Monday, 31 May 2010

எழுதி சாதித்தவைகள்

ராமநாதன் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிறப்பவே நினைச்சேன், எதுனாச்சும் வில்லங்கமா பேசத்தான் செய்வான்னு. என்னைப் பார்த்து 'என்ன எழுதி கிழிச்சிட்டு இருக்க' அப்படினு சொன்னதும்தான் தாமசம் எனக்கு கோவம் வந்துருச்சு.

''உன்னால எழுத முடியலன்னா அதுக்கு என்னை எதுக்கு இப்படி மட்டமா பேசற' அப்படினு சொன்னதோட நில்லாம எழுந்து ஒரு அறை விட்டேன். பதிலுக்கு அவன்  'நீ அடிக்க எல்லாம் தேவை இல்ல,  உன் கூட பழகுனேன்  பாரு, அதுவே நீ  எனக்கு  தரும் பெரிய தண்டனை' அப்படினு சொல்லிட்டு விறுவிறுன்னு போனான்.

என்ன இவன் இப்படி சொல்லிட்டு போறான்னு அவன் பின்னாடியே ஓடிப்போய் இழுத்துட்டு வந்தேன். அவனுக்கு ஒரு காபி ஆத்தி கொடுத்தேன். நான் எழுதி எவ்வளவு சாதிச்சி இருக்கேன் தெரியுமா, என்னை பாத்து என்ன எழுதி கிழிச்சிட்டு இருக்க அப்படினு சொன்னா எனக்கு எத்தனை கோவம் வரும். ''ஆமா அப்படி என்னத்தத்தான் எழுதி கிழிச்ச'' அப்படினு அடி வாங்கினப்பறமும் கேட்டான். இனி சும்மா இருந்தா அவ்வளவுதான்னு என் சாதனையை பட்டியலிட்டேன்.

அ ஆவன்னா எழுதி தமிழ் எழுத கத்துகிட்டேன். ஒவ்வொரு தடவையும் பரீட்சையில் பாஸ் பண்ணினது எக்ஸாம் எழுதித்தான். அது தெரியுமா. நான் நாலாப்பு படிக்கிறப்பவே நாகுல்சாமி அண்ணன்  ஒரு லவ் லெட்டரு எழுதித் தர சொல்லிச்சி, அதை நான் தான் எழுதினேன் அது தெரியுமா. பாம்பேல இருக்கிற பையனுக்கு கடிதாசி எழுத சொல்லி பங்கஜம் அத்தை வந்து நிக்கிறது என்கிட்டதான். ஆறாப்பு படிக்கிறப்ப அம்சமா இருந்த முத்துமாரிக்கு ஒரு லவ் லெட்டர் எழுதித்தான் என் லவ்வை சொன்னேன். உன்னால சொல்ல முடியுமா? அதுக்கும் என்கிட்டதான் வந்து நிற்ப. மரத்துல, கல்லுல, சுவத்துல எங்க ரெண்டு பேரை செதுக்கி வைச்சேன் நீயும் தான் பாத்துட்டு பல்லிளிச்ச.

ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், வாரமலர்னு வாசகர் கடிதம் ஒன்னு தவறாம வருமே அது நான் எழுதி அனுப்புனதுதான். எப்படி திட்டி திட்டி எழுதி இருப்பேன், உனக்கு என்ன தெரிய போகுது. அதோட மட்டுமா முதல்வர் அண்ணாச்சிக்கு நம்ம ஊருல இருந்து மனு எழுதி போடறதே நான் எழுதித்தான். அதோடு மட்டுமா ரோடு போட கொடுத்த காசுல எவ்வளவு காசு அமுக்கினான் இசக்கிமுத்து, அவனுக்கு மொட்ட கடிதாசி போட்டது நான் எழுதித்தான். திருவிழா, அரசியலுன்னு வரப்ப நோட்டீசுக்கு எழுதி தரது நான் தான், சுவத்துல எழுதரதும் நான் தான். என்னமோ பேசற.

இப்படி நான் சொல்லிட்டே இருந்தப்ப உஷ் உஷ்னு காபிய உறிஞ்சிகிட்டே இருந்தான். நான் இடையில நிறுத்தினதும் 'ப்பூ இவ்வளவுதானா' அப்படினு சொன்னதும் அவனை அப்படியே சுவத்துல வைச்சி முட்டலாம்னு இருந்திச்சி.

இப்ப என்ன எழுதுறேன்  தெரியுமா, உன்னை மாதிரி எழுத படிக்க தெரியாத முட்டாள்கள் எல்லாம் கட்டாயம் எழுதப் படிக்கனும் அப்படி இல்லைன்னா இவனுகளை சாவடிக்கனும் அப்படினு ஆனந்த விகடனுக்கு, குமுதத்துக்கு  எழுதிட்டு இருக்கேன். போதுமா? அப்படினு நான் சொன்னதும் தான் தாமசம் 'குபுக்'னு சிரிச்சான்.  அதோட விட்டானா 'இங்கிதமே தெரியாம எழுதற உன்னை மாதிரி ஆளுக எல்லாம் எழுத படிக்க தெரிஞ்சும் முட்டாப்பையலுக' அப்படினு சொன்னான். அவனை நல்லா மொத்தினேன். இனிமேலும் இவனை விடக் கூடாதுன்னு அவனை பத்தியும் அவனோட கொழுந்தியா பத்தியும் பம்புசெட்டுல தப்பு தப்பா இன்னைக்கு நைட்டு எழுதிற வேண்டியதுதான். இப்படி என்னவெல்லாமோ எழுதி சாதிச்சிட்டு இருக்கற என்னை பாத்து அவன் இனிமே கேள்வி கேட்பானா?!

4 comments:

பிரேமா மகள் said...

அது சரி......

Radhakrishnan said...

மிக்க நன்றி லாவண்யா.

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு.

Radhakrishnan said...

நன்றி ஐயா.