Sunday 28 June 2009

கதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே!


ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் எனில் அனைவரையும் கவரும் வண்ணம், அனைவரும் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும் என சொல்லலாம். மேலும் கதை எழுதும் முன்னர் கதைக்கான கரு, கதாபாத்திரங்களின் குணநலன்கள், சூழல்கள் என பல விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். திட்டமிடுதல் மிகவும் அவசியமாகிறது. எந்த காலகட்டத்தில் கதையானது நடந்தது என்பதையும் அந்த காலகட்டத்தில் மக்களின் பழக்கவழக்கங்கள் என பலவிசயங்களை உள்ளடக்கி சிறந்த தமிழ் கொண்டு வளம் நிறைந்து எழுதப்படும்போது அந்த கதை இலக்கிய உலகில் இடம்பெற்றுவிடுகிறது.

மனித உணர்வுகளை அடிப்படையாக வைத்தும், கற்பனையை மையமாக வைத்தும், நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தும், காதலை அடிப்படையாக வைத்தும், சமூக நலனை கருத்தில் கொண்டும், மற்றும் வரலாற்று விசயங்களை அடிப்படையாக வைத்தும் எழுதப்படும் கதைகள் என பிரித்துக்கொண்டே செல்லலாம்.

கதை எழுதுவதற்குத் தேவை மிகச் சிறந்த கதை. ;) ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையானது சிறந்த கதையாக இருந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அதை மிகவும் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும்!

இதுவரை நான் எழுதிய கதைகள் எப்படிப்பட்டவை எனில் எழுத்துப்போக்கில் எழுதப்பட்டவை எனலாம். நுனிப்புல் முதற்கொண்டு தற்போதைய கதைகள் வரை எதுவுமே திட்டமிடப்படாமல் எழுதப்பட்டவையே. எழுதும் கதையில் அவசரம் அவசியமில்லை என்ற கருத்தினைக் கொண்டபோதும் லெமூரியாவும் அட்லாண்டீஸும் அவசரகதியில் முடிக்கப்பட்ட ஒன்று. சில அத்தியாயம் தாண்டியதும் நிறுத்துவது சரி எனப்பட்டது. பழங்காலச் சுவடுகள் எந்த ஒரு சுவடும் இன்றி தொடரப்பட்டது, அவசரத்தில் அந்த கதையும் முடிக்கப்பட்டது. சில்வண்டுகளில் எப்படியெல்லாம் மனிதர்கள் சச்சரவுடன் வாழ்கிறார்கள், ஆனால் அதுவே சிறந்த வாழ்க்கை முறை எனச் சொல்லும் முழு அத்தியாயம் எழுதப்படாமலே அவசர அவசரமாக முடிக்கப்பட்ட கதையே.

நுனிப்புல் பாகம் 1 அவசரமாக முடிக்கப்படவில்லையெனினும் நுனிப்புல் பாகம் 2 மிக அவசரமாக முடிக்கப்பட்ட ஒன்று. மரபியலும், நரம்பியலும் உள்ளே திணிக்கப்படும் அபாயமும், சாத்திரம்பட்டி சரித்திரம் எழுத வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட அதிவேகமாக கதையை முடிக்க வேண்டி வந்தது. நூல் வெளியிடும் முன்னர் அவைகளை இணைத்துவிடலாமா என எண்ணமும் எழுவது உண்டு. இப்படி எழுத வாய்ப்புக் கிடைத்த காரணத்தினாலேயே எழுதிய கதைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இந்த கதைகளை பிறர் படித்து என்ன நினைக்கிறார்கள் எனும் அறியும் வாய்ப்பும் குறைவே. நூலாக வெளியிடும் வரை காத்திருப்பதா அல்லது தமிழ் நூல்களை விரும்பிப் படிப்பவரிடம் தந்து கருத்துக்கள் அறிந்து கொள்வதா எனத் தெரியவில்லை.

இலக்கியத்தரம் என்னவென்பது எனக்குத் தெரிகிறதோ இல்லையோ, கதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே என்னால் பல கதைகள் எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன, வாழ்க்கை எதுவெனத் தெரியாமல் நாம் வாழ்ந்து முடித்துவிடுவது போல ;)

2 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

//இலக்கியத்தரம் என்னவென்பது எனக்குத் தெரிகிறதோ இல்லையோ, கதை எழுவது எப்படி எனத் தெரியாமலே என்னால் பல கதைகள் எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன, வாழ்க்கை எதுவெனத் தெரியாமல் நாம் வாழ்ந்து முடித்துவிடுவது போல ;) //

என்ன அற்புதமான வரிகள் இது போதாதா இலக்கிய தரத்திற்கு .............

Radhakrishnan said...

மிக்க நன்றி வெண்ணிற இரவுகள் அவர்களே.