Sunday 16 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 12









பயத்துடன் நின்ற கதிரேசனை நீலகண்டன் 'வா' என அழைத்தார். கதிரேசன் தயங்கியபடியே வந்து நின்றான். ''நீ சிவனை மட்டுமே நினைச்சி வாழ்ந்துருவியா'' என்றார் நீலகண்டன். கதிரேசன் அமைதியாய் நின்றான்.  நீலகண்டன் மறுபடியும் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டார். ‘’முடியாது’’ என்றான் கதிரேசன். பதில் மிகவும் மெல்லிய குரலிலேயே வந்தது. ‘’முடியாது?’’ என சொல்லிவிட்டு பார்வதியைப் பார்த்தார் நீலகண்டன்.

‘’அவனை ஊருக்கு அனுப்புங்க அப்பா’’ என்றார் பார்வதி. ‘’அப்ப நானும் கிளம்புறேன்’’ என்றார் நீலகண்டன். கதிரேசன் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்தான். பார்வதி தந்தையை இருக்கச் சொன்னார், ஆனால் அவர் தான் அழைத்து வந்தவனை தனியாய் அனுப்ப மனமில்லை என்றார். பார்வதியின் கணவர் சிவசங்கரன் கதிரேசன் பண்ணியதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். ஈஸ்வரி தான் அவசரப்பட்டுவிட்டோமோ என எண்ணினாள். தான் கதிரேசனிடம் சொன்ன வாசகத்தை திருப்பி யோசித்தாள். அவசரப்படுபவர்கள் மட்டுமே சிந்திக்காதவர்கள், இதில் ஆண் பெண் பேதம் இல்லை என மனதில் நினைத்தாள்.


கதிரேசனை சிவசங்கரன் அருகில் அழைத்து எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றார். அதைப் பார்த்த பார்வதி 'என்னங்க, நான் கவலைப்பட்டு பேசுறேன், நீங்க எதுவுமே நடக்காத மாதிரி அவனை பக்கத்துல வைச்சிகிறீங்க' என்றார். ''வீட்டுக்கு வந்த தம்பி கிட்ட மரியாதையா பேசு பார்வதி, நான் அப்ப சொன்னதுதான் இப்பவும், எனக்கு இந்த தம்பி மேல எந்த தப்பும் தெரியல'' என்றார் சிவசங்கரன். பார்வதி மௌனம் ஆனார்.


ஆனாலும் அன்றைய முன் இரவு பார்வதியின் கோபங்களுடனே கழிந்து கொண்டிருந்தது. கதிரேசனால் நிம்மதியாக உறங்க இயலவில்லை. ‘’தாத்தா’’ என்றான். அவர் ‘’சொல்லுப்பா’’ என்றார். ‘’நான் தனியா ஊருக்குப் போறேன், நீங்க இருந்துட்டு வாங்க, என்னால உங்களுக்கு நிறைய சிரமம் வந்துருச்சு’’ என்றான். ‘’நீ என்ன தப்பு பண்ணினே, எனக்கு சிரமம் தரதுக்கு. என் பேத்திகிட்ட நீ மரியாதை குறைவா நடந்துக்கிட்டியா, இல்லை அவளை அவமானப்படுத்தினியா, நீ கூட எங்கே சிவனை நினைச்சிட்டே வாழ்ந்துருவேனு சொல்வியோனு பயந்துட்டு இருந்தேன் நான்’’ என்றார் நீலகண்டன். ‘’தாத்தா’’ என்றான் கதிரேசன்.


‘’முறை கெட்டு வாழற மனுசங்களும் இருக்கிற உலகம் இது, ஏதாவது ஒரு விசயத்துல எல்லாருமே தவறித்தான் நடக்கிறாங்க, தவறி நடக்கறதை ஒப்புக்கிட்டே தவறுறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க, தவறை நியாயப்படுத்தி பேசும் உலகம் இது, நீ நிம்மதியா தூங்கு, காலையில எல்லாம் சரியாயிரும், நாம இன்னும் சில நாள் இங்க தங்கிட்டுத்தான் போறோம்’’ என்றார் நீலகண்டன்.


கதிரேசனுக்கு நீலகண்டனை நினைக்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. யார் இவர், எதற்காக எனக்கு இவ்வளவு உதவிகள் செய்கிறார் என புரிந்து கொள்ள இயலாமல் இருந்தான் கதிரேசன். சிவசங்கரன் காட்டிய அன்பும் அவனுக்குள் இதே எண்ணங்களை கொண்டு வந்து கொண்டிருந்தது.


