Tuesday, 9 July 2013

காதலும் பின்விளைவுகளும்

''முளச்சு  மூணு இலை விடலை அதுக்குள்ளே என்ன காதல் வேண்டி கிடக்கு''. சத்தம் போட்டார் அப்பா. 

''அந்த புள்ளையோட என்ன எழவுக்குடா சுத்துற''. கத்தினார் அம்மா. 

வைக்கோல் படைப்புக்கு பின்னால், மாந்தோப்புக்குள் என மறைந்து மறைந்து காதல் செய்தாலும் எப்படியாவது வத்தி வைத்து விடுகிறார்கள். ஊர்காரர்களின் கண்கள் எல்லாம் யார் யார் தப்பு செய்கிறார்கள் என விளக்கெண்ணையை கண்ணில் விட்டு தேடிக்கொள்வார்கள் போல. காதல் ஒரு தப்பான செயல் என்றே சொல்லிக் கொண்டுத்  திரிகிறார்கள். 

''எனக்கு அந்த புள்ளையைப் பிடிச்சிருக்கு''. தலைகுனிந்தே சொன்னேன். 

''செருப்பு பிஞ்சிரும். அந்த விளக்கமாத்தை எடு''. அப்பா மிரட்டினார். 

''இவன் நம்ம மானத்தை வாங்கவே வந்து பிறந்து இருக்கான், இவனை தலமுழுகினாத்தான் சரி வரும்''. அம்மா அலட்டாமல் சொன்னார். 

''வீட்டைப் பக்கம் வராதே, வெளியே போ நாயே''. அப்பாவின் வார்த்தைகள் நாகரிகம் அற்று தெரித்தது.

எனது அக்காவும், தங்கையும் என்னை பாவமாக பார்ப்பது போல் எனக்குத் தெரிந்தது. 

''இங்க பாருவே, இனி அந்த புள்ளையோட சுத்தின உன்னை கண்டதுண்டமா வெட்டி போட்டுடுவேன்'' அப்பாவின் தீவிர குரல் என்னை எதுவும் செய்யவில்லை. தலைகுனிந்தே நின்று இருந்தேன். 

''பேசுறானா பாரு, ரண்டு பொட்ட புள்ளைக வீட்டுல இருக்கு மறந்துட்டியாவே'' அம்மா ஆயாசபட்டார். 

''சத்தியம் பண்ணுவே, இல்லைன்னா இப்பவே நாங்க செத்துப் போயிருவோம் அதோ அவள்களையும் சேர்த்துட்டு'' அம்மாவும் அப்பாவும் ஒரு சேர சொன்னார்கள். 

''இனி மேல் அந்த புள்ளையோட நான் சுத்தமாட்டேன்'' சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். 

இந்த பூலோக சரித்திரம், காதலுக்கு தரித்திரம். இந்த காதல் முன்னால் எதுவும் எம்மாத்திரம்? காதல் பற்றி நிறைய நிறைய படித்தேன். காவியங்கள், கதைகள், கவிதைகள் காதலைப் போற்றி சிறப்பித்துக் கொண்டிருந்தன. சகட்டு மேனிக்கு வராத இந்த காதல் ஒரு சரித்திரமாகவே தெரிந்தது. இந்த காதலுக்கு முன்னால் எதுவும் எனது கண்களுக்குத் தெரியாத போது, நீ இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன், நான் இல்லாவிட்டால் நீ செத்துவிடுவாய் என்றெல்லாம் படித்து முடித்து இருந்தேன். பல விசயங்கள் படிக்க படிக்க மனம் பக்குவம் கொண்டது. 

காதலர்கள் எல்லாம் அவசர குடுக்கைகளாக இருந்து இருக்கிறார்கள் என புரிந்து போனது. காதலில் விவேகம் மிகவும் அவசியம் என்பதை ஒரு காவியம் சொல்லிய விதம்தனை படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன். 

சத்தியத்தை மீற வேண்டிய சூழலை உருவாக்கிட நினைத்தேன். இந்த காதலுக்கு முன்னால் அந்த சத்தியம் எல்லாம் எங்க ஊரு முனியாண்டி சாமிக்கு இடப்பட்ட சர்க்கரைப் பொங்கல் என கருதினேன். 

ஒரு நாள் இரவு அதுவும் அமாவசை இருட்டு. அந்த புள்ளையை சந்தித்தேன். 

''என் வீட்டுல சத்தியம் வாங்கிட்டாங்கடீ'' என்றேன். 

''என் வீட்டுலயும் அதே பிரச்சினைதான்'' என தேம்பி தேம்பி அழுதாள். 

''நான் ஒரு திட்டம் வைச்சிருக்கேன், அதுபடி நடப்போம்'' என்றேன். 

''என்ன திட்டம், ஓடிப்போறதா?'' என அழுகையின் ஊடே கேட்டாள். 

நான் படித்த காவியத்தை அவளிடம் மிகவும் ரகசியமாக ஆந்தைக்கு கூட கேட்டு விடாமல் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவளும் சம்மதம் சொன்னாள். 

