Saturday 17 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 2

அங்கே சில இடங்களில் விசாரித்துவிட்டு ஒருவரின் வீட்டை அடைந்தோம். வாசற்கதவை தட்டினோம். அவரது வீட்டின் வெளியில் ஒரு திண்ணை இருந்தது. உயரமான நல்ல நிறத்துடன் ஒருவர் கதவை திறந்து நின்று கொண்டிருந்தார். நெற்றியில் நாமம் இட்டு இருந்தார்.

''வணக்கம்''

''யார் நீங்க?''

''கர்நாடக இசை கத்துக்க வந்து இருக்கோம்''

''என்ன சாதி?''

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வீட்டின் வெளியிலே நின்று கொண்டிருந்தோம். உள்ளே கூட அழைக்காமல் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறாரே என எனக்குள் வருத்தமாக இருந்தது. சங்கீதம் தெரிந்தவர் இங்கீதம் கூட தெரியாமல் இருக்கிறாரே என மனதில் புலம்பினேன். நான் பதில் சொல்லும் முன்னர் கருத்தபாண்டி பதில் சொல்லிவிட்டான்.

''நான் பறையர், இவன் தேவர்''

''கீழ் சாதிக்காரங்களுக்கு எல்லாம் நான் சங்கீதம் கத்து தரது இல்லை. இது பாரம்பரிய மிக்க இசை, பிராமணர்கள் மட்டுமே கத்துக்க வேண்டிய இசை. நீங்க போகலாம்''

''புரந்தரதாசர் அப்படி நினைக்கலையே''

''புரந்தரதாசர் பத்தி என்ன தெரியும் உனக்கு''

''தியாகராஜ பாகவதர் கூட இப்படி சொல்லலையே''

''அவங்க ரண்டு பேரு பேரை சொன்னா உங்களை உள்ள விட்டுருவேனா''

பட்டென கதவை சாத்தினார் அவர். கருத்தபாண்டி என்னை முறைத்து பார்த்தான்.

''கதவை உடைக்கட்டுமா''

''வேணாம் விட்டுரு''

''யாரு புரந்தரதாசர், யாரு தியாகராஜ பாகவதர்''

''கர்நாடக இசை மாமேதைகள், புரந்தரதாசர் கர்நாடக இசை தந்தை''

''ஓ...''

கருத்தபாண்டிக்கு இவர்களைத் தெரியாமல் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஏமாற்றத்துடன் அவரது வீட்டில் இருந்து கிளம்பினோம். இவர் மிகவும் சிறந்த கர்நாடக இசை ஆசிரியர் என சொன்னதால் மீண்டும் ஒருமுறை கதவை தட்டுவோம் என திரும்பினோம். இந்த முறை கதவை தட்டியதும், திறந்தார்.

''நாங்கள் வெளியில் இந்த திண்ணையில் இருந்து கற்று கொள்கிறோம்''

''நான் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லை''

அடுத்த நிமிடமே கருத்தபாண்டி அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் எறிந்தான். அலறலுடன் அவர் தலையை பிடித்தவாறு கீழே விழுந்தார். அவரது தலையில் ரத்தம் கொட்டியது. வீட்டில் எவரும் இல்லை என புரிந்தது. நான் எனது சட்டையை கிழித்து அவரது தலையில் கட்டினேன். வீட்டு கதவை சாத்திவிட்டு மயக்கத்தில் இருந்தவரை மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவில் தூக்கி கொண்டு சென்றோம். அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். கருத்தபாண்டியை திட்டி தீர்த்தேன். அவனோ இது போன்ற ஆட்களுக்கு இதுவே தண்டனை என்பது போல் பேசாமல் நின்று கொண்டிருந்தான். கண் விழித்து பார்த்தவரை சென்று பார்த்தோம்.

''எங்களை மன்னிச்சிருங்க ஐயா''

எங்கள் இருவரையே பார்த்து கொண்டிருந்தார். போ போ என கையை அசைத்தார்.

''கர்நாடக இசை...''

''நா ன் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்ல''

இனிமேல் அங்கே நின்று பிரயோசனம் இல்லை என கிளம்பினோம்.

''கொன்னு போட்டு இருக்கனும்''

''விடுறா''

''என்ன மனுசங்க''

''மண்ணில் வந்த உடம்பு, மண்ணில் போகும் உடம்பு, ஒருவர் எந்த சாதி என்றால் என்ன, ஒருவர் எந்த நிலையில் இருந்தால் என்ன, இசை எல்லாருக்கும் பொதுவானது''

''நான் பாட்டுக்கு பேசாம தப்பட்டையை தட்டிகிட்டே இருந்து இருப்பேன், நீ என்னவாச்சும் பண்ணு''

கருத்தபாண்டி என்னை தனியாக விட்டுவிட்டு கிளம்பி போனான். எத்தனை எத்தனையோ மனிதர்கள் கண்டேன். அவர்கள் எல்லாம் என்னை என்ன சாதி என்றே கேட்க வில்லை. உணவகத்தில் உணவு அருந்தினேன். அவர்கள் என்ன சாதி என நானும் கேட்கவில்லை. சாப்பிட்டு கொண்டு இருந்தபோது கர்நாடக இசை கற்று தருபவர் பற்றி எனக்கு எதிரில் அமர்ந்து இருந்தவரை கேட்டேன். தெரியாது என்றார். மேலும் சிலரிடம் விசாரித்து ஒரு முகவரி வாங்கி கொண்டு சென்றேன்.

வீட்டு வாசலை தட்டினேன். உயரமான ஒருவர் வாசற்கதவை திறந்தார். 

''நான் தேவர் சாதி, கர்நாடக இசை கத்துக்கிரனும்''

''புரந்தரதாசர் காலத்தில் இருந்தே இந்த சாதி கொடுமையை எதிர்த்து போராடி இருக்காங்க, இன்னுமா சாதி பத்தி பேசற, உள்ளே வா''

எனக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. வீட்டிற்குள் இருந்த திண்ணை ஒன்றில் அமர சொன்னார். வீட்டினுள் சென்று பழங்கள் கொண்டு வந்தார். அவரது துணைவியாரும், அவரது மகளும் உடன் வந்தார்கள். அவர்களுக்கு வணக்கம் சொன்னேன்.

''கர்நாடக இசை கத்துக்க வந்துருக்கான்''

புன்னகை புரிந்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

''இதுக்கு முன்னால எங்கேயாவது சங்கீதம் கத்து இருக்கியா''

''இல்லை''

''எத்தனை ராகம், எத்தனை தாளம் எல்லாம் தெரியுமா?''

''கொஞ்சம்''

''கர்நாடக சங்கீதம் பாடுறது, அது இதை வைச்சி தட்டுறது இல்லை''

''புல்லாங்குழல், மிருதங்கம், வீணை எல்லாம் உபயோகம் பண்ணுவாங்களே''

''ஆமா, ஆனா நீ பாட கத்துக்கிற போறியா, இல்லை இசைக்கருவிகளை இசைக்கப் போறியா''

''பாட கத்துக்கிறேன், அதோட இசைக்கருவிகளும்''

''என் பேரு ஆதிராஜன், உன் பேரு''

''ஆதி''

''இதோ பழங்கள் எடுத்து சாப்பிடு''

''இதே ஊருல ஒருத்தர் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லைன்னு சொன்னார்''

''யாரு, சீர்மலைவேதிகரா''

''பேரு கேட்கலை''

''உயரமா நாமம் போட்டுண்டு... அவா அப்படித்தான், சிலரை திருத்த முடியாது''

''இப்படி இருந்தா எப்படி கர்நாடக இசை வளரும்''

''இனிமே யாரு கர்நாடக இசைக்கு மாறப் போறா, கொஞ்ச பேரு என்கிட்டே படிக்க வராங்க. ஆனா என் பொண்ணு சினிமாவுல பாடப் போறா''

''அப்படின்னா இந்த இசை''

''தெரியலை, ஒடுக்கப்பட்ட மக்களுக்குன்னு எத்தனையோ புரட்சி வந்தது உண்டு,  ஒடுக்கப்பட்ட இசைக்கு இசை புரட்சி எதுவும் வரலை, வெஸ்டர்ன் இசை எல்லாம் வந்துருச்சு, எதோ அங்க அங்க இசை கச்சேரி நடத்துறா, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுல இருக்காங்க. நானே என் பொண்ண கர்நாடக இசையில இருக்க வைக்க முடியல''

''எனக்கு கத்து தாங்க, நான் நிறைய பேருக்கு கத்து தாரேன்''

''ம்ம்''

கற்று கொள்ள ஆரம்பித்தேன். கடினமாகவே இருந்தது. ஸ்ருதி, லயம் எல்லாம் சரி செய்ய வேண்டும் என சொன்னார். பணம் வேண்டாம் என மறுத்து விட்டார். மாலை நேரத்தில் நம்பிக்கையுடன் ஊர் வந்தேன். கருத்தபாண்டியை தேடி சென்றேன். அவன் முழுவதுமாக மறுத்துவிட்டான். அம்மாவும் அப்பாவும் எனக்காக காத்து இருந்தார்கள். அப்பாதான் சொன்னார்.

''ஆதி, ஒரு முக்கியமான சேதிடா. நம்ம ஊரு முதலாளி விவசாய நிலத்தை எல்லாம் பட்டா போட்டுட்டு வரார், நிறைய வீடு கட்ட போறாங்களாம்''

''அப்போ விவசாயம்...''

''எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்''

இருளாகிப் போனதைக் கண்டு மனம் விம்மியது.

(முற்றும்)

4 comments:

காரிகன் said...

இரண்டே பதிவுகள்தானா? இன்னும் எழுதியிருக்கலாமே?

Radhakrishnan said...

நிறையத் தொடர்கள் தொடங்கப்பட்டுவிட்டன, அவை முடிக்கப்படாமல் இருக்கின்றன, அதனால் இதை இப்போதைக்கு நிறுத்தி விட்டேன். மீண்டும் எழுதுவேன் எனும் நம்பிக்கை உண்டு.

காரிகன் said...

திரு ராதா கிருஷ்ணன்,
நீங்கள் சினிமா இசையை விட கர்நாடக இசையை அதிகம் விரும்புவதைப் போன்ற தோற்றம் வருகிறது.அதை நீங்கள் பதிவு செய்தும் இருக்கிறீர்கள்.உங்கள் இசை ரசனையை அறிந்துகொள்வதில் ஆவலாக இருக்கிறேன். தெளிவாக எழுதினால் நலம்.

Radhakrishnan said...

திரு காரிகன், எனக்கும் இசைக்கும் சம்பந்தமில்லை. பல நேரங்களில் எழுத்துகளில் எழுத்தாளன் இருப்பதில்லை. எனக்கு சினிமா இசை, கர்நாடக இசை எல்லாம் புரிவதும் இல்லை, புரியாமல் ரசிக்கிறேன். இருப்பினும் இதுகுறித்து ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக மிருதங்கம் கற்று கொண்டிருப்பினும், இன்னும் இசைக்குள் என்னால் நுழையமுடியவில்லை, இசை என்னை ஆக்கிரமிக்கவும் இல்லை. செல்லும் வழியில் கண்டு ரசிக்கும் அழகியல் காட்சியை போல, அவ்வப்போது இசை என்னை உரசிக் கொண்டு செல்கிறது.

இசையும் நானும்