Wednesday, 26 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 13

மதுசூதனனை உள்ளே அழைத்து அமர வைத்தான் கதிரேசன். என்ன விபரம் எனக் கேட்டபோது விடுதியில் தன்னால் ஒரு பெரிய பிரச்சினை உண்டாகிவிட்டதாகவும், தானே பொறுப்பேற்றுக்கொண்டு விடுதியை விட்டு வெளியேறி வந்ததாகவும் தனது ஊருக்கு தகவல் தந்துவிட்டதாகவும் கூறியவன் தங்குவதற்கு ஒரு இடம் தேட வேண்டும் என்றான். கதிரேசன் நீலகண்டன் எழுந்ததும் கேட்டு சொல்வதாக சொன்னான். ஆனால் மதுசூதனன் தனக்கு வேறு ஒரு இடம் வேண்டும் என்பதில் குறிப்பாய் இருந்தான். 

இருவரும் வெளியே சென்று தேடினர். அப்பொழுது வழியில் வந்த  நாமம் அணிந்த ஒருவரிடம் மதுசூதனன் தனக்கு எங்கேனும் ஒரு வீடு அறை வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்டான். என்ன விபரம் என கேட்டவரிடம் நான் வைணவன் என ஆரம்பித்து கதையை சொன்னான் மதுசூதனன். நாமம் அணிந்தவர் மதுசூதனனுக்கு தனது வீட்டிலேயே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். தனது வீட்டு முகவரி தந்துவிட்டு காலையில் வருமாறு சொன்னார். கதிரேசன் மகிழ்ந்தான். உனக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும்னு நினைச்சியா என சிரித்தான் மதுசூதனன். 

''எங்களோட தங்கி இருந்து இருக்கலாமே, ஏன் நாங்க சைவம்னு யோசிக்கிறியா?'' என்றான் கதிரேசன். ''இல்லை, நானும் சேர்ந்து எதுக்கு தொல்லை தரனும்னுதான் வேறு வீடு பார்க்கச் நினைச்சேன்'' என்றான் மதுசூதனன்.

இத்தனை நாள் சமண சமயம் பற்றி பேசாத கதிரேசன் அன்று சமண சமயத்தைப் பற்றி மதுசூதனனிடம் கூறினான். மதுசூதனன் கோபம் கொண்டவனாய் ''அது எல்லாம் வைணவத்தைப் பத்தி தப்பா சைவர்கள் எழுதியது'' என்றான். அதற்கு கதிரேசன் ''அப்படின்னா சைவத்தைப் பத்தி தப்பா வைணவர்கள் எழுதியதா?'' என்றான். மதுசூதனன் யோசித்தான். ''நீ நல்லாப்படிச்சிப் பாரு வேத மதம்னும், திருஞானசம்பந்தரைப் பத்தியும் கூட அவதூறா எழுதியிருக்காங்க'' என்றான் கதிரேசன். மதுசூதனன் ''ஏன் இப்போ இதைப்பத்தி என்கிட்ட பேசுற,  நானே விடுதியில ஒரு பிரச்சினைக்கு ஆளாகி வந்துருக்கேன், அப்படியிருந்தும்'' என கூறினான். ''இல்லை எனக்கு என்னமோ மொத்த வரலாறு திரிக்கப்பட்டு இருக்குனு மனசுக்கு தோணுது, அதான் உன்கிட்ட சொன்னா நீயும் என்ன ஏதுனு பார்ப்ப'' என்றான் கதிரேசன். ''பார்க்குறேன், ஆனா இப்ப வேணாம், நாளைக்கு நான் சிவநாதன் சாரை வேறப் பார்க்கனும்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விட்டான்.

உறங்கிக் கொண்டிருந்த நீலகண்டன் 'கதிரேசா கதிரேசா' என அழைத்தார். ''தாத்தா'' என்ற கதிரேசன் அவரது அறையில் விளக்கைப் போட்டுப் பார்த்தான். நீலகண்டன் கதிரேசனை அருகில் அழைத்து அவனது தலையில் கையை வைத்தார். அடுத்த சில விநாடிகளில் அவரது கண்கள் அசைய மறுத்தது. ''தாத்தா'' என அலறினான் கதிரேசன். மதுசூதனன்  அறைக்குள் ஓடி வந்தான்.

