Sunday 13 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 20

20 சிறகுகள்

பாமா பாடி முடித்ததும் மனதில் அவளுக்கு ஒரு யோசனை தோனியது. யசோதையிடம் இந்த பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்க இயலுமா எனக் கேட்கவேண்டும் என நினைத்தாள். சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சியை பட்டாம்பூச்சி என எவரும் அழைக்க மாட்டார்கள். அது ஒரு பூச்சி அவ்வளவுதான். பட்டாம்பூச்சிகளை வளர்த்துப் பழகிய பாமாவுக்கு பட்டாம்பூச்சியை சிறகுகள் இல்லாமல் அடையாளம் காண்பது எளிதாகவே இருந்தது.

யசோதையிடம் அலைபேசி மூலம் பேசி தனது ஆர்வத்தைச் சொன்னாள் பாமா. யசோதை சிறிது நேரம் யோசித்தவள் சிறகுகள் வரவைக்கலாம் என உறுதி தந்தாள். இந்த உலகில் பரிணாம வளர்ச்சி என்பது உணர்தல், தொடுதல், ஊர்தல், பறத்தல், நடத்தல் என்றே பக்கத்திற்கு பக்கமாக விரிவடைந்து வந்து இருக்கிறது.

தமக்கு தேவை இல்லாத உறுப்புகளை உதறித்தள்ளிவிடும் குணாதிசயங்கள் உயிரினங்களுக்கு இருந்து வந்து இருக்கிறது. எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பது பிரமிக்கத்தக்க ஒன்றுதான் அந்த அந்த இயற்கை சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் வல்லமை இந்த உயிரினங்களுக்கு உண்டு. இதில் இன்று வரை பெரும் வியப்பு தந்து கொண்டு இருப்பவைகள் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிர்கள். தங்களை அழிக்க வருபவைகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கின்றன. எவை எல்லாம் பயனில்லை என்று ஆகிறதோ அவை அழிந்து போகும். எவை மென்மேலும் பயன் உண்டாக்க உதவுமோ அவை மாற்றம் அடைந்து ஒரு நிலைக்கு வரும்.

பூங்கோதை வீட்டுக்குள் சென்றாள் பாமா.

''வாம்மா, உட்கார்'' பூங்கோதை பாமாவை வரவேற்றாள்.

''குழந்தை எப்படி இருக்கா?''

''நல்லா இருக்கா''

''நாராயணி'' என அழைத்தாள் பாமா. குழந்தை குரல் கேட்டு ஒலி எழுப்பியது.

''தன்னைத்தான் கூப்பிடறாங்கனு நினைக்கிறா அக்கா''

''பசிச்சா மட்டும் அழறா, மத்தபடி எந்த ஒரு தொல்லையும் இல்லம்மா, இவளுக்குனு இப்படிதான் துணி எல்லாம் தைச்சி வைச்சிருக்கேன்'' கை கால் வைக்காத துணியைக் காட்டினாள் பூங்கோதை.

''அக்கா, ஆழ்வார்களில் நம்மாழ்வார் எனும் சடகோபன் பத்தி நீங்க தெரிஞ்சி இருக்கீங்களா''

''இல்லைம்மா''

''நம்மாழ்வார் பிறந்தப்போ அழவே இல்லை. அதுக்கு நம்ம உடம்புக்குள்ள இருக்கிற காற்றை நாம வெளியேற்றத்தான் பிறந்த உடனே அழறோம்னும் நம்மாழ்வார் சட அப்படிங்கிற காத்தை அடக்கியாளும் திறமை இருந்ததால அழாம இருந்தார்னு சொல்றாங்க. அதுவும் பதினாறு வருசம் அவர் பேசாம ஒரு பிண்டம் மாதிரியே இருந்து இருக்கார். புளியமரத்துக்கு அடியில இப்படியே அசைவற்று கிடந்தவரை மதுரகவி ஆழ்வார்தான் ஒரு கல்லை தூக்கிப் போட சலனம் இருக்குனு கண்டுபிடிச்சி அவர்கிட்ட கேள்வி கேட்டு அவருடைய அறிவை மெச்சி தனது குருவாக ஏத்துக்கிட்டார், அதுக்கு அப்புறம் அவர் எழுதின பெருமாள் பற்றிய பாசுரங்கள் எல்லாம் சேர்த்து வைச்சி இருக்காங்க. நம்ம நாராயணி அப்படி இல்லைக்கா, நிச்சயம் பதினாறு வருசம் எல்லாம் அப்படி இருக்கமாட்டா, மத்த குழந்தை போல பேசுவா''

''ஆனா அவளால தன்னால் எதுவும் செய்யமுடியாதுல. தவழ்றது, நடக்கிறது, கை கொட்டி சிரிக்கிறதுனு எதுவுமே பண்ண முடியாதுல அதை நினைச்சி எனக்கு அப்போ அப்போ பகீர்னு இருக்கும்மா''

''அதான் யசோதை கை கால் வந்துரும்னு சொல்லி இருக்காங்க, நீங்க கவலைப்படாதீங்க அக்கா''

ஒரு தாய்க்கு தனது சேய் தான் உலகம். கட்டிய கணவனை விட தான் பெற்ற பிள்ளைக்காக எதுவும் செய்யத் துணிவு கொண்டுவிடுவாள் தாய். ஒரு தாய்க்கு மனச்சோர்வு ஏற்பட்டு இந்த வாழ்வைத் தொலைத்து விடுவோம் என எண்ணிக் கொண்டிருக்கையில் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழறயாம்மா, அழாதம்மா நானிருக்கேன்ல எனும் அந்த சேயின் மழலைச் சொல் அந்த தாய்க்கு இந்த வாழ்வின் மீது நிறைய நேசத்தை வளர்த்து விடும். ஆனால் நாராயணி பூங்கோதையின் மனதில் கவலைகளை சேர்த்துக் கொண்டு இருந்தாள். அந்தக் கவலைப் போக்குவதற்கு என்றே பாமா நிறைய நம்பிக்கைகள் தந்து கொண்டு இருந்தாள். பாமாவின் பேச்சு பூங்கோதைக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

பாமா நாச்சியார் சொன்னபடி விவசாய நிலங்களில் வேலை பார்த்து வர ஆரம்பித்தாள். கோவிலை கோவிந்தன் பார்த்துக் கொண்டான். பரந்தாமனிடம் வசுதேவன் இன்னொரு குழந்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதனால் இந்த மன வருத்தம் எல்லாம் தீரும் என ஆறுதல் சொன்னார். இனிமேல் தான் பெருமாளுக்கு சேவை செய்தால் நன்றாக இருக்காது என்ற பரந்தாமனுக்கு அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம் முப்பது நாள் கழித்து தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

யசோதை சொன்னது போலவே அடுத்த வாரம் பெருமாள் பட்டி வந்து சேர்ந்தாள். அவளுடன் சடகோபன் மருத்துவரும் உடன் வந்தார். நாராயணியை பரிசோதித்தவர் ஒரு மாதம் கழித்து தனது மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வரச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

''யசோ டாக்டர் என்ன சொல்லிட்டுப் போறார்'' நாச்சியார் கேட்டார்.

''முயற்சி பண்ணி பார்க்கலாம்னு சொல்றார் அத்தை. செல்களை மறுபடியும் இயங்க வைச்சி பார்க்கலாம்னு சொல்றார். செல்கள் இயங்க ஆரம்பிச்சிருச்சினா சாதாரணமா வளர்ச்சி அடையறது போல வளர்ந்து விரல்கள், நகங்கள் எல்லாம் உருவாகி நின்றும், கவனமா செய்யனும் இல்லைன்னா ஒரு கைக்கு இரண்டு கை வரக்கூட வாய்ப்பு இருக்குனு சொல்றார்''

''யசோ, உன்னை நம்பித்தான் இருக்கோம்''

''கவலையை விடுங்க அத்தை, குழந்தை இந்தளவுக்கு நல்லா இருக்கிறதே பெரிய விசயம்னு அவர் சொல்றார். நிறைய செலவு ஆகும், அப்பாதான் இதுக்கு உதவி பண்ணணும்''

''பணத்தைப் பத்தி கவலைப்படாத யசோ''

பாமா அப்போதுதான் வந்தாள்.

''எப்போ வந்தீங்க யசோதை''

''இப்பதான், நீங்க எங்க போனீங்க''

''திருமங்கலம்ல வேளாண்மை கூட்டத்துக்குப் போயிட்டு வந்தேன், குழந்தைக்கு எதுவும் முயற்சி பண்ணினீங்களா''

''டாக்டர் வந்துட்டுப் போனார், அடுத்த மாசம் குழந்தையை கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கிறார்''

''ரொம்ப நன்றிங்க யசோதை, பட்டாம்பூச்சிக்கு முயற்சி பண்ணினீங்களா''

பட்டாம்பூச்சியை காட்டினாள் பாமா. பாமா எங்கு போனாலும் காலை, மாலை என நாராயணியையும், பூங்கோதையையும், பட்டாம்பூச்சியையும் பார்க்காமல் செல்வது இல்லை.

''இமேகோ செல்களை செலுத்திப் பார்க்கலாம் பாமா, நான் இதை எடுத்துட்டுப் போறேன்''

''இன்னைக்கே போறீங்களா, ஊருல தங்க மாட்டீங்களா''

''நிறைய வேலைக இருக்கு பாமா, அதான் இன்னைக்கு சாயந்திரமே கிளம்புறேன்''

யசோதை வீட்டுக்குச் சென்றுவிட்டு கிளம்புவதாக இருந்தாள். வசுதேவன் நாச்சியார் சொன்ன விசயங்களை கேட்டதும் மறுப்பு எதுவும் சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டாள். அப்போதே மாணிக்கவாசகரை சென்று பார்த்து விபரங்கள் சொல்ல வேண்டும் என்றார் வசுதேவன். நாச்சியார் தடுத்தார்.

''குழந்தைக்கு நல்லது நடக்கிற வரைக்கும் இதை பேச வேண்டாம்ணா''

வசுதேவன் எதுவும் சொல்லாமல் அமைதியானார். பாமாவை வரச் சொன்னாள் யசோதை. பாமா பட்டாம்பூச்சியை ஒரு காற்றுப் புகக்கூடிய சிறு குடுவையில் அடைத்து அது உயிர்ப்போடு இருக்க மலர்களுடன் கூடிய செடியை உள்ளே வைத்து இருந்தாள். யசோதை அதைப் பார்த்ததும் ஆச்சரியம் கொண்டாள்.

''எப்படிங்க பாமா, இப்படி எல்லாம் பண்ணி கொண்டு வந்து இருக்கீங்க''

''வளர்த்துப் பழகிருச்சிங்க''

பாமாவை மகிழ்வோடு கட்டிப்பிடித்துக் கொண்டாள் யசோதை.

பாமா. பேரழகும் பேரறிவும், பேரன்பும் நிறைந்த ஒரு பெண். அவளுக்கென ஆன கள்ளமில்லா உள்ளம் வேறு எவருக்குமென ஆனது இல்லை. அவளை எண்ணி மகிழ்ந்திட உண்டாகும் உற்சாகம் வேறு எதனாலும் உண்டானது இல்லை. இதை எல்லாம் ஆச்சரியங்களில் அடக்க வேண்டியது இல்லை. அவளது இயல்பே அதுதான்.

சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி பாமாவை நோக்கி நன்றி சொல்வது போல தனது முன்னங்கால்களை சேர்த்து வணங்குவது போல செய்தது.

இந்த உலகில் உள்ள உயிரினங்களின் எண்ணங்கள் எதுவென எவரும் ஆழமாகவும், முழுமையாகவும் படித்தது இல்லை. அதனின் செயல்பாடுகள் எதற்கு என முழுவதுமாக உணர்ந்ததும் இல்லை. மழை வரும் முன்னே தோகை விரிக்கும் மயில், தனது பெண் துணைக்கு தான் விடும் தூது என்றே நாம் சொல்லிக் கொள்கிறோம், அதற்காக மட்டும்தான் என்பதை நாமாக முடிவு செய்தால் மயிலுக்கு தெரியவாப் போகிறது. பாமா பட்டாம்பூச்சியின் செயல் கண்டு புன்னகை புரிந்தாள்.

(தொடரும்)

No comments: