Saturday 5 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 15

15. மனித உறவுகள்

பாமாவின் முடிவைக் கேட்டு மிகவும் அச்சம் கொண்டார்கள் அவளது பெற்றோர்கள். பாமா தனது முடிவில் உறுதியாக இருந்தாள். ஏதேனும் ஒன்றை நேசித்தல் என்பது பெரும் வரம், அதிலும் எத்தனை மிரட்டல்கள், துயரங்கள் வந்தாலும் அந்த நேசிப்பை விட்டு விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது அதனிலும் பெரும் பேரின்பம்.

''நம்மை விட்டு அங்க போய் இருக்கனும்னு முடிவு பண்ணினப்பறம் நாம என்ன பண்ண முடியும், எப்படியும் கல்யாணம் பண்ணி இன்னொரு குடும்பம்னு போக இருக்கிறவகதானே இப்பவே போகட்டும்'' பாமா மனம் மாறாமாட்டாள் எனும் முடிவுக்கு வந்த தந்தை வராகன் சொன்னார்.

''நீங்க இரண்டு பேரும் என்னோட வந்து இருங்க'' பாமா தனது ஆசையை எவ்வித குழப்பம் இன்றி கொண்டு செல்ல ஒரு யோசனை சொன்னாள்.

''இல்லைம்மா, நாங்க வாராவாரம் உன்னை வந்து பாக்கிறோம், நீ மட்டும் அங்கே போய் இரு, நல்லமுறையா பரீட்சை எல்லாம் எழுது, நல்ல மார்க் எடு அது போதும் எங்களுக்கு'' வராகன் பேச பாமாவை பார்த்த வண்ணம் இருந்தார் ருக்மணி.

''என்னம்மா ஒன்னும் சொல்லலை'' பாமா சொன்ன மறுகணம் பாமாவை கட்டிப்பிடித்து அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னார் அவளது அம்மா.

''தைரியமா போய் வேலையைப் பாரு, அவர் சொன்ன மாதிரி நாங்க வந்து உன்னைப் பார்க்கிறோம். பல தடவை நீ சில விசயங்களுக்கு தயங்கினப்ப நான் சொன்ன கதைதான். இதே போல ஒரு நிலைமை எனக்கு வந்தப்ப உன்னோட பாட்டிதான் எனக்கு தைரியம் தந்து வெளியூருக்குப் படிக்க அனுப்புனது. ஊருல எல்லோரும் எதுக்கு அவ்வளவு தூரம் படிக்க அனுப்பனும்னு சொன்னப்ப என்னோட விருப்பத்துக்கு ஏத்தமாதிரி நடக்கனும்னு முழு சுதந்திரம் கொடுத்தது உன் பாட்டிதான், அப்படிப்பட்ட அம்மாவோட பிள்ளையா நான் இருந்துட்டு தேவை இல்லாம பயப்படுறது தப்பு''

பாமாவுக்கு அம்மாவை நினைத்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த உலகில் உங்கள் விருப்பம் போல வாழ இயலாமல் போவது பெருஞ்சாபம். எப்பாடுபட்டாவது உங்களது விருப்பம் போல உலகில் இந்த வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

பாமாவுக்கு பெருமாள்பட்டியும், பெருமாள் கோவிலும் திரும்பத்திரும்ப நினைவில் வந்து போயின. ஸ்ரீரங்கம் செல்கிறேன் எனச் சொல்லிச் சென்ற பாட்டியை மீண்டும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் மேலிட்டது. தனது தேர்வுகள் முடியும் வரை காத்திருப்பது என முடிவுக்கு வந்தாள் பாமா.

பரந்தாமன் துளசிச் செடிகளின் நிலை கண்டு மிகவும் வருத்தம் கொண்டவன் ஆனான்.

