Friday, 7 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 10

முதலில் கதிரேசன் எடுத்துக்கொண்டது திருஞானசம்பந்தர் பற்றியது. தினமும் சிறிது சிறிதாக  படிக்க ஆரம்பித்தான். தனது கல்லூரிப் படிப்பும் படிக்க வேண்டும் என்பதால் அவனால் முழு கவனமும் இதில் செலுத்த இயலவில்லை. நாளடைவில் கல்லூரி படிப்பையே வேண்டாம் என ஒதுக்கும் அளவுக்கு மனம் நினைத்தது. இது குறித்து நீலகண்டனிடம் கூறியபோது பக்திக்காக அனைத்தையும் துறந்துவிடுவது என்பது நல்லதில்லை, இந்த உலகத்துக்கு ஏற்றதுமில்லை என்றே பதில் அளித்து இருந்தார்.

வாரம் தவறாமல் ஊருக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் கதிரேசன். கதிரேசன் வந்து செல்வதையே மிகவும் சந்தோசமாக கருதினார் செல்லாயி. கதிரேசனும் தனது எண்ணத்தை அன்னையிடம் கூற அவரோ வழக்கம்போல பதறினார். 'ஏன்பா உன் மனசு இப்படி போகுது' என்றே அழுதார். கதிரேசன் தனது மனநிலையை மறைக்க விரும்பவில்லை என்று அன்னையிடம் சொன்னபோது அன்னை ஆறுதல் உற்றார். மறைத்து வாழாத வாழ்க்கை அத்தனை சுலபமில்லை என்பதை அவர் அறிந்து இருந்தார். இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது.

திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாறு படித்தபோதுதான் சமண சமயம் பற்றி தெரிந்து கொண்டான் கதிரேசன். கி.பி ஆறாம் ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை நடந்த விசயங்கள் அவன் மனதை என்னவோ செய்துவிட்டது. அப்படிப் படித்தபோதுதான் திருநாவுக்கரசர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்ற விசயம் அறிந்து கொண்டான். அவனுக்கு மனதில் பல கேள்விகள் எழத் தொடங்கியது. ஒவ்வொரு கேள்வியையும் நீலகண்டனிடமே கேட்டுக் கொள்ள நினைத்தான். ஆனால் யாராலும் எளிதாக பதில் சொல்ல முடியாது என்ற ஒரு முடிவுக்கு வந்தான். ஆனால் தொடர்ந்து படிப்பதை நிறுத்தவில்லை ஆனால் பாடல் பாடுவதை சற்று காலம் நிறுத்தி இருந்தான்.

முதல் தேர்வு வந்தது. தேர்வோடு விடுமுறையும் வந்தது. அப்பொழுது நீலகண்டன் தனது மகள் இருக்கும் சங்கரன்கோவிலுக்குச் செல்வதாக குறிப்பிட்டு கதிரேசனையும் அழைத்தார். கதிரேசனுக்கு அவருடன் செல்ல மனம் இசைந்தது. ஊருக்குச் சென்று அன்னையிடம் கூறிவிட்டு வருவதாக சொன்னான். நானும் உடன் வருகிறேன் என நீலகண்டனும் கிளம்பினார். புளியம்பட்டியில் ஒருநாள் மட்டுமே தங்கினர். அப்பொழுது செல்லாயி நீலகண்டனிடம் தனது மகனின் நிலையைச் சொல்லி வருந்தினார். நீலகண்டன் மேலும் விசயங்கள் கூறி, கவலை வேண்டாம், எல்லாம் சிவன் பார்த்துக் கொள்வான் என்றார். சற்று ஆறுதல் அடைந்தார் செல்லாயி.

இருவரும் சங்கரன் கோவில் அடைந்தனர். தந்தையை சந்தோசத்துடன் வரவேற்றாள்  பார்வதி. தந்தையுடன் வந்த கதிரேசனையும் புன்னகையுடனே வரவேற்றாள். வீட்டினில் அவர்கள் அமர்ந்து இருக்க நீலகண்டனின் இருபது வயதான பேரன் சங்கரனும், பதினேழு வயதான பேத்தி ஈஸ்வரியும் உள்ளே நுழைந்தனர். வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். ஈஸ்வரியைக் கண்ட கதிரேசனது  மனம் முதன் முதலாய் ஒரு பெண்ணைக் கண்டு சற்றே அல்லாடியது.

ஈஸ்வரியும் கதிரேசனை தெரிந்தவள் போல் நன்றாகப் பேசினாள். இரண்டு நாட்கள் கடந்த வேளையில் சங்கரன்கோவிலில் இருந்த சிவன் ஆலயத்தில் அமர்ந்திருந்த கதிரேசன் தன்நிலை மறந்து நன்றாக உறங்கிவிட்டான். மாலைப் பொழுதும் கடந்து கொண்டிருந்தது. யாரும் அவனை எழுப்பிவிடாமல் சென்றது ஆச்சரியமாக இருந்தது. ''சிவனே என்ன பாவம் செய்துவிட்டேன்'' என்று சொல்லியவாரே அவனாகவே எழுந்தான். ''தூங்கினது பாவம் இல்லை'' என்றார் அருகிலிருந்தவர். சிவன் கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தபோது ஈஸ்வரியைக் கண்டான் கதிரேசன்.

ஈஸ்வரியிடம் அவளைக் கண்டதும் தனது மனதில் ஏற்பட்ட சலனத்தை நேரடியாகவேச் சொன்னான். அவள் பதிலேதும் பேசாமல் புன்னகைத்தவள் சிறிது இடைவெளிவிட்டு ''நீ சிவனே கதினு இருக்கறவனு எங்க தாத்தா சொல்லிட்டு இருந்தாரு'' என்றாள். ''ஆமாம் எனக்கு குடும்ப பந்தமே வேண்டாம்'' என்றான் கதிரேசன். ஆறு மாதம் இளையவளாக இருந்தாலும் துணிச்சலுடனே பேசினாள். ''வேண்டாம்னு நினைச்சப்பறம் எதுக்கு மனசு அலைபாயனும்'' என்று சொல்லிவிட்டு கோவில் நோக்கிச் சென்றாள். கதிரேசனின் மனம் ஓரிடத்தில் இல்லை.

கதிரேசனின் மனம் சஞ்சலம் கொண்டதை அறிந்து கொண்டார் நீலகண்டன். சிலநாட்கள் விடுமுறை இருக்கும்போதே செல்லலாம் எனச் சொன்ன நீலகண்டனிடம் விடுமுறையை கழித்துவிட்டுச் செல்லலாம் என கதிரேசன் சொன்னபோது நீலகண்டன் சஞ்சலத்திற்கான காரணம் தெரிந்து கொண்டார். ''சிவனை மட்டும் நீ நினைச்சி வாழ முடியுமா?'' என்றார் நீலகண்டன். கண்கள் நீரால் நிறைந்தது கதிரேசனுக்கு. ''சைவம் குடும்ப பந்தத்தை வெறுக்கச் சொல்லலை'' என்றார் நீலகண்டன். கதிரேசன் மனம் எதுவென முடிவுக்கு வரமுடியாமல் தள்ளாடியது.

(தொடரும்)

2 comments:

Thenammai Lakshmanan said...

அருமையான பகிர்வு ராதாகிருஷ்ணன்

''சைவம் குடும்ப பந்தத்தை வெறுக்கச் சொல்லலை'' //

நல்ல வார்த்தைகள்..நன்றி

Radhakrishnan said...

நன்றி தேனம்மை