Tuesday 21 February 2012

மஹா சிவராத்திரியும் வில்வ மரமும்

பதினோராம் வகுப்பு படிக்க சென்ற போது ஒரு பாடல் என்னை மிகவும் அதிகமாக சிந்திக்க வைத்தது. அந்த பாடல் பாடிய பின்னரே பள்ளி தொடங்கும். அந்த பாடல் சிவபெருமானின் பெருமையை பற்றி பேசுகிறது என்பதெல்லாம் அந்த கணத்தில் எனக்கு தெரியாது.

உலகமெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

அன்றைய தினத்தில் இந்த பாடலானது பெரியபுராணத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்டது என்பது தெரியாது. பின்வரும் நாளில் கூட பெரியபுராணமோ, பன்னிரு திருமறைகளோ படிக்க வேண்டும் எனும் முயற்சி ஒருபோதும் எடுத்தது கிடையாது. திருவாசகம் இளையராஜாவின் சிம்பொனி இசையில் வந்தபோது கேட்டு மகிழ்ந்தது உண்டு. அப்போதுதான் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம் புரிந்தது.

அதிலும் புல்லாகி பூடாகி எனும் வரிகள் மொத்த பரிணாமத்தையும் அசைத்து பார்த்துவிட்டு போகும். பல்விருகமாகி, பறவையாய் பாம்பாகி. எப்படியெல்லாம் சிந்தனைகள் வந்து குவிந்துவிடுகின்றன. புராணங்கள் மூலம் சொல்லப்பட்ட சிவன் பற்றிய கதைகள் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லும் ஒவ்வொரு விசயங்களும் மனதில் ஒரு சிந்தனையை எழுப்பாமல் போவதில்லை, அது நேர்மறை சிந்தனையா, எதிர்மறை சிந்தனையா என்பது சிந்திப்பவரை பொறுத்தே அமைகிறது.

நான் ஒரே ஒரு விசயத்தில் மிக மிக தெளிவாக இருக்கின்றேன். சிவன், பிரம்மன், விஷ்ணு எல்லாருமே மனிதர்கள். ஒன்று இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், அல்லது இவர்கள் படைக்கப்பட்டு இருக்கலாம். எவர் இந்த புராணங்கள் (வியாசர் என்றே சொல்கிறார்கள்) எல்லாம் தொகுத்து எழுதினாரோ அவருக்கே எல்லாம் வெளிச்சம். அதைப்போலவே அந்த அந்த காலகட்டத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்தனவா என்பதை ஆராய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சொல்லப்பட்ட விசயங்களில் என்ன நீதி சொல்லப்படுகிறது என்பதை காண்பது மட்டுமே அறிவு என்றாகிறது.

கிருஷ்ணர் பற்றி நான் எழுதியதை வீட்டில் சொன்னதும் 'திமிர் பிடித்தவன்' என்றே என்னை சொன்னார்கள். உண்மையிலேயே யோசித்து பார்க்கிறேன், அத்தனை அகங்காரமா எனக்கு? தெய்வங்களாக போற்றப்படுபவர்களை நிந்திக்கும் அவசியம் எனக்கு எதற்கு வந்தது? நான் என்னை ஒருபோதும் ஆத்திகன் என்றோ, நாத்திகன் என்றோ நினைத்து கொள்வதில்லை. ஆனால் எனக்கு இறைவன் மிக மிக பிடிக்கும்.

நேற்று ஆலயத்திற்கு செல்கிறேன். மக்கள் அலைகடலென திரண்டு இருக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே செல்லக்கூட இடம் இல்லை. சட்டென மனதில் நினைவுக்கு வருகிறது. அடடா, மஹா சிவராத்திரி. அத்தனை பக்தர்கள் கண்டு மனம் ஆனந்தம் கொள்கிறது. நான் நேற்று மீள்பதிவிட்ட பதிவினை நினைத்து  எனக்கே வெட்கமாக வருகிறது.  அலங்காரம் செய்யப்பட தெய்வ சிலைகள் கண்டு மனம் பூரிப்பு அடைகிறது. எங்கே எனது சிந்தனைகள். எனக்குள் எழுந்த எதிர்மறை சிந்தனைகள் எல்லாம் ஓடி ஒளிகின்றன.