''கோதை, அந்த பட்டாம்பூச்சிக்காக இப்படி இந்த துளசிச் செடிகளை வதைக்கிறது எனக்கு நல்லதாகவே படல. மனசுல என்னமோ ஓடுது. இந்த துளசி செடி இல்லாம வேறு எந்த ஒரு செடியில போய் முட்டை போட்டு வளர்ந்து இருக்கலாம்ல உலகத்தில் இல்லாத அதிசயமா ஒரே ஒரு முட்டை போட்டு அதுவும் துளசிச் செடி இலைகள் எல்லாம் நாசாமப் போகுது''

''உங்களுக்குத்தான் தேவை இல்லாம சஞ்சலம், பெருமாளுக்கு அது பக்கத்தில இருக்க துளசிச் செடி இலைகளை எடுத்துப் போய் தீர்த்தம் பண்ணித் தந்தா ஆகாதுன்னு இருக்கா, எதுக்கு இப்படி கவலைப்படுறீங்க''

''உனக்கும் நம்ம பிள்ளைக்கும் எதுவும் ஆகாம இருக்கனும், அது போதும்''

''உங்க பெருமாளே ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைதான் தனக்கு உகந்ததுனு சொல்லி இருக்காரு அது போல இந்த பூச்சி உண்ட இலைகளை வேணாம்னா சொல்லப் போறாரு''

''எதுக்கு இப்படி எல்லாம் பேசற கோதை, பல வருசங்களுக்கு அப்புறம் இப்பதான் நமக்கு ஒரு புள்ளை வரப்போகுது இந்த நேரத்தில பெருமாள் மேல எதுக்கு நிந்தனை''

''நான் எங்க நிந்தனை பண்ணினேன், இருக்கிறதைத்தான் சொன்னேன்''

''மனசுக்கு ஒருமாதிரியா இருந்தது கோதை, அதுதான் மத்தபடி ஒன்னும் இல்லை''

''எனக்கும் நான் செத்துப் போயிருவேனோனு நினைப்பு வருது''

பரந்தாமன் தனது கண்கள் குளம் போல நிறைய பூங்கோதையின் வாயினை இரு கைகளால் மூடினான்.

''அப்படி எல்லாம் சொல்லாத கோதை''

பரந்தாமனின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் கொட்டின.

''என் மேல அவ்வளவு பிரியமா, குழந்தை இல்லாதப்ப கூட என் மேல இத்தனை கரிசனத்தோட இருந்தீங்க''

எதுவும் சொல்லாமல் பூங்கோதையை கட்டிக்கொண்டான் பரந்தாமன். இவ்வாழ்வுதனை அழகுற இரசித்து வாழ்வதற்கு எவரேனும் ஒருவரை அல்ல, நமது மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவரை எப்போதும் நம்முடனே வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மனிதர்கள் இந்த பட்டாம்பூச்சிகள் போலவே மனமாற்றம் கொள்ளும் நிலையை நான்காகப் பிரித்துக் கொள்கின்றனர். அது பட்டாம்பூச்சிகளின் வாழ்வு சுழற்சி போலவே இருக்கிறது என்பதாக சிலரது எண்ணங்கள்.

பட்டாம்பூச்சியாக உருவெடுக்கும் முன்னர் தனது பழைய தோல்களை பலமுறை கழட்டி எறிந்து அதன்பின் கூடு கட்டி அதனுள் தன்  உடலையே திரவ நிலைக்கு மாற்றி அதில் இருந்து சிறகுகளும், கால்களும் என புதுப்பொலிவைப் பெறுகிறதே பட்டாம்பூச்சி அதுபோல மனிதர்களும் பல்வேறு மனமாற்றங்களுக்கு உட்பட்டு புதுப்பொலிவை பெறுகிறார்கள்.

துளசிச் செடியில் வளரும் கம்பளிப்பூச்சி தனது தோல்களை சிலமுறை கழட்டி போட்டபடி துளசிச் செடி இலைகளை உண்டு வளர்ந்து கொண்டு இருந்தது.

(தொடரும்)


No comments: