Thursday 10 November 2011

பல் வலி கொல்லும்?

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது முதுமொழி. பல் போனால் சொல் போச்சு என்பது சொலவடை. பல் இல்லாவிட்டால் பொக்கை வாய் என கேலி பேசுவோர் உண்டு. இந்த பல்லில் சிங்க பல், தங்க பல், கடாப் பல், அறிவு பல் என சில பிரிவுகள் உண்டு. 

இந்த பல்லானது ஆறு அல்லது பத்து மாதங்களில் குழந்தைக்கு முளைக்க தொடங்கிவிடும். முன்புறம் வளரத் தொடங்கும் பல்லானது இரண்டு  மூன்று வருடங்களுக்குள் பக்கவாட்டில் வளர்ந்து முழுமை பெறும். இப்படி வளரும் பற்கள்தான் பேச்சுக்கும், மெல்வதற்கும் உறுதுணையாக இருக்கின்றன. இப்போதைய தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் பல்லின் அமைப்பை  மாற்றியமைக்க கூடிய வசதிகள் வந்துவிட்டன. தெத்துப் பல், சொத்தை பல், கோரப் பல் என பல்லானது முக அழகை மாற்றியமைத்துவிடும் தன்மை உடையது. 

நமது ஊரில் சிறு குழந்தையின் பல்லானது விழுந்துவிட்டால் அதை எடுத்து பத்திரமாக வைக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லையெனினும், சில நாடுகளில் அந்த விழுந்த பல்லை எடுத்து தலையணையின் கீழே வைத்து படுத்துக் கொண்டால் பணம் கிடைக்கும் என அக்கால சிறுவர்கள் நம்பினார்கள் என்கிற கதை உண்டு. ஆனால் இன்றைய கால சிறுவர்கள் தனது பெற்றோர்கள் தான் பணத்தை தலையணைக்கு கீழே வைக்கிறார்கள் என்பதை அறிந்து இருந்தாலும் இந்த நிகழ்வை மிகவும் ரசிக்கிறார்கள். மேலும் இந்த குழந்தைகளின் பல்லானது பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கற்றுக்கொள்ள பெருமளவில் உபயோகப்படுகிறது. 

இந்த பல்லானது எனாமல், டென்டின், சிமென்டம் மற்றும் பல்ப் எனும் ரத்தநாளங்கள், எலும்பு மற்றும் நரம்புகள் கூடிய தசைகளால் ஆனது.  ஈறு, எளிறு என்று தமிழில் சொல்வார்கள். எனாமல் மிகவும் உறுதிவாய்ந்த ஒன்று. இந்த பல் பலமானதற்கு காரணம் கால்சியம் திசுக்களில் சேர்ந்து ஒரு உறுதிபடுத்தப்பட்ட தன்மையை உருவாக்குகிறது. இதன் காரணமாக கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை நாம் உண்பது அவசியமாகிறது. நாம் எத்தகைய கால்சியம் உணவை உண்டாலும், பல்லை சுத்தமில்லாமல் வைத்துகொண்டால் பல வியாதிகள் வர வாய்ப்புண்டு. ஆடு மாடு என்ன பல்லா விலக்குது என நகைச்சுவையாய் சொல்பவர்கள் உண்டு. அவை வேக வைத்த உணவு பண்டங்களை உண்பது இல்லை அதனால் நமக்கு ஏற்படும் தொல்லைகள் போன்று அவைகளுக்கு இல்லை என சொல்பவர் உண்டு. 

செங்கல் பொடி, சாம்பல் பொடி என இவையெல்லாம் வைத்து பல் துலக்குபவர்கள் உண்டு. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என பழமொழி உண்டு. பல்லில் ஏற்படும் பல துயரங்களுக்கு காரணம் பாக்டீரியாக்கள். 