பூஜைகள் நடந்து கொண்டிருக்க ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நீங்கள் குரங்கு தெய்வம், மாடு தெய்வம் என விலங்குகளை எல்லாம் தெய்வமாக கொண்டாடுகிறீர்களே நீங்கள் செல்லவேண்டியது மிருககாட்சி சாலை, கோவில் அல்ல என்று ஒருவர் சொன்னாராம். அதற்கு விலங்குகளையும் மதித்து போற்றும் மனப்பான்மை உடையவர்கள் நாங்கள் என்பதில் எங்களுக்கு பெருமை உண்டு எல்லா உயிரினங்களையும் போற்றும் தன்மை படைத்தவர், நன்றியுடன் நடந்து கொள்பவர் இறைவனுக்கு சொந்தமானவர் என பதில் அளித்தாராம்.

அதற்கடுத்து சிவராத்திரி பற்றிய விசயங்களை பேசியதை கேட்டதும் எனக்கு இந்த மஹா சிவராத்திரி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என ஆவல் பிறந்தது. அதிலும் குறிப்பாக வில்வ மரம் பற்றியும், தனக்கே தெரியாமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்த ஒருவர் பற்றி கூறியதும் சிவராத்திரி பற்றி தேடி பார்த்தேன். பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இருந்தது.

இந்த மஹா சிவராத்திரியானது வருடத்திற்கு ஒருமுறை வில்வ இலைகளால் சிவனுக்கு  பூஜை செய்யப்பட்டு இரவெல்லாம் விழித்து இருந்து, விரதம் இருந்து வழிபடுவதாகும். இது கிருஷ்ண பக்ச தினத்தில் நடைபெறுமாம். வருடா வருடம் இந்த நாள் மாறி மாறி வரும். இந்த மஹா சிவராத்திரியானது பெண்களால் தங்களது கணவர்மாரும், மகன்களும் நலமுடன் இருக்க வழிபடும் தினமாம். சிவனின் மனைவி பார்வதி தேவியார் அமாவாசை அன்று (இன்றுதான் அமாவாசை) தனது கணவருக்கும், குமாரர்களுக்கும் வழிபட்டதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் பாற்கடலை கடைந்தபோது பாம்பானது கக்கிய விஷம் உலகெலாம் பரவி அனைத்து உயிரினங்களையும் அழித்துவிடும் அபாயம் ஏற்படும் நிலை வந்தபோது 'அழிக்கும் கடவுள்' என போற்றப்படும் சிவன் 'காக்கும் பணியை' எடுத்து கொண்டு அந்த விஷத்தை தானே அருந்திய செயலை கண்டு வெகுண்ட பார்வதி தேவியார் 'பாச கயிற்றால் சிவனின் கழுத்தை பிடித்து நிறுத்த' அந்த விஷமானது அப்படியே நிற்க அந்த தினத்தை மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறார்கள் என்பது ஒரு ஐதீகம்.

பிரளயம் என்று ஒன்று புராணங்களில் அதிக அளவு சொல்லப்பட்டு வருகிறது. இந்த பிரளயங்கள் ஏற்படும்போதெல்லாம் ஒரு யுகம் அழிந்து மறு யுகம் தோன்றுவது இயற்கை. அப்படி யுகங்கள் அழிந்து மறுபடியும் யுகம் தோன்றும்போது எல்லாம் அழிந்துவிட்டால் மீண்டும் உருவாக்குவது கடினம் என்பதால் சில விசயங்கள் மட்டும் பாதுக்கக்கப்படும். அப்படி பிரளயம் உருவானபோது சிவனை வழிபடுவோர் இந்த பிரளயத்தில் சிக்காமல் காக்கப்படுவது வாடிக்கை. இங்கே சிவன் அழிக்கும் தொழில் செய்பவரா? காக்கும் தொழில் செய்பவரா என்பது சிந்திக்க வேண்டியது. கெட்டதை அழித்து நல்லதை காக்கும் தெய்வமாகவே சிவனின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சித்ரபானு எனும் அரசர் தனது மனைவியுடன் சேர்ந்து விரதம் இருந்து சிவனை மஹாசிவராத்திரி அன்று வழிபட்டார்கள். எதற்காக இப்படி வழிபாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அரசவைக்கு வந்திருந்த அஷ்டவக்ரா எனும் முனிவர் கேட்க சித்ரபானு சொன்ன கதை என கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அர்ஜூனன் எப்படி கண்ணனிடம் 'நீ இப்போதுதானே பிறந்தாய், ஆனால் எப்படி சூரியபகவான் மகனுக்கு பகவத் கீதையை சொன்னாய் என கேட்கும்போது' கண்ணன் 'நான் எல்லா பிறப்புகளின் நினைவுகளையும் சுமந்து கொண்டிருப்பவன், ஆனால் நீயோ மற்ற மனிதர்களோ ஒரே ஒரு பிறப்பு மட்டுமே நினைவில் இருக்கும் என்கிறான்'