அதிகாலை விடிந்தது. அத்தனை ரம்மியமான காலையில் பார்வதி கோபம் தணிந்து இருந்தார். கதிரேசனிடம் ‘’அவசரப்பட்டு ஊருக்குப் போகவேண்டாம், நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன், எல்லா தாய்க்கும் இருக்கிற பய உணர்ச்சிதான் எனக்கும் இருந்தது’’ என்றார்.  ‘’தப்பா போகிறமாதிரி நான் நடந்துக்கிரமாட்டேன், கவலை வேண்டாம்’’ என்றான் கதிரேசன். இதைப் பார்த்த சிவசங்கரன் புன்னகை புரிந்தார். வீட்டில் சந்தோசம் நிலவியது. கதிரேசன் மனதில் அளவில்லா சந்தோசம் கொண்டான்.


அன்று மாலையில் கதிரேசனிடம் ஈஸ்வரி ‘’நான் அவசரப்பட்டுட்டேன், அம்மாகிட்ட சொன்னதுதான் இத்தனைக்கும் காரணம்’’ என்றாள். அதற்கு கதிரேசன் ‘’நீ விளையாட்டுப் பிள்ளையா கேட்ட, அதனாலென்ன என்னை உங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சிருக்கு, உன்னைத் தவிர’’ என்றான். ஈஸ்வரி சிரித்துக் கொண்டே தொடர்ந்தாள். ‘’அடுத்தவங்க செய்றதுதான் கண்ணுக்கு ரொம்ப லேசாத் தெரியும்’’ என்றாள். கதிரேசன் மெளனமாகத் திரும்பினான். ‘’நீ என்னை காதலிப்பாயா?’’ என்றாள் ஈஸ்வரி. திரும்பிப் பார்த்த கதிரேசன் சிரித்துக்கொண்டே ‘’நான் எங்க அம்மாகிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு கடிதம் போடுறேன்’’ என்றான். இருவரும் மனம் விட்டு சிரித்தார்கள். எத்தனைப் பிரச்சினையெனினும் மறந்துவிட்டு விளையாடும் இரு சிறு உள்ளங்கள் மட்டுமே அங்கே தெரிந்தது.


தினங்கள் ஓடிக்கொண்டிருந்தது. உடல் நலமில்லாதது போன்று உணர்ந்தார் நீலகண்டன். நீலகண்டனை அங்கேயே தங்குமாறு பார்வதி கேட்டுக்கொண்டார். இருப்பினும் தான் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார் நீலகண்டன். ஊருக்கு கிளம்பும் நாளன்று பார்வதி கதிரேசனிடம் நீலகண்டனை பத்திரமாக பார்த்துக் கொள் என சொன்னபோது பார்வதியின் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது. கதிரேசன் அமைதியாய் தலையாட்டினான்.


கதிரேசனும் நீலகண்டனும் முதலில் புளியம்பட்டி சென்றார்கள்.  அங்கே சங்கரன்கோவிலில் நடந்த விசயத்தை செல்லாயிடம் கூறினான் கதிரேசன். செல்லாயி ‘’ஏன்பா போன இடத்தில இப்படியா நடந்துக்கிறது’’ எனக் கடிந்தாலும் அவரது மனதில் சந்தோசம் நிறைந்தது.


ஒரு தினம் மட்டும் புளியம்பட்டியில் இருந்துவிட்டு மறுநாள் சிங்கமநல்லூரை அடைந்தார்கள் நீலகண்டனும் கதிரேசனும். அன்று மாலை கதிரேசன் தாத்தாவிடம் ஈஸ்வரியை பற்றி தனது மனதில் உள்ள எண்ணத்தை கூறினான். அவரும் ‘’என் மக கொஞ்சம் பிடிவாதம் குணம் உடையவ, ஆனா இரக்க மனசும் அவளுக்கு இருக்கு, நீயும் என் பேத்தியும் சேர்ந்து வாழறதுங்கிறது அவளுடைய முடிவுலதான் இருக்கு. நீ சிவன் மேல பாரத்தைப் போட்டு நல்லாப் படிச்சி முன்னேற வழியைப் பாரு, நீ நினைச்சபடியே எல்லாம் நடக்கும், எனக்கு உடம்புக்கு என்னமோ மாதிரி இருக்கு, நான் ஓய்வு எடுக்கிறேன்’’ என்றார். கதிரேசன் நீலகண்டனிடம் ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தான். அப்பொழுது ‘’கதிரேசா’’ என குரலில் கலக்கத்தை  இணைத்து அழைத்தவாறு மதுசூதனன் தனது பெட்டியுடன் வந்து கொண்டிருந்தான்.


(தொடரும்)

2 comments:

vasu balaji said...

நிறவாக் கொண்டு போறீங்க சார்:)

Radhakrishnan said...

மிக்க நன்றி வானம்பாடிகள் ஐயா.