இந்த பாக்டீரியாக்கள் எங்கும் சர்வ சாதாரணமாக திரிவது போல நமது வாயில், பல்லில், நாக்கில் சுழன்று திரியும். அப்படி திரியும் பாக்டீரியாக்கள் சில நல்லவைகள் எனினும், அதன் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க நமது பல்லில் அது ஒரு கூட்டம் அமைத்து வெள்ளைநிற பற்களை பழுப்பு நிறமாக்குவதோடு, பல்லில் ஓட்டை விழ வழி செய்கின்றன. நாம் உண்ணும் உணவு பெரும்பாலும் இந்த பாக்டீரியாக்களுக்கு பெறும் தீனிகளாக அமைவதால் அவை கொழுத்து திரிகின்றன. இதன் காரணமாகவே நாள் ஒன்றுக்கு நான்கு முறை பல் துலக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு முறை பல துலக்கும்போது பல் சிறு இடைவெளியை மிகவும் சுத்தமாக துலக்க வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். இந்த சிறு இடைவெளியே பின்னாளில் பெறும் துயரமாக காரணமாகிறது. இந்த பாக்டீரியாக்களே பிளேக் எனப்படும் படிமங்களை பல்லில் ஏற்பட வலி செய்கிறது. 

சின்ன சின்ன புண்கள் நமது வாயில் ஏற்படுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் மென்மேலும் வளர்ச்சி பெறுகின்றன. நாம் தெரியாமல் நமது வாயின் பக்க, முன்  தசைகளில் கடிப்பதால் இந்த சின்ன புண்கள் ஏற்படலாம். நமது பல்லை பாதுகாக்க நாம் அடிக்கடி பல் மருத்துவரை சென்று பார்ப்பது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. பெரும்பாலோனோர் பல் மருத்துவரை சென்று பார்க்க பயப்படுகின்றனர். 

பல்லில் வலி ஏற்பட்டால் உடனே ஒரு பாரசிட்டமாலோ, ஐபுப்ரோபேனோ போட்டதுடன் சரியென பலர் இருந்துவிடுவதுண்டு. சாதாரண புண்களால் இந்த பல்லின் தசைகளில் சீழ் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது பலருக்கு தெரியாத விசயம், இதன் காரணமாகவே வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நாம் உண்ணும் உணவு மூலமாக நமது வயிற்று துர்நாற்றம் வாயின் மூலமாக வெளிப்படும். இத்தகைய விசயங்களை கண்டு காணாமல் இருப்போர்கள் நாட்டில் மிகவும் அதிகம். ஒரு குளோஸ் அப் பல்பொடியை எடுத்து விலக்கிவிட்டலோ, சூயிங் கம் போன்ற வாசம் தரும் விசயங்களை வாயில் அள்ளிப்போட்டாலோ எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் என கருதுவோர் உண்டு. 

குறைந்தது மூன்றோ அல்லது ஆறு மாதம் ஒருமுறை பல் மருத்துவரை சென்று பார்த்து வருவது மிகவும் நல்லது. சென்சிடிவ் பல் என சொல்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது எதனால் ஏற்படுகிறது எனில் நமது பல்லில் கீழுள்ள தசையானது பழுதுபட்டுவிடுவதாலும், பல்லை இணைக்கும் நரம்புகள் மீது எளிதாக வெளிப்பொருட்கள் படுவதாலும் இந்த கூசும் உணர்வு ஏற்படுகிறது. இதை சில பல் பொடிகள் மூலம் கட்டுப்படுத்த இயலும், எனினும் பல் மருத்துவரிடம் சென்று காண்பிப்பது நல்லது. 

பல் வலி வந்தால் கிராமப் பகுதிகளில் மூக்கு பொடி வைத்து அந்த வலியை போக்க முயற்சிப்பவர்கள் உண்டு. இப்படியெல்லாம் செய்வது தவறு என்பதை வலியுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. புகையிலையின் காரணமாக வாயில் கேன்சர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும் பல்லை துலக்கும்போது ரத்தம் வருவது உண்டு, இதற்கு காரணம் பல் தசையில் இணைந்திருக்கும் ரத்த நாளங்கள் உராயப்படுவதாகும், எனவே பல்லை துலக்கும்போது பாத்திரத்தை துலக்குவது போல முரட்டுத்தனமாக துலக்குவது தவிர்த்தல் நலம்.

