Sunday 30 May 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 11

11. ஆராய்ச்சியில் ஏற்பட்ட ஆர்வம்

தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வது அடக்கம் என்றே கருதப்படுகிறது. சில பல வேளைகளில் எனக்குத் தெரியாத விசயங்களை தெரியாது என சொல்லும்போது நான் தன்னடக்கம் நிறைந்தவன் எனவும், நிறை குடம் தழும்பாது எனவும் சொல்லும்போது மனதில் சிரித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே எனக்கு பல விசயங்கள் தெரியவே தெரியாது, என்னால் அத்தனை எளிதாக எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது.

ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் விழுந்தால் அதை எடுத்து பல கடி கடித்துவிட்டுத்தான் நான் போயிருப்பேன். நியூட்டன் போல் அந்த ஆப்பிள் ஏன் விழுகிறது என யோசித்துக் கொண்டிருக்கமாட்டேன். எனக்குத் தெரிந்தது அந்த கால கட்டத்தில் அவ்வளவுதான்.

ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஒரு பதிலோடு உட்கார்ந்துவிடுவதல்ல ஆராய்ச்சி. அந்த பதிலுக்கும் பதில் தேடி செல்வதுதான் ஆராய்ச்சி. அதன் காரணத்தினால் ஆராய்ச்சி எளிதாக முற்றுப் பெறுவதில்லை. இதன் காரணமாகவே பல நோய்களுக்கு வெவ்வேறு விதத்தில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

எப்பொழுது விதைத்தால் எப்பொழுது அறுவடை செய்யலாம் என கால நிலைகளை அறிந்து விவசாயம் செய்யத் தொடங்கிய விவசாயி ஒரு ஆராய்ச்சியாளர் தான். சூரிய நிழலை வைத்தே காலத்தை கணக்கிட்டவரும் ஆராய்ச்சியாளர்தான். எந்த மண்ணில் எந்த தாதுப் பொருட்கள் கிடைக்கும் என தோண்டி எடுத்தவரும் ஆராய்ச்சியாளர்தான். சமய சூழலுக்கு ஏற்ப கிடைத்த விசயங்களை வைத்து ஒரு புரட்சி ஏற்படுத்தியவரும் ஆராய்ச்சியாளார்தான். இப்படி எல்லா விசயங்களிலும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் அளப்பரியது.

சிறு வயதிலிருந்து மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் அளவிலா ஆசை வந்து சேர்ந்தது. அதற்கேற்றபடி நான் படிக்கும் துறையும் அமைந்துவிட மிகவும் வசதியாகப் போனது. ஆனால் முழு அளவில் ஈடுபாடு என்னிடம் இருந்ததா என என்னால் சொல்லத் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் தமிழ் மீதுதான் தனிப்பற்று இருந்தது. இப்போது கூட சில வேளைகளில் நினைத்துக் கொள்ளத் தோன்றும், தமிழ் பட்டப் படிப்பு படித்து இருந்து இருக்கலாமா என!

முதல் ஆராய்ச்சி என எடுத்துக் கொண்டது ஆஸ்பிரின் எனப்படும் மருந்து எவ்வளவு வேகத்தில் கரையும் என கண்டுபிடிப்பது. நானும் எனது இரு நண்பர்களும் சேர்ந்து செய்தோம். நாங்களே எங்களுடன் படித்த நண்பனின் மருந்து தயாரிக்கும் கம்பெனியில்தான் மாத்திரை உருவாக்கினோம். அந்த வேளையில் ஆசிரியர் சில வாரங்கள் கல்லூரிக்கு வராததால் அவர் சொன்னதற்கு மாறாக நாங்கள் செய்து முடித்து இருந்தோம். சின்ன திட்டுகளோடு முதல் ஆராய்ச்சி முடிந்து போனது.

