Thursday 8 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 1

எனக்கு இப்போது பதினெட்டு வயது. கருகருவென கருத்த முடி போன்றே எனது கருத்த தேகம். கொழுப்பு இல்லாத தசை என சொல்லும்படியான உடல்வாகு. பளபளக்கும் கண்கள், கூரிய காதுகள். விவசாயம்தான் எனது தொழில். பெரிய நகரம் என்று சொல்லாவிட்டாலும், நகரத்து தொனியுடன் உள்ள ஊர்தான் என்னுடையது. தனித்தனியாக இருந்த கிராமங்கள் எல்லாம் இந்த இருபது வருடத்தில் ஒன்றாகிப் போனது. சிறுவயதில் இருந்தே இசை பற்றிய ஆர்வம் அதிகம் இருந்தது. எனது இசை குறித்த ஆர்வம் கண்டு இசை குறித்த புத்தகம் ஒன்றை எனக்கு ஆறு வயது இருக்கும்போது எங்கள் ஊர் டில்லி தாத்தா தந்தார். நான் ஐந்து வயதில் அவ்வளவு நன்றாக தமிழ் வாசிப்பேன் என்று அம்மா பெருமையாக சொல்வார். அவர் உயிரோடு, ஊரோடு இருந்து இருந்தால் எனக்கு இசையை கற்று தந்து இருந்திருப்பார். அந்த வாய்ப்பு கிட்டாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.

இப்போதெல்லாம் கூட என்னிடம்  நீ இந்த படத்தோட பாட்டு கேட்டியா, அந்த படத்தோட பாட்டு கேட்டியா என நண்பர்களின் அன்புத் தொல்லை என்னை இலகுவாக விடுவதில்லை. நான் சினிமா பாடல்கள் எல்லாம் கேட்பது இல்லை என்று சொன்னால் என்னை கேலி செய்வார்கள் என்று கருதியே நான் மனம் நிறைந்து அவர்களிடம் ஆமாம் கேட்டேன் என பொய் சொல்லி விடுவதுண்டு. பத்து வயதில் இருந்து இதுவே பழக்கம் ஆகிப் போனது. இசை என்பது இரைச்சல் சத்தம் போலவே கேட்டது எனக்கு. பாடல் பாடுபவர் காட்டு கத்தல் கத்துகிறார் என்றே எண்ணம் இருந்தது. எனக்கு எட்டு வயது இருக்கும்போது உன்னை லூசுன்னு ஊருல பேசிக்கிறாங்க என ஒரு அண்ணன் சொன்னபோது எனக்கு அன்று முதன் முதலில் கண்ணீர் வந்தது. ஒரு தாளம், ஸ்ருதி, ராகம் இல்லாம் என்ன பாடல், என்ன இசை என்றே நான் நினைத்துக் கொண்டேன், இன்னமும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சிறு வயதில் இருந்து நான் பார்த்தது என்னவெனில் எவரேனும் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதையும் மீறி, பேருந்தில் பயணம் செய்தாலோ அல்லது சாலையில் நடந்து செல்லும்போதோ, தேநீர் கடையில் தேநீர் பருகும்போதோ சினிமா பாடல்கள் வந்து எனது காதில் எனது அனுமதி இல்லாமல் நுழைந்து விடுகின்றன.  என்னமா மியூசிக் போட்டுருக்கான் பயபுள்ள என இசை மாமேதைகள் போன்றே ஒவ்வொரு நண்பரும் பேசிக்கொள்ள எனக்குள் 'குபுக்' என சிரித்து கொள்வதுண்டு. இசையை பற்றி என்ன கற்று கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்?