அதுபோலவே சித்ரபானு தனது முற்பிறவியில் நடந்த விசயங்கள் தனக்கு நினைவில் இருப்பதாக கூறி தான் ஒரு வேட்டைக்காரன் என்றும், பறவைகள், விலங்குகள் என வேட்டையாடி திரிபவனாக வாழ்ந்தேன் என்றும் கூறுகிறான். அப்போது அவனது பெயர் சுஸ்வரா. இவ்வாறு வேட்டையாட சென்ற ஒரு தினம் மானை கொல்ல நினைக்கையில், அந்த மான், அதன் குடும்பத்தின் நிலை கண்டு கொல்லாமல் விட்டுவிடுகிறான். எங்கும் தேடியும் வேறு விலங்குகள் கிடைக்காமல் போக இருள் சூழ்ந்து கொள்கிறது. அது அமாவாசை தினம். அப்போது தன்னை இரவில் காத்து கொள்ள ஒரு மரத்தின் மீது ஏறிக்கொள்கிறான். தன்னிடம் இருந்த தண்ணீர் பானையில் இருந்த சிறு ஓட்டையால் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சம் கொட்டிக்கொண்டு இருந்தது. தனக்கு பசியும் தாகமும் வேறு. இந்த இரு நிலைகள் கொண்டிருந்தால் எப்படி உறக்கம் வரும் என்கிற நிலையோடு, உறங்கினால் கீழே விழுந்துவிடுவோம் என்கிற அச்சம் வேறு. தான் உறங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளை கிள்ளி கீழே போட்டுக்கொண்டே இருக்கிறான். காலை வந்ததும் பசியோடு காத்து இருக்கும் தனது மனைவி குழந்தைகளுக்கு உணவு எடுத்து செல்கிறான். உணவு உண்ணும் தருவாயில் 'எனக்கு உணவு போடுங்கள்' என ஒருவர் வந்து கேட்க தங்களுக்கு இருக்கும் உணவில் அவருக்கு  பகிர்ந்து தருகிறான்.

இப்படி வாழ்ந்த சுஸ்வரா மரணம் அடையும் தருவாயில் அவனை சிவலோகத்திற்கு அழைத்து செல்ல தேவர்கள் வருகிறார்கள். தேவர்கள் சுஸ்வராவிடம் நீ ஒரு இரவில் வில்வ மர இலைகளை மரத்தின் கீழ் இருந்த லிங்கம் மீது போட்டு பூஜித்தாய், உனது பானையில் இருந்த நீர் லிங்கம்தனை கழுவியது. அந்த இரவு முழுவதும் உணவு அருந்தாமல் இருந்தாய்.  எனவே உன்னை சிவலோகம் அழைத்து செல்ல வந்திருக்கிறோம் என்றார்கள். தனக்கு தெரியாமலே சிவனை பூஜை செய்த தனக்கு இத்தனை பெரிய பாராட்டா என சுஸ்வரா ஆச்சர்யம் கொள்கிறான். அதற்கு பின்னர் பல வருடங்கள் கழித்து சித்ரபானுவாக அவன் பிறந்தான். அந்த நாள் நினைவில் இருந்ததால் நானும் எனது மனைவியும் பூஜை செய்கிறோம் என சொன்னான் சித்ரபானு. அப்படித்தான் இந்த மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

இந்த மஹா சிவரத்திரியானது மூன்று மணிநேரம் என நாலு கால பூஜைகள் என நடைபெறும். அப்போது வில்வ இலைகளால் சிவனுக்கு அபிசேகம் செய்வார்கள். முதல் காலத்தில் பால் அபிசேகம், இரண்டாம் காலத்தில் நெய் அபிசேகம், மூன்றாம் காலத்தில் தயிர் அபிசேகம். நான்காம் காலத்தில் தேன் அபிசேகம். நான்காம் கால பூஜை முடிந்ததும் அந்தணர் ஒருவருக்கு அன்னமிட்டு விரதம் முடித்து கொள்வது சிறப்பு என்றே சிவனே சொல்வதாக அமைந்து இருக்கிறது. இந்த மஹா சிவராத்திரி பிப்ரவரி மார்ச் மாதங்களில் வரும்.

வில்வ மரம் மருத்துவ குணங்கள் உடையது. இந்த மரத்தின் பழங்கள் மருத்துவ தன்மை உடையதாகும். வில்வ பழம்தனை காயவைத்தோ அப்படியேவோ சாப்பிடலாம். இந்த பழம் வர கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் ஆகும். இந்த பழத்தின் ஓடு மிகவும் கடினத்தன்மை உடையது. மரத்தின் கீழ் நிற்கும்போது இந்த பழம் தலையில் விழுந்தால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. வில்வ பழம் மூளைக்கும், இதயத்திற்கும் நல்லதாம். காசநோய், வயிற்றுபோக்கு, வயிருவலி போன்றவைகளுக்கு நல்லதாம். வில்வ பழத்தில் ரிபோப்லவின் நிறைய உண்டு. இந்த மரத்தின் வேர்கள் மருத்துவ குணங்கள் உடையதாகும். பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை உடையதாம் மற்றும் அலர்ஜி, வீக்கங்கள், காயங்களை சரிபடுத்தும் பாங்கு இந்த வேர்களுக்கு உண்டு. தமிழ் சித்தர்கள் இந்த மரத்தை கூவிளம் என்றே அழைத்தார்கள்.

இந்த வில்வ மரத்தை இந்துக்கள் வெகுவாக போற்றுகிறார்கள். எனது வீட்டில் கூட வில்வ மரங்கள் உண்டு. அவை போன்சாய் மரத்தை போன்றே வளராமல் அப்படியே இருக்கிறது. இதுவரை அவை பழங்கள் தந்தது இல்லை. நான் மஹா சிவராத்திரி கொண்டாடினால் இந்த வில்வ மரம் பழங்கள் தர சிவன் மனம் வைப்பாரோ?!

4 comments:

Gemini said...

நல்ல கட்டுரை , தொடர்ந்து எழுதுங்கள். வாழ்க வளமுடன்.

R.Puratchimani said...

// பூஜைகள் நடந்து கொண்டிருக்க ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நீங்கள் குரங்கு தெய்வம், மாடு தெய்வம் என விலங்குகளை எல்லாம் தெய்வமாக கொண்டாடுகிறீர்களே நீங்கள் செல்லவேண்டியது மிருககாட்சி சாலை, கோவில் அல்ல என்று ஒருவர் சொன்னாராம். அதற்கு விலங்குகளையும் மதித்து போற்றும் மனப்பான்மை உடையவர்கள் நாங்கள் என்பதில் எங்களுக்கு பெருமை உண்டு எல்லா உயிரினங்களையும் போற்றும் தன்மை படைத்தவர், நன்றியுடன் நடந்து கொள்பவர் இறைவனுக்கு சொந்தமானவர் என பதில் அளித்தாராம்.//

அருமை :)

// இதுவரை அவை பழங்கள் தந்தது இல்லை. நான் மஹா சிவராத்திரி கொண்டாடினால் இந்த வில்வ மரம் பழங்கள் தர சிவன் மனம் வைப்பாரோ?!//
உங்களுக்கு பழங்கள் கிடைக்க வாழ்த்துக்கள். பழம் கிடைத்தவுடன் என்னிடமும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்பதிவை பகிர்ந்ததுபோல் :)
நன்றி

Shakthiprabha (Prabha Sridhar) said...

:) நீங்கள் தேடலில் நடுவில் இருக்கிறீர்கள். எதுவும் தவறல்ல.

//கிருஷ்ணர் பற்றி நான் எழுதியதை வீட்டில் சொன்னதும் 'திமிர் பிடித்தவன்' என்றே என்னை சொன்னார்கள். உண்மையிலேயே யோசித்து பார்க்கிறேன், அத்தனை அகங்காரமா எனக்கு? தெய்வங்களாக போற்றப்படுபவர்களை நிந்திக்கும் அவசியம் எனக்கு எதற்கு வந்தது? நான் என்னை ஒருபோதும் ஆத்திகன் என்றோ, நாத்திகன் என்றோ நினைத்து கொள்வதில்லை. ஆனால் எனக்கு இறைவன் மிக மிக பிடிக்கும்///

என்றேனும் தெளிவு பிறக்கலாம்...இப்புறமாகவோ அப்புறமாகவோ :)

Radhakrishnan said...

நன்றி ஜெமினி

நன்றி புரட்சிமணி. நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி சகோதரி. உண்மைதான். நிச்சயம் தெளிவு பிறக்கும் என நம்புகிறேன்.