Saturday, 29 May 2010

நுனிப்புல் (பாகம் 2) 5

                               5 சுந்தரனின் காதல் 


கிருத்திகாவும் பாரதியும் பேருந்தில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வில்லிவாக்கம் நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டார்கள். எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கிருத்திகா தனது வீட்டை நோக்கி நடந்தாள்.

‘’கிருத்தி’’

‘’என்னய்யா’’

‘’இந்த விசயத்தை வேற யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம், திருமாலும் அவருடைய மனைவியும் நம்மளைப் பார்க்க வந்தா எங்க வீட்டுக்குக் கூப்பிட்டு வர வேண்டாம், மறந்துராத கிருத்தி’’

‘’புரியுதுய்யா’’

‘’யோகலட்சுமி அக்கா சொன்னது உண்மையா?’’

‘’அப்படித்தான்யா சொன்னாங்க, உன்கிட்ட பொய் பேசுவேனா?’’

‘’வேற எதுவும் அவரைப் பத்தி சொன்னாங்களா?’’

‘’இல்லைய்யா’’

‘’நாளைக்கு படிப்போம், நான் நீ சொன்னதையும் சேர்த்து வாசனுக்கு கடிதம் எழுதி வைச்சிருக்கேன்’’

‘’ம்’’

கிருத்திகா பாரதியிடம் விடைபெற்று கொண்டாள். பாரதி வீட்டினுள் நுழைந்தாள்.

‘’இவ்வளவு நேரமா போய்ட்டு வரதுக்கு பாரதி’’

‘’எதிர்பாரா விதமா நேரமாயிருச்சிம்மா’’

‘’சாப்பிட்டியா?’’

‘’ம்’’

அம்மாவுக்கு பதில் சொல்லிவிட்டு தனது அறையினுள் நுழைந்தாள் பாரதி. வாசனை தொடர்பு கொள்வதா, வேண்டாமா என முடிவெடுக்க முடியாது திணறினாள். ஊரில் இன்று பூங்கோதையின் நிச்சயதார்த்தம் என கூறி இருந்த காரணத்தினால் ஒரு வழியாக நாளை திருமணம் முடிந்த பின்னர் தொடர்பு கொள்ளலாம் என முடிவுக்கு வந்தாள். தான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை அனைத்தும் மிகவும் கவனமாக கோர்வையாக எழுதினாள். இதனை வாசனுக்கு அனுப்பி விடுவதுதான் சிறந்தது என கருதினாள். வாசன் இதுகுறித்து மேற்கொண்டு ஏதாவது செய்ய நினைத்தால் அவனே செய்து கொள்ள வேண்டும் என எண்ணினாள்.

திருமால் பற்றிய விபரமும், பெருமாள் தாத்தாவின் சாத்திரம்பட்டி தொடர்பும் எழுதியவள், பெருமாள் தாத்தா எழுதிய கடிதம் காணக் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டாள். கிருத்திகா கூறியதையும் சேர்த்தாள். வாசனுக்கு திருமால் எழுதிய கடிதம்தனை உடன் இணைத்தாள். மிகவும் குறிப்பாக இனிமேல் விபரங்களுக்கு திருமாலை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் என எழுதி, நட்புடன் பாரதி என கையொப்பமிட்டாள். வாசனின் முகவரியை கடிதத்தில் எழுதிவிட்டு கடிதம்தனை பத்திரப்படுத்தினாள்.

மாலை நேரம் தாண்டி இரவு நேரம் வந்தது. பாரதி அவளது அறையில் படித்துக் கொண்டு இருந்தாள். அருண், சேகர் இருவரும் சேர்ந்தே வந்தார்கள். பாரதியின் அறைக்குச் சென்றார் சேகர்.

‘’பாரதி இங்க வாம்மா’’

‘’என்னப்பா’’

‘’சுந்தரன்கிட்ட என்ன சொன்ன நீ’’

‘’இல்லப்பா அப்படி ஒரு முக்கியமான விசயமும் சொல்லலையே’’

‘’நீ அவனை வேலையை விட்டுட்டு குளத்தூர் போகச் சொன்னியாமே, இப்ப உன்கிட்ட கேட்டா ஒண்ணும் சொல்லலைனு சொல்ற, அவன் மனசு வருத்தப்பட்டு வந்து தயங்கி தயங்கி சொல்றான், அதுக்கு மேல எதுவும் கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்றான், என்ன நடக்குது பாரதி’’

