Tuesday 16 March 2010

சுய மதிப்பீடு

எப்படியெல்லாம் வாழ வேண்டும், எதையெல்லாம் செய்ய வேண்டும் எனும் ஒரு கனவு எல்லோரிடத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த கனவினை நனவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டாலும் அந்த முயற்சியானது ஒரு வெற்றியாக அமைந்துவிடாத வண்ணம் ஏதேனும் ஒன்று தடையாக இருந்து வருவது போல நமக்குத் தெரிந்து கொண்டிருக்கும். அந்த தடையை ஏற்படுத்துபவர் வேறு எவரும் அல்ல, நாம் தான் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா?

நீங்கள் எப்படியோ, எனக்குத் தெரியாது, ஆனால் நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். அறிந்து வைத்திருந்தால் மட்டுமே வெற்றிக்கான பாதை எளிதாக கிடைத்து விடுமா? அறிந்து வைத்திருப்பதை செயல்படுத்துவதில் தானே ஒரு வெற்றியினை நிச்சயப்படுத்திக் கொள்ள இயலும். இந்த செயல்படுத்துவது என்பது அத்தனை எளிதாக இருப்பதில்லை என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமா?

இப்படித்தான் சென்ற வாரம் வாழ்வில் முன்னேற்றம் காண்பது எப்படி எனும் நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். இரண்டு தினங்கள் நடந்தது அந்த நிகழ்வு. அந்த நிகழ்வானது பல விசயங்களை புரிய வைத்தது. வேலை செய்யும் போது அந்த வேலை குறித்தும், மேலும் இந்த வேலை போய்விட்டால் அடுத்த வேலை உடனே கிடைக்க எத்தனை தூரம் ஒருவர் தயாராக இருக்கிறார் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வுதான் அது.

ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று ஆரம்பிக்கிறது சுய மதிப்பீடின் தொடக்கம். எனக்குத் தெரிந்த மொழிகள் என ஓரளவுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரிந்த ஆங்கிலம், தமிழ், பேச மட்டுமே தெரிந்த தமிழ் கலந்த தெலுங்கு என அத்துடன் நின்று போனது. கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். உலகில் உள்ள மொழிகளில் இது மட்டும் தானா எனக்குத் தெரிந்தது என்பதை நினைத்து பார்த்த நாட்களில் அதுவும் ஒரு நாள் கணக்காகத்தான் தெரிந்தது. இலக்கணம் வரை கற்றுக் கொண்ட ஹிந்தி மொழி தொலைத்தேன், பல வார்த்தைகள் பேச தெரிந்த பெங்காலி மொழியையும் தொலைத்து இருந்தேன். வேறு மொழிகள் படி என அறிவுறுத்தப்பட்ட போது ஸ்பானிஸும், ப்ரெஞ்சும் படிக்க வேண்டுமென ஆவலுடன் தொடங்க நினைத்து தொடங்காமலேயே போனதும் நினைவுக்கு வந்தது. கடகடவென ஆண்டுகள் உருண்டோடி போனது. இனியும் ஆண்டுகள் உருண்டோடிவிடும்.

இதுவரை வாழ்க்கையில் என்ன சாதித்து இருக்கிறாய் என சுய மதிப்பீடு தொடர்ந்த போது கல்யாணம் பண்ணி இருக்கிறேன், ஒரு குழந்தைக்கு தந்தையாக இருக்கிறேன் என சொன்னால் எல்லாருமே விழுந்து விழுந்து சிரிக்கத்தான் செய்வார்கள், ஆனால் ஒரு மனிதர் சாதனையாளாராக வேண்டுமெனில் தானிருக்கும் குடும்பம் முதலில் ஒரு கட்டுகோப்பாக உள்ளதாகவும், குடும்பமானது மிகவும் அருமையாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது என்பதில் தான் இருக்கிறது வாழ்க்கையின் சாதனை. வேலையையும், குடும்பத்தையும் எத்தனை பேர் சரிவர நிர்வகித்து நம்மில் வருகிறோம்?

ஒரு முறை 'பொழுது போக்கு நேரம் கொல்லும்' என்கிற ஒரு சிறு கட்டுரையை எழுதி இருந்தேன், அப்போது நான் குறிப்பிட்டது என்னவெனில் முதல் தர வேலை எது நமது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்வது அவசியமாகும் என்பதுதான் அந்த கட்டுரையின் நோக்கம். இப்பொழுது மீண்டும் அதே சிந்தனையை புரட்டிப் பார்க்கிறேன். எனது முதல் தர வேலை என்பது திறம்பட ஆய்வு செய்து அந்த ஆராய்ச்சியின் மூலம் சமுதாயத்திற்கு பலன் கிடைக்கும்படியோ அல்லது என் பின் வரும் சந்ததியினர் எனது ஆராய்ச்சியை ஒரு முன் மாதிரியாக வைத்துக் கொண்டு அதன்படி அவர்கள் செயல்பட்டு சமுதாயத்துக்கு பயன் தருவது என வைத்துக் கொள்ளலாம். அந்த ஆராய்ச்சி காலகட்டங்கள் என பதின்மூன்று வருட காலங்களை பின்னோக்கிப் பார்க்கிறேன்.

திரும்பிப் பார்க்காதே என்றுதான் மனம் சொல்கிறது, நான் எனது ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததாக சில குறிப்புகள் ஆங்காங்கே தென்பட்டுக் கொண்டிருந்தாலும் என்னளவில் ஆராய்ச்சியில் ஒரு தோல்வியாளனாகவே என்னை காண்கிறேன். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக என்னில் ஒரு எழுத்தாளன் மட்டுமே வளரத் தொடங்கி இருந்திருக்கிறான், ஆராய்ச்சியாளன் அதனால் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறான் என்பதை நினைக்கும் போது நடுக்கமாக இருக்கிறது. எனது கனவு நசுக்கப்படும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது. குழந்தை கால எழுத்து கனவு, இளைஞன் கால ஆராய்ச்சி கனவினை கொஞ்சம் கொஞ்சமாக மென்று கொண்டிருக்கிறது. நான் எழுத்துக்காக செலவிட்ட நேரங்கள் என நினைக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதோ இந்த நேரமும் சேர்த்துத்தான்.

ஒரு தெளிவான மனநிலை இருக்குமெனில், ஒரு குறிக்கோள் நோக்கிய பயணம் வெற்றி பெற வேண்டுமெனில் தினமும் சுய மதிப்பீடு அவசியம். இன்றைய நாள் எப்படி கழிந்தது என்பதை எவர் ஒருவர் அன்றைய தினமே சுய மதிப்பீடு செய்து கொண்டு செயல்படுகிறாரோ அப்பொழுதே அவரது வாழ்வில் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகள் வெகு வலிமையாக கட்டப்பட்டு விடுகின்றன. நம்மில் பலர் அவ்வாறு செய்கிறோமோ?

ஒன்றை எழுதி அதன் மூலம் பெரும் மகிழ்ச்சியை விட ஒரு ஆராய்ச்சி செய்து அதன் மூலம் கிடைக்கும் விடைகளே பெரு மகிழ்ச்சியை எனக்குத் தந்திருக்கின்றன. எழுத்தை மொத்தமாக விட்டுவிட்டு பல மாதங்கள் இருந்திருக்கிறேன், ஆனாலும் எனக்குள் இருக்கும் ஒரு எழுத்துத் தன்மை என்னை எழுதச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டுமென்பது தவறுதான் இங்கே, ஏனெனில் ஆராய்ச்சி பொருள் ஆதாரம் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது, அதற்கு பலன் இருந்தே தீரும். ஒரு எழுத்து சமூக நலனை கொண்டு வந்துவிட முடியாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். எழுதுபவர்கள் இது எத்துனை தூரம் உண்மை என்பதை தன்னைத் தானே கேள்வி கேட்டு கொள்ளட்டும்.

நுனிப்புல் நாவலை வெளியிட்டபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி எத்தனை ஆராய்ச்சி புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறாய் என்பதுதான். ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறேன் என சொன்னபோது, ஆராய்ச்சி புத்தகங்கள் பற்றி கேட்டேன் என்றார். அதிர்ச்சியாகத்தான் இன்னும் இருக்கிறது, இதுவரை ஒரு ஆராய்ச்சி புத்தகம் கூட எழுதவில்லை. தலைப்பு வைக்கப்பட்டதோடு ஒரு புத்தகம் கிடப்பில் அப்படியே இருக்கிறது. அதற்குள் வெறும் வார்த்தைகள் எனும் கவிதைத் தொகுப்பு வெளிவந்து விட்டது, 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' வெளி வர செய்ய வேண்டும் எனும் முனைப்பு இருந்தது, ஆனால் சுயமதிப்பீடு செய்து பார்த்த பின்னர் அதை இப்போதைக்கு அப்படியே விட்டுவிடலாம் என எண்ணம் வந்துவிட்டது.

நம்மில் பலர் 'போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கப்பா' எனச் சொல்வதை பலமுறை வாசித்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தோணும், ஏன் புள்ளை குட்டிகளை படிக்க வைப்பதோடு இந்த எழுத்து காரியத்தையும் தொடர்ந்து செய்தால் தவறா என. உண்மைதான், எழுத்து என்பது என்னைப் பொருத்தவரை கடைசி நிலையில் இருக்க வேண்டிய ஒன்று, ஏனெனில் எனது கனவுகளில் இது ஒரு கடைசி கனவு தான். ஒரு நாவல் எழுதப் போய் பல கதைகள் எழுதிய நிலைமை எப்படி வர வைத்தேன் என நினைத்துப் பார்க்கும் போது என்னை ஆராய்ச்சியில் முன்னேற தடை செய்தது நான்தான் என்பதை நான் வெளியில் சொன்னால் எவருமே நம்பவும் மாட்டார்கள். வெளி உலகப் பார்வைக்கும், என்னை வேலையில் அமர்த்தி இருக்கும் நபர்களுக்கும் நான் ஆராய்ச்சியில் செய்திருப்பது அதிகமாகவே தோணலாம், ஆனால் எனக்கு மிகவும் குறைவாகவேத் தெரிகிறது.

எழுத்து மூலம் பலருடன் பழகிய பின்னர் நாம் தொடந்து எழுதாமல் விட்டுவிட்டால், பிறர் எழுதியதைப் படிக்காமலோ, பதில் சொல்லாமலோ விட்டுவிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் எண்ணம் நம்மில் எழுமெனில் நாம் மிகப்பெரும் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் எப்போதாவது உணர்ந்தது உண்டா? நான் உணர்ந்து இருக்கிறேன். முக்கிய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு எழுத்து நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் எழுதிக் கொண்டிருந்தோமெனில் நம்மை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதில் உடன்படுவீர்கள் என்றே நம்புகிறேன்.

சுயக்கட்டுபாடு இல்லாத எவராலும் வாழ்வில் திருப்தி அடைய முடியாது. எழுத்துக்கும், என் வாழ்வுக்கும் ஒரு சுயக்கட்டுபாடு என்பதை ஒருபோதும் நான் முன்னிறுத்தியது இல்லை. ஒரு விசயத்தை உறுதியாகச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அவ்வாறு செய்தல் முறையா என ஆய்ந்தறிந்து ஒரு உறுதி மேற்கொண்டால் நிச்சயம் அந்த உறுதியில் வெற்றி பெறலாம்.

எனது கனவு எழுத்தாளன் ஆவதில் இல்லை, ஒரு நல்ல ஆராய்ச்சியாளன் ஆவதில் இருக்கிறது என்பதை மீண்டும் எனக்குள் உறுதி செய்து கொள்கிறேன்.

8 comments:

கண்ணகி said...

நல்ல அல்சல்...

Chitra said...

ஒரு விசயத்தை உறுதியாகச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அவ்வாறு செய்தல் முறையா என ஆய்ந்தறிந்து ஒரு உறுதி மேற்கொண்டால் நிச்சயம் அந்த உறுதியில் வெற்றி பெறலாம்.

எனது கனவு எழுத்தாளன் ஆவதில் இல்லை, ஒரு நல்ல ஆராய்ச்சியாளன் ஆவதில் இருக்கிறது என்பதை மீண்டும் எனக்குள் உறுதி செய்து கொள்கிறேன்.


........... என்ன எழுதுகிறேன் - ஏன் எழுதுகிறேன் - எப்படி எழுதுகிறேன் - சுய மதிப்பீடும் அலசலும் அருமை.

sathishsangkavi.blogspot.com said...

//எனது கனவு எழுத்தாளன் ஆவதில் இல்லை, ஒரு நல்ல ஆராய்ச்சியாளன் ஆவதில் இருக்கிறது என்பதை மீண்டும் எனக்குள் உறுதி செய்து கொள்கிறேன். //

எனது கருத்தும் இதுவே....

Anonymous said...

சுயமதிப்பீடு செய்துகொள்வதில் ஒரு நல்லவிஷயம் நாலு தவறு செய்யுமிடத்தில் ஒரு தவறையாவது செய்யாமல் விடுவோம்.

புலவன் புலிகேசி said...

நல்ல ஆய்வு..

குலவுசனப்பிரியன் said...

துறைசார்ந்த இடுகைகளை மட்டுமாவது தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் வேதியியல் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவை.

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி, நிச்சயம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதுவேன் குலவுசனப்பிரியன்.

அன்புடன் அருணா said...

நல்ல ஆய்வு..