மேலும் பல் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள உடனே பல் மருத்துவரை அணுகவும். 

பல் மருத்துவரை காண பயந்து கொண்டு பல்லில் உருவான வலியை பொருட்படுத்தாமல் இருந்த ஒரு கல்லூரி மாணவி தனது பல் தசையில் சீழ் பிடித்து அதன் மூலம் இறந்து போனார் என்பது துயரமான செய்தி. 

இந்த பல்லில் உருவாகும் பாக்டீரியாக்கள் இருதய ரத்த நாளங்களை பாதிக்கும் தன்மை உடையது என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. 

பல் துலக்கியாச்சா? என எவரேனும் கேட்டால் கோபம் படாதீர்கள். பல் துலக்கவில்லை எனில் எந்த நேரமாக இருந்தாலும் சரி உடனே பல் துலக்கிவிடுங்கள். பலர் காபியிலே பல் துலக்கும் பழக்கம் உடையவர்களாக நமது ஊரில் இருப்பார்கள். அவற்றை எல்லாம் தவிர்த்து விடுங்கள். 

வாயை சுத்தப்படுத்தாமல் தண்ணீரோ, காபியோ அருந்தினால் அந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் சென்று அங்கிருக்கும் அமிலத்தினால் செத்துவிடும் என விவாதம் செய்பவர்கள் உண்டு. இந்த விவாதம் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு பல்லை துலக்குங்கள். 

இறை அவதாரம் எனினும் அவரும் பல் துலக்க வேண்டும் என்பதை நினைத்துதான் ஆண்டாள் இப்படி எழுதினாரோ என்னவோ?

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ 
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ 
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 

வெண்சங்கே உன்னை ஊதுகின்ற அந்த பரந்தாமனின் வாய் வாசனையை கூறாயா என சொல்லும் ஆண்டாளின் கற்பனைதான் எத்தகையது. 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்பது நாம் நமது மனதை சுத்தமாக வைத்திருப்பதோடு பல்தனையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொன்னதுதான். 

பல் இருந்தால் தான் இளிக்க முடியும். பல் இருந்தால் தான் வார்த்தை சொலிக்க முடியும் என இத்துடன் பல் புராணம் முடிக்கிறேன். 

8 comments:

SURYAJEEVA said...

பல் சுவை பதிவா?
சூப்பர்

Radhakrishnan said...

மிக்க நன்றி சூர்யா, மிக்க நன்றி சிநேகிதி

writersun said...

good information

Radhakrishnan said...

மிக்க நன்றி writersun

Shakthiprabha (Prabha Sridhar) said...

அருமையான தகவல். சமீபத்தில் என் அத்தைக்கு பல் மொத்தமும் எடுத்து பல்செட் வைத்துக் கொள்ளும்படி ஆகியிருந்தது. பல் மொத்தமும் எடுத்த பின்பு அவர்கள் வருந்தியது சொல்லில் அடங்கா. அதன் பின் உணவு உண்பதும் சில காலம் சிரமமாக இருந்தது. தலைவலிமுதல் பல்வலி வரை எதுவும் அனுபவிக்க கடினம் தான்.

நல்ல தகவல் நன்றி.

Radhakrishnan said...

உண்மைதான். இந்த பல் தனை நாம் சரியாக பேணி பாதுகாக்கவில்லை எனில் பல் அனைத்தையும் இழப்பது தவிர்க்க இயலாதது. மிக்க நன்றி சகோதரி.

கோவி.கண்ணன் said...

பல் இருப்பவன் பட்டாணி சாப்பிடுறான் - பழமொழி பதிவுல வரலையே.

:)

40 வயதிற்கும் மேல் எங்க ஊர் சீனர்களில் 60 விழுக்காட்டினருக்கு செயற்கைப் பல் தான்

Radhakrishnan said...

அட நல்ல பழமொழியாக இருக்கிறதே. :௦)

மிகவும் சரியே, நன்றி கோவியாரே.