‘’ஓ அதுவாப்பா, நேத்து சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்பா, அஷ்டலட்சுமி கோவிலுக்கு வந்து இருந்தான், அப்போ எங்கிட்ட வந்து நம்ம குளத்தூர் பெருமாள் தான் தெய்வம் மற்றதெல்லாம் வெறும் கண்காட்சினு சொன்னான், அதுக்கு நான் அவன்கிட்ட அப்படின்னா என் அப்பாகிட்ட சொல்லிட்டு வேலையை விட்டுட்டு ஊருக்குப் போ அங்க இருக்கற வேலையை செய், மற்ற வேலையெல்லாம் சும்மா, என் அப்பா கேட்டா எந்த காரணமும் சொல்லாதேனு சொன்னேன்பா’’

‘’ஓ இவ்வளவுதானா, நான் என்னமோ ஏதோனு நினைச்சிட்டேன் நீ படிம்மா’’

என பாரதியிடம் சொல்லிவிட்டு சேகர் மாடியிலிருந்து இறங்கி வந்தார். அந்த நேரம் பார்த்து சுந்தரன் வந்து நின்றான். சுந்தரனை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றார் சேகர்.

‘’நீ விளையாட்டுப் பையனா இருக்கியே, பாரதி ஒரு பேச்சுக்கு சொன்னதை உண்மைனு எடுத்துக்கிட்டு ஊருக்குப் போகனும்னு அழாத குறையா வந்த சொன்ன’’

‘’இல்லை சார், அவ ரொம்ப சீரியஸா சொன்னா சார்’’

‘’சரி சரி, அவ சொன்னதுக்காகப் போகனுமா, நீ என்னை நம்பிதான வந்த, நான் சொல்றதை கேட்டு நடந்துக்கோ, தேவையில்லாம மனசை குழப்பிக்காத, உன்னோட திறமைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, வீணா சிதறடிச்சிடாதே, நானும்தான் பார்க்கிறேன் நீ ஊருக்குப் போய்ட்டு வந்ததிலிருந்து சுறுசுறுப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்கே, எப்படின்னாலும் சரி, சாதிக்கனும்கிற எண்ணத்தைத் தூக்கிப் போட்டுறாதே’’

சுந்தரன் சேகரின் பேச்சைக் கேட்டதும் மனதில் குடிபுகுந்த பாரதியின் மேலான காதல் ஆட்டம் கொள்ளத் தொடங்கியது. மனம் அச்சம் கொண்டு தவித்தது. வாசனிடம் அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என வாட்டம் கண்டது, இது குறித்து வாசன் பெரியவரிடம் சொல்லி, பெரியவர் சின்னவரிடம் சொல்லிவிட்டால், அருணுக்குத் தெரிந்துவிட்டால் சுந்தரனின் மனம் பதைபதைத்தது. குழந்தை பருவ, பள்ளி பருவ காதல் பாடாய் படுத்தியது. பாரதியின் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற காதல்தான் அவள் விளையாட்டாய் சொன்னதை உண்மையென கருத வைத்து வேலை விட்டுச் செல்லுமளவிற்குத் தூண்டி இருந்தது. தனது செயலின் மடத்தனத்தை எண்ணியவாறே சேகரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவருடன் சேர்ந்து சாப்பிட அமர்ந்தான். அருண், அம்மாவிடம் கேட்டான்.

‘’பாரதி சாப்பிடலையாம்மா’’

‘’காலை பூரா எங்கோ போய்ட்டு வந்துட்டு இப்போ உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கா, அவ பிறகு வந்து சாப்பிடுவா’’

சுந்தரனுக்கு சாப்பாடு பரிமாறிய சரோஜா கேட்டார்.

‘’என்ன தம்பி முகம் ஒரு மாதிரியா இருக்கு, உடம்பு சரியில்லையா’’

‘’அது எல்லாம் ஒண்ணுமில்லைம்மா, நல்லாத்தான் இருக்கேன்’’

சேகர் நடந்த விசயம்தனை சுருக்கமாக கூறியதும் சரோஜா மிகவும் பரிதாபப்பட்டார். அருண் கலகலவெனச் சிரித்துவிட்டுச் சொன்னான்.

‘’இன்னும் பயம் விட்டு போகலை போல’’

சுந்தரன் மிகவும் சங்கடமாக உணர்ந்தான். சாப்பிட்டு முடித்ததும் சுந்தரன் தனது வீடு நோக்கி கிளம்பும் முன்னர் சரோஜா அழைத்தார்.