எனது பால்ய பருவத்தில் இருந்தே எனது வீட்டில் கூட என் அம்மா பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து வரும் பாட்டு கேட்காமல் சமைப்பதே இல்லை. எனக்கு கூட ஆராரோ பாடியே வெறும் தரையில் தூங்க வைத்ததாக பாட்டி முதற்கொண்டு கதை சொல்வார்கள். எனக்கு அந்த ஆராரோ எல்லாம் காதில் விழுந்ததாக நினைவில் இல்லை. அதைவிட  வயல் வரப்புகளுக்கு போனால் அங்கே வக்கணையாக பேசிக்கொண்டு ஏலேலோ ஐலசா என அலுப்பு தீர பாடிக் கொண்டதை கண்டது உண்டு, அதை நாட்டுப்புற பாடல் என்றே சொல்லி வைத்து இருந்தார்கள். ஆனால் அவை எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடித்தமானதாக இல்லை. நினைத்த நினைப்புக்கு இழுத்துக் கொண்டு பாடுவது என்ன பாடலா?

நிலா நிலா ஓடிவா, கை வீசம்மா கை வீசு தாண்டி பாபா பிளாக் சீப் என்றெல்லாம் பள்ளியில் படித்தபோது எரிச்சலாகவே இருந்தது. நீ எல்லாம் என்ன ஜென்மமோ என்றே அம்மா பலமுறை திட்டியதுண்டு. ஒரு நல்ல பாட்டு கேட்கமாட்டேன்கிற என்றே அலுத்து கொள்வார்கள். பாரதியார் பாட்டு  கூடவா உனக்கு பிடிக்கவில்லை என்றே அம்மா ஒருநாள் என்னை அடியடி என அடித்து விட்டார்கள். ஒருமுறை பூனை சட்டி உருட்டுவதில் இசை இருக்கிறது என அம்மா சொன்னபோது எங்கே என்ன தாளம் என சொல்லும்மா பார்க்கலாம் என்றே அம்மாவிடம் சண்டை போட்டது உண்டு. ஆனால் வீட்டில் இருந்த வறுமை காரணமாக பாடல் சொல்லித் தரும் பாட்டு ஆசிரியர் எவரும் சுற்று வட்டாரத்தில் இல்லை என்றே என் அம்மாவும் அப்பாவும் என்னை பாடல் கற்றுக் கொள்ள அனுமதி மறுத்து விட்டார்கள்.

ஊரில் நடக்கும் கல்யாணத்துக்கு என மேளம், நாதஸ்வரம் என வருபவர்களிடம் என்ன தாளத்தில் மேளம் இசைக்க இருக்கிறீர்கள், என்ன ராகத்தில் பாட இருக்கிறீர்கள் என கேட்டபோது இது பரம்பரை ஞானம், இதில் தாள கதி, ராகம் எல்லாம்  என்ன தேவை இருக்கிறது என்றே முறைத்து பார்ப்பார்கள். நாதஸ்வரம் வாசிக்க வருபவர்கள் வாசிப்பதை கேட்டு எனக்கு இருப்பு கொள்ளாது. 

பறை இசை என்றே எனது நண்பன் கருத்தபாண்டி ஒருமுறை அடிக்கும்போது என்ன தாளம் சொல்லு என்றே நான் கேட்க எனது கையில் குச்சிகள் கொடுத்து அடி தாளம் வரும் என்றான். அவனது அப்பாதான் யாரேனும் எங்கள் ஊரில் இறந்துவிட்டால் அவரது குழுவோடு வந்து பறை இசை அடிப்பார். என்ன நடை, என்ன தாளம் என்றே அவரிடம் ஒருமுறை கேட்டேன். என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு தெரியலைப்பா, பரம்பரையா அடிச்சிட்டு வரோம் என்றே சொல்லி விட்டார். அவரைப் போலவே கருத்தபாண்டியும். இப்படி நான் தாளம், ராகம் என்றெல்லாம் கேட்பதை கண்டு அம்மாவிடம் வந்து உன் வீட்டு பையனுக்கு புத்தி பேதலிச்சு போச்சோ என்றே சிலர் திட்டிவிட்டு போவார்கள். அம்மாவும் ஏன்டா இப்படி இருக்க என்றே கோபம் கொள்ளாத நாள் இல்லை.

அஞ்சாம் வகுப்பு வரை தான் என்னால் படிக்க முடிந்தது. அதற்கடுத்து படிக்க எனக்கு வாய்ப்பே அமையவில்லை என்பதை விட வறுமை என்னை வறுத்து எடுத்து விட்டது. காடு வேலைகள், வீட்டு வேலைகள் என எடுபிடியாகிப் போனேன். ஒரு நூலகம் செல்ல வேண்டும் என்றால் வேறொரு ஊருக்கு நான் ஒன்றரை மணி நேரம் நடந்து போனால் தான் உண்டு. எவரேனும் சைக்கிளில் சென்றால் தொத்திக் கொள்வேன். இந்த இருபது வருடங்களில்  நான் நூலகம் சென்ற தினங்கள் மிக மிக குறைவுதான். இசை பற்றிய புத்தகங்கள் தேடினால் ஒன்றுமே கிடைக்காது. அதன் காரணமாகவே எனக்கு ஆர்வம் குறைந்து போனது. மேலும் நிறைய வேலை இருக்கும், வேலை முடித்ததும் அலுப்பு வந்து ஒட்டிக் கொள்ளும்.

எப்போது பள்ளி செல்வதை நிறுத்தினேனோ அப்போதே எவரிடமும் தாளம், ராகம் பற்றி எல்லாம் கேட்பது இல்லை. ஒருமுறை காலண்டரில் இருந்த சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையை பார்த்து கண்கள் கலங்கி நின்றேன். 'எவர் ஒருவர் வீணையை கற்றுக் கொண்டு அதை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறார்களோ  அவர்களுக்கு மோட்சம் கிட்டும்' என்றே படித்து இருக்கிறேன். வீணை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன், மோட்சத்திற்காக அல்ல!

எனக்கு பதினைந்து வயது இருக்கும். ஒருமுறை நூலகத்தில் நாச்சியார் திருமொழி என ஒன்று படித்தேன். அதில் கனாக் கண்டேன் என நாச்சியார் எழுதியதை படித்தேன்.

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

நானும் அப்போது கனவில் மிதந்தேன். மத்தளம் எந்த தாளத்தில் கொட்டி இருப்பார்கள். எந்த நடையை பயன்படுத்தி இருப்பார்கள். சங்கு என்ன ஜதியில் ஒலி த்து இருக்கும், இதையெல்லாம் எதற்கு நாச்சியார் விவரிக்காமல் போனார் என்றே ஆதங்கப்பட்டேன். மந்திரங்கள் என்ன ராகத்தில் அமைந்து இருக்க கூடும், அதை எப்படி ஓதி இருப்பார்கள் என்றே அன்று யோசித்தேன்.

ஒருமுறை 'சுத்த கர்நாடகமா இருக்கானே உன் பையன்' என அம்மாவிடம் ராஜு மாமா சொன்னது எனக்கு வலித்தது. இத்தனை வருடங்கள் உழைத்ததில் அக்காக்களின் திருமண செலவுக்கே பணம் செலவழிந்தது. அம்மா, அப்பாவை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் எனும் கனவு அவர்களுக்கு வயதாக வயதாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போனது.

இன்று எப்படியும் எனது இசை பற்றிய கனவை அம்மாவிடம் பேச வேண்டும் என்றே முடிவு செய்தேன்.

''இப்போதான் வரியா இருடா காபி போட்டு வரேன்''

''அம்மா 'காபி' அப்படிங்கிறது ஒரு ராகம் தெரியுமாமா?''

அம்மா என்னை ஒரு முறை முறைத்துவிட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் பாலில்லாத காபி போட்டு வந்தார்கள்.

''அம்மா என் பேரு எதுக்கு ஆதி அப்படின்னு வச்சீங்க. ஆதி ஒரு தாள வகைம்மா''.

சட்டென சிந்தாமல் சிதறாமல் காபியை வைத்துவிட்டு என்னை முறைத்தார்கள்.

''என்ன தவம் செய்தனை யசோதா 
என்ன தவம் செய்தனை 
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மாவென்றழைக்க''

நான் முதன் முதலில் அம்மாவிடம் வரிகள் வாசித்தேன். முறைத்து பார்த்த அம்மா அப்படியே என் அருகில் அமர்ந்தார்கள்.

