Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday 15 December 2011

இவர்கள் எல்லாம் ஏன் எழுதுவதில்லை

சேவல் கூவும் முன்னர் எழுந்திருந்து, சூரியன் உதிக்கும் முன்னர் வாசல் தெளித்து, கோலம் இட்டு பழைய சோற்றினை பாங்காய் உண்டு களை எடுத்திட காட்டுக்கு விரைந்து நெற்பயிர்களும், சோலைக் கதிர்களும் வளர வழி செய்து, ஆட்டுக்கும், மாட்டுக்கும் புல் கட்டு சுமந்து ஓயாமல் ஆடியாடி ஓடியாடி வேலையே கதியென கிடக்கும் இவர்கள் ஏன் எழுதுவதில்லை?

பூமியை தோண்டி அதற்குள் சிமேண்ட்டையும், கற்களையும் குழைத்து போட்டு வீடு கட்ட செங்கலும், சுண்ணாம்பு கலவையும் சுமந்து திரியும் சித்தாள்களும், பிதாகரஸ் தியரம் தெரியாது போனாலும், அல்ஜீப்ரா, டிரிக்நோமேட்ரி என எதுவும் புரியாது போனாலும் விழுந்து விடாத வீட்டை வலுவாக கட்டி வைக்கும் கொத்தனார்களும் ஏன் எழுதுவதில்லை?

உயிருக்கு போராடும் மாந்தருக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாது இரவும் பகலும் கண் விழித்து வாந்தியையும் வாடையையும் பொருட்படுத்தாது உயிர் காப்பாற்ற உழைக்கும் நர்ஸ்களும், சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் அறுவை சிகிச்சை அறையிலேயே அடைந்து கிடக்கும் மருத்துவர்களும் ஏன் எழுதுவதில்லை?

மௌனமாய் மரத்தின் கீழ் அமர்ந்து மாபெரும் சோதி கண்டபின்னும் தான் கண்டது கடவுளென கூறாமல் கலையாத தவம் கொண்டோர்களும், குப்பை நிறைந்த சாலைகளை துப்புரவாக்கி, பசியென அலையும் பலருக்கு அன்னம் தயாரித்து சமூக சேவகமே தனது சிந்தனையாய் போராடுபவர்கள் ஏன் எழுதுவதில்லை?

உரிமைகள் தொலைந்தது என உயிரை தந்து உரிமை மீட்டிட ஒரு வாய் சாதம் கூட நிம்மதியாய் உட்கார்ந்து சாப்பிட வழியின்றி சமூக அவலங்களை துடைத்திட துடியாய் துடிப்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?

கருமமே கண்ணாய், காரியமே கருத்தாய் கண்ணீர் துடைப்பதே செயலாய் முதியோர்களுக்கு குழந்தைகளாய், ஆளில்லார்க்கு ஆளாய் அவதியை இன்பமாய் பாவித்து வாழ்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?

Wednesday 5 October 2011

தடைகற்கள்

பாதையில் பல கற்கள்
போதையில் விழுந்தவனை போல
தடுமாறி கிடக்கின்றன
தள்ளி வைப்பார் எவருமில்லை

கற்களால் குத்துபட்டோ வெட்டுபட்டோ
கடந்து சென்றவர்கள் மிச்சம்
கற்களை கடத்தி வைத்தவர்கள்
கொஞ்சம் கூட மிச்சமில்லை

தடைகற்கள்தனை பிறர் தாண்டிய விதம்
தாண்டுவோரை மலைக்க வைப்பதில்லை
வெட்டுபட்டும் குத்துபட்டும்
கடந்து கொண்டே இருக்கிறார்கள்

தடைகற்கள் அகற்றுவதாய்
சாமியும், சாமி துதிபாடும் பூசாரியும்
தலைவரும், தலைவர் துதிபாடும் தொண்டரும்
மனிதர்களில் குறைச்சல் இல்லை

தடைகற்கள்தனை பொடிப்பொடியாய்
உடைத்துப் போட்டாலும்
தடைகற்கள் தடைகற்களாய்
உடை உடுத்தி கொள்தல் அபாயமோ!

