Monday 4 November 2013

தமிழ் எதிரி

ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அங்கே எழுதப்பட்டு இருக்கும் எழுத்துகள் என்னால் வாசிக்க இயலும் ஆனால் அர்த்தம் புரிந்து கொள்ள இயலாது. அந்த எழுத்துக்கள் ஆங்கில உருவில் தான் இருந்தன. அப்போது எனக்குள் தோன்றியது எல்லாம் தமிழை இப்படி செய்து விடலாமே என்றுதான். தமிழ் அழிகிறது என சொல்பவர்களுக்கு தமிழை காப்பாற்ற இதுதான் வழி என்றே எனக்குள் பலமுறை தோன்றியது உண்டு. ஆனால் தமிழ் மீது கொண்ட பாசம் தமிழ் எழுத்துக்கள் தொலைந்துவிடக் கூடாது எனபதில் தான் இருந்தது.

இந்த இணையத்தில் நான் முதன் முதலில் எழுத வந்தபோது ஆங்கில எழுத்துருவில் தான் எழுதினேன். ஆனால் அதற்கு நான் பட்ட அவஸ்தைகள் எனக்கு மட்டுமே தெரியும். எப்படியாவது தமிழ் எழுதும் விசைப்பலகையை கண்டு கொள்ள வேண்டும் எனும் உத்வேகம் தமிழ் எழுதும் எழுத்துருவினை கொண்டு வந்து என்னிடத்தில் சேர்த்தது.

என்னதான் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினாலும் தமிழை தமிழ் எழுத்துகளால் எழுதும் ஒரு ஜீவன் அதில் இருப்பது இல்லை. என்னதான் ஒரு பெண்ணின் மடி என்றாலும் தாய் மடி போல் அமைவது இல்லை. டைப்ரைட்டர் காலத்தில் இருந்தது போல இப்போது விசைப்பலகை எல்லாம் தமிழில் வந்து கொண்டிருப்பதால் தமிழ் எழுத்துருவை கற்று கொள்வதில் தான் அந்த மொழியின் சிறப்பு இருக்கிறது.

எழுத்துருவு மாற்று கருத்து என்னை போன்ற வெளிநாட்டில் வாழ்ந்து தமிழை தனது சந்ததிக்கு தராமல் தொலைத்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் சரியாகவே பொருந்தும். இலங்கை வாழ் தமிழர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்றாலும் தமிழுக்கு முன்னுரிமை தந்து தனது சந்ததிகளுக்கு தமிழை போதிக்கிறார்கள். அது கூட காலபோக்கில் குறைந்துவிடும்.

ஒரு தமிழ் நாவலை வெளியிட்டபோது தமிழர்கள் பலர் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட முடியுமா என்றே கேட்டார்கள். எனக்கோ தமிழ் மொழியை தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே தமிழ் மொழிக்கு சிறப்பு என்றே தோணியது. நீங்கள் தமிழ் மொழி கற்று கொள்ளுங்கள் என்றே சொல்லி முடித்துவிட்டேன்.

எந்த ஒரு மொழியும் தன்னகத்தே மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நடமாடும் நிலை வந்தால் ஒழிய அந்த மொழி அழிந்து போகும். சமஸ்கிருதம் ஒரு உதாரணம். மேலும் ஒரு மொழியின் பயன்பாடு ஒரு இனத்துடன் இருப்பது கூட அந்த மொழியின் வளர்ச்சியை தடை செய்யும்.

இதற்காகவே தமிழ் மொழியில் இருக்கும் இலக்கியங்கள் எல்லாம் பிற மொழிக்கு மொழி பெயர்த்து இருந்திருக்க கூடாது என்றே கருதுவேன். வேண்டுமெனில் வந்து தமிழ் படி எனும் ஒரு உறுதியான நிலை எடுத்து கொளல் வேண்டும்.

தமிழில் ஆங்கிலம் கலந்துவிட்டது. ஒருவர் அருமையாக சொன்னார், அதிர்ஷ்டத்திற்கு லக் என்பது தமிழ் மொழி என! என்றோ எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. தமிழ் எண் சொல் என கேட்ட நண்பனிடம் 1 2 3 எழுதி தந்துவிட  இதுவா தமிழ் எண் என கேட்டு அன்றைய எனது முட்டாள்தனம் எனக்கு புரிந்து போனது.

இனி எப்படி தமிழ் வாழும் என்பது தமிழகத்தில் வாழ்பவர்களை பொருத்தே அமையும். பிற நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழ் சங்கம் என வைத்து தமிழ் வளர்த்தாலும் இனி வரும் காலங்களில் தமிழ் பிற நாடுகளில் தொலையும். எப்படி பண்டிகைகள் இந்திய பண்டிகைகள் என அடையாளம் கொண்டவனோ அதைப்போல தமிழ் உலக மொழி எனும் அந்தஸ்தை அடையப் போவதில்லை. ஆங்கிலத்தை இனி வெளியேற்றுவது கடினமான செயலே.