நீலகண்டனின் உடல் அசைவற்றுப் போனதைக் கண்டு பதறிய கதிரேசன் மதுசூதனனை அவர் அருகில் இருக்கச் சொல்லிவிட்டு மருத்துவரை அழைக்க ஓடினான். நீலகண்டனையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மதுசூதனன். திருநீறு இன்னும் அழியாமல் அவரது உடலில் ஒட்டி இருந்தது. திருநீறு தாங்கிய நெஞ்சில் தனது கையை வைத்தான் மதுசூதனன். பாடினான். குரல் தழுதழுத்தது.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

அவரது நெஞ்சில் கையை வைத்து பலமாக அழுத்தியபடியே பாடி முடித்தவன்  ''எம்பெருமானே சிவனே உதவி செய்யீரோ'' என ஓங்கி நெஞ்சை அழுத்தினான். திடுக்கிட்டு விழித்தார் நீலகண்டன். ''தாத்தா'' என அழைத்தான். ''செத்துட்டேன்னு நினைச்சேன், உயிர்ப்பிச்சைப் போட்டியோ'' என மதுசூதனனை படுக்கையிலிருந்தபடியே கைகள் எடுத்து கும்பிட்டார் நீலகண்டன். அவரது கட்டிலின் அருகில் இருந்த புத்தகத்தில் வரிகள் கண்டான் மதுசூதனன்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

அந்த வேளையில் மருத்துவருடன் கதிரேசன் உள்ளே நுழைந்தான். கதிரேசன் நீலகண்டன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான். நீலகண்டனைப் பரிசோதித்த மருத்துவர்  ''இப்போதைக்கு பயப்படுறமாதிரி ஒண்ணுமில்ல சில பரிசோதனை செய்யனும்'' எனக் கூறிவிட்டு நாளை அதிகாலை நீலகண்டனை மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு சென்றார். இருவரும் நீலகண்டனின் அறையிலேயே இருந்தார்கள். நீலகண்டன் மேற்கொண்டு பேசாமல் தூக்கம் வருவதாக தூங்கினார்.


''என்ன செய்தாய், எப்படி எழுந்தார்'' எனக் கேட்டான் கதிரேசன். தான் தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட முதலுதவி செய்தேன் என்றான் மதுசூதனன். மதுசூதனனை கட்டிப்பிடித்தான் கதிரேசன். தூக்கம் கண்களைச் சுழட்ட கட்டிலுக்கு அருகிலேயே உறங்கினார்கள்.

நீலகண்டன் காலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு பூசிக்கொண்டு வழக்கம்போல பூஜை அறையில் அமர்ந்தார். அவருடன் கதிரேசனும் அமர்ந்தான். சிறிது நேரத்தில் மதுசூதனனும் பூஜை அறைக்குள் நுழைந்தான். ''பெருமாளை அங்க வைச்சி நீ பூஜை பண்ணு'' என பூஜை அறையில் ஓரிடம் காட்டினார் நீலகண்டன். 


பூஜைகள் முடிந்து மருத்துவமனைக்குச் சென்றார்கள். அதிகாலையிலேயே நீலகண்டனின் இதயம், இரத்தம் சிறுநீர் என பரிசோதனை தொடங்கியது. கல்லூரிக்குச் செல்லும் வேளை நெருங்கிட மதுசூதனனை கல்லூரிக்குப் போகச் சொன்னான் கதிரேசன். மதுசூதனன் உடனிருப்பதாக சொன்னான். சில நாட்கள் கழித்து வரச் சொன்னார் மருத்துவர். வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தார் நீலகண்டன். கதிரேசன் சங்கரன்கோவிலுக்கு தகவல் சொன்னான். கல்லூரிக்கு செல்லாமல் அவருடனே இருந்தான்.

மதுசூதனன் புதிய வீட்டிற்கு சென்று தனது பொருட்களை வைத்துவிட்டு மதிய வேளையில் கல்லூரியில் சிவநாதனை சந்தித்தான். சிவநாதன் அவனை கடுமையாக எச்சரித்தார். சாதி மத வேறுபாட்டினை எவரேனும் தூண்டும் வகையில் நடந்தால் கல்லூரியில் இருந்து விலக்கிவிடுவதாக கூறினார். தனது தவறை உணர்ந்த மதுசூதனனுக்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதாக கூறி அனுப்பினார். கல்லூரியில் மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டனர்.

அன்று மாலையில் அனைவரும் சங்கரன்கோவிலில் இருந்து வந்து சேர்ந்தார்கள். நீலகண்டனை அவர்களுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள். கதிரேசன் தனித்து தனியாய் நின்றான். மதுசூதனன் அப்பொழுது நீலகண்டனின் வீட்டிற்குள் நுழைந்தான். 


(தொடரும்) 

2 comments:

Chitra said...

சிவநாதன் அவனை கடுமையாக எச்சரித்தார். சாதி மத வேறுபாட்டினை எவரேனும் தூண்டும் வகையில் நடந்தால் கல்லூரியில் இருந்து விலக்கிவிடுவதாக கூறினார். தனது தவறை உணர்ந்த மதுசூதனனுக்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதாக கூறி அனுப்பினார். கல்லூரியில் மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டனர்.


...... சரியாக கருத்துக்களை கதைக்குள் கொண்டு வருவது நன்றாக இருக்கிறது..... பாராட்டுக்கள்!

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா.