Wednesday 24 March 2010

இல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்?

அடிப்படை அறிவு 

மேற்குறிப்பிட்ட இந்த பதிவுதனை ஒருவேளை நீங்கள் படித்து இருந்தால் மட்டுமே மேற்கொண்டு படியுங்கள். ஏனெனில் அப்பொழுதுதான் என்ன சொல்ல வருகிறேன் என ஓரளவுக்குப் புரியும். என் மேல் கோபம் கோபமாகத்தான் வந்து கொண்டிருந்தது. ஒருமுறை எனில் மன்னித்துவிடலாம், ஆனால் இதையேத் தொடர்ந்து செய்து வரும்போது ஏன் இது போன்று நடந்து கொள்கிறேன் எனும் கோபம் பொறுத்துக் கொள்ளக்கூடியதுதான். இதைச் சொல்லும் போதே நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த பொட்டிப்புரம் எனும் கிராமத்துக்கு அருகில் வாழ்ந்த தாத்தா ஒருவர் பாடிய 'கோபம் ஏனய்யா, நாம சாவது நிசமய்யா' எனும் பாடல் நினைவுக்கு வந்து தொலைகிறது.

சரி ஒரு விஷயத்தை பற்றிய பிரச்சினை என வரும்போது அதற்கான காரணிகள் என்னவாக இருக்கும் என அலசிக்கொள்வது என்பது எத்தனை சுலபமான செயலாக இருக்க வேண்டியது. ஆனால் பல வேளைகளில் நாம் என்ன செய்கிறோம்? ஒரு சுலபமான விசயத்தைப் பற்றிய அறிவை சிந்திக்காமல் என்னவோ ஏதோ என பதறி விடுகிறோம். எங்கள் ஊர் உப்புநக்கி பாட்டி கூட செத்துப் போகும் முன்னர் இதை பலருக்குச் சொல்லி இருப்பார்கள். 'பதறிய காரியம் சிதறிப் போகும்' என.

எவருக்குத்தான் பழமொழியின் மேல் அக்கறை இருக்கப் போகிறது. இது இயந்திர உலகம், ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும், நின்று சிந்தித்துக் கொள்வதில் நேரம் செலவழிக்கக் கூடாது என்றே அனைவருக்கும் நினைவு இருக்கும். ஆனால் நாம் செலவழிக்கும் நேரங்களைப் பார்க்கும் போது பல நேரங்கள் பயனில்லாத வகையில் செலவாகிக் கொண்டேதான் இருக்கும். கோபம் கோபமாக வருகிறது என்று சொன்னாலும் மனதில் எனது அறியாமை விலகிக் கொண்டதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

இப்பொழுது விசயத்துக்கு வருவோம். முதலில் அந்த பதிவில் குறிப்பிட்ட இணையதளம் பற்றியது. முதல் பக்கத்துக்கு உதவி பக்கம் என ஒன்றை இணைக்க வேண்டும், ஆனால் நான் செய்த முறையில் உதவி பக்கம் என்னால் இணைக்கவே முடியவில்லை. சரி என சம்பந்தபட்டவர்களை அணுகினேன். அவர்களும் சொன்னார்கள் எல்லாம் சரியாகவே இருக்கிறது இதோ ஒரு உதவிப்பக்கம் இணைத்து காட்டுகிறேன் என இணைத்து காண்பித்தார்கள். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. சரி என நானும் இணைத்துப் பார்த்தேன். இணையவே இல்லை. அது சரி, எப்படி இணைப்பது எனத் தெரிந்தால் தானே இணைப்பது.

ஏதேனும் வேறு வழியில் இணைக்கிறார்களோ என நினைத்து, துணைப் பக்கம் எப்படி இணைப்பது எனச் சொல்லித் தாருங்கள் என அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டு வைத்தேன். இதோ இதைப் பார்த்துத் தெரிந்து கொள் என ஒரு படம் அனுப்பினார்கள். எனக்கு எங்கள் ஊர் ஆசிரியர்கள் நினைவுக்கு வந்து போனார்கள். இந்நேரம் பக்கத்தில் அமர்ந்து இப்படி செய்யனும், அப்படி செய்யனும் என அருமையாய் சொல்லித் தந்து இருப்பார்கள். நானும் ஆவலுடன் அதை கற்று இருந்திருப்பேன். ஆனால் அவர்கள் அனுப்பிய படத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை, இப்படித்தானே செய்தோம், ஆனால் செய்ய இயலவில்லையே தோன்றியது. அவர்கள் இணைத்து இருந்த உதவிப் பக்கத்தை வேறொரு பக்கத்துக்கு மாற்றிப் பார்த்தேன். அட, மாறியது. கற்றுக்கொண்டேன். ஓ இவ்வளவுதானா என மனம் சொன்னது. இல்லாத பிரச்சினையை எப்படியடா உருவாக்கினாய் எனக் கேட்டுக் கொண்டேன்.

அது மட்டுமல்ல, மற்றொரு பிரச்சினையையும் அவர்களிடம் சொல்லி இருந்தேன். அதாவது எடிட்டர் பொத்தான்கள் தொலைந்து போகிறது என. அதற்கு அவர்கள் ஒருபோதும் பதில் சொல்லவில்லை, சொன்ன பதில் என்னவோ எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது மட்டுமே. ஸ்கிரீன் ஸாட் எடுத்து அனுப்பச் சொன்னார்கள். நானும் அனுப்பினேன். அதைப் பார்த்த பின்பும் ஒரு பதிலும் சொல்ல வில்லை. எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்றார்கள். எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. அதெப்படி உங்களுக்கு மட்டும் நன்றாக இருக்கிறது என கேட்டே விட்டேன். இதுவரை பதில் அளித்த ஆண்கள் சரியாகச் சொல்லவே இல்லை. ஒரு பெண்மணி பதில் அனுப்பினார், ஒழுங்காக உனது பிரச்சினை என்னவென சொல் அப்பொழுதுதான் உனக்கு என்னால் உதவ இயலும், மேலும் தேவையெனில் இந்த உதவிகளை படி என ஒரு இணைப்பு தந்து இருந்தார். எனக்கு பெண்கள் என்றாலே ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும், ஏனெனில் அவர்கள் அறிவுக்கூர்மை வாய்ந்தவர்கள். அந்த இணைப்பை படித்துப் பார்த்தேன். அப்பொழுதுதான் எழுதி இருந்தது, மொஜில்லா, நெருப்பு நரி, இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மட்டுமே இந்த எடிட்டர் பொத்தான்கள் வேலை செய்யும் என இருந்தது. எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. நான் உபயோகித்ததோ கூகிள் குரோம். உடனே இண்டெர்நெட் எக்ஸ்ஃப்ளோரரில் சரி செய்து பார்த்தேன், அட ஒரு பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தது.

இல்லாத பிரச்சினையை இப்படியும் உருவாக்கிக் கொண்டேன், ஆனால் அவர்களிடம் ஒன்று மட்டும் சொல்ல நினைத்துக் கொண்டேன், கூகிள் குரோம் ல் எடிட்டர் பொத்தான் வேலை செய்யும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என. மேலும் எவரேனும் இதுபோன்ற பிரச்சினை என வந்தால் என்ன உபயோகிக்கிறீர்கள் எனும் கேள்வியையும் எழுப்புங்கள் என.

இப்படித்தான் ஒருமுறை தமிழ்மணத்தில் பதிவு இணைக்க இயலவில்லை என நினைத்து உடனடியாக ஒரு பதிவு எழுத பல பதில்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்தது, அதைப்போலவே முன் சொன்ன பதிவின் மூலம் ஒரு ஆராய்ச்சியாளரின் உதவியும் கிடைக்க இருக்கிறது.

பிரச்சினைகள் என நமக்குள்ளே மூழ்கிக் கொண்டிராமல் வெளியேயும் எட்டிப் பார்க்கச் சொல்கிறது எனது எண்ணங்கள், உலகில் உதவும் எண்ணம் கொண்டவர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள் என்பது எனக்கு எப்பொழுதும் நினைவில் இருக்கிறது.

தனிமனித கவலைகள், கனவுகள் யாவும் சமுதாய கவலைகள், கனவுகள் ஆகட்டும். அப்பொழுதாவது சமுதாயம் விழித்துக் கொள்ளும் நிலை வரும்.

9 comments:

சுந்தரா said...

//இல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்?//

இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் பிரச்சனைதான் ரங்கன்...

சரியான ஒரு வழியைத்தவிர எல்லா வழியிலும் முயற்சித்துப் பார்ப்பது. ஆனா என்ன, உங்களையே நீங்க கேள்வி கேட்டிருக்கீங்க. அநேகம்பேர் ஒரு அசட்டுச்சிரிப்போடு அதை அந்த நிமிஷத்தோடு மறந்துவிடுகிறோம்.

சுந்தரா said...

புதிய இணையதளத்துக்கு வாழ்த்துக்கள் ரங்கன்!

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி. நீங்கள் சொல்வதும் சரிதான்.

வால்பையன் said...

/பிரச்சினைகள் என நமக்குள்ளே மூழ்கிக் கொண்டிராமல் வெளியேயும் எட்டிப் பார்க்கச் சொல்கிறது//

அதே தான் எனக்கும்!

vidivelli said...

இது தான் நிலமை......
முயற்சி செய்து வென்றிடீங்களே....
வாழ்த்துக்கள்....

தனிமனித கவலைகள், கனவுகள் யாவும் சமுதாய கவலைகள், கனவுகள் ஆகட்டும். அப்பொழுதாவது சமுதாயம் விழித்துக் கொள்ளும் நிலை வரும்.

ஆழமான கருத்து...

Radhakrishnan said...

மிக்க நன்றி விடிவெள்ளி.

பனித்துளி சங்கர் said...

அருமையான பதிவு,பதிவுக்கு நன்றி !

கண்மணி/kanmani said...

//பிரச்சினைகள் என நமக்குள்ளே மூழ்கிக் கொண்டிராமல் வெளியேயும் எட்டிப் பார்க்கச் சொல்கிறது எனது எண்ணங்கள், உலகில் உதவும் எண்ணம் கொண்டவர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள்//

உண்மைதான்.வலை மிகவும் உதவுகிறது

Radhakrishnan said...

நன்றி கண்மணி.