Wednesday 7 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 16

நான் ஒருவேளை காயத்ரியை சந்திக்காது போயிருந்தால் எவரை காதலித்து இருப்பேன், அல்லது எனக்குள் காதல் என்பதே வந்து இருக்காதோ என்றே எண்ணத் தோன்றியது.

காதல் எப்படி வரும்? காதல் எதற்கு வரும்? காதல் ஒரு கர்ம வினை என்றே மனதில் திட்டமிடும் அளவுக்கு தள்ளப்பட்டு இருந்தேன். மாலை சந்திக்கிறேன் என்று சொன்ன சுபத்ராவையும் காணவில்லை.  கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம், காயத்ரியிடம் எதுவும் அதிகம் பேசாமல் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிக்கு போனேன்.

கர்ம வினை என்பது உண்டு எனில் அதற்கான முற்பிறவியும், அடுத்து வரப்போகிற பிறவியும் இருந்துதான் தீர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இந்த கர்ம வினை எல்லாம் வெறும் கட்டுக்கதை என்ற எண்ணம் தோணியது.

மாடியில் அமர்ந்தோம், வானத்தை பார்த்தோம், நட்சத்திரங்கள் எண்ணினோம் என்றெல்லாம் மனம் ஓடவில்லை. காதல் கர்மவினையாக இருக்கக் கூடுமோ? அப்படியெனில் நான் சென்ற பிறவியில் காயத்ரியை காதலித்தேனா? இப்படி என்னுள் எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருந்தபோது காயத்ரி மாடிக்கு வந்தாள்.

''என்ன காலேஜுல இருந்து வந்த பிறகு எதுவும் பேசலையே முருகேசு''

''அதெல்லாம் ஒண்ணுமில்லை காயூ, காதல் கர்ம வினையா?''

''ஆமாம் காதல் கர்ம வினைதான்''

''என்ன காயூ சொல்ற''

''புராணங்கள் எல்லாம் படிக்கிறது இல்லையா?''

''கதை சொல்றியா?''

''பீஷ்மர் பத்தி தெரியுமா?''

''இப்போ என்ன அதுக்கு''

''காதல் ஒரு கர்ம வினை''

''காயூ, போரடிக்காதே''

''இந்த பீஷ்மர் தனது முற்பிறவியில் தனது காதல் மனைவிக்காக ஒரு பசுவை வசிஷ்டர் முனிவரிடம் இருந்து திருடினதால தனது அடுத்த பிறவியில் யார் மீதும் காதல் கொள்ளாத தன்மை உடையவரா இருப்பார் அப்படின்னு வசிஷ்டர் சாபம் விட்டுட்டார், இதுதான் அந்த பிறவியில் செய்த திருட்டு பாவத்திற்கு இவருக்கு அடுத்த பிறவியில் கிடைச்ச தண்டனை''

''ஒரு பசுவை திருடினதுக்கா இந்த சாபம்''

''ஆமா''

''ஆமா, காயூ, அப்படின்னா அந்த பசுவை திருடுறதுக்கு முற்பிறவியில் ஏதாவது செஞ்சி இருப்பாரோ''

நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள் காயத்ரி. நானும் எனது கேள்வியை மெச்சிக் கொண்டேன்.

''என்ன காயூ பதிலை காணோம், உன்னை நான் போன பிறவியில் காதலித்து இருப்பேனோ?''

''இறைவனுடைய அவதாரங்கள் எல்லாம் அப்படித்தான் சொல்றது, காதல் ஒரு கர்மவினைதான்''

''காயூ, என்னை நீ பார்க்காம இருந்து இருந்தா யாரை காதலிச்சி இருப்ப?''

''தெரியலை''

''காதலிச்சி இருந்திருப்பியா இல்லையா?''

''தெரியலை''

''சரி, என்கிட்டே அந்த கேள்வியை கேளு''

''நீ என்ன பண்ணி இருந்து இருப்ப''

''யாரையும் காதலிச்சி இருந்து இருக்க மாட்டேன் காயூ''

''முருகேசு...''

''காதல் கர்மவினையாகவே இருக்கட்டும், நீ மட்டுமே எனது காதலியா எல்லா பிறவியிலும் இருப்ப, அது நிச்சயம்''

''முருகேசு...''