இரு வீட்டார் சம்மதம் சொல்லி காதலுக்கு மரியாதை செய்வது, கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தையுடன் வந்து நின்றவுடன் ஏற்றுக்கொள்வது என்றெல்லாம் இவ்வுலகில் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்யும். இன்னும் என்ன என்ன காரணங்கள் காட்டியோ  காதல் எதிர்ப்புகளை நிறைய சம்பாதிக்கும். நொண்டி சாக்குக்கு எல்லாம் காதல் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கும். நாங்கள் இது போன்ற அந்த பிரமையில் இருந்து வெளியே வந்து இருந்தோம். 

எனது யோசனைப்படியே அவளும் நடந்து கொண்டாள். இப்போதெல்லாம் ஊர்க்காரர்கள் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தார்கள். நாங்கள் நேரில் பார்த்தாலும், பார்க்காதது போன்றே சென்றோம். எதுவும் பேசிக் கொள்வது இல்லை. 

காதலுக்கு மொழி அவசியமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள். காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது மிகவும் கடினம் என்றெல்லாம் சொல்லித் திரிவார்கள். ஆனால் பேசாமல், பார்க்காமல் காதலை எங்களுள் வளர்த்துக் கொண்டிருந்தோம். பேசாவிட்டால் ஓடிவிடக் கூடியதா காதல்? பார்க்காவிட்டால் பறந்து விடக்கூடியதா காதல்? 

பாசமாக வளர்த்த என்னை அந்த புள்ளையை காதலித்தேன் என்ற ஒரே ஒரு காரணம் காட்டி தங்களை மாய்த்து கொள்வது என முடிவு செய்த அம்மாவும், அப்பாவும். காதலித்தேன் என ஒரு ஒரே காரணம் காட்டி என்னை மகன் இல்லை என்று முடிவு செய்த அவர்களின் செயல்பாடுகள் விசித்திரமானவை தான்.  

ஊர்ப்பழி வந்து சேருமே எனும் ஒரு அச்சுறுத்தலும், மகள்களை எப்படி கரை சேர்ப்பது என்கிற கண்றாவி கவலையும் இந்த காதல் எல்லாம் அருவெருப்பான விசயமாகவே இன்னமும் அவர்களுக்கு தெரிகிறது. இதில் கள்ளக்காதல், நொள்ளைக் காதல் வேறு. இன்னும் சில காலங்களில் நான் சொன்ன ரகசியத்தின் படி  நானும் அந்த புள்ளையும் நடந்து கொண்டு இருப்பதால் எனது பெற்றோர்கள், அவளது பெற்றோர்கள், ஏன் எங்கள் ஊரே மாறிவிடும். 

ரகசியம் சொன்ன காவியத்தின் சிறுபகுதி  இதுதான். 

என் பெயர் ராம். அவள் பெயர் சீதா. என் குலமும் அவளது குலமும் ஒன்று. என் பணமும் அவளது பணமும் ஒன்று. என் உறவினரும், அவளது உறவினரும் ஒன்று. தராசில் நிற்க வைக்க நானும் அவளும் எல்லா விதத்திலும் சமம். இனி எங்களுள் காதல் வரின் அதற்கு எதிர்ப்பு இல்லை. 

ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கிய மறுகணம் அவளை மட்டுமே காதலிப்பது என்பது கூடாது. அவளை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அந்த பெண்ணும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். காதல் ஒருங்கிணைக்கும், உருக்குலைக்காது. 

காதலித்து திருமணம் புரிந்த பின்னரும் வரும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகள் எல்லாம் காதலை மிகவும் கொச்சைப்படுத்துகின்றன. இவர்கள் காதலித்துதானே கல்யாணம் பண்ணினார்கள் என்றே கேள்வி எழுப்பபடுகின்றன. காலத்திற்கேற்ப நமது ஆசைகள் நிராசைகள் காதலை கொச்சைப்படுத்த தயங்குவதே இல்லை.  காதல் எப்படி வரும் என்றே எவருக்கும் தெரிவதில்லை. காதல் எப்படி போகும் என்றே எவருக்கும் புரிவது இல்லை. 

ஆனால்...

காதல் புரிந்து கொள்ளும். காதல், புரியாவிட்டால் மட்டுமே கொல்லும் .

4 comments:

sathishsangkavi.blogspot.com said...

//
காதலித்து திருமணம் புரிந்த பின்னரும் வரும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகள் எல்லாம் காதலை மிகவும் கொச்சைப்படுத்துகின்றன. இவர்கள் காதலித்துதானே கல்யாணம் பண்ணினார்கள் என்றே கேள்வி எழுப்பபடுகின்றன. //

உண்மைதான்... விட்டுக்கொடுக்க மறுக்கின்றனர் பல காதலர்கள்...

சிவாஜி said...

காதலின் சுகமான தருணங்களை காதலர்கள் அவ்வப்போது உணர்வதைப் போல, அந்த தருணங்களுக்காக அனேக கசப்புகளை அதீத கனவுகளாக புறந்தள்ளிவிட்டு, அந்த நினைவுகளையும் மீண்டும் அந்த தருணங்களின் எதிர்பார்ப்புகளையும் சுமந்து வாழ்க்கையில் கரை சேர அருமையான யோசனைதான்...

அன்பு துரை said...

அழகா சொல்லியிருக்கீங்க.. எனக்கு இந்த பதிவு ரொம்ப புடிச்சிருக்கு..

Radhakrishnan said...

சரிதான் சங்கவி.

யோசனைகளை எளிதாக செயல்படுத்த இயல்வதில்லை சிவாஜி.

காதல் அனைவருக்கும் பிடிக்கும் அன்பு துரை.