Friday 13 January 2012

நேசம் போட்டிகள் எப்போது களைகட்டும்?



நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்


இதுவரை இந்த போட்டிகளுக்கு என எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பதை நினைக்கும்போது பதிவர்கள் நிறையவே யோசித்து கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. நான் ஒரு சிறுகதை, கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கிறேன். பொங்கலுக்கு பின்னர் வெளியிடலாம் என இருக்கிறேன். 

அதற்கு முன்னர் என்றோ எழுதிய புற்று நோய் எனும் கதையை இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த போட்டி குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

புற்று நோய் - சிறுகதை (இது இந்த போட்டிக்காக அல்ல, போட்டிக்காக வேறு ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன்) 

//புதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.

''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''

''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.

''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்

''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.

ஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.

'புற்றுநோய் எப்படி உருவாகிறது? எதனால் உருவாகிறது? ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.

''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா?' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.

அப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.

ஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

ஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.

முற்றும்.//



6 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

// இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

//

உங்கள் கோணமும் பார்வையும் கசக்கும் உண்மை

Yaathoramani.blogspot.com said...

உடல் புற்று நோயை விட இந்தச்
சமூகப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது நல்லது
கதையின் ஊடே மிக அழகாக செய்தியையும்
சொல்லிச் சென்றவிதம் அருமை

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி

மிக்க நன்றி ரமணி ஐயா. பொங்கல் மிகவும் சிறப்பாக இருந்தது. தங்களுக்கு காலம் கடந்தும் கனிந்த நல்வாழ்த்துகள்.

தமிழ்த்தோட்டம் said...

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Radhakrishnan said...

மிக்க நன்றி.