''நான் இசை கத்துக்கிறனும்மா''

அம்மாவிடம் கெஞ்சலாய் கேட்டேன்.

''யார் சொல்லித் தருவாடா''

''பரப்பிரம்மம்''

''யாருடா  அவரு?''

அம்மாவின் அந்த கேள்வி என்னுள் என்ன பதில் சொல்லிவிட உன்னால் முடியும் என்றே கேட்பது போலிருந்தது. பையில் இருந்த தாளினை எடுத்தேன். வாசித்தேன்.

''போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 
கங்காதர சங்கர கருணாகர 
மாமவ பவ சாஹர தாரக 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

நிர்குண பரம்ப்ரம்ஹ் ஸ்வரூப 
கமா கம பூத பிரபஞ்ச ரஹித 
நிஜ குஹ நிஹித நிதாந்த 
ஆனந்த அதிசய அக்ஷய லிங்கா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

திமித திமித திமி திமி கிட தக தோம் 
தோம் தோம் தரிகிட தரிகிட கிட தோம் 
மதங்க முனிவர வந்தித ஈசா 
சர்வ திகம்பர வேஷ்டித வேஷா 
நித்ய நிரஞ்சன ந்ருத்ய நடேசா 
ஈசா, சபேசா, சர்வேசா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ' 

வாசித்து முடித்ததும் அம்மாவின் முகத்தை பார்த்தேன். நான் வாசித்தது பாடியது போன்றே அம்மாவிற்கு இருந்து இருக்க வேண்டும்.

''நல்லா பாடுறடா, வரி ஒண்ணுமே விளங்கலியே. யாராவது பாட்டு சொல்லி கொடுக்கிறவங்க இருந்தா போ சேர்ந்துக்கோடா''

''நிசமாத்தான் சொல்றியாம்மா''

''ஆமாடா, உனக்கு பாட்டு எதுவுமே பிடிக்காதேடா, இப்போ எப்படிடா''

மீண்டும் ஒரு தாளை எடுத்தேன். வாசித்தேன்.

''உனையல்லால் வேறே கதி இல்லை அம்மா 
உலகெலாம் ஈன்ற அன்னை 
உன்னையல்லால் வேறே கதி இல்லை அம்மா''

''டேய் ஆதி, ரொம்ப நல்லாருக்குடா''

சந்தோசம் என்னில் பொங்கியது. அம்மா தந்த காபியை அருந்திவிட்டு கிளம்பினேன்.

'போ, சம்போ சிவசம்போ ஸ்வயம்போ''

இந்தியாவில் ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை என்ற பாரம்பரியமிக்க இசை உண்டு. இந்த கர்நாடக இசையை ஒரு சாரர் மட்டுமே கற்று கொள்ளும் அளவுக்கு தனிப்படுத்த பட்டது. பறை இசை அடிக்கும் கருத்தபாண்டியை கூப்பிட்டேன்.

''என் கூட வரியா''

''எங்கே''

''இசை கத்துகிருவோம்''

தப்பட்டையை எடுத்தான். அடித்தான்.

''இதைவிட என்ன கத்துக்கிரனும்''

''நிறைய இருக்கு, வா என் கூட''

''இரு சொல்லிட்டு வரேன்''

நானும் கருத்தபாண்டியும் ஒரு நகரம் நோக்கி விரைந்தோம். நான் வைத்து இருந்த ஐந்து பாடல் தாள்களில் ஒன்று மட்டும் காற்றில் பறந்து கொண்டிருந்தது. என்ன பாடல் உடைய தாளாக இருக்கும் என்றே பார்த்தேன். பறந்து கொண்டிருந்த தாளில் எழுதிய வரிகள் 

''உன்னைத் தேடி - இசையே 
 உன்னைத் தேடி தேடி 
உன்னை காணாமல் இளைத்தேன்'' 

இறைவனை மாற்றி இசை என்றே குறித்து வைத்தேன். 

(தொடரும்)

No comments: