Friday 28 May 2010

நல்லாவே சமைப்பேன்

''இன்னுமா கிளம்பலை'' அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ''இதோ ரெடியாயிட்டேன்'' நானும் பதிலுக்கு சத்தம் போட்டேன். ''பொண்ணு தானே பார்க்கப் போறோம், பொண்ணு மாதிரியே சீவி சிங்காரிச்சிட்டு இருக்கானே'' அப்பாவின் முனகல் சத்தம் தெளிவாகத்தான் கேட்டது.

நான் அப்பொழுதுதான் கல்லூரி படிப்பு முடித்து இருந்தேன். வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டிருந்த தருணம். கடந்த வார நேர்முகத் தேர்வில் சிறப்பாக செய்தது போன்ற உணர்வு. ஒரு வாரத்தில் அழைக்கிறேன் என சொல்லி இருந்தார்கள். எப்படியும் அழைத்து விடுவார்கள் என தினமும் எனது மொபைல்தனை மறக்காமல் சார்ஜ் செய்துவிடுவேன். சில பல நேரங்களில் பேட்டரி தீர்ந்து அவசரத்திற்கு கூட மொபைல் உதவாமல் போய்விடுகிறது.

அவசர அவசரமாக மாடியிலிருந்து கீழிறங்கி வந்தேன். அம்மாவும் அப்பாவும் தயாராக இருந்தார்கள். அந்த நேரம் பார்த்து எனது சொந்தக்கார பாட்டி வந்து சேர்ந்தார். ''எங்க மூணு பேருமா கிளம்பிட்டீங்க, நம்ம சொந்த பந்தத்துல இல்லாத பொண்ணுகளா, அதுல ஒரு பொண்ணை கட்டிக்கிற வேண்டியதுதானே, வெளியூர் பொண்ணு கட்டப் போறானாம்'' என பேசியதும் தான் தாமதம், அப்பாவுக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. அந்த பாட்டி நன்றாகத்  திட்டு வாங்கினார்.

எங்கள் உறவினர் எவரும் எங்களுடன் பெண் பார்க்க வர முயற்சிக்கவில்லை. அவரவருக்கு கோபம் மட்டுமே மிஞ்சி இருந்தது. ''என்னங்க ஒரு எட்டு என் அண்ணனை கூப்பிட்டு போவோம்'' என்றார் அம்மா. ''அன்னைக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டது போதாதுன்னு இப்ப வேறயா'' என கோபம் தீராமலே சொன்னார் அப்பா.

பேருந்து நிலையம் நோக்கி நாங்கள் மூவரும் நடந்தோம். எங்கள் எதிரில் வந்த எனது மாமா மகள் ''மாமாவுக்கு பொண்ணு பாக்கப் போறீங்களா அத்தை, நானும் கூட வரட்டுமா, மூணு பேரா  சேர்ந்து ஒரு நல்ல காரியத்துக்கு போகக் கூடாதுல'' என்றாள். ''உங்க அப்பன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வா'' என்றார் என் அம்மா. ''சொல்லிட்டுதான் அத்தை வந்தேன்'' என்றாள் எனது மாமா மகள் முகம்  மலர்ந்தபடியே.

உறவினர்களுக்குள் எந்த பொண்ணும் எடுக்கக் கூடாது என மிகவும் தீவிரமாகவே இருந்தார் எனது அப்பா. அதற்கு அவர் சொல்லும் காரியங்கள் ஆயிரம் ஆயிரம். ஒரு காரணத்தைக் கூட இதுவரை நான் மறுத்துப் பேசியது இல்லை.

பேருந்து   நிலையத்தில் நாங்கள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தோம்.  ''மாமா, பொண்ணு போட்டோ இருக்கா'' என்றாள் எனது மாமா மகள். ''ம்ம்'' என சொல்லியவாறே எடுத்துக் காட்டினேன்.

போன  வாரம் தான் தரகர் எனது சாதகத்திற்கு பொருந்திய சாதகங்கள் என ஐந்து பெண்களின் போட்டோவுடன் அவர்களது விபரங்களையும் தந்து இருந்தார். முதல் போட்டோவை பார்த்ததும் மூக்கும் முழியுமாக இருந்த அந்த பெண் பளிச்சென மனதில் இடம் பெற்றுவிட்டாள், மத்த படங்களை பார்க்க வேண்டாம் என தோன்றினாலும் பார்த்து வைத்தேன். நல்லவிதமாக வேறு எந்த பெண்ணும் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த பெண்ணையே என் அப்பா அம்மா சரி என சம்மதம் சொல்லிவிட்டார்கள்.

போட்டோவைப் பார்த்தபடியே ''என்னை மாதிரியே அழகா இருக்காங்க'' என்றாள் மாமா மகள். ஆமாம், அவள் சொல்வதும் உண்மைதான்,  என் மாமா மகள் கொள்ளை அழகு. நன்றாகப் படித்து வருகிறாள். அடுத்த வருடம் கல்லூரி படிப்பை முடித்து விடுவாள். ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து விடுவாள். இவளது நிலையில் நான் இருந்தால் 'வெயிலுக்குகந்தம்மனுக்கு இந்நேரம் காசு வெட்டி போட்டுருப்பேன், என் மாமா மனம் மாற வேண்டும் என ஏறாத கோவிலுக்கு எல்லாம் ஏறி இருப்பேன், ஆனால் இவளோ தன்னை ஒதுக்கியவன் என்று கூட பார்க்காமல் எனது பெண் பார்க்கும் படலத்துக்கு உடன் வருகிறாளே' எனும் யோசனையில் இருந்தேன். பேருந்து வந்து நின்றது. ''இந்தாங்க மாமா போட்டோ'' என தந்தாள்.

பெண்ணின் வீடு மிகவும் அழகாக இருந்தது. அகர்பத்தியின் நறுமணம் தாலாட்டியது. ''வாங்க வாங்க'' என எனது வருங்கால மாமனாரும், மாமியாரும் வரவேற்றார்கள். அவர்களது உறவினர்கள் என பலர் அங்கே தென்பட்டார்கள். அத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ''நாங்க மட்டும் தான் வந்தோம்'' என குறிப்பறிந்து சொன்னார் என் அப்பா. ''தரகர் வரலையா'' என்றார் என் வருங்கால  மாமனார். எனது கண்கள் பெண்ணை தேடியது. நாங்கள் நால்வரும் சோபாவில் அமர்ந்தோம். எனது மாமா மகள் என் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள், சிரித்த முகமாய் இருந்தாள்.

பலகாரங்கள் என மேசையில் இருந்தது. எடுத்துக்கோங்க என தட்டை காட்டியவர்  ''நாங்க சுத்த சைவம்'' என்றார் என் வருங்கால மாமனார். ''நாங்களும் தான், அதை தரகர் கிட்ட ரொம்ப முக்கியமா சொல்லி இருந்தேன்'' என்றார் என் அப்பா. நான் சைவ உணவு சாப்பிட்டே வளர்ந்தவன். ஆசைக்கு கூட முட்டை சாப்பிட்டது இல்லை. எனக்கு அப்படியொரு கொள்கை பிடிப்பு. பலகாரம் ருசித்த போது ''யார் செஞ்சது'' என்றார் என் அம்மா. அந்த பலகாரம் செய்தது அவளது வருங்கால மருமகளாக இருக்க வேண்டும் எனும் ஆசையாய் கூட இருக்கலாம். ''என் பொண்ணு தான்'' என்றார் என் வருங்கால மாமியார். ''ரொம்ப நல்லா இருக்கு'' என்றாள் என் மாமா மகள்.

அனைவரின் கண்களும் எனது மாமாவின் மகளின் மீது இருந்தது. அங்கிருந்த நடுத்தர வயதான பெண் ஒருவர் ''அடி ஆத்தி எம்புட்டு அழகு'' என்று தனது முகவாய் கட்டையில் கைவைத்து சொன்னவர், பின்னர் தலையில் சொடுக்கிக் கொண்டார். எனது மாமா மகள் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள். அனைவரும் எனது மாமா மகளை எனது சகோதரி என்றே நினைத்து இருக்கக் கூடும் என சொல்ல முடியாது, ஏனெனில் என் அப்பா விலாவாரியாக எங்கள் குடும்பத்தை பற்றி, வெளியில் பெண் எடுப்பதற்கான  காரணங்கள் ஐந்து என தரகரிடம் எழுதிக் கொடுத்து இருந்தார்.