அதற்கடுத்த ஆராய்ச்சி பாக்டீரியா பற்றியது. ஆன்டிபயாடிக் என இருந்து கொண்டிருக்கும் போது இந்த பாக்டீரியவை ஆன்டிபயாடிக் இல்லாமல் வேறு மருந்துகளாலும் கொல்ல இயலும் என நான்-ஆன்டிபயாடிக் எனும் புது பாதையையே வகுத்து வைத்திருந்தார்கள். இதில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் என பலரும் இருந்தார்கள். இந்த ஆராய்ச்சிதான் நான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் செய்தேன். கிட்டத்தட்ட 305 வகையான பாக்டீரியாவை தையோரிடஜின் எனப்படும் மனநிலை பாதிப்புக்கு உபயோகப்படுத்தும் மருந்தினை வைத்து செய்யப்பட ஆராய்ச்சி அது. இந்த மருந்து பாக்டீரியாவை கொல்லத்தான் செய்தது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் கூடத்தான் பாக்டீரியாவை கொல்லும் அதற்காக அதை மருந்தாக குடிக்க முடியுமா என அறிவு எழுந்த இடம் அங்குதான். இருப்பினும் மிகத் தீவிரமாகவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதுநிலைப் பட்டப்படிப்பு படித்ததும், ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. 'டாக்டர்' எனப் போட்டுக்கொள்ளவா ஆராய்ச்சி செய்யப் போகிறாய் என நண்பர் ஒருவர் கேலி செய்தபோதிலும் ஆராய்ச்சி பட்டம் பெறுவதே கருத்தில் இருந்தது. இதற்காக இலண்டன் வரும் முன்னர் கொல்கத்தாவிலும், டில்லியிலும் ஆராய்ச்சி பட்டம் பெற இணைந்து பின்னர் தொடராமல் நிறுத்தி விட்டேன். ஒரு கல்லூரியில் வேலைப் பார்த்தபோது அந்த ஒரு வருடத்திலேயே செடிகொடிகளை வைத்து பாக்டீரியாவை கொல்லும் சக்தி இருக்கிறதா என சில மாணவர்களை வைத்து ஆராய்ச்சி செய்தேன். இப்படியான சின்ன சின்ன ஆராய்ச்சி வேட்கை பெரிய ஆராய்ச்சி திட்டமாகி கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கேனும் எப்படியாவது நிறுத்திவிடலாமா எனும் ஆசையும் வந்து சேர்ந்துவிட்டது.

இலண்டனில் நான் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி பற்றிய விபரங்களை சற்று விபரமாகவே விரைவில் எழுதுகிறேன்.

(தொடரும்)

5 comments:

ப.கந்தசாமி said...

உங்களுடைய கருத்துகள் தெளிவாக இருக்கின்றன. தவிர தமிழை எந்தப் பிழையுமில்லாமல் தட்டச்சு செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

ப.கந்தசாமி said...

//வேலைப் பார்த்தபோது//

நண்பரே, தமிழ் இலக்கணத்தில் ஒற்று மிகா இடங்கள் என்பதைப்பற்றிய குறிப்புகள் வரும்.

நான் குறிப்பிட்டிருக்கும் சொற்றொடரில் "ப்" ஒற்று இருந்தால் ஒரு பொருளும், ஒற்று இல்லாவிட்டால் வேறு பொருளும் வருவதைக் கவனிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறேன்

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. நன்னூல் படிக்கச் சொன்னார்கள், இன்னமும் படிக்காமல் இருக்கிறேன். இது குறித்து விரைவில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட விசயம் மிகவும் சிறப்பு. வேலை பார்த்தபோது எனும் போது வேலை குறிக்கிறது. வேலைப் பார்த்தபோது எனும் போது முருகனிடம் இருக்கும் வேலைப் பார்த்தபோது என பொருள் வருகிறது. அருமை.

ப.கந்தசாமி said...

நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,

பாராட்டுகள், நுணுக்கத்தை உடனே புரிந்துகொண்டதற்காக.

சிறு வயதில் நான் தவறு செய்தபோது என் தந்தை எனக்குக் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா, நன்னூல் சூத்திரத்தைப்படித்து ஒப்பிக்க வேண்டும். அவர் சாதாரண தச்சுத்தொழிலாளி, ஆனால் என் பெரியப்பா விட்டுப்போன பரிமேலழகர் உரை எழுதின நன்னூல் புத்தகம் வீட்டில் இருந்தது.

நீங்கள் நன்னூலைப்பற்றி குறிப்பிட்டிருந்ததால் என்னுடைய இந்த நினைவைக் கிறிப்பிட்டேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. எனக்கு தமிழில் ஆர்வம் இருந்தாலும் இத்தனை நுணுக்கமாக கற்றதில்லை. அவ்வப்போது இலக்கணம் கற்றுக்கொள்ள ஆசை வரும், அதை நிறைவேற்றியதில்லை. நன்னூல் நிச்சயம் வாங்கிப் படித்துவிடுவேன்.