Sunday 22 January 2012

உயிரினங்கள் தானாக தோன்றுவதில்லை

முன்னொரு காலங்களில் எல்லாம் உயிரினங்கள் தானாக தோன்றுகின்றன என்கிற சிந்தனை பெரும்பாலும் நம்பப்பட்டு வந்தது. அதாவது தண்ணீரோ, உணவோ கெட்டுப் போனால் அதிலிருந்து தானாக உயிரினங்கள் தோன்றுகிறது என நம்பினார்கள்.  ஆனால் இந்த உயிரினங்கள் தானாக தோன்றுவதில்லை என்பதை முதன் முதலில் உலகுக்கு எடுத்து காட்டியவர் ச்பல்லன்ஜானி எனும் அறியியல் அறிஞர்தான். 

உணவு பொருட்கள் அடங்கிய இரண்டு குடுவைகள் எடுத்துக் கொண்டார். அதில் ஒன்றை காற்றுவெளியில் திறந்து வைத்தார். மற்றொன்றை நன்றாக கொதிக்க வைத்து மூடியால் நன்கு இருக்க மூடி வைத்தார். ஒரு சில நாட்கள் பின்னர் இந்த இரண்டு குடுவைகளை பார்த்தபோது திறந்து வைக்கப்பட்டு இருந்த குடுவையில் நுண்ணுயிர்கள் தோன்றி இருந்தது, ஆனால் கொதிக்க வைக்கப்பட்டு மூடப்பட்ட குடுவையில் எந்த நுண்ணுயிர்களும் தோன்றவில்லை. இந்த செய்முறையை பலமுறை செய்து பார்த்துவிட்டு 'உயிரினங்கள் தானாக தோன்றுவது என்பது கிடையாது என அறிவித்தார். ஆனால் அவர் சொன்னதை அத்தனை எளிதாக எவரும் நம்பவில்லை. 

காற்றில் உள்ள முக்கியமான பொருளை இப்படி கொதிக்க வைத்ததால் செயல் இழக்க செய்துவிட்டதால் உயிரினங்கள் தோன்றவில்லை என வாதிட்டார்கள். இந்த அறிவியல் அறிஞரும் இப்படிப்பட்டவர்களை என்ன சொல்லி திருத்துவது என பேசாமல் விட்டுவிட்டார். 

அதற்கு அடுத்த வந்த அறிவியல் அறிஞர்கள் ஸ்வான் மற்றும் ச்சுல்சே காற்றை கந்தக அமிலத்தில் செலுத்தினார்கள். அவ்வாறு கந்தக அமிலத்தில் செலுத்தியபோது காற்றில் இருக்கும் சுவாச வாயு மாறாமலும், ஆனால் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்திருக்கும் என்றும் நம்பினார்கள். அதை செயல்முறை படுத்த இவ்வாறு கந்தக அமிலத்தில் செலுத்தப்பட்ட காற்றை உணவு பொருட்களில் செலுத்தினார்கள். சில நாட்கள் ஆகியும் அந்த உணவு பொருட்களில் எந்த நுண்ணுயிரும் தோன்றவில்லை. அதைப்போலவே சாதாரண காற்றை உணவு பொருட்கள் செலுத்திய சில நாட்கள் பின்னர் நுண்ணுயிர் தோன்றியது. அப்பொழுது கூட காற்றில் உள்ள மிக முக்கியமான பொருளை சிதைத்துவிட்டார்கள் என்றே எதிர் தரப்பினர் வாதிட்டனர். 

பின்னர் நடந்த வெவ்வேறு ஆராய்ச்சிகள் மூலம் உயிர்கள் தானாக தோன்றுவதில்லை, அவை காற்றில் மூலம் தான் வர வாய்ப்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டது. 

அதெல்லாம் சரி, இன்னும் எப்படி மனிதர்கள், கடவுளால் அப்படியே படைக்கபட்டார்கள் எனவும், அறிவார்ந்த கட்டமைப்பு எனவும் நம்பி கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் புரியாத புதிராகவே இருக்கிறது. 

ஒரு செல் பல செல்கள் அமைப்பு என்பது நாமே கண்கூடாக பார்க்கும்போது அப்படி அப்படியே எப்படி களிமண்ணில் பொம்மை செய்து வைப்பதுபோல கடவுள் மனிதர்களை செய்து வைத்திருப்பார் என நினைக்கும்போது வெறுமை மட்டுமே மிஞ்சுகிறது. 

கடவுளை பொம்மை செய்து வைத்து அழகு பார்க்கும் வித்தையை நாம் கற்று கொண்டது போல கடவுளும் நம்மை பொம்மை போல செய்து வைத்திருப்பார் என எண்ணுவது விந்தைதான். 

ஒன்றுமே இல்லாமலா இவ்வுயிரினங்கள் தோன்றின எனும் சிந்தனையின் முன்னுரையாய் இதை எழுதியது, ஜீரோ எழுத்துக்காக. 

2 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

நல்ல தகவல். நன்றி :)

Radhakrishnan said...

ஒரு புத்தகத்தில் படித்தேன், எழுத வேண்டும் போல் இருந்தது. நன்றி சகோதரி. :)