‘’தம்பி எதுவும் மனசில வைச்சிக்காதப்பா, எப்பவும் போல சந்தோசமா இரு, எதுனாலும் எங்கிட்ட கேளுப்பா’’

‘’ம்ம்’’

சுந்தரன் மனதில் முடிவு எடுத்தவனாய் நடந்தான். பாரதியின் அறைக்குச் சென்றான் அருண்.
‘’நீ இனிமே ஏதாவது சுந்தரன் கிட்ட சொன்னா இது ஜோக், இது சீரியஸ் அப்படினு சொல்லிட்டுப் பேசு பாரதி, பாவம் அவன். அவன் வந்தப்பறம் நம்ம கம்பெனியோட முன்னேற்றம் பல மடங்கு பெருகிட்டு இருக்கு நீ ஏதாவது பேசி அவனை ஊருக்கு அனுப்பிராத’’

‘’சரிண்ணா’’

பாரதிக்கு, சுந்தரனை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படி இப்படி நடந்து கொண்டான் என நினைத்துப் பார்க்கையில், அவனது நடவடிக்கைகள் குறித்து யோசிக்கையில் பாரதி சரியாக ஒரு விசயம்தனை கணித்துக் கொண்டாள். கிருத்திகாவிடம் இது குறித்து பேசினாள். கிருத்திகாவுக்கு சுந்தரன் அத்தனைப் பழக்கமில்லை, ஆனால் சுந்தரனைப் பார்த்தால் மறக்காமல் புன்னகை மட்டும் புரிவாள். சுந்தரனும் மறக்காமல் புன்னகை புரிவான். ‘கனவு வரப் போகுதுய்யா’ என கிண்டலடித்தாள் கிருத்திகா. பாரதி சிரித்தாள். கனவின் வலிமையினை யாரும் உணரப் போவதில்லை.

இரவு சற்று வேகமாகவே உறங்கினாள் பாரதி. கிருத்திகா சொன்னது போலவே கனவும் வந்தது. கனவு பற்றியே நினைத்துக் கொண்டிருந்து இருப்பாளோ? சுந்தரன் மேல் மிகவும் பரிதாபப்பட்டு இருந்து இருப்பாளோ? அந்த கனவில் சுந்தரனை அருண் துரத்தியடிப்பதாக கண்டாள். மனதில் திடமான முடிவினை எடுத்தாள். தன்னால் சுந்தரனுக்கு எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என கருதினாள்.

பொழுது சற்று வேகமாகவே விடிந்தது. குளத்தூரில் திருமண நாள். கேசவனின் திருமணம் பற்றி வீட்டில் பேசிக் கொண்டார்கள். திருமணத்திற்கு யாராவது ஒருவர் சென்று இருந்து இருக்கலாம் என்றார் சேகர். காலையில் சுந்தரன் வழக்கம்போல் வந்து சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

கடைக்குச் சென்று திரும்பிய பாரதி சுந்தரனை வழியில் கண்டாள். சுந்தரன் தலையை குனிந்து கொண்டு விலகி நடக்க ஆரம்பித்தான். பாரதி சுந்தரனை அழைத்துப் பேசினாள்.
‘’உன் மனசுல என்னைப் பத்தி ஏதாவது நினைச்சிக்கிட்டு இருந்தா அதை இப்பவே மறந்துரு’’

‘’அப்படியெல்லாம் இனிமே எதுவும் நினைக்கமாட்டேன்’’

‘’உன்னோட நடவடிக்கைகள் அப்படித்தான் எனக்கு நினைக்கத் தோணுது, உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன்’’

சுந்தரன் இனிமேல் கவலை வேண்டாம் என பாரதியிடம் கூறினான், அப்பொழுது மனதில் வலிதனை உணரத் தொடங்கினான். பின்னர் சுந்தரன் வேலைக்குச் சென்றான். மிக வேக வேகமாக வேலையை முடித்தான். வேலைதனை முடித்துவிட்டு மதிய வேளையில் வாசனிடம் பாரதி காதல் விசயம் பற்றி எதுவும் இனிமேல் பேச வேண்டாம் என்றான். வாசன் பாரதியிடம் இதுகுறித்து பேசுவதாக கூறினான். ஆனால் சுந்தரன் கூறிய விசயங்கள் கேட்டபின்னர், வாசன் இனிமேல் இது குறித்து பேசுவதில்லை என உறுதி அளித்தான். சுந்தரன், தனது காதலுக்கென இருந்த வாசன் எனும் ஒரு உதவி வாசலையும் திறக்கவே முடியாதபடி அடைத்தான். சூரியன் வேறு சுட்டெரித்தது.

(தொடரும்) 

No comments: