Tuesday 24 January 2012

ஐயா ஒரு நிமிடம் - நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை

ஒரு கதையாவது எழுதனும்னு நானும் பலமுறை யோசிச்சி பார்த்தேன். ஆனா எழுத வரலை. இப்படி எழுதனும், அப்படி எழுதனும்னு பல பேரு யோசனை சொன்னாங்க. என்னத்த எப்படி எழுதுறது அப்படினுட்டு தமிழ் வாத்தியார்கிட்ட என மனக்குறைய சொல்லப் போனேன். அவரை சுத்தி ரொம்ப பேரு உக்காந்து இருந்தாங்க. எனக்கு எப்படி கேட்கறதுன்னு ஒரு பயம் வந்துச்சு. 

'வா பழனிசாமி, என்ன இந்தப் பக்கம்'

'வாத்தியார் ஐயா, நா ஒரு கதை எழுதனும், உதவி பண்ணுவீங்களா'

'பள்ளிக்கூடம் பக்கமே வரமாட்ட, எப்ப பார்த்தாலும் காடு, கழனி, இதுதானே உனக்கு பழக்கம், கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்ச தமிழை வைச்சி எழுதப் போறியாக்கும், எழுதிக் கொண்டு வா, என் தலைவிதிக்கு நானும் வாசிக்கிறேன். நீ படிச்சி இருந்தா உன் தங்கச்சி மாதிரி பத்தாவதுல முத மார்க்கு வாங்கி இருந்து இருப்ப'

'ஐயா, நீங்க அப்படி எல்லாம் சொல்லக்கூடாது, வீட்டு வசதி அப்படி, என்ன பண்றது, என்னால படிக்க முடிஞ்சா படிச்சி இருப்பேன் ஐயா'

'இங்க பாரு பழனிசாமி, நீ சொல்ற சாக்கு போக்கு எல்லாம் எனக்கு வேணாம், இன்னைக்கு நீ படிச்சி இருந்தா பன்னிரண்டு முடிச்சி ஒரு காலேஜ்ல போயி சேர்ந்துருப்ப, விதி யாரை விட்டுச்சு' 

சுத்தி இருந்தவங்களை வைச்சிகிட்டு தமிழ் வாத்தியார் அப்படி சொன்னது என் மனசுக்குள்ள வலியை தந்துச்சு. எங்க ஊருல பள்ளிக்கூடம் எல்லாம் இல்ல, பக்கத்து ஊருக்குத்தான் போகணும். இவரு பக்கத்து ஊருல சொல்லிக் கொடுக்கிற எங்க ஊரு வாத்தியாரு. பேரு ரத்தினசபாபதி. பேருக்கு ஏத்தமாதிரி  ரொம்ப தங்கமான மனுசர். ஆனா அடிக்கடி புகையில போடுற பழக்கம் இவருக்கு இருக்கு. யாராச்சும் உதவின்னு கேட்டு போனா என் தலைவிதிக்கு நானும் செய்றேன் அப்படின்னு மறுக்காம செய்வாரு. தமிழ் வாத்தியாருதான் ஆனா, இங்கிலீஷ் நல்லா அவருக்குத் தெரியும். கணக்கு கூட ரொம்ப நல்லா சொல்லித் தருவாரு. அதனால எங்க ஊருல இருக்கறவங்களுக்கு இவர் தான் ரொம்ப விசயத்துக்கு துணை. இன்னொருத்தர் குருசாமி ஐயர். அவர் மாதிரி ஒரு மனுசரை பார்க்கறது ரொம்ப கஷ்டம். எங்க காட்டுல கூட வந்து வேலை செய்வாரு, கோவிலுள பூசையும் செய்வாரு.  நா ஐயரோட ரொம்ப நெருங்கி  பேசினது இல்ல. எங்க அப்பாகிட்ட பேசறப்ப நா தள்ளி நின்னுக்குவேன். அவரு சாமிங்கிற பயம். 

'டே பழனி, நாளைக்கு  அப்பாவுக்கு திவசம் பண்ணனும், ஐயர் கிட்ட சொன்னியா'

நா வீட்டுக்குள்ளாற நுழைஞ்சி நுழையாம என்னோட அம்மா சத்தமா சொல்லிச்சி. 

'இன்னைக்கு காட்டுக்கு போறப்ப சொல்லிட்டுதான் போனேன், வந்துருறேன் அப்படின்னு சொன்னாருமா' 

'ஐயர் சொன்னதை கேட்டு நடந்து இருந்தா உங்க அப்பாவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துருக்குமா' 

எங்க அப்பா போன வருஷம் தான் செத்துட்டாரு. ஏதோ  டி பி நோயாம். அது வந்துதான் செத்துப் போயிட்டாரு அப்படினுட்டு கவர்மென்ட் ஆஸ்பத்திரில சொன்னாங்க. எப்ப பார்த்தாலும் சிகரெட்டு, சாயந்திரம் ஆயிருச்சினா சாராயம். என் அம்மா, தினமும் அதையெல்லாம் நிறுத்த சொல்லி அவரோட சண்டை போடுவா. ஆனா அந்த மனுஷன் எதையும் நிறுத்தலை எங்கம்மாவை ஒரு வார்த்தை எதிர்த்து பேசலை, அடிக்கலை. ஆறு வருஷம் முன்னால இரும ஆரம்பிச்சாரு. அப்பவாச்சும் நிறுத்துவாருனு பார்த்தா நிறுத்தலை. என் தங்கச்சி கூட தினமும் அழும். பழனி, உன் அப்பன் மாதிரி நீயும் ஆயிறதரா, எனக்கும், உன் தங்கச்சிக்கும் ஒரு ஆதரவு இல்லைடா அப்படின்னு ஒரு வருசமா அம்மா தினைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கும். அம்மா முத முத அந்த வாக்கியத்தை சொன்னப்ப எனக்கு எப்படி இருந்துச்சுன்னு எப்படி சொல்றது. இன்னைக்கும் அதேதான் சொன்னா. 

'நான் குடிக்க மாட்டேன், சிகரெட்டை தொடக் கூட மாட்டேன், எந்த தப்பான வழிக்கும் போக மாட்டேன், கவலைப்படாதம்மா' 

என் பேச்சை கேட்டதும் என் அம்மா என்னை வழக்கம் போல உச்சி மோர்ந்தா. என் தங்கச்சி என் கையை புடிச்சிகிட்டு நின்னா. 

'அம்மா நான் ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன், அதை அப்பா பத்தி எழுதினா நல்லா இருக்கும்லமா'

'அவரைப் பத்தி என்னடா எழுதப் போற, வேற வேலையிருந்தா பாரு' 

'நான் எழுதனும், சொல்லும்மா'

'குடிச்சி அழிஞ்ச ராமரு, புகைச்சி அழிஞ்ச புத்தரு. இதைவிட என்னத்த சொல்றது'

அம்மா அப்படி சொன்னதும் எனக்கு ஓநு அழுகை வந்துருச்சி. அழுகையை அடக்கிகிட்டு கைய காலை அலம்புனேன். அந்த அலம்புன தண்ணியில என் கண்ணீரும் கரைஞ்சி போயிருச்சி. எந்த வம்பு தும்புக்கும் எங்க அப்பா போனது இல்லை. சாராயம் குடிச்சிட்டு வீட்டுல வந்து இருக்கறதை சாப்பிட்டுட்டு தூங்கிருவாரு. அம்மா சண்டை போட்டாலும் 'விடலாம்னுதான் இருக்கேன் அந்த கருமத்தை, என்ன செய்யிறது என் கர்ம வினை, இப்படி இந்த கருமத்தை தலையில சுமக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு இருந்துருவாரு.

'பழனி, வந்து சாப்பிடு' 

அம்மா, நான், என் தங்கச்சி உட்கார்ந்து சாப்பிட்டோம். 

'அப்பா பத்தி எழுதறப்ப நல்ல விசயங்களா எழுதுணா, ஒரு வரி கூட தப்பா எழுதிராதே' 

'எதுக்கு அப்படி சொல்ற, அவர் குடிச்சது எல்லாம் சொல்லனும், அவர் குடிச்சதாலதான் நோய் எல்லாம் வந்துச்சு' 

'நம்ம கோயில் கருப்புசாமி கூட தான் சாராயம் குடிக்குது, அதுக்கு எந்த நோய் வந்துச்சுணா' 

'கல்லுக்கு போய் நோய் வருமா, என்ன படிப்பு படிக்கிற நீ' 

'வண்டி வண்டியா புகை விடுறாரே வணங்காமுடி, அவருக்கு எங்க நோய் வந்துச்சு, சிகரெட்டு பிடிக்கிறவங்க, சாராயம் குடிக்கிறவங்க எல்லாத்துக்குமா இந்த நோய் வருது, சொல்லுணா பார்ப்பம்' 

'பழனி, இதுக்குதான் நாலெழுத்து படிக்கனும், முதல சாப்பிடு'

என் தங்கச்சி சொன்னது மனசுல உறுத்திக்கிட்டே இருந்துச்சு. குடிக்கிறவன் எல்லாம் இப்படி செத்தா போறான். உடல் நலத்துக்கு கேடு அப்படின்னு தெரிஞ்சுதானே எல்லாம் செய்றாங்கன்னு ராவெல்லாம் ஒரே யோசனை. குடிச்சாதான் ஒரு கெத்து அப்படின்னு பக்கத்து ஊருல ஏகப்பட்ட டாஸ்மாக் கடை. சாகறதுக்கு முண்டியடிச்சிட்டு நிக்கிறாங்க அப்படின்னு தோணும். அப்படி இப்படி நினைச்சிகிட்டே தூங்கிப் போனேன். 

விடியற்காலை ஆறு மணிக்கெல்லாம் ஐயர் கூப்பிட அவரோட வீட்டுக்கு போனேன். 

'மது அருந்தி மனம் வருந்தும் நிலை வேண்டிலேன்
புகை பிடித்து புற்று நோய் வர வேண்டிலேன் 
மாதுவின் மனம் மயங்கி மறைந்திட வேண்டிலேன் 
பணமதில் என் குணம் தொலைந்திட வேண்டிலேன் 
நின் கரம் பிடித்து நல்வழி சென்றிட வேண்டுகிறேன்
நிலையில்லா உலகில் நீயே நிலை அறிகிறேன்' 

இந்த பாட்டை இப்போதான் முத முத ஐயர் பாட கேட்டேன். பாட்டு முடியற வரைக்கும் காத்து இருந்தேன். இதே வரிகளை மூணு தரம் பாடினாரு. இன்னும் பாட மாட்டாரா அப்படின்னு இருந்துச்சி. நான் வாசலுல நின்னுகிட்டு இருந்தேன். வெளியில வந்தார்.

'வாடா அம்பி, உன் ஆத்துக்குத்தான் கிளம்பிண்டு இருக்கேன்' 

'சாமி, நீங்க இந்த பாடுன பாட்டு'

'டே அம்பி, காப்பி குடிக்கிறியா, நேத்தைக்கு மாதிரி வேணாம்னு சொல்லிராதேள், உன்னை பாக்க வைச்சி நா குடிக்கப்படாது. சிவகாமி ரெண்டு காப்பி கொண்டு வா, பழனி அம்பி வந்துருக்கான்' 

'சாமி பாட்டு'

'டே அம்பி, உன் தோப்பனார் ரொம்ப பாந்தம். ஆனா அவாகிட்ட ரெண்டு கெட்ட பழக்கம் இருந்துச்சு. நோக்கு நன்னா தெரியும். நா அவாளைப் பாக்கறச்சே அதையெல்லாம் விட்டுருங்கோ அப்படின்னு சொல்லி பாலபாடம் எடுத்துருக்கேன். அவா என்னால விட முடியலை சாமி அப்படின்னு கையெடுத்து கும்பிடுவா. ஈஸ்வரன் மேல பாரத்தை போடுங்கோனு சொல்லிப் பார்த்தேன். கேட்கலை' 

'பாட்டு பத்தி சொல்லுங்க சாமி'

'அதான் சொல்ல வரேன்டா அம்பி. இந்தா காப்பி எடுத்துக்கோ. என்னது ரொம்ப சின்ன லோட்டாவா இருக்கேன்னு பாக்கிறியா. காபி கூட அளவோட தான் குடிக்கனும். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே அப்படினு ஒரு அண்டா நிறைய குடிக்கப்படாது. இந்த பாட்டு என்னோட தோப்பனார் எனக்கு சொல்லித் தந்தது. மது வகைகள் நாம சாப்பிட்டா நம்மோட மனசு பிறழும். மனசு பிறழ்வு வந்தா வருத்தம் வரும். அதே மாதிரி புகை பிடிச்சா நுரையீரலுல புற்று நோய் வரும். அதே போல பெண்கள் கிட்ட மயக்கம் வந்துச்சினா மதி கெட்டு போயிரும். அதைவிட பண மோகம் வந்துச்சுணா குணம் கெட்டுப் போயிரும். இதெல்லாம் வேண்டாம். உன்னோட கரம் பிடிச்சி நான் நல்வழி போகணும் அப்படின்னு இந்த நிலையில்லா உலகில் இதெல்லாம் தேவை இல்லை அப்படின்னு எம்பெருமானை நோக்கி பாடுறது, காபிய குடி'

'புகை பிடிச்சா புத்து நோய் வருமா'

'ரமண மகரிஷி கேள்விப்பட்டு இருக்கியோ, அவாளுக்கு கூட புற்று நோய் வந்துச்சி. முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கேள்விபட்டு இருக்கியோ, அவாளுக்கு கூட புற்று நோய் வந்துச்சி. இவா ரெண்டு பேருக்கும் எதுக்கு வந்துச்சி' 

'தெரியாது சாமி'

'சிவகாமி, இந்தா லோட்டா, நான் திரும்பி வர ஒரு மூணு மணி நேரம் ஆகும்'

'வாடா அம்பி, பேசிட்டே போகலாம்'

ஐயருடன் நடக்க ஆரம்பிச்சேன். 

'புகையிலை சாப்பிட்டா புற்று நோய் வரும். அதே மாதிரி சிகரெட்டு, பீடி புகை பிடிச்சா புற்று நோய் வரும். இந்த புற்று நோய் இன்னும் வேற வேற ரூபத்தில வரும். இப்போ புரியுதோ எதுக்கு அவா ரெண்டு பேருக்கும் வந்துச்சின்னு. மனுசாள் தப்பு பண்ணினா புற்று நோய் வரும்னு அந்த காலத்தில பயமுறுத்தி வைச்சிருந்தா. பாம்பு எப்படி மண்ணை எல்லாம் சேகரிச்சி புத்து கட்டுறதோ அதைப் போல முனிவர்கள் தவம் இருந்தா அவாளை சுத்தி மண் எல்லாம் மூடி ஒரு புத்து போல வளர்ந்துரும். இதே மாதிரி நாம புகையிலையோ, புகையையோ பிடிச்சா அதுல இருக்கற கெமிக்கல், கெமிக்கல் தெரியுமோ நோக்கு, கொஞ்சம் கொஞ்சமா படிஞ்சி செல்கள் எல்லாம் புத்து போல வளர்ந்துரும். அதுக்குதான் புற்று நோய் அப்படின்னு பேரு வைச்சா'

'கட்டியா வளருமா சாமி'

'ஆமாடா அம்பி,  செல்கள் எல்லாம் ஐம்பத்து மூணு தடவை பல்கி பெருகி அப்புறம் அழிஞ்சிரும். நோக்கு நம்ப உடம்புக்குள்ள இருக்கிற ஜீன்ஸ் தெரியுமோ?. இந்த ஜீன்ஸ் தான் எல்லாத்தையும் கட்டுப்படுத்துறது. இப்போ இந்த ஜீன்ஸ்ல ஏதாச்சும் மாத்தம் வந்துருச்சினா, இந்த செல்கள் ஐம்பத்து மூணு தடவை மேலயும் பல்கி பெருகும். அப்போ இந்த செல்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து கட்டியா வளரும். இந்த வளர்ச்சிக்கு நம்ம உடம்பு ஈடுகொடுக்க முடியாம செத்து போயிருவாங்க'

