Wednesday 16 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் 23


23. பாமரத்தனம்

சடகோபன் தன்னை பாமரத்தி எனக் குறிப்பிட்டுச் சென்றது குறித்து நாச்சியாரிடம் பாமா கேட்டாள். நாச்சியாருக்கு எதுவும் புரியவில்லை. நம்மை புதிதாகப் பார்க்கும் ஒருவர் நம்மைக் குறிப்பிட்டச் சொல் சொல்லும்போது அவர் எதற்காகச் சொன்னார் என்பதை அவர் உண்மையாக உரைக்காதபோது நாம் அதன் உண்மைத்தன்மையை அறிய முடிவது இல்லை.

நாச்சியார் சடகோபனிடமே கேட்டு விடுவது நல்லது என எண்ணினார். இருவரும் கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வந்தார்கள். சடகோபனிடம் சென்று நாச்சியார்தான் கேட்டார்.

''பாமாவை நீங்க பாமரத்தினு சொன்னீங்களே, என்ன காரணம்''

''தான் யார் என்ன அப்படினு ஒரு தெளிவில்லாம இருக்காளே அதை வைச்சுத்தான் சொன்னேன்''

பாமாவுக்கு இப்போது ஒன்றும் புரியவில்லை. தான் யார், என்ன என அறியாத அளவுக்கா நான் இருக்கிறேன், தன்னைப் பற்றி அப்படி என்ன இவர் புரிந்து வைத்து இருக்கிறார் அதுவும் பார்த்து சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை என யோசித்தாள். 

''என்ன சொல்றீங்க, என்ன தெளிவு இல்லை பாமாகிட்ட''

''இவளுக்கும், இந்தக் கோவிலுக்கும் முன் பிறவி தொடர்பு இருக்கு, அதை இவ இன்னும் உணரலை. இதோ இந்த புளியமரம் இருக்கே அது பல ஆயிரம் ஆண்டுகளா இங்கதான் இருக்கு, அந்த மரம் சாதாரணமான ஒன்னு இல்லை, ஆனா சாதாரணமான ஒன்னாத்தான் மத்தவங்க கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் இவளும். நம்மைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்க நாமதான் முயற்சி பண்ணனும்''

பாமா இதை எல்லாம் கேட்டபடி அமைதியாகவே இருந்தாள்.

''உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்'' நாச்சியார் கேட்டார்.

சடகோபன் கலகலவென சிரித்தார்.

''நமக்குள்ள உள்ளுணர்வுனு ஒன்னு இருக்கு, அதைக் கேட்டா எல்லாம் தெரியும், அவளுக்கு உணரணும்னு தோனுறப்ப  உணரட்டும்''

சடகோபன் அவ்வாறு சொன்னதும் நாச்சியாருக்கு பாமாவை சந்தித்தபோது உண்டான ஒருவித உணர்வு நினைவில் வந்து போனது.

''நீங்க சொல்றமாதிரி எனக்கும் அவளைப் பார்க்கிறப்ப தோனிச்சி, எனக்கு உங்களை மாதிரி இப்படிச் சொல்லத் தோனலை''

''தோனாதும்மா'' எனச் சொல்லிவிட்டு பாமாவைப் பார்த்தார். பாமா பெரும் யோசனையில் இருந்து விடுபட்டவளாகவே இல்லை.

வாழ்வில் சில மனிதர்களை அவசியம் சந்திக்க வேண்டும். சில மனிதர்களை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சந்திக்கவே கூடாது. பாமாவுக்கு சடகோபன் வாழ்வில் சந்திக்க வேண்டிய நபராகவே தென்பட்டார், ஆனால் பாமா தான் ஒரு சாதாரணமான பெண் என்பதை மட்டுமே அறிவாள். தனக்குள் எவ்வித அபூர்வ சக்தி இல்லை என்பதையும் உணர்வாள். தனக்குத் தெரிந்தது எல்லாம் எல்லோரிடத்தில் பாசத்தோடும், அன்போடும் மட்டுமே இருப்பது, பட்டாம்பூச்சிகள் வளர்ப்பது. பெருமாளை காலை மாலை எனத் தவறாமல் வணங்கி பாசுரங்கள் பாடுவது. இதைத் தாண்டி அவளால் என்ன அவளைப் பற்றி உணர இயலும் என அவள் அறிந்திருக்கவில்லை.

பாமரத்தனம் என்பது ஒருவரின் தெளிவற்ற அறிவைக் குறிப்பிடுவதுதான். ஒரு விசயத்தைக் குறித்து தெளிந்த அறிவு இல்லாதபோதும் எதையும் அப்படியே நம்பி விடுவது. உண்மை எதுவென அறியாமல் உண்மை என நம்பிக்கைக் கொள்வது. ஒன்றைக் குறித்து முழுமையாகக் கற்றுக்கொள்வதால் அந்த விசயம் குறித்த இந்த பாமரத்தனம் அகன்றுவிடும்.

பாமரத்தனம் உடையவர்களை, பாமரன், பாமரள், பாமரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். பாமாவின் பாமரத்தன்மை என சடகோபன் நினைப்பது பாமாவின் இறை மீதான முழு உணர்வற்றத் தன்மையை. பாசுரங்கள் பாடுவதால் மட்டுமே ஒருவர் சிறந்த பக்தி கொண்டவராக ஆகி விட இயலாது. நமது வாழ்வில் நாம் நம்மை முழுமையாக உணர்வது கிடையாது. நமக்கு புற விசயங்கள் பெரிதாகப் படுகிறது, அக விசயங்களுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் தருவதும் இல்லை.

''நீங்க பள்ளிக்கூடம் கட்ட உதவி பண்றதே பெரிய விசயம், அதை மட்டும் பண்ணிக் கொடுத்துருங்க''

பாமா சடகோபனிடம் சொன்னதும் வானத்தைப் பார்த்தவர்

''அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம், நீ என்ன வேணும்னு கேட்டாலும் நான் பண்ணித்தர ஏற்பாடு பண்றேன். உனக்குனு நான் பண்ற காரியம் எல்லாம் பெரும் புண்ணியம். ஸ்ரீ ஆண்டாளுக்கு உண்டான விருப்பத்தை ஸ்ரீ இராமானுசர் நிறைவேத்தி வைக்கலையா அது போல உன் விருப்பம் எதுவோ அதை நான் நிறைவேத்தி வைக்கிறேன்''

பாமா அவரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினாள்.

''அதோ அந்த பெருமாள் அவரை மட்டுமே வணங்கு'' என்றவர் நாச்சியாரிடம்  ''உங்க ஊருக்கு அடுத்த புதன்கிழமை அன்னைக்கு விருதுநகர்ல இருந்து வந்து பார்ப்பாங்க, இடம் எல்லாம் காட்டுங்க மத்த விசயங்களை நான் அதுக்கடுத்து நேர்ல வந்து பார்க்கிறேன்''

சில மனிதர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தாங்கள் அறிந்தது போல நம்மால் சாத்தியமே அற்ற விசயங்களைக் கூட சொல்வார்கள். அவர்களுக்கு எப்படி இப்படியான விசயங்கள் தெரிகிறது என்பது வியப்புக்குரிய விசயங்களில் ஒன்று. மேலும் எவ்வித பலனும் எதிர்பாராத உதவி என்பது உலகில் அரிதான விசயம் ஆனாலும் அதைச் செய்யும் மனிதர்கள் உண்டு.

அன்று மாலையே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

''நான் பாமரத்தியாம்மா'' பாமா மிகவும் அப்பாவியாய் கேட்டாள்.

''நீ பாமரத்தி இல்லைம்மா, பட்டாம்பூச்சி. எல்லோரையும் மகிழ்விக்கிற பட்டாம்பூச்சி'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் நாச்சியார்.

பாமா புன்னகை புரிந்தாள்.

''நான் நானாகவே இருக்கேன்மா''

நாம் நாமாக இருப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் பலருக்கும் நாம் நாமாகவே இருப்பது இல்லை போன்றே தெரிகிறது.

(தொடரும்)

No comments: