்கியது. பக்கத்தில் இருந்தவன் எழுந்து சில  வார்த்தைகள்  சொல்லிவிட்டு அமர்ந்தான். 

''Worth looking at it''

''என்னடா சொல்ற'' என மெல்ல கேட்டேன். 

''நிறைய யோசிக்க வைச்சிட்டான்டா வாத்தி''

ஒரு விசயம் பிடிக்கும், பிடிக்காது காரணம் சொல்லலாம். காதலுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? என மனம் நினைத்தது. இந்த மனம்... கர்ம வினையா? மர்மம் தீர வேண்டினேன். 

(தொடரும்)


Monday 15 July 2013

உடலில் புகுதல்

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 6 

எல்லாவற்றிக்கும் ஒரு பிராப்தம் இருக்கனும். இந்த பிராப்தம் இல்லாத பட்சத்தில் எதுவுமே சாத்தியம் இல்லை என்பதுதான் மனிதர்கள் சொன்ன தத்துவம். 

'விதிப்படியே எல்லாம் நடக்கும்' என்பதுதான் இந்த உலகம்  கண்டு கொண்ட விசயம். விதி-மதி என்றெல்லாம் பிரித்து சொல்வார்கள். ஆனால் மதி கூட விதிக்கு உட்பட்டதுதான். 

'எல்லாம் தீர்மானத்தின் பேரில் தான் நடக்கிறது' என்று 1991ம் வருடம் எழுதியபோது நாம் தான் இதனை எழுதினோம் என்கிற இறுமாப்பு இருந்தது, ஆனால் இதனை ஐன்ஸ்டீனும் சொன்னார் என கேள்விப்பட்டபோது ஏராளமான மனிதர்கள் இதே கருத்தை ஒருவேளை கொண்டிருக்க கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

'கவலையை விடு, நடக்கிறதுதான் நடக்கும்' என சொல்லும் போதே கவலைப்படுதல் கூட ஒருவகை விதிப்பயன் என்றே நினைக்க வேண்டி வருகிறது. 

'ஆண்டவனின் பெயரால் இதனை செய்கிறோம் என்பதுவும், சாத்தானின் பெயரால் இதனை செய்கிறோம் என்பதுவும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லாம் விதியின் வினைச்செயல். 

அஷ்டமாசித்திகளில் இந்த பிராப்தி எனப்படும் சித்தியின் மூலம் எல்லாவற்றையும் அடையலாம், அதாவது விரும்பியவை எல்லாம் கைகூடும் என்கிறார்கள். தகிதகித்துக் கொண்டிருக்கும் வெப்பத்தில் கூட எவ்வித பாதிப்பும் இல்லாமல் நமது உடலை அடையச் செய்ய விரும்பினால் சாத்தியம் என்கிறது இந்த சித்தி. எதிர்காலம் அறிந்து கொள்வது, பிறர் உடலில் புகுந்து கொள்வது, அமானுஷ்ய செயல்பாடுகள் எல்லாமே சாத்தியம் என்கிறது இந்த சித்தி. அதெப்படி சாத்தியம் என்றால் அதற்கு பிராப்தம் வேணும். அந்த பிராப்தம் தான் இந்த பிராப்தி சித்தி. இது சரியான அபத்தம் என்றே எனக்குத் தோன்றுகிறது. 

திருமூலர் கதையை பலரும் அறிந்து கொண்டிருப்பார்கள். திருமூலரின் கதையை திரித்து கூறுவதில் பலரும் கில்லாடிகளாக இருந்து இருக்கிறார்கள். கதைச் சுருக்கம் இதுதான். மாடு மேய்க்கும் மூலன் மரணம் அடைகிறான். மாடுகள் அவனது இறந்த உடலை சுற்றி அழுகின்றன. இதை தனது பிராப்தி சத்தியால் அறிகிறார் சித்தர். மாடுகளின் அன்பைக் கண்டு தனது உடலை ஓரிடத்தில் மறைத்துவிட்டு மூலனின் உடலில் புகுகிறார் சித்தர். இது பிராப்தி எனும் சித்தியால் வந்தது. அவர் இனி திருமூலர். நதிமூலம், ரிசிமூலம் பார்க்காதே என்பார்கள். 

இந்த கதையில் எண்ணற்ற கேள்விகள் எனக்குள் இருந்தாலும் அது எல்லாம் அவசியமற்ற ஒன்று என புறந்தள்ளி விடுவது சிறந்தது என்றே கருதி, இதே திருமூலர் கதையை இப்படித்தான் எழுத தோன்றுகிறது. 

''மூலன் என்பவன் மாடு மேய்க்கும் ஒரு சாதாரண மனிதன். அப்பொழுது சுந்தரர் எனும் சிந்தனையாளர், தெய்வபக்தியாளர் கயிலாயத்தில் இருந்து கிளம்பிய பயணத்தின் போது இவனை சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறார். அப்பொழது சுந்தரர், மூலனிடம் சிவன் பற்றி 'அன்பே சிவம்' போன்ற விசயங்கள் சொல்கிறார். மாடு மேய்த்தாலும் சரி, களை எடுத்தாலும் சரி மனதில் எழும் சிந்தனைகள் பாடல்களாக மாறுவது உண்டு. எத்தனையோ பேர்களிடம் சுந்தரர் விசயம் சொல்லி இருந்தாலும், இந்த மூலன் மிகவும் உன்னிப்பாக எல்லாவற்றையும் கேட்கிறான். 

மூலன், சுந்தரரின் சொற்பொழிவில் மயங்குகிறான், அவனது மனம் எல்லாம் சிவன் பற்றிய சிந்தனையிலும், மனிதர்களின் நலம் பற்றிய சிந்தனையிலும் புரள்கிறது. இப்பொழுது மூலன், சுந்தரரின் எண்ணத்திற்கு மாற்றப்படுகிறான்.
மூலன், தன்னுள் தான் ஒரு சாதாரண மனிதன் இல்லை, இவ்வுலகிற்கு சொல்ல நிறைய இருக்கிறது என உணர்கிறான். 