காயத்ரியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதை கண்டு என் மனம் வாடியது.

''என் அப்பா கூட இப்படித்தான் என் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாருன்னு அம்மா சொல்லி சந்தோசப்படுவாங்க, ஆனா என்ன நடந்தது பாத்தியா. அது கர்மவினைதானு மனசை தேத்திக்கிறேன்''

காயத்ரியின் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். ஆனால் அவளது மனதில் ஏற்பட்ட காயத்தை துடைக்க முடியாது கலங்கினேன்.

''காயூ, கர்மவினை அப்படியெல்லாம் இனிமே பேச வேண்டாம், நமக்குள்ள ஒரு உறுதிப்பாடு இருந்தா எதுவும் நம்மை அசைக்க முடியாது, தைரியமா இரு''

''ம்ம்... சுபத்ராவை பாத்தீங்களா''

''இல்லை, வரேன்னு சொல்லிட்டு போனா ஆனா வரலை''

''உங்க வீடு அவளுக்கு தெரியுமா''

''ம்ம், தெரியும் ஆனா அடிக்கடி எல்லாம் வரமாட்டா''

பேசிக்கொண்டிருந்தபோது அம்மா என்னை கீழிருந்து அழைத்தது கேட்டது. நாங்கள் இருவரும் இறங்கி வந்து பார்க்கையில் சுபத்ரா வீட்டினுள் அமர்ந்து இருந்தாள்.

''சாரி லேட்டாயிருச்சி, பாக்கிறேன்னு சொன்னேன்ல, அதான் வந்துட்டேன்''

''காலையில வந்து இருக்கலாமே, அதுவும் எதுக்கு இந்த இருட்டு நேரத்தில, சரி சாப்பிட்டியா சுபா''

''இன்னும் இல்லை''

அம்மா உடனடியாக சுபத்ராவை வா வந்து சாப்பிடு என அழைத்து சென்றார். சுபத்ராவும் சாப்பிட்டு வந்து பேசுகிறேன் என எழுந்து சென்றாள். காயத்ரியின் அக்காவும் அப்போதுதான் வந்தார். வந்தவர், நேராக அம்மாவிடம் சென்று சிறிது நேரம் பேசியதை கண்டேன். பின்னர் எங்களிடம் வந்தார்.

''காயத்ரி, நானும்   அவரும் ஒரு வீடு பாத்து இருக்கோம், அவங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்க, அடுத்த வாரம் அங்க குடி இருக்க போறோம், இனிமே இப்படி நான் இங்க இருக்கிறது அவருக்கு பிடிக்கல''

அவசரம் அவசரமாக பேசிய காயத்ரியின் அக்காவின் வார்த்தைகள் என்னுள் ஊசியாக குத்தி தொலைத்தன. எனது பெற்றோர்கள் இவருக்காக எத்தனை சிரமம் பட்டு இருப்பார்கள். சில மாதங்கள் எனினும் இதுதானா முறை என்றே எண்ணத் தோன்றியது.

''அக்கா...''

இப்போதெல்லாம் காயத்ரியின் வார்த்தைகளில் அதிர்ச்சியே நிறைய தெரிந்து கொண்டிருந்தது. காயத்ரியின் அக்கா விறுவிறுவென மாடிக்குப் போனார். ஒரு பெட்டியுடன் கீழே வந்தார்.

''நான் கிளம்பறேன் காயத்ரி, மத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வந்து எடுத்துட்டு போறேன்''

''என்னக்கா...''

பதில் ஏதும் சொல்லாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

''அப்பா வரட்டும்''

''அப்பாகிட்ட நீ சொல்லிரு''

காயத்ரியின் அக்கா வீட்டு வாசலை தாண்டி சென்றபோது எனக்கு காதல் கர்மவினை என்றே கனத்தது. ரங்கநாதன் என்னை அறியாதவர் போல் காயத்ரியின் அக்காவை அழைத்துக் கொண்டு போனார். அது இன்னமும் அதிகமாக வலித்தது. காயத்ரி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

''சாப்பாடு சூப்பர்''

சுபத்ராவின் வார்த்தைகள் எனக்கு கேட்கவே இல்லை.

(தொடரும்)

No comments: