Monday, 10 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 11

கதிரேசனுக்கு ஈஸ்வரியின் வார்த்தைகள் மனதில் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தன, அதே வேளையில் நீலகண்டனின் வார்த்தைகள் மனதில் சின்ன ஆறுதலை தந்து கொண்டிருந்தது. இரவெல்லாம் யோசித்தான். திருஞானசம்பந்தருக்கு நடந்த திருமணம் நினைவில் ஆடியது. திருமணம் நடந்த மறுகணமே திருஞானசம்பந்தர், அவரது மனைவி என அனைத்து குடும்பத்தாரும் சிவனுடன் இணைந்து ஐக்கியமானது நினைவில் வந்து ஆச்சரியம் தந்தது. ஒருவழியாய் ஒரு முடிவுக்கு வந்தான். முடிவுக்கு வந்த மறுகணம் நிம்மதியாக தூங்கியும் போனான்.

மறுதினம் கோவிலில் வைத்து ஈஸ்வரியிடம் ''நீ என்னை காதலிப்பாயா?'' என்று கேட்டான் கதிரேசன். ''காதலைச் சொல்லிக் கொண்டா காதல் புரிவார்கள்'' என்றாள் ஈஸ்வரி. ''எனது கேள்விக்கு பதில் இல்லையே?'' என்றான் கதிரேசன். '' பெண்கள், ஆண்கள் போல் காதலில் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டார்கள் பெண்கள். நிதானமாகவே ஒரு முடிவுக்கு வருவார்கள். எடுத்துக்கொண்ட முடிவில் எந்த ஒரு மாற்றமும் அவர்களால் செய்து கொள்ள முடியாது. அவசரப்பட்டு எடுத்த முடிவால் அல்லோகலப்படும் ஆண்களும் சரி, நிதானமாகவே எடுத்த முடிவால் அல்லோகலப்படும் பெண்களும் சரி, காதலில் மிக அதிகம்'' என்றாள் ஈஸ்வரி. ''எனது கேள்விக்கு பதில் இல்லையே?'' என்றான் கதிரேசன் மீண்டும். ''அந்த சிவனை போய் கேளுங்கள், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?'' என்றாள் அவள். ''எனக்கு இதுவரை சிவன் உடனடியாக எதற்கும் பதில் சொன்னதில்லை'' என்றான் கதிரேசன்.

மாணிக்கவாசகர் பாடியது தெரியுமா? என்றாள் ஈஸ்வரி. கதிரேசனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மாணிக்கவாசகர் பற்றி தாத்தா போலவே கேட்கிறாளே என யோசனையுடன் ''என்ன பாடினார்?'' என்றான் கதிரேசன்.

'வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்'

'கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன; ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும்'

இப்படியெல்லாம் பாடி இருக்கிறார் என அவள் பாடிக் காட்டியபோது கதிரேசன் அவளது குரல் இனிமை கண்டு போற்றினான். ''குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது ஈஸ்வரி'' என்றான். ''மனதுக்குப் பிடித்தவர்கள் எதைச் செய்தாலும் இனிமையாகத்தான் இருக்கும், மனதுக்குப் பிடிக்காது போனால் நல்லதே செய்தாலும் கசக்கத்தான் செய்யும், இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே'' என்றாள் ஈஸ்வரி.

''நீ என்னை காதலிப்பாயா?'' என மறுபடியும் கேட்டு வைத்தான். ''மாணிக்க வாசகர் பாடியதன் அர்த்தம் தெரியுமல்லவா?, நீ சிவனே கதி என இருந்தால் என் கதி என்ன ஆகும்? நான் மிகவும் யோசித்துத்தான் எதையும் சொல்ல முடியும், எதற்கும் என் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்'' என வெகுவேகமாகச் சென்றுவிட்டாள். கதிரேசன் அச்சம் கொண்டான். நீலகண்டன் தாத்தாவை நினைக்கும்போது மனம் படபடவென அடித்தது. ஆனால் ஈஸ்வரி அவளது தாயிடம் கேட்கமாட்டாள் என நினைத்து ஆறுதல் கொண்டான். இருந்தாலும் தான் தவறிழைத்து விட்டோமோ என அச்சம் கொண்டு வீட்டுக்குச் செல்லாமல் சங்கரன் கோவிலின் தெருக்களை சுற்றிக் கொண்டிருந்தான்.