தனது மனைவியிடம் சென்று தான் சாதாரண மனிதன் இல்லை என்கிற விசயம் சொல்லி அதற்கு பின்னர் திருமந்திரம் போன்ற அருந்தகு விசயங்கள் பாடத் தொடங்குகிறான். மூலன், திருமூலர் ஆன வரலாறு இதுதான். மூலனுக்கு பிராப்தம் இருந்து இருக்கிறது. 

சுந்தரர், மூலனின் உடலில் எல்லாம் புகவில்லை. கறந்த பால் மடி புகா என்பதெல்லாம் அறிந்த விசயம், சிவவாக்கியர் குறிப்பிடுவது போல 'இறப்பன பிறப்பது இல்லை'. சுந்தரர், தனது எண்ணங்களை மூலனுக்குள் விதைத்தார். இப்படி எண்ணங்களின் ஆட்கொள்ளும் தன்மையது ஆண்டாளிடமும் இருந்தது. ஆண்டாள், ரங்கநாதனின் எண்ணங்களை தன்னுள் உருவாக்கிக் கொண்டாள். 

நமக்குள் நாம் உயரிய எண்ணங்களை உருவாக்கிட சொல்வதுதான் பிராப்தம். ஆமாம், எல்லாருக்கும் ஏனிந்த வாய்ப்பு இல்லை. அதுதான் விதிப்பயன். 

அஷ்டமாசித்திகள் எல்லாமே எண்ணங்களால் வயப்பட்டது. 'நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்பதெல்லாம் மிகவும் சாதாரணமாக சொல்லப்பட்ட வாக்கியம் இல்லை. நம்மில் பலர் பிறரின் சிந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கிறோம். 

ஹிப்னாடிசம், மூளை சலவை என்பதெல்லாம் இந்த பிராப்தி தான். தான் விரும்பியவற்றை அடைதல். அந்த விரும்பியவற்றை அடைய எந்த வழியும் சரிதான் என்கிற நிலைப்பாடு பேராபத்தில் முடிய வாய்ப்பு உண்டு. அதையெல்லாம் விதிப்பயன் என்றே சொல்லி செல்கிறார்கள். 

'சிந்தனைகள் பிராப்தி' 

சூரியனை தொட இயலுமா?

சுட்டெரித்துவிடும் 

அதே வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் உபகரணம் இருப்பின் சூரியனைத் தொடுவது எளிதுதான். அதுவே பிராப்தி. 

ஒன்றை பெற விரும்பினால், அதை அடைய அதற்குரிய தகுந்த முயற்சிகள் செய்திட காரியம் சித்தி கூடும் என்பார்கள். அந்த அஷ்த்மாசித்திகளில் ஒன்றுதான் இந்த பிராப்தி. விரும்பியவற்றை அடைதல். 

நல்லதை விரும்புவோம், நாடும், உலகுமும் செழிப்புற வாழ்வோம். 

Tuesday 9 July 2013

காதலும் பின்விளைவுகளும்

''முளச்சு  மூணு இலை விடலை அதுக்குள்ளே என்ன காதல் வேண்டி கிடக்கு''. சத்தம் போட்டார் அப்பா. 

''அந்த புள்ளையோட என்ன எழவுக்குடா சுத்துற''. கத்தினார் அம்மா. 

வைக்கோல் படைப்புக்கு பின்னால், மாந்தோப்புக்குள் என மறைந்து மறைந்து காதல் செய்தாலும் எப்படியாவது வத்தி வைத்து விடுகிறார்கள். ஊர்காரர்களின் கண்கள் எல்லாம் யார் யார் தப்பு செய்கிறார்கள் என விளக்கெண்ணையை கண்ணில் விட்டு தேடிக்கொள்வார்கள் போல. காதல் ஒரு தப்பான செயல் என்றே சொல்லிக் கொண்டுத்  திரிகிறார்கள். 

''எனக்கு அந்த புள்ளையைப் பிடிச்சிருக்கு''. தலைகுனிந்தே சொன்னேன். 

''செருப்பு பிஞ்சிரும். அந்த விளக்கமாத்தை எடு''. அப்பா மிரட்டினார். 

''இவன் நம்ம மானத்தை வாங்கவே வந்து பிறந்து இருக்கான், இவனை தலமுழுகினாத்தான் சரி வரும்''. அம்மா அலட்டாமல் சொன்னார். 

''வீட்டைப் பக்கம் வராதே, வெளியே போ நாயே''. அப்பாவின் வார்த்தைகள் நாகரிகம் அற்று தெரித்தது.

எனது அக்காவும், தங்கையும் என்னை பாவமாக பார்ப்பது போல் எனக்குத் தெரிந்தது. 

''இங்க பாருவே, இனி அந்த புள்ளையோட சுத்தின உன்னை கண்டதுண்டமா வெட்டி போட்டுடுவேன்'' அப்பாவின் தீவிர குரல் என்னை எதுவும் செய்யவில்லை. தலைகுனிந்தே நின்று இருந்தேன். 

''பேசுறானா பாரு, ரண்டு பொட்ட புள்ளைக வீட்டுல இருக்கு மறந்துட்டியாவே'' அம்மா ஆயாசபட்டார். 

''சத்தியம் பண்ணுவே, இல்லைன்னா இப்பவே நாங்க செத்துப் போயிருவோம் அதோ அவள்களையும் சேர்த்துட்டு'' அம்மாவும் அப்பாவும் ஒரு சேர சொன்னார்கள். 

''இனி மேல் அந்த புள்ளையோட நான் சுத்தமாட்டேன்'' சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். 

