Friday, 14 May 2010

எனக்குப் பிடித்த ஆழ்வார்கள்

மதம் என்பதெல்லாம் கடந்து ஒரு பார்வை இருக்குமெனில் அதில் இருக்கும் ரசனைகள் அத்தனை அழகு. இதைத்தான் தெய்வீக உணர்வு என சொல்வார்கள். மதம் கடந்த ஒரு உணர்வு இருப்பது மிக மிக அவசியம் தான். இப்பொழுது ஆழ்வார்கள் என எடுத்துக்கொள்ளும் போது இந்து மத சாயலும், இந்து மத உட்பிரிவான வைணவ சாயலும் வந்து சேரும். அதைத் தவிர்த்து விட இயலாது. ஆனால் அதையும் தாண்டிய  ஒரு பார்வை என்பது ஒரு வித பூசி மொழுகுதல் என்றே அர்த்தப்படும்.ஆனால் எனக்கு இந்த மதம் தாண்டிய வாசம் பிடித்து இருக்கிறது.

இந்த ஆழ்வார்கள் பிடித்துப் போனதால் எனக்கு எந்த சாயமும் தேவை இல்லை. இப்படித்தான் எனக்குப் பிடித்தவர்கள் என ஒவ்வொரு மனிதரைப் பற்றி எழுதும் போது அவர் என்ன மதம், என்ன சாதி என்பதெல்லாம் ஒரு விஷயமாகவே முன் வைக்கப்படக் கூடாது என்பது எனக்கு சௌகரியமாக இருக்கும். ஆனால் எனது துரதிர்ஷ்டம் இவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய சாயம் பூசப்பட்டு விட்டது, அல்லது பூச வேண்டிய சூழலுக்கு  தங்களை உட்படுத்திக் கொண்டார்கள்.

பன்னிரண்டு  ஆழ்வார்கள் என சொன்னதும் எனக்குள் எழுந்த கேள்வி, எதற்காக பன்னிரண்டுடன் நின்று போனது என்பதுதான். அதற்கடுத்து எவருமே ஆழ்வார்கள் ஆகும் தகுதியைப் பெறவில்லையா என யோசித்தபோதுதான் ஆழ்வாரோடு நாயன்மார்களும் எனும் கவிதை எழுந்தது.

நான் குடும்பஸ்தன். சகல ஆசைகளும் உடையவன். எனக்கு கடவுள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். என் தேவைக்கு கடவுள் எனக்குத் தேவை எனும் சுயநலம் நிறைந்த மனிதர்கள்  வாழும் உலகில் இந்த ஆழ்வார்களுக்கு எப்படி கடவுள் முதலாகிப் போனான்? ஒரு கால கட்டம் கடந்ததும் தங்களை இறைப்பணிக்கு என ஒதுக்கிக் கொண்டார்கள். கடவுளை தொழுது வாழும் வாழ்க்கை என்பது கடினமானது.

இதைத்தான் எனது தந்தை அடிக்கடி சொல்வார். திருவள்ளுவர் நெசவுத் தொழிலாளர். அவர் ஒருவரிடம் நூல் வாங்கி வேலை செய்வது உண்டு. ஒரு முறை  திருவள்ளுவர் நூல் விற்பவரை காண வீட்டுக்குச் செல்கிறார். அப்பொழுது நூல் விற்பவரின் மனைவி அவரது கணவர் பூஜை அறையில் இருப்பதாக சொல்கிறார். அதற்கு திருவள்ளுவர் பூஜை அறையில் இருக்கிறாரா, நூல் கணக்கை சரி பார்க்கிறாரா எனக் கேட்கிறார். உடனே நூல் விற்பவர் பூஜை அறையில் இருந்து ஐயனே என திருவள்ளுவரை நோக்கி ஓடி வருகிறார்ர். என் மனதில் பூஜை அறையில் இருந்து கொண்டு நூல் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் என வருத்தம் தெரிவிக்கிறார். அதாவது தனது மனதில் சகல ஆசைகளும் வைத்துக் கொண்டு இருப்பவர்களால் தெய்வத்தை உண்மையாக தொழுதல் சாத்தியம் இல்லை என்பதுதான் இந்த விசயத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் நீதி.

இப்படி எல்லா நேரங்களிலும் உலக வாழ்க்கையை பற்றிய பெரும் சிந்தனையில் இருந்து விலக முடியாமல் இருக்கும் என்னால் எப்படி கடவுள் மீது ஒரு உண்மையான பக்தியை செலுத்த இயலும். வெறுமனே இறைவா என இரு கை கூப்பி கோவில் சென்று வணங்குவதால் நான் ஒரு பக்தனாக முடியுமா? கவிதையில் முடித்தேன். நாணிக் கொள்கிறேன்  என!

மதம் தாண்டிய ஒரு பார்வை மட்டுமல்ல. தனி மனிதருக்கு என சொந்தம் அல்லாத கடவுள் எனும் பார்வை மிகவும் சுகம் தரும். எனினும் இறைவனை தனது சொந்தம் என கொண்டாடிய இந்த ஆழ்வார்கள் எனக்குப் பிடித்துப் போனார்கள். ஆழ்வார்கள் மட்டுமா? என்றால் இல்லை என்றே சொல்வேன்.

யார்  அந்த பன்னிரண்டு ஆழ்வார்கள். ஆண்டாள், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், திருமங்கயாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார். இந்த ஆழ்வார்கள் பற்றி  படிக்க இதோ இந்த தளத்தை அணுகலாம். வேறு பல தளங்களும் இருக்கும். மிகவும் சுவாரஸ்யமாகவே எழுதிஇருக்கிறார்கள். பேயாழ்வார், பூதத்தாழ்வார் என இருவருக்கும் ஒரே விஷயத்தை எழுதி இருக்கிறார்கள்.

ஆண்டாள் பற்றி முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன். திருப்பாவை பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்ததாகும். அதைப் போன்றே தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பச்சை மாமலை போல் மேனி எனும் பாடல் எனக்கு மிக மிகப் பிடித்தது. இதை அடியார்க்கெல்லாம் அடியார் கதையில் நான் உபயோகப்படுத்திய இடம் சற்று வித்தியாசமாக இருந்தது என தோழி ஒருவர் சொன்னபோது அட இப்படியும் அமையுமோ என எண்ணத் தோன்றியது. அடுத்ததாக   பெரியாழ்வார் எழுதிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்னை மெய் மறக்கச் செய்யும். 

இப்படி ஆழ்வார்கள் பிடித்தது மட்டுமின்றி நாயன்மார்களும் மிகவும் பிடித்துப் போனார்கள். இவர்களுக்குள் சண்டை சச்சரவு இருந்தது உண்டு எனவும் யார் பெரியவர் எனும் போட்டியும் இருந்தததாகவும் கதைகள் உண்டு. இரு இயக்கங்கள் என இருந்தால் யார் பெரியவர் எனும் சச்சரவு இருக்கத்தான் செய்கிறது, ஒரு இயக்கமென இருந்தாலும் ஏற்படும் சச்சரவு தவிர்க்க இயலாதுதான்.

அரசராக இருந்தவர் ஆழ்வாரானார் அவர் குலசேகர ஆழ்வார். வழிப்பறி செய்து இறைவன் தொண்டு செய்த ஆழ்வார் எனவும் இருந்தார் அவர் திருமங்கை ஆழ்வார் . என்னதொரு விளக்கம் தந்தாலும் எனக்கு இவர் இப்படி செய்ததில் உடன்பாடில்லை. நம்மாழ்வார் மிகவும் போற்றப்படுகிறார். இவரை புகழ்ந்து பாடியே ஒருவர் ஆழ்வார் ஆனார் அவர் மதுரகவி ஆழ்வார்.  

இவர்கள்  பாடிய பாடல்கள் என நாலாயிர திவ்விய பிரபந்தம் எனும் இசைத் தட்டு வாங்கி வைத்து இருகிறேன். தமிழ் வரிகளுக்காக இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்தான்.

8 comments:

மாடல மறையோன் said...

தலைப்பைப்பார்த்தவுடன் வியப்பில் ஆழ்ந்தேன்: இப்படியும் ஒருவரா? ஆழ்வார்கள் பதின்மர் (12); அவர்கள் அனைவரையும் அவர்களைப்படித்தவர்களுக்குப் பிடிக்காமலிரா. அப்படியிருக்க, இங்கு ஒருவர், அவர்களுள் சிலரைப் பிடிக்கவில்லையென்கிறாரோ?

கடைசிப்பத்தியில் அதையும் சொல்லிவிட்டீர்கள் தனக்கு திருமங்கை ஆழ்வார் செய்தது பிடிக்கவில்லையென்று. இல்லையா?

உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ, அதனாலேயே அவ்வாழ்வார் சிறப்பெய்துகிறார்.

Radhakrishnan said...

:) பொதுவாக ஒருவரை பிடித்து இருந்தாலும் சில செயல்கள் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கும். அதற்காக அவரை பிடிக்கவில்லை என அர்த்தம் கொள்ளல் ஆகாது. அது போலவே திருமங்கையாழ்வாரின் செயலில் எனக்கு உடன்பாடில்லை, மற்றபடி எனக்கு எல்லா ஆழ்வார்களும் பிடிக்கும். அவர்களது பாடல்கள் போற்றும்படி சிறப்பு வாய்ந்ததவை.

எனக்குப் பிடித்ததாலோ, பிடிக்காமல் போவதாலோ ஆழ்வார்கள் சிறப்பெய்துவது இல்லை. அவர்களின் திருப்பணியின் மூலம், தமிழ் பாடல்கள் மூலம் சிறப்பானவர்களாகவேப் போற்றப்படுகிறார்கள்.

நன்றி ஐயா.

Unknown said...

நல்லாயிருந்ததுங்க இராதா... :)

Radhakrishnan said...

நன்றி டி.ஆர். அசோக்

vasu balaji said...

ஆவலைத் தூண்டும் ஆழ்வார்கள் அறிமுகம்:).

தமிழ் உதயம் said...

மாறுபட்ட படைப்பு. விரும்பி படித்தேன்.

தோழி said...

ஆழ்வார்களின் தமிழ் எளிமையான அழகுடையது.அத்தகைய உன்னதமான பக்தி இலக்கிய வகையினை அருளிய ஆழ்வார்களைப் பற்றிய தங்களின் அறிமுகம் நன்றாயிருக்கிறது. தொடர்ந்து ஆழ்வார்களைப் பற்றிய பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்..

Radhakrishnan said...

நன்றி வானம்பாடிகள் ஐயா, நன்றி தமிழ் உதயம் ஐயா, நன்றி தோழி.