'எங்கப்பா செத்தது டி பி தானு சொன்னாங்க சாமி'

'சாவு அப்படின்னா என்னான்னு தெரியுமா அம்பி? நம்மளோட செல்கள் இனிமே உழைக்க முடியாத நிலைமைதான் சாவு. மார்கண்டேயன் இந்த செல்கள் எல்லாம் வயசாகமா இருக்கிற வித்தை தெரிஞ்சிருந்தா.   இப்போதான் உலகம் கெமிக்கல் உலகம் ஆகிண்டே வருதே. நகரத்துக்கு போய் பாரு. வீட்டை கழுவ, துடைக்க எல்லாம் கெமிக்கல். சில கெமிக்கல் ரொம்ப மோசமானதுடா அம்பி. டே அம்பி இந்த புற்று நோய் ரத்தம், தலை, மார்பகம் அப்படின்னு இதுதான் இங்கதான் வரணும் அப்படின்னு பாகுபாடு பாக்கறது இல்லை, எல்லா இடத்திலும் வரும், கெமிக்கல் பேக்டரியில, கதிரியக்கம் மூலம் வரும். பேப்பர் படிச்சியோ? கூடங்குளத்தில அணுஉலை வேணாம்னு சொல்றாளே, இந்த புற்று நோய்க்கு பயந்துதான், ரொம்ப மோசமான நோய்டா அம்பி. உன்னோட தோப்பனாருக்கு வந்தது புற்று நோய் தான், காச நோய் அப்படின்னு மருத்துவம் பாக்கறவா குழம்பிட்டா' 

'தமிழ் வாத்தியார் புகையிலை போடுறாரே, அவருக்கு புத்து நோய் வருமா சாமி'

'வருமா, வராதா அப்படின்னு பட்டிமன்றம் வைக்கப்படாது அம்பி. இது இது தப்பு அப்படின்னு தெரிஞ்சா அது சாமியே ஆனாலும் தள்ளி வைச்சிரனும், அப்பத்தான் இந்த லோகம் சேமமா இருக்கும்'

'ஏதாச்சும் தடுக்க வழி இருக்கா சாமி'

'டே அம்பி, இப்ப எல்லாம் இந்த புற்று நோய் வந்து இருக்கா, இல்லையானு தெரிஞ்சிக்க சோதனை எல்லாம் செய்றா. நம்ம கிராமத்துக்கு இதெல்லாம் தேவையான்னு கேட்கப்படாது. எந்த புற்று நோய் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது. அதனால ஆறு மாசமோ, ஒரு வருசமோ உடம்பை செக்கப் பண்றது நல்லது.  நகரத்துல ஒரு கிளினிக்குக்கு ரெண்டு மாசம் முன்னாடி நா போனப்ப எனக்கு தெரிஞ்ச மருத்துவர் கிட்ட பேசினேன். அதுல ரொம்ப பேரு புற்று நோய் செக்கப் பண்ண வந்து இருந்தா. பொம்மனாட்டி எல்லாம் தங்களோட மார்பகங்களில கட்டி இருக்குதா அப்படின்னு பார்க்க வந்து இருந்தா. இப்படி செக்கப் பண்ணிகிட்டா நாம புற்று நோயை பெரிசாக்கவிடாம தடுத்துரலாம்டா அம்பி. இதை எல்லாம் நம்ம ஊருல இருக்கிறவங்களுக்கு அறிமுகம் செய்யனும். நம்ம ஊருல இருக்கறவங்களை பயப்படாம  போய் பாத்துட்டு வர சொல்லனும்டா அம்பி. இந்த விபரம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா உன்னோட தோப்பனார் இப்படி சின்ன வயசுல போயிருக்க மாட்டாரு'

ஐயர் அவரோட கைய என்னோட தோள் மேல போட்டாரு.  எனக்கு சங்கோஜமா இருந்துச்சி.வழியில போறவங்க எல்லாம் 'கும்பிடுறேன் சாமி' அப்படின்னு ஐயரை பாத்து சொல்லிட்டு போனாங்க. 

'டே அம்பி ஒன்னு கவனிச்சியா'

'என்னது சாமி?' 

'இவா எல்லாம் என்னைப் பாத்து கும்பிடுறேனு போறாளே, ஏன்?'

'தெரியலை சாமி' 

'மரியாதை கொடுக்குறா, இந்த மரியாதை யாருக்கு வேணும்டா அம்பி?. நோய் நொடி இல்லாம வாழற வழிய நா சொன்னா கேட்க மாட்டேங்கிறா. என்னைய கும்பிட்டுட்டு தொண்டை வரைக்கும் நிறைய சாராயம் குடிக்கிறா. நா வரதை பாத்து குடிச்சிட்டு இருக்கிற பீடிய கீழே போட்டு காலால மிதிக்கிறா. இதெல்லாம் எதுக்குடா அம்பி? பொய்யான வேஷம்' 

'மனுசருக்கு வாக்கு சுத்தம் வேணும் அப்பத்தான் வாழ்க்கை சுத்தமா இருக்கும்டா அம்பி. நல்ல விசயத்தை  திரும்ப திரும்ப சொல்லிக்கிரனும், இல்லைன்னா மறந்து போயிரும் நோக்கு புரியுமோ?'. 

எங்க வீடு வந்துருச்சி. சாமி அறைக்கு போன ஐயர் பாடினார். 

'பற்றுதனை  வைக்கும் இடத்தில் வைக்காமல் 
புற்றுதனை உள்ளத்தில் வளர்த்து 
உடலை தொலைத்த நம்பியே, 
எனது வாக்கை நம்பாமல் தொலைந்தது எங்கனம்'

ஐயர் எல்லா காரியங்களை செஞ்சி முடிச்சாரு. 

'டே அம்பி, நீ தினமும் காட்டு வேலை முடிச்சதும் என் ஆத்துக்கு சாயங்காலம்  வாடா அம்பி. உன்கிட்ட நிறைய பேசனும்' 

ஐயர் போனப்பறம் அவசர அவசரமா புத்து நோய் பத்தி ஐயர் சொன்னதை வைச்சி எங்க அப்பாவையும் அதுல சேர்த்து வைச்சி கதை எழுதுனேன். புற்று நோய் தடுக்கலாம் வாங்க என தலைப்பிட்டேன். அதை தமிழ் வாத்தியார்கிட்ட காட்டுனேன். ஐயா, இதை நகல் எடுத்து எல்லார்கிட்டயும் தாங்க, எல்லாருக்கும் நீங்க படிச்சி காட்டுங்கன்னு சொன்னேன். சரின்னு படிச்சிட்டே இருந்தவர் கண்ணுல கண்ணீர் கொட்டுச்சி. படிச்சி முடிச்சவரு என் தலைவிதிய மாத்தி எழுதவாடா கதை எழுதுன அப்படின்னு என்னை கட்டிபிடிச்சி கண்ணீர் விட்டாரு. 

இப்பல்லாம் நான் எங்க ஊரு தெருவுல நடந்து போறப்ப என்னை பார்த்து ரொம்ப பேரு கும்பிடுறாங்க. ஐயர் கூட என்னை பார்த்து கும்பிட்டாரு. 


(முற்றும்) 







5 comments:

Chitra said...

nice.

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
கருத்துக்க்களுடன் கூடிய கதை அருமை
சொல்லிச் செல்லும் விதம் படிக்கும் சுவாரஸ்யத்தை
கூட்டிப் போகிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 2

Shakthiprabha (Prabha Sridhar) said...

அருமை.......பாராட்டுக்கள் சகோ.

Radhakrishnan said...

நன்றி சித்ரா.

நன்றி ரமணி ஐயா

நன்றி சகோதரி.