இந்த பூலோக சரித்திரம், காதலுக்கு தரித்திரம். இந்த காதல் முன்னால் எதுவும் எம்மாத்திரம்? காதல் பற்றி நிறைய நிறைய படித்தேன். காவியங்கள், கதைகள், கவிதைகள் காதலைப் போற்றி சிறப்பித்துக் கொண்டிருந்தன. சகட்டு மேனிக்கு வராத இந்த காதல் ஒரு சரித்திரமாகவே தெரிந்தது. இந்த காதலுக்கு முன்னால் எதுவும் எனது கண்களுக்குத் தெரியாத போது, நீ இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன், நான் இல்லாவிட்டால் நீ செத்துவிடுவாய் என்றெல்லாம் படித்து முடித்து இருந்தேன். பல விசயங்கள் படிக்க படிக்க மனம் பக்குவம் கொண்டது. 

காதலர்கள் எல்லாம் அவசர குடுக்கைகளாக இருந்து இருக்கிறார்கள் என புரிந்து போனது. காதலில் விவேகம் மிகவும் அவசியம் என்பதை ஒரு காவியம் சொல்லிய விதம்தனை படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன். 

சத்தியத்தை மீற வேண்டிய சூழலை உருவாக்கிட நினைத்தேன். இந்த காதலுக்கு முன்னால் அந்த சத்தியம் எல்லாம் எங்க ஊரு முனியாண்டி சாமிக்கு இடப்பட்ட சர்க்கரைப் பொங்கல் என கருதினேன். 

ஒரு நாள் இரவு அதுவும் அமாவசை இருட்டு. அந்த புள்ளையை சந்தித்தேன். 

''என் வீட்டுல சத்தியம் வாங்கிட்டாங்கடீ'' என்றேன். 

''என் வீட்டுலயும் அதே பிரச்சினைதான்'' என தேம்பி தேம்பி அழுதாள். 

''நான் ஒரு திட்டம் வைச்சிருக்கேன், அதுபடி நடப்போம்'' என்றேன். 

''என்ன திட்டம், ஓடிப்போறதா?'' என அழுகையின் ஊடே கேட்டாள். 

நான் படித்த காவியத்தை அவளிடம் மிகவும் ரகசியமாக ஆந்தைக்கு கூட கேட்டு விடாமல் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவளும் சம்மதம் சொன்னாள். 

இரு வீட்டார் சம்மதம் சொல்லி காதலுக்கு மரியாதை செய்வது, கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தையுடன் வந்து நின்றவுடன் ஏற்றுக்கொள்வது என்றெல்லாம் இவ்வுலகில் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்யும். இன்னும் என்ன என்ன காரணங்கள் காட்டியோ  காதல் எதிர்ப்புகளை நிறைய சம்பாதிக்கும். நொண்டி சாக்குக்கு எல்லாம் காதல் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கும். நாங்கள் இது போன்ற அந்த பிரமையில் இருந்து வெளியே வந்து இருந்தோம். 

எனது யோசனைப்படியே அவளும் நடந்து கொண்டாள். இப்போதெல்லாம் ஊர்க்காரர்கள் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தார்கள். நாங்கள் நேரில் பார்த்தாலும், பார்க்காதது போன்றே சென்றோம். எதுவும் பேசிக் கொள்வது இல்லை. 

காதலுக்கு மொழி அவசியமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள். காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது மிகவும் கடினம் என்றெல்லாம் சொல்லித் திரிவார்கள். ஆனால் பேசாமல், பார்க்காமல் காதலை எங்களுள் வளர்த்துக் கொண்டிருந்தோம். பேசாவிட்டால் ஓடிவிடக் கூடியதா காதல்? பார்க்காவிட்டால் பறந்து விடக்கூடியதா காதல்? 

பாசமாக வளர்த்த என்னை அந்த புள்ளையை காதலித்தேன் என்ற ஒரே ஒரு காரணம் காட்டி தங்களை மாய்த்து கொள்வது என முடிவு செய்த அம்மாவும், அப்பாவும். காதலித்தேன் என ஒரு ஒரே காரணம் காட்டி என்னை மகன் இல்லை என்று முடிவு செய்த அவர்களின் செயல்பாடுகள் விசித்திரமானவை தான்.  

ஊர்ப்பழி வந்து சேருமே எனும் ஒரு அச்சுறுத்தலும், மகள்களை எப்படி கரை சேர்ப்பது என்கிற கண்றாவி கவலையும் இந்த காதல் எல்லாம் அருவெருப்பான விசயமாகவே இன்னமும் அவர்களுக்கு தெரிகிறது. இதில் கள்ளக்காதல், நொள்ளைக் காதல் வேறு. இன்னும் சில காலங்களில் நான் சொன்ன ரகசியத்தின் படி  நானும் அந்த புள்ளையும் நடந்து கொண்டு இருப்பதால் எனது பெற்றோர்கள், அவளது பெற்றோர்கள், ஏன் எங்கள் ஊரே மாறிவிடும். 

ரகசியம் சொன்ன காவியத்தின் சிறுபகுதி  இதுதான். 

என் பெயர் ராம். அவள் பெயர் சீதா. என் குலமும் அவளது குலமும் ஒன்று. என் பணமும் அவளது பணமும் ஒன்று. என் உறவினரும், அவளது உறவினரும் ஒன்று. தராசில் நிற்க வைக்க நானும் அவளும் எல்லா விதத்திலும் சமம். இனி எங்களுள் காதல் வரின் அதற்கு எதிர்ப்பு இல்லை. 

ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கிய மறுகணம் அவளை மட்டுமே காதலிப்பது என்பது கூடாது. அவளை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அந்த பெண்ணும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். காதல் ஒருங்கிணைக்கும், உருக்குலைக்காது. 

காதலித்து திருமணம் புரிந்த பின்னரும் வரும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகள் எல்லாம் காதலை மிகவும் கொச்சைப்படுத்துகின்றன. இவர்கள் காதலித்துதானே கல்யாணம் பண்ணினார்கள் என்றே கேள்வி எழுப்பபடுகின்றன. காலத்திற்கேற்ப நமது ஆசைகள் நிராசைகள் காதலை கொச்சைப்படுத்த தயங்குவதே இல்லை.  காதல் எப்படி வரும் என்றே எவருக்கும் தெரிவதில்லை. காதல் எப்படி போகும் என்றே எவருக்கும் புரிவது இல்லை. 

ஆனால்...

காதல் புரிந்து கொள்ளும். காதல், புரியாவிட்டால் மட்டுமே கொல்லும் .

Sunday 7 July 2013

பரிணாமத்தில் ராமர் போட்ட கோடு

எனது மனநிலையும், எனது செயல்பாடுகளும் என்னை மிகவும் வாட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. எதற்காக நான் இப்படி இருக்கிறேன், எதற்காக இப்படி செயல்படுகிறேன் என்ற எண்ணம் என்னை சுற்றிக் கொண்டே வருகின்றன. என்னை எவரேனும் கட்டுப்பாட்டில் வைத்து இப்படித்தான் நான் வாழ வேண்டும் என தீர்மானித்து கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்களா என்றெல்லாம் என்னுள் தீவிர யோசனை சில நாட்களாய் வந்து கொண்டே இருக்கிறது. நானா இப்படி நடந்து கொள்வது என்கிற எண்ணம் என்னை உருக்குலைய செய்து கொண்டிருந்தது.

அப்போது 'பக்தா' எனும் அழைப்பு என்னை உலுக்கி விட்டது. என்னைத் தேடி எதற்கு இந்த சாமியார் வந்து தொலைய வேண்டும் என்ற எண்ணத்துடன் 'என்ன' என மட்டு மரியாதை இல்லாமல் கேட்டு வைத்தேன். 'நீ ஏதோ சஞ்சலத்தில் அல்லாடிக் கொண்டிருப்பது போன்று தெரிகிறதே' என்றார். 'யார் இந்த சாமியார், நான் சஞ்சலத்தில் உட்பட்டால் இவருக்கு என்ன' என எண்ணிக்கொண்டு 'உன்கிட்ட வந்து நான் ஏதாவது சொன்னேனா, பெரிசா கேட்க வந்துட்ட' என கோபத்துடன் அவரை நோக்கி சொன்னேன். 'நீ சொன்னால்தான் நான் வர வேண்டும் என்பது என்றில்லை, உனக்கு ஏதாவது நேரும் எனில் நான் அங்கே இருப்பது எனக்கு சௌகரியமான ஒன்று' என்றார் மேலும்.

'நா உன்கிட்ட பேச எதுவும் இல்லை, நீ பேசாம போயிரு' என கத்தினேன். சாமியார் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். 'போனு சொல்றேனில்ல' என மறுபடியும் உறுமினேன். சாமியார் வீட்டு வாசற்கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றார். 'போய் தொலையட்டும்' என்றே கோபம் தணிந்தேன்.

சிறிது நாழிகைக்குப் பின்னர் 'பக்தா' என்றே ஒரு அழைப்பு வந்து சேர்ந்தது. இம்முறை சாமியார் எதுவும் பேசாமல் நின்றார். 'என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்றேன். 'நீ சஞ்சலத்தில் உட்பட்டு இருப்பது எனக்கு சௌகரியமாக இல்லை, அதனால் ராமருக்கு அணில் செய்த சிறு உதவி போல் உனக்கு செய்யலாம் என்றே வந்தேன்' என்றார்.

'ராமர், அணில்' எனக்கு சாமியாரிடம் இதுகுறித்து கேட்க வேண்டும் என தோன்றியது. 'அணில் அப்படி என்ன ராமருக்கு உதவி செய்தது?' என்றேன். 'லங்கேஷ்வரம் செல்ல ராமர் பாலம் கட்டியபோது, அணில் ஒரு புறம் மண்ணில் புரண்டு, உடம்பில் ஒட்டிய மண்ணை அடுத்த பக்கத்தில் சென்று கொட்டி விட்டு மீண்டும் மறுபுறம் வந்து மண்ணை உடலில் ஒட்டிக்கொண்டு அடுத்த பக்கம் சென்று கொட்டியது. அணிலின் இந்த செய்கையை கண்டு ராமர் மனம் நெகிழ்ந்து அந்த அணிலின் முதுகில்  மூன்று விரல்களால் தடவி கொடுத்தபோது விழுந்த கோடுகள் தான் அந்த வெள்ளைக் கோடுகள்' என்றார் சாமியார்.

அணில் கதை கேட்டு நான் நெகிழ்ந்து போனேன். ஒரு சின்ன அணிலுக்கு எப்படி அப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்றே எனது மனம் நினைத்தது. 'என்ன யோசனை' என்றார் சாமியார். 'தன்னால் இயன்ற உதவியை அணில் நம்மால் என்ன ஆகும் என எண்ணாமல் செய்தது கண்டு மனம் பரவசமானது' என்றேன். 'எவருக்கேனும் துன்பம் நேர்கையில் அவருக்கு முடிந்த அளவு சிறு உதவி செய்தல் நலம்' என்றார் சாமியார். 'மனதில் எந்த சஞ்சலமும் இனி வேண்டாம்' என்றார்.

'ஆமாம் சாமி, இவ்வுலகில் எல்லா அணிலுக்குமா மூன்று கோடுகள் இருக்கின்றன' என்றேன். இந்த அணில் வம்சம் நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது. வெவ்வேறு வகையான அணில்கள் இவ்வுலகில் உண்டு. ஆனால் மூன்று கோடுகள் கொண்ட அணில்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே உண்டு. வட இந்தியாவில் ஐந்து கோடுகள் கொண்ட அணில்கள் வகையும் உண்டு. சில பறக்கும் அணில்கள் கூட இந்த புவியில் உண்டு; என்றார் சாமியார்.

'ஆமாம் சாமி, இந்த ராமாயணம் நடந்த கால கட்டத்திற்கு முன்னர் இந்த மூன்று கோடுகள் கொண்ட அணில்கள்  இந்தியாவில், இலங்கையில் இல்லையா?' என்றேன். 'மனம் சஞ்சலம் ஆகாது, வெள்ளை அணில்களும் தற்போதைய காலத்திலும் உண்டு' என்றார் சாமியார். பட்டென விழித்துக் கொண்டேன்.

இனிமேல் இப்படித்தான் இருக்க வேண்டும், என்னைப் பற்றி எனக்குள் உயர்வான எண்ணம் வேண்டும் என்றே உறுதி கொண்டேன். அணில் ராமருக்கு செய்தது சிறு உதவிதான், எனக்கு செய்தது பெரும் உதவி. கோடுகள் போட அணில்கள் தேடுகின்றேன்.






Thursday 20 June 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 5

இலகிமா, இதை காற்றை போல் மென்மையாதல் என்றே குறிப்பிடுகிறார்கள். வானத்தில் பறக்கும் சக்தியை இது கொடுக்கும் என்றும், நீரில் மீது நடக்கும் சக்தியை தரும் என்றே கருதப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருகில் ஒரு சித்தர் இப்படி வானில் பறந்ததாக சமீபத்தில் ஒரு கதை படித்தேன்.

ஒல்லியான உருவம் கொண்டவரை 'காற்று அடித்தால் உன்னை தூக்கிக் கொண்டு போய்விடும்' எனும் ஒரு நகைச்சுவை சொல்வழக்கு உண்டு. பறப்பவை எல்லாம் பறவைகள் என்றுதான் குறிப்பிடப்பட்டு வருகின்றன, ஆனால் மனிதன் பறக்கும் தன்மையை பெற்று இருக்கவில்லை. ஆனால் ஹனுமார் பறந்து சென்றே சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்ததாக புராணங்கள் குறித்து வைக்கிறது.

இவை எல்லாம் அமானுஷ்ய தன்மைகள் என்றும் சொல்லப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே எங்கே ஈர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அங்கே பறக்கும் தன்மையை மனிதன் பெற இயலும். உதாரணத்திற்கு நிலவை குறிப்பிடலாம். ஒரு பொருளின் நிறை எந்த இடத்திற்கு சென்றாலும் மாறாது, ஆனால் ஒரு பொருளின் எடை மாறும்.

ஒரு பொருளின் எடையானது அந்த இடத்தின் ஈர்ப்பு விசையின் தன்மையை பொறுத்தே அமைகின்றன. பூமியின் ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு பத்து நியூட்டன் என்றே கணக்கிட்டு வைத்து இருக்கிறார்கள். வியாழனில் இந்த ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு இருப்பத்தி நான்கு நியூட்டன். இப்படி ஒவ்வொரு கோள்களிலும் ஈர்ப்பு விசை மாறுபாடு அடைகிறது. இந்த ஈர்ப்பு விசை ஒரு பொருளின் நிறையை பொருத்து அமைகிறது எனலாம். ஒன்றில் ஈர்ப்பு அதிகமாக அதிகமாக பிரச்சினைகள் அதிகமாகும்.

ஒரு விசயத்தில் பற்று கொண்டு அதனிலே உழன்று மன நோயிற்கு உட்பட்டு பாதிப்புக்கு உள்ளாவோர் நிறையவே உண்டு. அங்கே 'மனம் பாரமாக இருக்கிறது' என பொருள். இப்பொழுது அவர்கள் மிகவும் கனமாக உணர்வார்கள். அந்த நபர்களின் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் எவரேனும் அவருக்கு வாய்த்தல் அவர்கள் மிகவும் இலகுவாக உணர்வார்கள். 'இப்போதான் மனசு ரொம்ப லேசா இருக்கு' இதுதான் இலகிமா.

மனசு லேசாக இருக்கும்போது காற்றில் பறப்பது போன்ற ஒரு உணர்வு வரும். மென்மையான தன்மை நம்மில் உருவாகும். இப்படி மென்மையான தன்மை வரும் பட்சத்தில் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்கும் எண்ணம் அடியோடு ஒழிந்து போகும். நல்லதையே நினைக்கும், நல்லதையே செய்ய துடிக்கும் எண்ணங்கள் மட்டுமே பீறிடும்.

இப்படிப்பட்ட உணர்வு இந்த உலகத்தில் அத்தனை எளிதாக நாம் அடைய இயலாது என்றாகி விட்டது. பிரச்சினைகளால் உந்தப்பட்டு எவரால் நமக்கு தொல்லை வருமோ, என்ன என்ன எழரைகள் வந்து சேருமோ எனும் அச்சத்தில் வாழ்க்கையை கழித்து கொண்டு இருக்கும் மானுடருக்கு இந்த மென்மையான தன்மை ஒரு அமானுஷ்ய தன்மையாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை.

இப்படிப்பட்ட மன அழுத்தத்தில் சிக்கிக் கொண்டு இருப்போருக்கு ஆறுதல் தரவே அகிலாண்டீஸ்வரி வரம் புரிகிறார். கோவிலுக்கு செல்வோம், நூலகங்களுக்கு செல்வோம். இறைவனிடம் மனம் விட்டு பேசுவோம். அவர் எதிர்பேச்சு எதுவும் பேசமாட்டார். எவரிடமும் சென்று நமது குறைகள் பற்றி கேலி பண்ண மாட்டார். ஆனால் ஒன்றே ஒன்று, இறைவனிடம் சொல்லிவிட்டோம், நமது குறைகள் தீர்ந்துவிட்டது என நாம் நம்பிக்கை கொள்வோம். மனம் லேசாகிவிடும். அப்படியே வாழப் பழகுவோம் .

பிரச்சினைகளில் மூழ்கி தவிப்போருக்கு வெளிவரவே இறைவன் எனும் பாடம் நமக்கு சொல்லப்பட்டது. ஆனால் இந்த இறைவனையும் பிரச்சினைக்கு உட்படுத்தி அசிங்கபடுத்தி பார்ப்பதில் நமக்கு நிகர் எவருமில்லை.

''ஏன்  ஒருமாதிரியா இருக்கே, என்னப்பா பிரச்சினை?''

''ஒண்ணுமில்லை''

''இதுதான் பிரச்சினையா?''

''இல்லை, அது வந்து...''

பிரச்சினைகளில் இருந்து வெளிவர வேண்டுமெனில் மனதை லேசாக மாற்ற முயற்சிப்போம். இலகிமா, சித்தர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அவசியம்.





Wednesday 19 June 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 14

காயத்ரி கர்மவினை என சொன்னதும் நான் பேசாமல் எழுந்து சென்று விட்டேன். எனக்கு இந்த கர்மவினை எல்லாம் சுத்த பொய் என்றே தோன்றியது. ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல்கள் கொண்ட உயிரினம் தோன்றிட என்ன அவசியம் வந்து சேர்ந்தது என்றே எண்ணினேன்.

மறுநாள் நானும் காயத்ரியும் கல்லூரிக்கு சென்ற வழியில் நான் எதுவும் பேசாமல் நடந்தேன். காயத்ரியும் எதுவும் பேசாமல் நடந்து வந்தாள். ஆனால் என்னால் பேசாமல் இருக்க இயலவில்லை.

''என்ன எதுவும் பேசாமல் வர''

''என்ன பேசனும்''

சில நேரங்களில் நமது மனம் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால் மிகவும் விந்தையாக இருக்கிறது. நூல் பல கற்பினும் உண்மை அறிவே மிகும் என்பது எனக்கு மிகவும் அதிசயம் தந்த வரிகள்.  படித்த முட்டாள்கள் எனும் அடைமொழி எனக்கு மிகவும் நேசிப்புக்குரியவை. இதையே ஒரு பொருளாக பேச நினைத்தேன்.

''நூல் பல கற்பினும் உண்மை அறிவே மிகும் தெரியுமா காயூ?''

''என்ன சொல்ல வர?''

''அந்த வரிக்கு அர்த்தம் தெரியுமானு கேட்டேன்''

''தெரியும், அதுக்கு இன்ன இப்போ?''

அவளது பிடி கொடுக்காத பேச்சில் எனக்கு பிடித்தம் இல்லை. படித்த முட்டாள்கள் என்றே சொல்லி வைத்தேன். அவளுக்கு கோபம் வந்து இருக்க வேண்டும்.

''என் அக்காவை பத்தி எதுவும் பேசனும்னா நேரடியா பேசு''

''காயூ, நான் எப்போ என்ன சொன்னேன்''

''படித்த முட்டாள்கள் சொன்ன''

''கர்ம வினையை கை காட்டுபவர்கள் படித்த முட்டாள்கள் என்றேன்''

''என்னையவா முட்டாள்னு சொல்ற''

வினையே வேண்டாம் என்று பேசாமல் இருந்திட நினைத்தேன். ஆனால் அவளோ மிகவும் கோபம் கொண்டாள்.

''எதுக்கு எடுத்தாலும் கர்ம வினை கர்ம வினைன்னு சொல்றியே, அதுக்கு என்ன அர்த்தம்?''

''அதுக்கு அது அது அப்படித்தான் நடக்கும்னு அர்த்தம், நீ சொன்னியே பல நூல் கற்பினும் உண்மை அறிவே மிகும் அப்படின்னு, அது கூட கர்மவினையின் செயல்பாடு. இப்படி இப்படி வாழனும்னு ஒரு வழிமுறை இருக்கறப்போ எதுக்கு மனுசங்க எல்லாம் தடுமாறனும், சொல்லு பார்க்கலாம்''

காயத்ரியின் மனதில் அவளது தந்தையின் செயல்பாடு பெரும் பாதிப்புதனை ஏற்படுத்தி இருந்ததை உறுதி படுத்தி கொள்ள முடிந்தது.

''அது வந்து....''

''முருகேசா, எப்படிடா இருக்க?'' வழியில் நான் கேட்ட சுபத்ராவின் வார்த்தைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. சுபத்ரா பத்தாம் வகுப்பு வரை என்னோடு படித்தவள். மெல்லிய உருவம். எப்போதும் கலகலப்பான பேச்சு. தினமும் தவறாமல் எனக்கும் சேர்த்து அவள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வருவாள். என்னை விட மிகவும் நன்றாகவே படிப்பாள்.

அவளது தந்தையின் வேலை மாற்றம் காரணமாக பத்தாம் வகுப்பு முடித்த கையோடு வேறு ஊரு சென்றுவிட்டார்கள். இரண்டு வருடங்கள் பின்னர் இன்றுதான் அவளை முதன் முதலில் பார்க்கிறேன். சுபத்ராவை பார்த்த மாத்திரத்தில் காயத்ரியை பார்த்தேன்.

(தொடரும்) 

Sunday 9 June 2013

கணினி தெரிந்த அர்ச்சகர் தேவை

லண்டன் ஸ்ரீமஹாலக்ஷ்மி (http://www.srimahalakshmitemple.net) ஆலயத்தில் கணினி (கம்ப்யூட்டர்) தெரிந்த அர்ச்சகருக்கு வேலை வாய்ப்பு.