தமிழ் அழிந்து போகும் எனில் அதற்கு காரணம் நாம் தான். அடுத்த சந்ததிகளுக்கு முறையாக தமிழை கொண்டு சேர்க்காமல் போகும் என்னை போன்ற பெற்றோர்களே தமிழுக்கு மாபெரும் அநீதி இழைக்கிறார்கள். 

6 comments:

மகேந்திரன் said...

மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே...
சீர்திருத்தமும்...
நிலைகுத்திக் கொள்வதும்
இல்லத்தில் இருந்து
ஆரம்பிக்க வேண்டும்...
இனி தமிழ் மெல்ல வாழும்
என்று உறுதியுடன் தொடர வேண்டும்...

வவ்வால் said...

ரா.கி,

//அடுத்த சந்ததிகளுக்கு முறையாக தமிழை கொண்டு சேர்க்காமல் போகும் என்னை போன்ற பெற்றோர்களே தமிழுக்கு மாபெரும் அநீதி இழைக்கிறார்கள்.
//

மிகத்துணிச்சலான வாக்கு மூலம், ஆயிரங்கோடி வாழ்த்துக்கள்

எனக்கும் இதே எண்ணம் தான், தமிழ் அழியுது அழியுதுனு சொல்லிட்டு ஆங்கிலம் படிக்க வைக்கும் பெற்றோர்களே முதல் காரணம்,நாம தான் எதாவது செய்யனும்ம்,ஆனால் அரசை குறை சொல்லிட்டு இருப்போம்.

நானெல்லாம் 3ஆம் வகுப்பு காலத்தில சுஜாதா, ராஜேஷ்குமார் ,கல்கி என நாவல்கள் படிக்க ஆரம்பிச்சுட்டேன் ,பொன்னியின் செல்வன் படிக்க அந்த காலத்தில தேடு தேடுனு தேடினேன், இறுதி பாகம் படிக்க ஆறாம் வகுப்பு வரைக்கும் எனக்கு வாய்ப்பே கிடைக்கலை, அப்போ ஏதோ ஒன்னு படிக்கிறான்னு பெற்றோர்கள் அனுமதிச்சாங்க, இப்போ பாட புக்கு தவிர எதுவுமே கண்ணுல காட்ட மாட்டோம்னு அடம்பிடிக்கிறதே பெற்றோர்கள் தான் அவ்வ்.

பெற்றோர்கள் பசங்களோட படிக்கும் ஆர்வத்தை 'பாட புத்தகத்தை தவிர வேற"எதுலவும் காட்டக்கூடாதுனு நினைக்கும் போக்கு மாறினாலே தமிழ் பொழைச்சிக்கும்.

Anonymous said...

ஆங்கில அலை இன்று உலகம் முழுதும் பல நாடுகளில், ஆனால் இந்த அலையும் நிரந்தரமல்ல, காலம் மாறும் போது, இதன் இடத்தையும் புதிய அலை நிரப்பிக் கொள்ளும். இத்தனை ஆண்டுகள் தமிழ் பல அலைகளை சந்தித்து நிலைத்து நிற்பதன் காரணம், தமிழர்கள் தம் மொழியை விட்டுவிடவில்லை, ஆனால் இன்று பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், சமூகம் என அனைத்தும் தமிழைப் பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளது, இந் நிலையில் தமிழின் எழுத்து வடிவம் தான் செம்மையை தக்க வைத்து வருகின்றது, அதுவும் பொறுக்கவில்லை போலும், அதனையும் அழித்தால் ஆங்கிலம் தமிழை நிர்மூலமாக்கி விடும். பெற்றோர்கள் தம் தாய்மொழியை பொருளாதார நலன்களுக்காக பலிக் கொடுப்பது வேதனையான ஒன்றாகும்.. :(

வில்லவன் கோதை said...

நீங்கள் சொல்ல வந்த்து ? தமிழால் வாழ்பவருக்கு (தமிழ் பத்திரிக்கையாளர், தமிழ் எழுத்தாளர்களுக்கு) இப்படியொரு நினைவு தோன்றலாமா.

வேகநரி said...

உண்மையான நிலமை சொல்லும் அருமையான கட்டுரையுங்க. தமிழக பெற்றோர்கள்,தமிழக தமிழ் சமூகம் தமிழை புறக்கணித்து ஆங்கிலத்தை உயர் கௌரவத்துடன் பார்க்கும் நிலமையிருக்கும்வரை தமிழுக்கு அபாயம் தான்.

Radhakrishnan said...

அனைவருக்கும் நன்றி