Tuesday, 25 October 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? காட்டுமிராண்டி நாகரிகம்

உலகம் எப்படி படைக்கப்பட்டது என்பதற்கு திரும்பத் திரும்ப ஒரே விசயத்தையே சொல்லிட்டு இருக்கிறதுல அப்படி என்ன திருப்தியோ? உலகத்துல முக்காவாசி பேரு கடவுள்தான் அதுவும் அல்லாதான் இல்லை இல்லை பரம பிதாதான், இல்லை இல்லை பிரம்மாதான் உலகத்தை படைச்சாருனும், இல்லை இல்லை இது இயற்கையாக நடந்தது அதாவது இயற்கைத் தேர்வு அப்படினும் தெரியாத ஒன்னை இப்படித்தான் இருக்கும்னுசொல்லிட்டு இருக்காங்களே அவங்களை எல்லாம் என்ன பண்றது. 

என்ன பண்றது, அதுவும் ஒருத்தருக்கும் உண்மையான உண்மை தெரியாது, இது எப்படி எனக்கு தெரியும்? எல்லாம் யூகம் தான், ஆனா ஊர்பட்ட கதை எல்லாம் எல்லாரலாயும் சொல்ல முடியும் அப்படிங்கிறதுக்கு ஒவ்வொரு நாட்டுக்காரங்களும் அவங்க அவங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி சொன்ன விசயங்களை படிச்சிப் பார்த்தா விளங்கும். 

இப்படித்தான் ஒருத்தரோட பேசிட்டு இருந்தேன். நீங்க கடவுளை நம்புறமாதிரி தெரியலையேன்னு சொன்னாரு. எதை வைச்சி சொல்றீங்கனு நானும் கேட்டு வைச்சேன். உங்க பேச்சுல இருந்து தெரியுதுன்னு சொன்னாரு. சரி நான் அறிவியலை நம்புறேனு நினைக்கிறீங்களான்னு கேட்டேன். அப்படியும் தெரியலைன்னு சொன்னாரு. நம்பி நம்பி நாசமா போனவங்கதான் நம்ம மனித குலம், அதனால நான் எதையுமே நம்புறது இல்லை அப்படின்னு சொன்னேன். நீங்க உசிரோட இருக்கறதை கூடவானு கேட்டு வைச்சார். ஆமா, அப்படின்னு சொன்னேன். என்னை சரியான பைத்தியம்னு அவர் சொல்லிட்டுப்  போய்ட்டார். இப்ப நல்லா யோசிச்சி பாருங்க. உசிரு அப்படிங்கிறதுக்கு ஒரு விளக்கம் நாம சொல்லி வைச்சிருக்கோம். அதாவது விதிகளுக்கு உட்பட்டு வாழற வாழ்க்கை. இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும். இது இப்படி இருந்தா ஈர்ப்பு விசை. அப்படி இருந்தா எதிர்ப்பு விசை அப்படின்னு ஒரு பெரிய திட்டம் எல்லாம் போட்டு வைச்சிட்டோம், கணக்கு பண்ணி வைச்சிட்டோம். எல்லாம் ரொம்ப சரியாத்தான் இருக்காம். அறிவு, சிந்தனை எல்லாம் நம்மகிட்ட பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு. 

சரி, நாம நினைக்கிற, பேசற விசயங்கள் எல்லாம் மத்தவங்க என்ன சொல்லி இருக்காங்க. அதை எப்படி சொன்னாங்க, எதை வைச்சி சொன்னாங்க அப்படிங்கிற அடிப்படையில்தான். உற்று நோக்குதல், ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல். இதுதான் வாழ்க்கையின் முழு கட்டாய சூழல். அப்படி நாம தொடர்பு படுத்தாம வாழப் பழகிகிட்டா பல விசயங்கள் அடிபட்டு போகும். ஆனா அது சாதாரண விசயம் இல்லை.

 இதுக்குதான் நம்ம ஆளுங்க அட்டகாசமா சொல்லி வைச்சாங்க. கல்லை கண்டால் நாயை காணோம். நாயை கண்டால் கல்லை காணோம். ஒரு கல்லில் செதுக்கப்பட்ட நாய் உருவம் அந்த சிற்பியின் திறமையால் உயிருள்ள நாயைப் போன்று தென்படுமாம். அட அட என்ன ஒரு சிந்தனை. ஆனா இதையே ஒரு நாய் எதிர்படும் போது, அந்த நாயை அடிக்க கல் தேடியபோது கல் காணவில்லை என்பது கூட ஒருவித சிந்தனைதான்.

ஆனா காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் இதெல்லாம் இல்லை. இனப்பெருக்கம், வயிற்றுக்கு உணவு. தனக்கு போட்டியாக வருபவர் எதிரி. இந்த காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் சிக்கி தள்ளாடும் மனிதர்கள் இன்றும் உண்டு. காட்டுமிராண்டிகள் நாகரித்தில் கல் மட்டுமே ஆயுதம். தற்போதைய மனிதர்கள் இந்த மனிச குலம் எப்படி உருவாச்சு, என்னவெல்லாம் செஞ்சாங்க அப்படிங்கிறதை ஆராய்ச்சி செஞ்சி பல விசயங்கள் சொல்லி வைச்சிருக்காங்க. நமக்கு முன்னால வாழ்ந்தவங்க இப்படியெல்லாமா இருந்தாங்க அப்படின்னு நாம நினைக்கிறப்ப பிரமிப்பு மட்டுமே மிஞ்சும். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு சொல்லி வைச்சி பிரமிக்க வைக்கிறாங்க.

சரி திருடப் போவோம். முழு நீள சித்திரமா சொல்றதை விட இரத்தின சுருக்கமா சொல்லி வைச்சிருவோம். உணவு, உறக்கம் இல்லாம பல விசயங்களை தெரிஞ்சிக்க சுகமான வாழ்க்கையை எடுத்து எறிஞ்சிட்டு இந்த உலகம் பல விசயங்கள் தெரிஞ்சிக்கிரனும்னு போராடின மனிதர்களுக்கு நாம எப்பவும் மரியாதை செலுத்தனும்.

மனித குல வரலாறு பத்தி தெரிஞ்சிக்கனும்னா ரொம்ப பேரு நிறைய புத்தகங்கள் எழுதி இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் ஒரு விசயத்தை பத்தி தெரிஞ்சிக்கிரனும் அப்படிங்கிற ஆர்வம் தான். மத்தபடி இவங்க எல்லாம் பெரிய புத்திசாலிகளோ, அறிவாளிகளோ கிடையாது. உற்று நோக்குதல். ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல் அப்படிங்கிற ஒரு சிந்தனை மிக மிக முக்கியம். வெகு குறிப்பிட்ட சிலரே அறிவு சார்ந்த விசயங்களில் தங்களை அர்பணித்து கொண்டார்கள்.

ஒரு குழந்தைகிட்ட ஒரு பொருளை கொடுங்க. அந்த குழந்தை அந்த பொருளை அப்படியே வைச்சிருந்தா அந்த குழந்தை மங்குனி. அதை உடைச்சி பிரிச்சி மேஞ்சா ஒரு தேடல். அப்படி பிரிச்சி மேஞ்ச குழந்தையை அதட்டினப்புறம் அடுத்தவாட்டி பிரிச்சி மேயாம போனா இனி அந்த குழந்தை மங்குனி. அதாவது ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஆர்வம் வந்து சேரும். ஆனால் காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் கல் ஒன்றுதான் கண்ணுக்கு தென்பட்டது.

இந்த கல்லை வைத்து என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் என்கிறது வரலாறு. ஏழு மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலம் தோன்றி இருக்கலாம் என்பது நிரூபிக்கபடாத ஒரு விசயம். ஆப்ரிக்காவில் மூன்று மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலத்தின் முன்னோர்கள் தோன்றியிருக்க கூடும் என்பதும் ஆராய்ச்சியின் வெளிப்பாடு. பல மனித குலம் அழிந்து போயிருக்கிறது என்பது ஆராய்ச்சி காட்டும் உண்மை.

காட்டுமிராண்டிகள் நாகரிகம் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
2 comments:

Unknown said...

நல்ல கட்டுரை!

Radhakrishnan said...

நன்றி எம்.ஞானசேகரன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.