சங்கரன் கோவிலில் இருந்த  தெருக்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. தெருக்களின்  இருபுறமும் வீடுகள் திண்ணைகள் கொண்டு கட்டப்பட்டிருந்தன. மாடமாளிகைகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதமாகவே கட்டிடங்கள் இருந்தன. சுவர்கள் வெண்மையாகவே இருந்தது ஆச்சரியம் தான். தரைகளில் கால் இடறி விட கற்கள் ஏதும் சிதறிக் கிடைக்கவில்லை. தெருவில் இருந்து எட்டிப் பார்த்தால் கோவில் கோபுரம் பிரகாசமாகவே தெரியும். அந்த மதிய வெயிலிலும் தாமிரபரணி ஆற்றில் தலை நனைத்து விட்டு வரும் காற்று மிகவும் சுகமாகவே வீசிக் கொண்டிருந்தது. இதே ஊரில் தனது வாழ்க்கையை கழித்துவிட வேண்டுமென கணக்குப்  போட்டுக்  கொண்டது கதிரேசன் மனம்.

வீட்டிற்குச் சென்ற ஈஸ்வரி அவளது அம்மாவிடம் கதிரேசன் கேட்ட விசயத்தையும் தான் சொன்ன விசயத்தையும் அப்படியே ஒப்பித்துவிட்டாள். பார்வதிக்கு கோபம் வந்தது. ஈஸ்வரியைத் திட்டியவர், என்ன முறையில்லாமல் நடந்து கொள்கிறான் அவன் என உடனே தனது தந்தையிடம் நடந்த விசயத்தைக் கூறினார். நீலகண்டன் பார்வதியை பொறுமையாக இருக்கச் சொன்னார். ஆனால் பார்வதி ''இது பொறுமையாக இருக்கக்கூடிய விசயமல்லப்பா, சின்ன பிள்ளை மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கியிருக்கான் அவன். அவனை சிவன் பக்தனு சொல்றீங்க, என் கணவர் வந்தா பிரச்சினை ஆகும், அவனை கண்டிச்சி வைங்கப்பா, விருந்தாளியா வந்த இடத்தில ஏன் இப்படி நடந்துகிறான் அவன்'' என்றே போர்க்கோலம் கொண்டாள் பார்வதி. அதுவரை அமைதியாய் இருந்த ஈஸ்வரி ''அம்மா அவன் என்னை காதலிக்கிறேனு சொல்லலைம்மா, அவனை நான் காதலிப்பேனானுதான் கேட்டான், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குமா'' என்றாள் ஈஸ்வரி. பார்வதி ஈஸ்வரியை உக்கிரக் கண்களுடன் பார்த்தாள். நீலகண்டன் பார்வதியை சமாதானப்படுத்தினார்.

கதிரேசன் மாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டில் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து விவாதித்து கொண்டு இருந்தார்கள். கதிரேசனை கண்டதும் அறையில் நிசப்தம் நிலவியது. கதிரேசனின் மனதில் பயம் மிகவும் அதிகமாகவே தொற்றிக் கொண்டது.

(தொடரும்)

3 comments:

Chitra said...

''மனதுக்குப் பிடித்தவர்கள் எதைச் செய்தாலும் இனிமையாகத்தான் இருக்கும், மனதுக்குப் பிடிக்காது போனால் நல்லதே செய்தாலும் கசக்கத்தான் செய்யும், இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே'' என்றாள் ஈஸ்வரி....... எதார்த்தம். சரியா சொல்றீங்க.

vasu balaji said...

நீரோடை மாதிரி ஓட்டம் அழகு வெ.இரா.

Radhakrishnan said...

நன்றி சித்ரா

நன்றி வானம்பாடிகள் ஐயா.