பெண்ணை அழைத்தார்கள். காபியுடன் பெண் வந்தார். எனது மாமா மகள் என்னை பார்த்து அவளது கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். அவளது முகத்தில் எத்தனை சந்தோசம். அந்த நேரம் பார்த்து எனது மொபைல் ஒலித்தது. எங்கும் எழுந்து செல்லாமல் அங்கிருந்தே பேசினேன். வேலை கிடைச்சிருக்குமே என நீங்கள் நினைத்து இருந்தால் அது சரிதான். எனக்கு வேலை கிடைத்த விசயத்தை என் அப்பா அம்மாவிடம் மெதுவாக சொன்னேன். ''பொண்ணோட ராசி'' என்றார்கள். ''என்  மாமா மகளோட ராசியா'' என்றேன் மெதுவாக சிரித்துக் கொண்டே. என் அப்பா என்னை முறைத்துவிட்டு ''பொண்ணு பார்க்க வந்த நல்ல நேரம், என் பையனுக்கு நல்ல உத்தியோகம் கிடைச்சிருச்சி'' என்றார் சந்தோசத்துடன். அனைவரும் சந்தோசப்பட்டார்கள். எனது மாமா மகளின் முகத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இரண்டு கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். பெண் வெட்கத்தில் சிரித்தாள்.

ஒவ்வொருவருக்காக காபி தந்தவள் எங்களுக்கும் தந்தாள். போட்டோவைப் பார்த்ததைவிட நேரில் மிகவும் அழகாய் இருந்தாள். காபி அருந்தினோம். எனது மாமா மகள் ரசித்துக் குடித்து கொண்டிருந்தாள். பெண்ணை பார்த்து ''நல்லா சமைப்பியாம்மா'' என்றார் என் அம்மா. ''நல்லாவே சமைப்பேன்'' என்றாள். அவளது குரல் கேட்டதும் எனக்கு ''பேசு இன்னும் பேசு'' என சொல்லத் தோன்றியது. உடனே எழுந்து பெண்ணுடன் தனியாய் பேச வேண்டும் என அனுமதி பெற்று பேசினேன்.

என்னை மிகவும் பிடித்து இருப்பதாக சொன்னாள். எனக்கு மனதில் மிகவும் சந்தோசமாக இருந்தது. வேலைக்கு செல்ல விருப்பமா என்றேன். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எல்லாம் வேலைதானே. வேலை செய்யாமல் எவரும் சும்மா இருக்க இயலுமா என இயல்பாக பேசிய அவளது பேச்சில் காதல் கொண்டேன். என் அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்றவாறே அவர் பெண் பார்த்து வைத்திருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.

ஊருக்கு போய் தகவல் சொல்றோம் என சொல்லாமல் அங்கேயே சம்மதம் சொன்னோம். என் மாமா மகள் என் வருங்கால மனைவியை கட்டிப்பிடித்தாள். அத்தனை சந்தோசம் அவளுக்கு.

சந்தோசமாக பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது என்னருகில் வந்து  என் மாமா மகள் அதிக சந்தோசத்துடன் சொன்னாள் ''மாமா, என் ரூட் இப்போ கிளியர், தேங்க்ஸ் மாமா'' சிறு வயது காலங்களில் அவளும் நானும் ஓடிபிடித்து விளையாடிய தருணங்கள் நினைவில் ஆடியது.

அவளது செல்பேசி ஒலித்தது. சற்று தள்ளிச்  சென்றுதான் பேசினாள், இருந்தும் எனக்கு கேட்டது.  ''இனி நம்ம காதலுக்கு யாரும் தடையா வரமாட்டாங்கடா, நான் நினைச்ச வேலைக்கு நிச்சயம் போகலாம், இல்லைன்னா இத்தனை படிச்சும் அடுப்படியிலே அடைச்சி வைச்சிருப்பாங்கடா''

எனது வருங்கால மனைவிக்கு வேலைக்கு செல்ல விருப்பம் எனில் முதன் முதலாக எனது அப்பாவின் காரணத்தை எதிர்க்க காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.

6 comments:

vasu balaji said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. நான் இன்னும் உங்க பதிவுத் தலைப்பு மாற்றவில்லை.:)). என்னோட லிஸ்ட்ல ‘எல்லாம் இருக்கும் வரை..நல்லாவே சமைப்பேன்னு’ வருது. சிரிச்சிகிட்டே இருக்கேன்:))

Radhakrishnan said...

ஹா ஹா! எனக்கும் சிரிப்பை வரவழைத்துவிட்டீர்கள் ஐயா.

Chitra said...

ர(ரு)சித்து வாசித்தேன்..... அருமை....!

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா

சாந்தி மாரியப்பன் said...

ருசியா இருக்கு..

Radhakrishnan said...

நன்றி அமைதிச்சாரல்