Sunday 1 May 2011

கூட்டி கழித்தல்

கூட்டி கழித்தல் 
மனிதர்களின் அற்புத விளையாட்டு 

தேவையெனில் கூட்டுவதும்
தேவையற்றதெனில் கழித்தலும்
பரம்பரையாய் வந்த விளையாட்டு 

லாப கணக்குதனில் கூட்டுதலும்
நஷ்ட கணக்குதனில் கழித்தலும்
கால கணக்குகளின் விளையாட்டு 

கூட்டுதலிலும் கழித்தலிலும் 
மனம் வைத்தே பெருக்குவதில்
சிறுத்து போன மனித விளையாட்டு! 


Friday 19 November 2010

அவள் அழகாகத்தான் இருந்தாள்

கவிதைக்கு வார்த்தைகள் தேடியபோது
கவிதையாகத்தான் இருந்தாள் அவள்

கண்ணுக்கு நிறைந்தவளாய்
மண்ணில் இருந்தாள் அவள் மட்டும்

கதைகள் பேசி சிரித்திட
கவலைகள் எல்லாம் மறந்திட
மனதில் நிழலாய் நிஜமாய் அவள்


அழகின்றி போனது என் காதல்
அவளின்றி போனதால்


அவள் அழகாகத்தான் இருந்தாள்
நூறு வயது ஆனபின்னும்



படம் நன்றி : கூகிள்

Tuesday 28 September 2010

நான் இறந்து போயிருந்தேன்

 நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

பதினேழு முறை
நான் கொண்டு சென்று
பதினெட்டாம் முறையாய்
நான் இறந்து போனபின்

அஷ்டோத்திர மந்திரம் கற்று
உலகம் நலம் பெற வேண்டுமெனும்
ஒரு உயரிய உள்ளம் கொண்ட
அடியேன் ராமனுஜதாசன்
கதை கேட்டு

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உள்ளூர மோதியபோது

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

நான் நான் நான்
என நாணமே இல்லாமல்
செருக்குடன் கிறுக்குப் பிடித்த
நான் நான் நான் 

நான் இருந்தபோது
கவலைகள் என்னை
தின்று கொண்டிருந்தது

நான் இறந்தபோது
கவலைகளை
தின்று கொண்டிருந்தேன்.

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது




கவிதைகள் எழுதி மின்னஞ்சல் அனுப்ப : bharathphysics2010@gmail.com

Thursday 5 August 2010

விருதுகளும் நானும்

அழகா இருக்கேடா
என் கண்ணு பட்டுடும் போலிருக்கு 

அம்மா அன்பாய்
அணைத்து தந்த முத்தம்

என் பிள்ளை சிங்கக்குட்டி
கட்டிபிடித்த தந்தை

வெற்றி கூட
வெறுமையாய்  தெரிகிறது 
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!

Monday 2 August 2010

பரிதாபங்கள் அவசியமோ?



இப்படம் கண்டதும்
"ஸ்" எனும் சப்தம் என்னுள்

எனது கவிதை வார்த்தைகள்
முடமாகிப் போயின

பரிதாபங்கள்
நம்பிக்கைகளை
படுகுழியில் தள்ளுமோ!

Friday 23 July 2010

சிதறல்கள்

ஒன்றாய் ஒடுக்கியே வைத்திருந்த
நட்சத்திரக்குடும்பத்தை பால்வெளிவீதி அமைத்து
சிதறி விளையாடிவிட்டு சிறப்பிக்கின்றாய்
ஒன்றாய் சேர்த்திட வழித்தெரியுமோ

துகள்கள் சிதறியே பாறையானது
பாறை சிதறியே துகள்களுமானது
அண்டவெளியில் காற்றைச் சிதறியும்
கண்ணுக்கு உட்படாது இருப்பதோ

சிதறிய மேகம் மழைத்துளியோ
சிதறிய கடல் நீராவியோ
ஒளியும் சிதறியே ஊடுருவும்
எட்டாத தொலைவும் எட்டுமோ

வெடித்துச் சிதறும் விதைகள்
ஒற்றை மரமாய் சிதறும்
நிலமதில் பழங்கள் பரவும்
ஒன்றாய் இருந்தது பலவகையானதோ

மொத்தம் மொத்தமாய் கூடிய
அத்தனை உருவும் சிதறியது
சிறகை சிதறலில் விரித்தே
பிரிவினையை சேர்த்துக் கொண்டதோ

ஒன்றே என்பதை உணராமல்
ஒழுங்காய் சிதறத் தெரியாமல்
வார்த்தை சிதற விட்டவன்போல்
வழியில் பழி கொண்டதோ

தனித்தனியாய் சேர்ந்த சிதறல்கள்
இணைந்து சிறப்பு எய்திடுமோ
சிதறல்கள் ஒன்றாய் சேர்வதில்லையெனில்
மன உதறல்கள் உண்மையன்றோ!

Wednesday 14 July 2010

அதிகாலை குருவிகள்




சூரியனே


குயில்கள் குரல் கேட்க குளிர்ச்சியாய்

எழுந்து வந்தாயோ

செந்தூர வானத்தில்

வெள்ளை வட்ட பொட்டு வைத்து



குருவியே

ஒற்றைக்காலில் நின்று

ஒய்யாரமாய் உன் குரல்வளம்

சரிசெய்கிறாயோ

அதென்ன சூரிய

நமஸ்காரம் செய்யாமல்

இந்தப் பக்கம் பார்வை



மகிழ்வைத் தந்து விடுவாய்

மனதில் வைத்து போற்றுகிறேன்

அதிகாலை என்றும் அழகுதான்

அதிலும் உன்குரல் மெல்லிய இசைதான்

குருவியே உன்குரல் பிடிக்கும்

உன்குரல் மட்டுமே பிடிக்கும்

எனக்காக நீ பாடும் பாடல்!

Tuesday 13 July 2010

ஒரு மருந்தை உருவாக்க

எந்த நோய் எது காரணி
நொந்து போன வாழ்க்கை இது.

வந்த நோய் பல காரணி
நாய் படும் பாடு இது

எந்த மூலக்கூறு எப்படி
வேலை செய்யும்
கண்டு கண்டு பெண்டு நிமிரும்

பத்தாயிரம் மூலக்கூறுகள்
உருவாக்கிய பின்னர்
அதில் பத்து கூட தேறாது

செலவழிச்ச பணம் கணக்கு
பார்த்தா உலை வைக்க மனசிருக்காது

செல்கள், திசுக்கள் என
செல்லரிக்காத ஆய்வு
சொல்லில் வைச்சாலும்
புரியுமோ இந்த நோவு

விலங்குகளில் வில்லங்கமில்லாம
நல்ல முடிவு வந்தாலும்
மருந்தாகும் நிலை நிலையில்லை

மூணு கட்ட ஆய்வு  மனிசரிடம்
தாண்டி வந்தப்பறமும்
முழுசும் உறுதியில்லை

ஒரு பிள்ளை பெற
பத்து மாசம்
ஒரு மருந்து உருவாக்க
பத்து வருஷம்

வணிகம் தான் பண்றோம்
வாய் கிழிய பேசு
எங்க உசிரும் இதுல
போகிறதை ஒரு
ஓரமாவாச்சும் சொல்லு

வருமுன் காப்போம்னு
ஒரு வழி செஞ்சி வைச்சா
அதை வக்கனையா எழுத
காசா பணமா!

Friday 9 July 2010

உழைக்க வழி செய்



நச்சரித்தான் பலமுறை
எச்சரித்தேன் சிலமுறை 

அவனும் விடுவதாய் இல்லை
நானும் தருவதாய் இல்லை 

தட்டு கழுவுவதாகவும் சொன்னான்
தட்டி கழித்தேன் கோபமாய் 

எனது கன்னத்தில் 
அவன் கை 
பதிந்தது அழுத்தமாய் 

அவனது மன வலி
உடல் வலியாய் எனக்குள்

எவர் நல்லவை கேட்பினும்
மறுக்க இனி மனமில்லை. 

Friday 11 June 2010

நீங்க அசத்துங்க பாட்டி

பக்குவமா சிரிக்கும் பாட்டி
படத்தை எடுக்கும் பேரன் பார்த்து

அப்படியே இந்த கட்டை எடுத்து
அங்கன வித்து காசாக்கி வா ராசா

சொல்லாமல் சொல்லி சிரிக்கும் சிரிப்பு

பாட்டிய பார்த்து நானும் பழகி கொண்டேன்
உழைப்புக்கு வயது ஒரு தடை அல்ல

நீங்க அசத்துங்க பாட்டி. 

Friday 4 June 2010

தெய்வப்புலவர் திருவள்ளுவர்




நான் வியக்கும் மனிதரில் முதல் நீ 
நல்ல மனைவி கொண்டால்
யுகம் எல்லாம் கைவசமாம்

வாசுகியை உந்தன் வரிகளினால்தான்
வசப்படுத்திக் கொண்டாயா?

வார்த்தைகளில் கூட அடக்கத்தின் பெருமையை
உன்னைவிட யார் அழகாக சொல்லிட முடியும்

எதை செய்தாலும் எதை சொன்னாலும்
உன்னை தொடாமல் ஒருவரும்
வாழ்க்கை உணரப் போவதில்லை
நீ இறைப்புலவர் இயம்புகிறார்
உன் வரலாறு எழுதாமல்
உலகத்து சிந்தனை ஓங்கி
ஒப்பில்லா குறள் தந்து
தன்னடக்கம் காண்பித்த
தலைச்சிறந்த தமிழ்த்தலைமகன் நீ

எடுத்ததுக்கெல்லாம் நீதான்
எல்லோர் நினைவிலும்

சொன்னபடி செய்த ஒரு பெரும்
தவபுதல்வன் நீ

புகழோடு தோன்ற சொன்ன
புகழையும் வென்ற பெரும் கவிஞன் நீ

உனக்காக ஒரு கவிதை
எழுதி முடிக்கும் போது

சொல்லுக சொல் வெல்லுஞ்சொல்
இன்மை அறிந்து அல்லவா
தழுவி கொள்கிறது.

Wednesday 2 June 2010

எனது கவிதையை தேர்ந்தேடுக்கமாட்டீர்கள்தானே சிவராமன்

எனக்கு ஜ்யோவ்ராம் சுந்தர், சிவராமன் நடத்துகிற  உரையாடல் அமைப்பு மேல ஒரு தனி மதிப்பு உண்டு. இருவரும் தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டு அதுவும் முக்கியமாக  சிறுகதை பட்டறை பற்றி அறிந்தபோது சந்தோசமாக இருந்தது.

சிறுகதைப் போட்டியில், கவிதைப் போட்டியில் கலந்து கொண்டேன். வரும் ஜுன் 21ம் தேதி போட்டி முடிவுகள் வெளியாகப் போவதாக புது அறிக்கை அறிந்தேன். போட்டி முடிவுகள் எப்பொழுது வரும் என ஆர்வமுடன் எதிர்பார்ப்பவனில் நானும் ஒருவன். 
 
நான், கோவியார் மற்றும் சுரேஷ் என்பவரை மட்டுமே வலைப்பதிவு எழுத வந்ததன் மூலமாக சந்தித்து இருக்கிறேன்.  எனக்கு யாரையும் தனிப்பட்ட முறையில தெரியாது. அதனால் ஒருத்தொருக்கு ஒருத்தர் வசைபாடி எழுதுவதை படிக்கும்போது எனக்கு வேப்பங்காய் போலத்தான் இருக்கும். யாரையும் தாக்கி எழுதுவது எனக்கு சுத்தமாகப் பிடிப்பது இல்லை. இதில்  ஜாதீயம், பெண்ணீயம், ஆணாதிக்கம், பின் நவீனத்துவம், வெங்காயம் இது எல்லாம் எனக்கு சுத்தமாக  புரிவது  இல்லை. 
 
ஒரு  ஆண் தவறாக நடந்து கொண்டால் அது ஆணாதிக்கமா? ஒரு ஆணோ, பெண்ணோ தப்பு செய்தால் அது தப்பு செய்த ஆணின், பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினை. அதுக்கு என்ன அடைமொழி வேண்டி இருக்கிறது. எதற்கும் ஒருதரம் ஒரு பொண்ணு பேசற பேச்சா இது அப்படிங்கிற இடுகையை வாசிச்சிட்டு வாங்க. எழுதத் தோணினா எப்படி இருக்கும்னு தெரியனுமா  பெண்களை கண்டாலே எரிச்சல் அப்படிங்கிற இடுகையும் ஒரு பார்வை பாருங்க. தனக்கென போராடாத சமூகம் இருக்கும் வரை அமைப்புகள் ஒன்றும் சாதித்துவிட முடிவதில்லை.தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள முயற்சிக்காத மனிதன் எந்த உதவி இருப்பினும் உயரவே மாட்டான். 
 
எனக்கு சிவராமன் வினவு தளத்தில் கட்டுரை எழுதிக் கொடுத்தார் என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. எவரேனும் எழுதி இருந்தாலும் கூட அந்த கட்டுரையில் தனிப்பட்ட முறையில் பலரை தாக்கி இருப்பதுதான் எரிச்சலாக இருக்கிறது. இதை சிவராமன் நான் வரிக்கு வரி அப்படித்தான் எழுதி இருப்பேன் என வாக்குமூலம் தந்திருப்பது எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது. அளவுக்கு மீறிய  எரிச்சல் நர்சிம் எழுதியதை வினவு தளத்தில் படித்தபோது இருந்தது.  இருப்பினும் இவர்கள் எல்லாம் பலருக்கும் தெரிந்தவர்கள், பலராலும் வாசிக்கப்படுபவர்கள் என்பதால்தான் பிரச்சினை.  இப்படி தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுபவர்களை கடைநிலை மனிதர்கள், இழிநிலை மனிதர்கள் என மொத்தமாக சொல்லிவிட்டுப் போய்விடுவதில் இருக்கும் சுதந்திரம் தனிதான். அப்படி எழுதுவதால் எனக்குள் இருக்கும் ஆதங்கம் தீரும், ஆனால் இவர்கள் மாறுவார்களா? ஒரு மாதமோ, ஒரு வருடமோ, ஒரு வாரமோ ஏதாவது பிரச்சினை வரும், அப்போதும் பாருங்கள். எவர் எவர் திருந்தினார்கள் என தெரியும்.

உரையாடல் அமைப்பின் தலைவரான சிவராமன் அவர்களே, இதோ இந்த கவிதை போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை. நிச்சயம் பரிசுக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். 
 
அரசியல்வாதிகள்

வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும்

அதை செய்தோம், இதை செய்தோம்
கதை சொல்லி காலம் கடத்தும்

ஆதங்கங்கள் நிறைய கொண்டு
வாதங்கள் செய்வது மட்டும் உண்டு

நாட்டின் நிலைமையை கைகாட்டுவோமே
வீட்டின் நிலைமையை பார்த்தோமா

உற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,
கற்ற கல்வியையும், சிற்றறிவுடன்
விற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்

கட்சியில்லை, கொடியுமில்லை
கூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்
மாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்

எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.

Tuesday 1 June 2010

கடவுளும் சிட்டுக்குருவியும்



உன்னைப் பிடித்து
கூண்டில் அடைக்க
ஒருவரும் வரமாட்டார்

மரத்தின் இலையின் நிறமாய் உடல்
மரத்தின் கிளையாய் உன் தலை
மரத்தின் கனியாய் உன் மூக்கு

வெட்ட வெளியில் நின்று
உன்னை மறைத்துக் கொள்ளும்
உவமை கடவுளுக்கும் ஆகுமோ?

Saturday 29 May 2010

விளக்குதனில் ஏற்றுங்கள் ஒளி


சனீஷ்வர பகவானுக்கு 
எள் விளக்காய் நான்
எள்ளோடு
என்னில் எண்ணை நிரப்புங்கள்

கார்த்திகை மாதம்
கார்த்திகை தீபமாய்
கவனமாய் என்னை
வீடெல்லாம் நிரப்புங்கள்

என்னை செய்தவருக்கு
வயிறு நிறைந்திட வழி  சொல்லுங்கள்
இன்னும் விற்கபடாமல் இருக்கிறேன்
என்னை வாங்கிச் செல்லுங்கள்!

Wednesday 19 May 2010

உணவூட்டும் தாய்


இது கவிதை அல்ல
அம்மாவின் கைபோல் தெரியவில்லை
பாட்டியின் கைபோல் அல்லவா தெரிகிறது 
அம்மாவிற்கு எங்கு நேரம்?
அலுவலகத்தில் அவள் இருப்பாள் 
ஏக்கப் பார்வையுடன் உண்ணும் பிள்ளை 

Wednesday 12 May 2010

எங்க, குறை தீர்க்கும் சாமி


பொய்க்குதிரையாட்டம் பார்த்த நானும்
குதிரையாட்டம் போட ஏறிக்கொண்டேன்
ஆடு குதிரை ஆடு குதிரை என்று
நான் ஆடியே பலமுறை சொன்னபின்னரும்
முன்னங்காலை மட்டும் தூக்கி
முன்னும் பின்னும் போகாம நிற்க
கல்குதிரைக்கு என்ன விளங்கப்போகுதுனு
கலக்கமில்லாம இறங்கிடப் போறேன்
ஆடும் குதிரையிலத்தான் நானும்
ஏறிவிளையாடப் போறேன்

கவனமா ஒன்னுமட்டும் கேளுங்க
கல்லில் ஆக்கி வைச்ச கடவுள்கிட்ட
எங்க குறைதீரு குறைதீரு என்று
ஏமாளியாக நிற்க வேணாம்
என்ன செய்யனுமோ அதை
குறையில்லாம நீங்க செஞ்சிக்கிட்டா
கலக்கம் தானாப் போயிரும்
கடவுள்தான் உதவுனாருனு மனசும்
லேசாகப் போயிரும்.

Thursday 11 March 2010

இயற்கை பேராபத்து



குளத்தோரம் மீன் பிடிக்க 
போகச் சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

கிணத்துல குதிச்சி 
நீந்த சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

மலையில் போய் 
செடி கொண்டு வரச் சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

உயிர் விளிம்புல 
உட்கார்ந்துகிட்டு என்னத்த 
உத்து நீயும் பார்க்கிற 

உயர ஏறி வந்ததுமே 
கீழ இருக்கிறது 
ஒன்னா தெரியுதோ 

ஒரு எலும்பும் மிஞ்சாது 
உடனே வீட்டுக்கு வா 
உட்கார்ந்து சாப்பிடு 
உன்னை இனிமே 
எங்கும் போகச் சொல்லலை!

Tuesday 9 March 2010

கண்ணான கண்ணு



என் கைகள் வெறுமையாய் இருக்கிறது 
அழகுப்பார்த்துக் கொள்ள 
அனுமதியில்லாமல் அழுது நிற்கிறது 

அழகிய அணிவகுப்பாய் 
பெண்ணுக்கென மட்டும் 
உன்னை ஒதுக்கிக் கொண்டது ஏனோ? 

சின்னஞ்சிறு வயதில் எனக்கு 
உடைத்து விளையாட 
உருவான வளையல். 

அன்புக்கட்டிலில் நொறுங்கும் வளையல் 

காப்பு கட்டி தொட்டிலுக்கு 
வருகை சொல்லும் துள்ளல் வளையல் 

குட்டிப்பெண்ணும் குதூகலித்து 
கொண்டாடும் வளையல் 

கொலுசைப் போல் மறைந்து 
காதல் சொல்லாது 

நேராய் நிமிர்ந்து காதல் சொல்லும் 
தைரிய வளையல் 

கற்கள் கொண்டு 
கண்ணைப் பறிக்கும் வளையல் 

வானவில்லில்லா நிறங்களும் கொண்டு 
வர்ணம் ஜொலிக்கும் வளையல் 

மனதில் இடம்பிடித்ததன்றி 
தமிழ்த்திரைப்பாடலில் தனியிடம் பிடித்த 
முத்து முத்தான வளையலுங்க.