இறைவனுக்குத் தொண்டு செய்ய விருப்பமுள்ள அர்ச்சகருக்கு (சிவாச்சாரியார் அல்லவது வைணவம்) கணினியில் போதிய அளவு அடிப்படை திறமை இருத்தல் வேண்டும் (word, excel, powerpoint, access). கோவிலில் பெறப்படும் நன்கொடைகள், பூஜை மற்றும் அர்ச்சனை போன்ற கணக்கு வழக்குகளை சரிப்பார்த்தல் அவசியம்.

பக்தர்களின் குறிப்புகளை கணினியில் சேமித்தல், கோவிலின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குளை ஒழுங்கு மற்றும் மேம்படுத்துதல் போன்ற அர்ச்சகர் பணியுடன் கூடிய இந்த கணினி சம்பந்தமான பணியில் விருப்பமுள்ளவர்கள் ஆலய நிர்வாகிகளை இந்த இ-மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும். info@srimahalakshmitemple.net

உங்கள் விண்ணப்பங்களை ஜூன் மாதம் 25ம் தேதிக்குள் அனுப்பவும்.

மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம், அதில் தங்கும் வசதி, உணவு வசதி, வரி கட்டுதல், இன்சூரன்ஸ்  பிடித்தம் போக முப்பத்து ஆறாயிரம் ரூபாய் சம்பளமாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.


Tuesday 26 March 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள்-13

காயத்ரியும் நானும் என்ன சொல்வது என தெரியாமல் ரங்கநாதன் வீட்டில் இருந்து கிளம்பினோம். சில விசயங்கள் மிகவும் விசித்திரமாகவே காட்சி அளிக்கிறது. கர்மவினை என்னை துரத்தியது.

''உங்க அக்கா பண்ணின காரியத்தை நீ பார்த்தியா''

''ம்ம்''

''இதெல்லாம் கர்ம வினையா?''

''ஆமா''

''இல்லை. இது தன்வினை. தன்வினை தன்னைச் சுடும். உங்க அக்கா எதுக்கு ரங்கநாதனை காதலிக்கனும், அப்புறம் வேணாம்னு சொல்லி நடிக்கனும். இதெல்லாம் ஒரு நல்ல பொண்ணு செய்ற காரியமா? அதுவும் நம்மகிட்ட எதுவும் சொல்லாம!''

''நீ கேட்டு இருக்கனும், நான் அவகிட்ட எதுவும் விவரமா கேட்டது இல்ல, அவளும் என்கிட்டே சொன்னது இல்ல''

''ஓஹோ அதுதான் கர்ம வினையா?''

''ஆமா''

எனக்கு காயத்ரி மீது இனம் புரியாத கவலை வந்து சேர்ந்தது. கர்ம வினை என்பதில் கருத்தாக இருக்கிறாளே என அச்சம் வந்து சேர்ந்தது. ஒருவேளை எங்களது காதல் கை கூடாமல் போனால் கர்ம வினை என சொல்லிவிடுவாளோ என அச்சம் வந்து சேர்ந்தது. வீட்டை வந்து சேர்ந்தபோது இருட்டி இருந்தது. காயத்ரியின் அக்காவிடம் நேராக சென்றேன்.

''என்ன சொன்னாங்க''

''அந்த பையனுக்கு வேற பொண்ணு பார்த்துட்டாங்களாம்''

காயத்ரியின் அக்காவின் முகம் ஏமாற்றத்தில் உறைந்து போனது போல இருந்தது.

''இல்ல அக்கா, நீயும் அவரும் காதலிக்கிறதா சொன்னாங்க. உன்னைத் தவிர வேற பொண்ணை அவர் கல்யாணம் பண்ண மாட்டாராம், பார்த்தா ரொம்ப நல்லவரா இருக்காருக்கா''

''காயூ நீ வேற வீட்டுக்குப் போனியா''

''சும்மா இரு முருகேசு, அக்கா வா தனியா பேசனும்''

அக்காவும் தங்கையுமாய் மாடிக்கு சென்றார்கள். நான் எனது அம்மாவிடம் சென்றேன். அப்பாவும் அமர்ந்து இருந்தார்.

''போன காரியம் என்ன ஆச்சு''

''அது எல்லாம் ஒன்னும் இல்லம்மா, எந்த பிரச்சினையும் இல்ல. கல்யாண செலவு வந்து இருக்கு''

''என்ன சொல்ற முருகேசு''

ரங்கநாதன் வீட்டில் நடந்த விசயத்தை விரிவாக சொன்னேன்.

''ரொம்ப சந்தோசமான விசயம் தானே''

''ஆமாம்மா, ஆனா காயத்ரி அக்கா தான்''

''தன்னோட குடும்ப நிலையை நினைச்சி அப்படி ஒரு முடிவுக்கு அவ வந்து இருப்பா''

அப்பாவின் ஆருடம் சரியாகவே எனக்குப் பட்டது. எனது தலையில் சுற்றிக் கொண்டு இருந்த கர்ம வினை என் முன்னாள் வந்து விழுந்தது. அப்பாவிடமும் அம்மாவிடமும் கர்ம வினை பற்றி சொன்னேன். அப்பா சிரித்துக் கொண்டே எழுந்தார். அம்மா முகத்தை சுளித்தார்.

''உங்க அம்மாவை கட்டிக்கிட்டது என் கர்ம வினை''

''ஆமா ஆமா, உங்களை கட்டிக்கிட்டது என் கர்மவினை''

''அம்மா, அப்பா. அப்படின்னா நான் உங்களுக்கு பிறந்தது கர்மவினையா''

வேகமாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தேன். பறந்து விரிந்த வானம். அதில் நட்சத்திரங்கள். ஒரு சின்ன நிலா. இவை எல்லாம் எந்த கர்ம வினையால் உருவானவை. இது ஒரு நிகழ்தகவா.

'Species are adopted to environmental conditions and these environmental conditions must favour to support life forms. Unless the environmental conditions support the life, there is little chance for anything to develop in that particular environment'

கர்ம வினையை தாண்டி கல்லூரியில் ஆசிரியர் சொன்ன வாசகம் தலையில் வந்து உட்கார்ந்தது.

''முருகேசு, சாப்பிட வாப்பா''

அம்மாவின் அழைப்பு சத்தம் கேட்டு உள்ளே சென்றேன். காயத்ரி, அவளது அக்கா, என் அப்பா சாப்பிட அமர்ந்து இருந்தார்கள். அப்பாதான் முதலில் ஆரம்பித்தார்.

''உங்க அப்பா பத்தி எல்லாம் கவலைப் படாதம்மா, நான் எல்லாம் அந்த பையன் கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன். இந்த வாரம் அவங்க உன்னை பொண்ணு பார்க்க வரட்டும். அந்த பையன் கிட்ட நானே சொல்றேன்''

அப்பாவின் பேச்சு முடிந்ததும் நான் சொன்னேன்.

''எதுக்கு எப்ப பார்த்தாலும் பொண்ணு பார்க்க வரனும், மாப்பிள்ளை பார்க்க போனா என்ன, அதனால இந்த வாரம் நாம போகலாம், காயூ என்ன சொல்ற''

''ம்ம், அக்காவுக்கு முழு சம்மதம்''

வரும் ஞாயிறு அன்று ரங்கநாதன் வீடு செல்வதாக முடிவு செய்தோம். நானும் காயத்ரியும் மாடிக்கு சென்றோம்.

''உன் அக்கா கிட்ட என்ன பேசின''

''கர்ம வினை''

(தொடரும்)

Friday 15 March 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 4

அடுத்தது கரிமா. இதை விண்டன்மை என்றும் உடலை மிகவும் பருமனாக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். எந்த ஒரு விசயத்தாலும் நமது உடலை அகற்ற இயலாதபடி தடிமனாக்குதல். இதெல்லாம் ஒரு விளையாட்டுத் தனமாகவே இருக்கிறது. மலைகளை, பாறைகளை எல்லாம் சுக்கு நூறாக்கிவிடும் தொழில்நுட்ப கால கட்டத்தில் உடலை தடிமனாக்கி எதன் மூலமும் அசைக்க இயலாத தன்மை என்பதெல்லாம் சற்று கடினமான விசயம் தான்.

பொதுவாகவே உறுதி என்றால் மலைகளை குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட உறுதியுடன் கூடிய உடல் பெறுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. நமது உடலில் மிகவும் முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்கள் கூட்டு தன்மையுடன் பல மூலக்கூறுகளை உருவாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட தனிமங்கள், மூலக்கூறுகள் எல்லாம் நாம் உண்ணும் உணவின் மூலம் பெற்றுக் கொள்கிறோம். திடகாத்திரமான உடல் என்பதெல்லாம் தவத்தால் வருவதில்லை. நாம் உண்ணும் உணவின் மூலமும், நாம் கடைபிடிக்கும் உடற்பயிற்சி மூலமும் வருகிறது.

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பது போல உடலின் வலு வெவ்வேறாக பார்க்கப்படுகிறது. தசைகள், நரம்புகள், எலும்புகள் என ஆன உடம்பு காற்று அடித்தால் பறந்து விடும் என இருந்தால் அதன் மூலம் பயன் என்ன? அதே வேளையில் உடலானது வெறும் தசைகளால் பருத்து இருப்பது கரிமா எனப்பட மாட்டாது. இப்படிப்பட்ட கரிமா தனை பரிசீலனை செய்ய மல்யுத்தம் போன்ற வித்தைகள் எல்லாம் வந்து சேர்ந்தன எனலாம்.

உடலில் உள்ள உறுப்பு தானங்கள் எல்லாம் இப்போது பெருகி விட்ட கால சூழலில் உடலை பேணி காப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. எதற்கும் அசைந்து கொடுக்க கூடாது என்றே குறிப்பிடப்படுகிறது. அதாவது மனம் இங்கே பெருமளவில் பேசப்படுகிறது. எந்த ஒரு தீய சக்திக்கும் அசைந்து கொடுக்காத மனது தான் கரிமா. மனது திடத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் மட்டுமே உடலின் திடத்தன்மை வந்து சேரும். எண்ணங்களை திடப்படுத்துதல். உறுதியான எண்ணங்கள். சஞ்சலமற்ற செயல்திறன் கொண்ட எண்ணங்கள்.

மன உறுதி இல்லாத பட்சத்தில் உடல் பலம் ஒரு பலனும் அளிப்பது இல்லை என உணர்த்த வந்ததே இந்த கரிமா. இப்படிபட்ட சித்தியை அனைவரும் பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மனது பலவித விசயங்களால் பாதிப்புக்கு உள்ளாகி உடல் உபாதைகள் அதிகம் ஆகிக் கொண்டே வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் உடல் எப்படி வளர்ப்பது?

உடலில் உள்ள செல்கள் தம்மை தாமே பெருக்கி கொண்டும், தங்களை தாங்களே புதுப்பித்துக் கொண்டும் வருகின்றன. ஒரு மனித வாழ்வில் இந்த செல்களில்  ஏற்படும் மாற்றமே இளமை முதுமை என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது. மார்கண்டேயன் பற்றி அறியாதவர் இல்லை. இளமையுடன், வளமையுடன், உறுதியுடன் வாழ்வது என்பது நாம் நமது எண்ணங்களை உறுதிபடுத்துவதில் தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட கரிமா சக்தி பெற்றுவிட்டால் நம்மை எவரும்அசைக்க இயலாது என்பதுதான் உண்மை. உடல் உறுதிக்கு மன உறுதி அவசியம். மன உறுதி கரிமா. அணிமா, மகிமா, கரிமா! எண்ணங்களினால் ஆனது அஷ்டமாசித்திகள்.

(தொடரும்)