Sunday 28 March 2010

ஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்

எனக்கு இந்த கதையைப் பத்தி முத முத எப்பத் தெரியும்னா நாங்க இங்க ஒரு அமைப்பை உருவாக்க ஜனவரி மாசம் திட்டம் போட்டோம். அதாவது ஊருல இருக்கிற அதாவது தென்மாவட்டங்கள்ல இருக்கிற கிராமத்து பகுதிகளுக்கு நலத்திட்டம் செய்யனும்னு. ஆரம்பிக்கிறப்பவே என் மாமா மகன் சொன்னான், ஆண்டிகளல்லாம் சேர்ந்து கட்டிய மடம் போல ஆகிரக்கூடாதுனு, அப்பதான் என்னனு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். சாமிகளா, தமிழ்வலைப்பதிவர் குழுமத்தை அதுமாதிரி ஆக்கிப்பூடாதிங்கனு சொல்லத்தான் இந்த பதிவு.

எப்படி ஒரு அமைப்பு ஆரம்பித்தோம்னு சொல்றேன் கேளுங்க. சமூக சேவை செய்ற நினைப்புள்ளவங்களா உறவினர்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வந்தோம், சரி எப்படித்தான் ஆரம்பிக்கிறதுனு ஒரு திட்டம். இலண்டன் ஸ்ரீவைஷ்ணவ டிரஸ்ட் அப்படினு ஒரு பெயரை மனசில நினைச்சிக்கிட்டு ஒரு ஹோட்டலுல பதினாலு பேரு குழுமியிருந்தோம். எனக்கு அன்னைக்குனு பாத்து வாந்தியும், காய்ச்சலுமா வந்து சேர்ந்தது அந்த நாராயணன் புண்ணியமோ என்னவோ!

மிகவும் நேர்த்தியா லேப்டாப் சகிதமா என்னோட சொந்த அண்ணன் பல திட்டங்களோட வந்தாரு. மைக் எல்லாம் பிடிச்சி யாரும் பேசல. உங்களுக்கு ஏன் இப்படி ஒரு அமைப்பு ஆரம்பிக்கனும்னு விருப்பம், உங்க நோக்கம் என்னனு ஒவ்வொருத்தரா சொல்ல சொன்னாரு. எல்லாரும் ஊருல இருக்கறவங்களக்கு பொதுவா வயதானவர்கள், கல்வி உதவிக்கு நிற்பவர்கள், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு நாம உதவுனும், அதை தனிப்பட்ட மனிசரா செய்றதை விட சேர்ந்து செஞ்சா நல்லாருக்கும், மேலும் வியாபார நோக்கமும் இருக்கனும், அந்த வியாபார நோக்கத்தின் மூலம் வர பணத்தை ஊருக்கு தந்து உதவனும், சுற்றுலா போகனும் அப்படினு ஒவ்வொருத்தரும் ஒரு கனவை சொன்னோம். தலைவர், உபதலைவர், பொருளாளர், செயலாளர் அப்படினு ஒரு மனதா தேர்ந்தெடுத்தோம், அவங்க ரெண்டு வருசத்துக்குத்தான் பதவில இருப்பாங்க, அப்புறம் புது ஆளுக, முதல இருந்தவங்க இருக்க முடியாது. அப்படியே சுற்று சுற்றி வரும். நல்லாதான் இருந்தது. எல்லாரும் இலண்டன் ஸ்ரீவைஷ்ணவ டிரஸ்ட் னு முடிவு பண்ணி பஜ்ஜி, சிக்கன் (வைஷ்ணவம்னா அசைவத்தை நிறுத்துங்க சாமிகளானு ஒரு சத்தம் கேட்டது ) சமோசா, கொகோ கோலா அப்படினு கூட்டம் முடிஞ்சிப் போச்சு. என்னாலதான் எதுவுமே சாப்பிட முடியல. நான் எந்த பதவியும் எடுத்துக்கல, ஏன்னா அந்த நாராயணன் புண்ணியமோ என்னவோ.

பெயரை எல்லாம் பதிவு செய்யனும்னு ஒரு நிர்வாகம் ஆரம்பிக்க முடிவு பண்ணியாச்சு. தைல முடிச்சிரலாம்னு பாத்தோம். ஆனா இன்னமும் நிர்வாகம் பதிவு செய்யலை, பேசினப்பவோ இது உடனடி விசயம் இல்ல, ஐந்தாண்டு திட்டம்னு தெளிவா இருந்தோம், ஒவ்வொருத்தரும் அத்தனை பிஸி. இதுல சமூக சேவைக்கு நேரம் ஒதுக்கறது அத்தனை சுலபமா என்ன. ஏன்னா கூடியிருந்த பதினாலு பேருல எட்டு பேரு முன்னமே மகாலக்ஷ்மி கோவில் நிர்வாகத்தில் இருந்தவங்கதான், அவங்கங்களுக்கு கடுமையான வேலைப்பளு மத்த இதர காரியங்களால, விலகிப் போனவங்கதேன். நான் அந்த கோவிலுல சேர்மனு, செயலாளர், அப்படி இப்படினு பதவி வகிச்சிருக்கேன், அப்புறம் எனக்கு நாராயணனா ரொம்பப் பிரியம். எனக்கு இப்படி ஒன்னா புதுசா ஆரம்பிச்சி செய்றதுக்கு அந்த கோவில் மூலமா செய்யலாமேனு ஒரு ஆதங்கம் எப்பவும் இருக்கு, ஆனா நிலமை அத்தனை சுலபமா இல்லனு தெரிஞ்சதலா புதுசா ஆரம்பிச்சே செய்வோம்னு இவங்களோட இறங்கிட்டேன்.

ஒரு குழு ஆரம்பிச்சி செய்றது ஒன்னு ஈசி இல்ல, என்னமோ ஆரம்பிச்சோம், அதைச் செஞ்சோம், இதைச் செஞ்சோம்னு இருக்கறது பேரு குழு இல்ல, ஒரு தெளிவான, திட்டமிட்ட தைரியமான மனசு வேணும். எப்பவும் கொள்கை விலகாத உறுதி வேணும். அதெல்லாம் நம்ம மக்களுக்கு இருக்கானு நம்மளையே கேட்டுப் பார்த்தாக்க நல்லாவே புரியும்.

பதிவு பண்றதாக்கான பேப்பர் வேலை எல்லாம் ஜரூரா நடந்துக்கிட்டுதான் இருக்கு, என்ன பதினாலு பேரு கையெழுத்துப் போடுறதுக்கு ஒரு மாசம் ஆகிப்போச்சு ;) அட ஒன்னு சொல்ல மறந்துட்டேனே, கூட்டத்துக்கு வந்த ஒருத்தரு எனக்குப் பிடிக்கலனு விலகிக்கிறேனு சொன்னாரு நாங்களும் சரினு சொல்லிட்டோம். அதுக்கு பதிலா இன்னொருத்தரு வந்து சேர்ந்துருக்காரு. அப்புறம் ஸ்ரீவைஷ்ணவனு சுருக்க வேணாம்னு வேற பேர முடிவு பண்ணிட்டோம், அதுக்கு நாங்க எடுத்துக்கிட்ட நாளு கணக்கு என்னவோ சரியா சொன்னா மூணு வாரம். பொறுமையா எதையும் செய்யனும்னுங்கிற பக்குவம் முதல வேணும். சோ காட்டுறதுக்கு ஒரு குழுவோ அமைப்போ ஆரம்பிக்கக்கூடாது, சரிதானே நான் சொல்றது.

குழு ஆரம்பிக்க முன்னாடி நாங்க பேசிக்கிட்டது என்னவோ இதுதான், ஒருமித்த கருத்தில்லாத எவரையும் நிர்வாக குழுவில் சேர்ப்பதில்லை, ஆனால் அவர்கள் நன்கொடை தந்தால் வாங்கிக்கொள்வோம். எவரேனும் எதிராகப் போனால் பொங்கலும் சுண்டலும் தந்து மரியாதையாக அனுப்பி விடுவோம், மேலும் பணம் கொடுப்பவர்களுக்கு பொங்கலும் சுண்டலும் நிச்சயம் உண்டு. அப்படி இப்படினு நகைச்சுவையா ஆரம்பிச்சோம், இப்ப நடக்கறதைப் பாத்தா ஒன்னுமே ஆகாது போலனுதான் நினைப்பாங்க ஆனா எங்க கனவை இந்த குழுவை வெற்றிகரமாக நடத்தி நிச்சயம் நிறைவேத்துவோம்னுங்கிற நினைப்பு எங்களுக்கு இருக்கு என்ன கொஞ்ச நாளு ஆகலாம், அதுக்காக உடனே அவசரப்பட்டு அது இதுனு எழுதிப்பூடாதிங்கண்ணே, நாலு சுவத்துக்கல நல்லா பேசி ஒரு முடிவுக்கு வந்தப்பறம் பதிவை எழுதுங்கண்ணே, இந்த விசயத்துல மட்டும் மனசுல தோணுனதை பதிவுல எழுதறதை நிறுத்திட்டு ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டினத போல இல்லாம ஒரு அட்டகாசமான அமைப்பை கொண்டு வாங்கண்ணேனு எல்லாரையும் கேட்டுக்கிறேன். எங்கனாச்சும் தப்பா எழுதி இருந்தா வருத்தம் தெரிவிச்சிக்கிறேண்ணே. அடுத்தவங்களை அனுசரிச்சி ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக்கொடுத்துப் போற பழக்கத்தை முதல கையில் எடுங்கண்ணே.

ஊருல இருந்து இருந்தா உங்களையெல்லாம் வைச்சி ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்க மாட்டேன். (இப்படி வெட்டி சவாடலெல்லம் வேண்டாம்ணே). அப்புறம் ஒன்னு கவனத்துல வைச்சிக்கோங்கண்ணே, ஆரம்பிக்கிறப்போ அப்படி இப்படினு தான் இருக்கும், ஒரு தெளிவான நோக்கம் இருந்துட்டா அசைக்க முடியாதுண்ணே. நான் தான் ராசா னு இருக்கிற பதிவுலகத்துல நாங்கதான் சேவகர்களுனு சொல்லிப் பாருங்கண்ணே, தமிழ் வலைப்பதிவர்கள், இணைய பதிவர்கள் அப்படிங்கிற பவர்னு பளிச்சினு இருக்கும்.

5 comments:

Paleo God said...

அனுபவம், பதிவர் மாவட்டம்//

:-))

துபாய் ராஜா said...

தலலப்பில் பிழை உள்ளது. "அங்கிள்கள்" சேர்த்து கட்டிய மடம் என்பதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

Unknown said...

/ஏழு கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது./

வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்.

மணிஜி said...

சும்மா...................

Radhakrishnan said...

ஊருல நடந்ததை பார்க்கும் போது புன்னகை தான் புரிய முடிந்தது ஷங்கர்.

ஆஹா, இது வேறயா? :)ராஜா

வாழ்த்துகளுக்கு நன்றி ஜெகதீசன்

சும்மா இருப்பதே சுகம் தான் மணீஜி